Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 09

                                         துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.

                                         அவள் இருந்த பதட்டத்தில், அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொள்ளாமல் போனாள் அவள். திரு மீண்டும் “என்ன மாத்திரை இது..” என்று அவளிடம் நேரடியாகவே கேட்க, என்ன சொல்வது என்று முழித்தவள் முடிவுக்கு வந்துவிட்டவளாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

                                         அவன் பார்வை தன் முகத்திலேயே நிலைத்து இருக்கவும், “இது ஸ்லீப்பிங் பில்ஸ்..தூக்கத்துக்காக போடறது…” என்று மெல்லிய குரலில் சொல்லியே விட்டாள். இப்போதுதான் லேசாக புரிந்தது திருவுக்கு. ஆனால் புரிந்த விஷயம் நிச்சயம் உவப்பாக இல்லை.

                                   அவளை கூர்மையாக பார்த்தவன், நிதானத்தை விடாமல் “எதுக்காக இப்போ இதை கையில வச்சிருக்க.. நீ போட்டுட்டு தூங்கவா?? இல்ல எனக்கு போட்டு கொடுத்துடலாம்ன்னு பிளான் பண்ணியா” என்று முறைப்புடனே கேட்க

                                  துர்காவுக்கு தான் ஏதோ தவறு செய்ததை போல் ஆனது. ஆனால் அடுத்த நிமிடமே அவன் செயல்கள் நினைவு வர, நிமிர்ந்து நின்று கொண்டாள். “என்கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்குறீங்க நீங்க?? எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்ல.. அதையும் பலமுறை உங்ககிட்ட சொல்லிட்டேன்.. ஆனா யாருமே நான் சொன்னதை காது கொடுத்து கூட கேட்கவே இல்ல.”

                              “எல்லாமே உங்க விருப்பத்துக்கு பண்ணிட்டு என்னை வாழ்ந்திடு ன்னு சொன்னா நான் என்ன செய்யட்டும். என்னால முடியாது.. இந்த கல்யாணமே என் மனசுல முழுசா பதியல இன்னும்.. அதுக்குள்ள அடுத்தது, நிச்சயமா என்னால முடியாது..”

                         ” யார்கிட்ட சொல்ல முடியும் என்னால.. சொன்னாலும் கேட்பிங்க ன்னு என்ன நிச்சயம். அதனால தான் இதை எடுத்துட்டு வந்தேன், உங்களுக்கு தான் கொடுக்க நினச்சேன். ஆனா ஏனோ பயமா இருக்கு.. அதையும் சரியா செஞ்சு முடிக்காம நின்னுட்டேன்.” என்று கூறி முடித்தவள் முகத்தில் தவறு செய்த பாவனை இல்லவே இல்லை.

                          “என்னை பொறுத்தவரை நான் செய்தது சரி. என்ன செய்ய முடியுமோ செய்து கொள்.” என்பதுபோல் தான் இருந்தது அவள் நின்ற விதம். அவளின் நல்ல நேரமோ என்னவோ திருவுக்கு அவள் சொல்ல வந்தது சரியான விதத்தில் புரிந்தது.

                           அவளின் இந்த செயலுக்கு தான் ஒருவன் மட்டுமே காரணம் என்று நினைத்துக் கொண்டவன் அவளை என்ன குறை சொல்வான். ஆனால், அதற்காக அவள் செய்ய இருந்ததையும் அவனால் இலகுவாக கடக்க முடியவில்லை. கோபம்தான்… ஆனால் வந்த முதல்நாளே, அவளை எதுவும் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துக் கொண்டான் அவன்.

                        அவள் கையை பிடித்திருந்தவன் அங்கிருந்த பைப்பில் அவள் கையை நீட்ட, ஏற்கனவே கரைந்திருந்த அந்த மாத்திரை நீரோடு மொத்தமாக கரைந்து போனது. துர்காவுக்கு அதிர்ச்சி தான்.. நிச்சயம் பெரிதாக கோபப்படுவான், சண்டையிடுவான் என்றே எதிர்பார்த்திருந்தாள் அவள்.

                          ஆனால், அவனின் இந்த அமைதியான செயல்கள் எங்கோ இடித்தது. அவள் யோசனையில் இருக்க, அவனோ அவள் கையை விடுவித்து அங்கிருந்த பாலை காட்டி “இதை என்ன பண்ணப்போற..” என்று சாதாரணமாக கேட்க

                        அவனை திடுக்கிட்டு பார்த்தவள் அதில் சர்க்கரையை கலந்து அவன் கையிலேயே நீட்டிவிட்டாள். அவன் “எனக்கு நைட்ல பால் குடிக்கிற பழக்கம் கிடையாது” என்றுவிட, இதை என்ன செய்வது என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.

                            “நீ கலந்த பால் தானே, அதான் தூக்கமாத்திரை கூட கலக்கலயே.. அப்புறம் என்ன நீயே குடி” என்று அவன் கூறிவிட, சட்டென அப்படி சொன்னது அவளை காயப்படுத்தியது.

                            எதுவும் பேசாமல் பாலை அந்த பாத்திரத்திலேயே கொட்டி மூடியவள் அதை பிரிட்ஜில் வைத்துவிட்டு வெளியேறப் பார்க்க, அவள் கைகளை பிடித்திருந்தான் திரு. அவள் நிற்கவும் “எதுக்கு இவ்ளோ கோபம்.. நான் இல்லாத எதையும் சொல்லலையே.” என்று கேட்க

                            “நானும் உங்களை எதுவும் கேட்கலையே.. நீங்க குத்திக் காட்டினதுல எனக்கு வருத்தமே இல்ல.. ஏன்னா நான் செஞ்சது தப்பு ன்னு எனக்கு தோணவே இல்ல.

                             “இதுவரைக்கும் என்னை ஒரு மனுஷியா கூட நீங்க மதிச்சதே இல்ல. இனியும் இந்த வாழ்க்கை அப்படித்தான், தெரியும் எனக்கு.. நானும் பழகிக்குவேன், கவலைப்படாதீங்க..” என்று பட்டென பேசிவிட்டாள் அவள்.

                               திருவுக்கு தான் ஆயாசமாக வந்தது. திருமணமான முதல் நாள் இரவு.. எதையும் எதிர்பார்க்காமல் இருந்தாலும்  இப்படி ஒரு வாக்குவாதத்தை விரும்பவே இல்லை அவன். இன்று இந்த ஒருநாளிலேயே கண்ணை கட்டியது அவனுக்கு. தனியாகவே வாழ்ந்து பழகி இருந்தவனுக்கு அந்த வாழ்க்கையே மேல் என்று தோன்றி விட்டது.

                               அப்படி நினைக்க வைத்துவிட்டாள் அவன் மனைவியாக வந்தவள். இப்போது எதையும் அவளுக்கு புரிய வைக்கும் எண்ணமும் அவனுக்கு வரவே இல்லை. அவளிடம் பேசினால் நிச்சயம் தானும் வார்த்தைகளை விட்டுவிடுவோம் என்பது மட்டும் தெளிவாக புரிந்துவிட, அவள் கையை விட்டுவிட்டவன் அவளுக்கு முன்பாக அந்த அங்கிருந்து வெளியேறி விட்டான்.

                              மொட்டை மடியில் இருந்த அந்த தனியறைக்கு வந்துவிட்டவன் அமைதியாக அங்கிருந்த கட்டிலில் படுத்துவிட்டான். மனம் எதையோ யோசித்துக் கொண்டே இருக்க, எண்ணங்களின் வீரியம் தாங்கி கொள்ள முடியவில்லை அவனால். எழுந்து அந்த அறையின் அலமாரியில் இருந்த பாட்டிலை கையில் எடுத்துக் கொண்டவன் முழுவதுமாக வாயில் சரித்துக் கொண்டான். அவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலையை மறக்க ஆரம்பிக்க, மீண்டும் கட்டிலில் விழுந்தவன் துர்காவை மறந்து உறங்கி விட்டான்.

                           அங்கே கீழே இருந்த துர்காவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. திரு மேலே அறையில் இருப்பது முதலில் தெரியவே இல்லை அவளுக்கு. அவன் கோபமாக வெளியேற, சில நொடிகள் கழித்தே சமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள் அவள். ஹாலில் அவன் இல்லாமல் போகவும் மெல்ல அறையை எட்டி பார்த்தாள். அங்கும் அவன் இல்லாமல் போகவும் தான் அவன் வெளியே சென்று விட்டதே புரிந்தது அவளுக்கு.

                             தான் பேசியது சற்றே அதிகப்படி என்று புரிந்தாலும் அவளால் அவளை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. அவன் செயல்களால் ஏற்பட்ட காயங்கள் அப்படியே இருக்க, என்ன முயன்றும் அமைதி வசப்படவே இல்லை. இப்படி முகத்தில் அடித்தது போல் பேசுவதெல்லாம் அவள் இயல்பில் கிடையவே கிடையாது.

                            யாரிடமும் இப்படி தூக்கி எரிந்து பேசுவதோ, சட்டென முகம் திருப்புவதோ அவள் செய்ததே இல்லை. அப்படி இருக்க பிடிக்கிறதோ இல்லையோ கணவன் என்று ஆகி விட்டவனிடம் தான் நடந்து கொள்ளும் விதம் தவறு என்று புரிந்தே இருந்தது அவளுக்கு. அவளின் அமைதியான குணம் தான் அவளின் பெரிய பலமாக இருக்க, யாரிடமும் பெரிதான வாக்குவாதங்களோ, சண்டையோ இருந்ததே இல்லை அவள் வாழ்வில்.

                          என்ன நடந்தாலும் பொறுமையாகவே எதிர்கொள்பவள் திருவின் விஷயத்தில் தன் பொறுமையை முழுவதுமாக இழந்து நின்றாள். மதியம் அன்னை பேசி சென்றதும் நினைவு வர, தான் நடந்து கொள்ளும் விதம் அவரையும் பாதிக்கும் என்று புரிய ஆரம்பித்தது அவளுக்கு.

                          எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டவளுக்கு, அந்த மாத்திரை விஷயம் இப்போது யோசிக்கையில் முட்டாள்தனமாக தோன்றியது. அவன் தான் கணவன் என்றாகிவிட்ட பின் இதை மறுத்து என்ன செய்ய போகிறேன் நான் என்று அவளுக்கே தோன்றிவிட்டது.  அதுவும் இன்று ஒருநாள் மட்டும்தானா வாழ்க்கை என்றும் தோன்றிவிட, லேசாக சிரிப்பு கூட வந்தது அவளுக்கு.

                              ஏனோ திருவின் அருகில் சென்றாலே முட்டிக் கொண்டே நிற்பதே பழக்கமாகி இருக்க, சட்டென தோன்றிய ஒரு குருட்டு புத்தியில் அப்படி செய்து விட்டிருந்தாள். நிச்சயம் ஒரு அறை விடப்போகிறான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தும் தானே இப்போது அவனை சீண்டி விட்டுவிட்டோம் என்பதும் புரிந்தது அவளுக்கு.

                              எங்கே சென்று இருப்பான் என்று யோசித்தவளுக்கு அந்த வீட்டில் தனித்து இருப்பது வேறு பயம் கொடுத்தது. ஒற்றையறை வீட்டில் அன்னை உடன் இருந்தே பழகியவளுக்கு இந்த வீட்டின் நிசப்தம் லேசான அச்சத்தை கொடுத்தது.

                               என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன்?? இவன் பாட்டுக்கு கிளம்பி சென்றுவிடுவானா?? என்னை பற்றி யோசிக்கவே மாட்டானா? என்று யோசித்தவள், தன் ஏறுக்கு மாறான சிந்தனைகளில் தன்னையே நொந்து கொண்டு, மதியம் இருந்த அறையில் சென்று படுத்துக் கொண்டாள். விளக்கை ஒளிர விட்டவள் சுருண்டு படுத்துக் கொண்டு அப்படியே உறங்கிப்போனாள்.

                      அடுத்த நாள் காலையில் எப்போதும் போலவே திரு நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன் கீழே இறங்கிவர, அவன் அறையில் உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. சேலையை மாற்றிக் கொள்ளாமல் அவள் அப்படியே உறங்கி இருக்க, இப்போது அதுவே வினையானது. சேலை அங்கும், இங்கும் களைந்து அவள் இடையை அவன் கண்களுக்கு விருந்தாக்க, தலையை உலுக்கி கொண்டவன் சத்தம் போடாமல் ஒரு டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து விட்டான்.

                            துர்கா விழிக்கவே இல்லை. அவன் குளித்து முடித்து வேட்டி சட்டையில் தன் ருத்ராட்ச மாலையோடு நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு வந்து நின்ற போதும் அவள் உறக்கம் கலையவில்லை. இவளை எப்படி தனியாக விட்டு செல்வது என்று யோசித்தவன் தனக்கு நேரமாகவும், அவள் உறங்கட்டும் என்று நினைத்து வீட்டை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

                               அவள் எழுவதற்குள் வந்துவிடலாம் என்ற நினைப்பில் தான் அவன் சென்றதும் கூட. மார்கெட்டிற்கு வந்தவனுக்கு வழக்கமான வேலைகள் அணிவகுத்து நிற்க, வந்திருந்த லோடை தனித்தனியாக பிரித்து செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைத்தவன் தன் கடைக்கும் காய்கறிகளை நிரப்பிவிட்டு சற்று நேரம் கடையில் அமர்ந்தான்.

                               தேவா டீ வாங்கி வந்து கொடுக்க, குடிக்கும்போது தான் துர்காவின் நினைவு வந்தது அவனுக்கு. அவன் இங்கு வந்து இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க, வீட்டை பூட்டிவிட்டு வந்தது ஞாபகம் வரவும் அவசரமாக வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் அவன்.

                                ஆனால், அவன் எதிர்பார்த்த அளவு அதிர்ச்சி அவன் மனைவியிடம் இல்லை போல. எழுந்து குளித்து முடித்திருந்தவள் ஒரு கரும்பச்சை நிற சேலையோடு சோஃபாவில் அமர்ந்து டீயை குடித்துக் கொண்டிருந்தாள். இவன் கதவை திறக்கவும் முதலில் கண்டது அவள் அமர்ந்திருந்த கோலத்தை தான்.

                            கால்களை சோபாவில் தூக்கி வைத்து முழங்காலிட்டு அமர்ந்திருந்தவள் இரண்டு கைகளாலும் டீ டம்ளரை பிடித்துக் கொண்டிருந்தாள். இவன் திடீரென கதவை திறக்க அந்த அதிர்ச்சி கூட இல்லை அவளிடம். அவள் அமைதி அவனுக்கு தான் அதிர்ச்சியாக இருந்தது. கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டவன் அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்தான்.

                        அவனாகவே “தூங்கிட்டு இருந்த.. அதான் எழுப்ப வேண்டாமே ன்னு கதவை பூட்டிட்டு போய்ட்டேன்.. ” என்று கூற

                          “ஓஒ..நைட்டும் தூங்கிட்டு இருந்தேனா..” என்று கேட்டுவிட்டாள் மனைவி.

                         அவள் கேள்வியில் இரவு நடந்தது அனைத்தும் நினைவுக்குவர, “ஆமாம்.. இவ எனக்காக காத்துட்டு இருந்தா.. நான் கிளம்பிட்டேன்” என்று நினைத்துக் கொண்டவன்

                        “காலையிலேயே எதுக்கு அதை பத்தி பேசுற.. திரும்பவும் ஆரம்பிக்க வேண்டாமே..” என்று கூற

                       “உங்ககிட்ட இப்படி சண்டை போட்டுட்டே இருக்க எனக்கு கூட விருப்பம் இல்ல.” என்று விட்டாள் துர்கா.

                திரு மீண்டும் சலிப்பாக “துர்கா.. இப்போ நீ சண்டை போடற ன்னு நான் சொன்னேனா.” என்று கேட்க

                               “நான் திரும்பவும் ஆரம்பிக்கிறேன் ன்னு சொன்னிங்க இல்ல.” என்று சரிக்கு சரியாக நின்றாள் அவள்.

            அவள் பேச்சில் கடுப்பானவன் வாயையே திறக்கவில்லை. நீயே பேசு என்பது போல் அமைதியாக அவளை பார்த்திருக்க “நான் சொல்ல சொல்ல கேட்காம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க தான.. நான் மட்டும் கல்யாணம் ஆன உடனே முழுசா உங்க பொண்டாட்டியா நடந்துக்கணுமா. என்னை யோசிக்கவே மாட்டிங்களா.?? “

                             “நைட் நான் செஞ்ச விஷயம் சின்னபுள்ள தனமா தான் எனக்கே தோணுது. ஆனா அதுக்கும் காரணம் நீங்கதான்..” என்று அவள் முறைப்புடன் குற்றம்சாட்ட, மெல்லியதாக புன்னகை அரும்பியது திருவுக்கு.

           அதை கவனிக்காதவள் மேலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். “நான் சண்டை போட்டா நீங்க பாட்டுக்கு கெளம்பி போய்டுவீங்களா?? ஒரு நாளுக்கே என்னை பொறுத்துக்க முடியல உங்களால, விட்டுட்டு போயாச்சு.. இதுக்கு எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க..” என்று அவள் கோபமாக கேட்க

                        “சரி நைட் நான் என்ன பண்ணி இருக்கணும்..” என்று அமைதியாகவே கேட்டான் அவன்.

                     பதிலில்லாமல் போகவே “நான் அங்கேயே இருந்தா நிச்சயம் நானும் எதையாவது பேசி வச்சிருப்பேன்.. ஏன் கையை கூட நீட்டி இருக்கலாம்.. என் பொறுமை என்னன்னு எனக்கு தெரியும் இல்லையா? வந்த முதல்நாளே அப்படி எதுவும் நடக்க வேண்டாம்ன்னு தான் கிளம்பிட்டேன்.

                   “முதல்ல என்ன தைரியத்துல நீ மாத்திரையை கையில எடுத்த, ஏன் நேத்தோட ராத்திரியே வராதா?? இல்ல நாந்தான் மாத்திரையை பார்த்துட்டேனே.. உன்னை அப்படியே பெட் ரூமுக்கு தூக்கிட்டு போயிருந்தா, என்ன பண்ணி இருக்க  முடியும் உன்னால??”

                     “உன்னை கைய காலை கட்டி தூக்கிட்டு வந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

                           இந்த கல்யாணத்தை மறுக்க உனக்கு நிறைய வாய்ப்பு இருந்தது துர்கா. நீ உன் அம்மாவுக்காக கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்ட. அதான் உண்மை, இதுல நான் என்ன செய்யணும் னு எதிர்பார்க்கிற.”

                   “உன் அம்மாகிட்ட கல்யாண விஷயம் முதல்ல பேசினதே நாந்தான். அப்படி இருக்க நானே எப்படி போய் வேண்டாம் ன்னு சொல்லுவேன்.. என்ன நினைப்பாங்க என்னைப்பத்தி..”

                      “உனக்கு வேண்டாம் ன்னா நீ கடைசி வரைக்கும் நின்னு இருக்கணும்ல. நீயே தானே உன் அம்மாகிட்ட சம்மதம் சொன்ன. இதுல நான் எங்க வந்தேன்.எனக்காவது உன்னை பிடிச்சு இருந்தது. இவள கல்யாணம் பண்ணிக்கலாம் ன்னு ஒரு எண்ணம் இருந்தது. ஆனா உனக்கு..” என்று அவனது வழக்கமான அழுத்தத்தோடு அவன் கேள்விகளாக கேட்டு வைக்க, துர்காவிடம் எந்த பதிலும் இல்லை.

                     அவள் அமைதியாகவே இருக்க, அவளை அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. துர்காவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவன் சொன்ன விஷயங்கள் அத்தனையும் உண்மையாக இருக்கையில் என்னவென்று பேசுவாள் அவள். தன்னை அவன் முன்னால் இப்படி நிற்க வைத்ததற்காக கடவுளை நொந்து கொண்டவளுக்கு கண்களில் கண்ணீர் அரும்பி நின்று விட்டது.

                      திருவும் பேச வேண்டும் என்று நினைத்து பேசி இருக்கவில்லை. அவளை குத்திக்காட்டும் எண்ணமும் இல்லை அவனுக்கு. அவனையும் அறியாமல் வார்த்தைகள் வந்து விட்டிருக்க, அதன் பலனாக எதிரில் இருந்தவள் கண்ணீர் வடித்தாள். அவள் அன்னை மருத்துவமனையில்  இருந்த போது கூட அவள் கண்ணீர் விட்டு பார்த்ததில்லை அவன்.

                     அப்படி பட்டவள் இன்று அழவும், திருவுக்கு முதல்முறை தன் திருமணத்தின் மீது சந்தேகம் வந்தது. இந்த திருமணம் சரியானது தானா? என்று அவனுக்கே தோன்றிவிட, தங்களால் வாழ முடியுமா? என்ற கேள்வியும் சேர்ந்தே பிறந்தது.

                         அவளுக்கு தெளிவு படுத்திவிடும் எண்ணத்தில் மீண்டும் அவன் “உன்னை அழ வைக்க நான் இதெல்லாம் சொல்லல..  எனக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா தோணல.. ஆனா நேத்துல இருந்து நிறைய யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். இது சரியா வருமா ன்னு கூட தோணுது இப்போ…” என்று அவன் தயக்கமாக கூறிக் கொண்டிருக்கும்போதே

                      “அதுக்காக என்ன செய்யலாம் இப்போ..” என்று கண்ணீரோடு குறுக்கிட்டாள் மனைவி. திரு   அதிர்ந்து பார்க்கும்போதே “உங்களுக்கு தோணினதை நீங்க செஞ்ச வரைக்கும் போதும். இதுக்குமேல எதுவும் செஞ்சிடாதிங்க.. எனக்கு தெரியும் இதுதான் என் வாழ்க்கை. என்ன ஆனாலும் இதுதான் என் வாழ்க்கை.

                    “எனக்கு தேவைப்படறது கொஞ்ச அவகாசம் தான். இதுதான் என் வாழ்க்கை ன்னு நான் ஏத்துக்க எனக்கு தேவைப்படற அந்த கால அவகாசம் தான். ஆனா இனி அதுவும் கூட தேவை இல்ல. நான் பார்த்துக்கறேன்.” என்று முடித்துவிட்டவள் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.

Advertisement