Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 08

                         வடபழனி ஆண்டவர் திருக்கோயில்

                                    கோவில் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டு சுழன்று கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். பின்னே அவர்கள் திரு அண்ணாவின் திருமணம் அல்லவா.

                                    திரு மாப்பிள்ளையாக பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருக்க, ஐயர் கூறும் மந்திரங்களை அத்தனை பவ்யமாக திருப்பி கூறிக் கொண்டிருந்தான். வள்ளி கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருக்க, அவருக்கு அருகில் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் சில பெண்கள்.

                                அடுத்த பக்கத்தில் திருவுக்கு பழக்கமான மார்க்கெட் வியாபாரிகள், அவன் வரவு செலவு வைத்துக்கொள்ளும் அவனின் நலம் விரும்பிகள், அவனது மார்க்கெட் நண்பர்கள் என்று இன்னும் சிலர் அமர்ந்திருக்க, எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

                             திரு மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் வேளையில் சரத்தும், தேவாவும் அவனுக்கு பின்னால் வந்து நின்று இருந்தனர். சிறிது நேரத்தில் துர்கா அங்கு அழைத்து வரப்பட, இளஞ்சிவப்பு வண்ண கூறைப்புடவையில் அதற்கான நகைகளுடன் குனிந்த தலை நிமிராமல் அமைதியாக வந்து அமர்ந்தாள் அவள்.

                            அவள் அறையிலிருந்து வெளிப்பட்ட கணம் முதல் திருவின் பார்வை அவள்மீதே இருக்க, அவளோ மறந்தும் கூட திருவாய் நிமிர்ந்து பார்த்திருக்க வில்லை. அவளின் காரணங்கள் அப்படியே இருக்க, முற்றிலும் அன்னையின் வற்புறுத்தலுக்காக அவரின் உடல் நிலையை முன்னிட்டு ஒப்புக் கொண்டிருந்தாள்.

                             அவள் அன்று திருவின் வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து சரியாக ஒருமாதம் கடந்திருக்க, அதற்குள் திரு அவளை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருந்தான். ஆம்… அவளுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை அவன். இதில் வள்ளி வேறு மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தார்.

                             அன்னையின் நோக்கம் புரிந்தாலும், அவர் உடல்நிலையை பணயம் வைக்க மனது வரவில்லை அவளுக்கு. என்ன நடந்துவிடும்? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் தன் அன்னையின் கேள்வியையும் நினைவு படுத்திக்க கொண்டு நிமிர்ந்து நின்றாள்.

                              அந்த சண்முகநாதனையே திருமணம் செய்து கொள்ள நினைத்தேனே என்று அவள் சொல்லிக்கொள்ளும் போதே, அப்போது அவள் எடுத்திருந்த இன்னொரு முடிவும் நினைவு வந்தது அவளுக்கு. கசப்பாக சிரித்துக் கொண்டாள்.

                            நிச்சயம் திரு நல்லவன் தான். சண்முகநாதனோடு ஒப்பிடும்போது அவனை குறை சொல்லவே வாய்ப்பு கிடைக்காது. நிச்சயம் ஒரு கௌரவமான வாழ்வு தான். ஆனால் அந்த கௌரவமும், மற்றவர்கள் முன் கிடைக்கும் மரியாதையும் மட்டும்தானா வாழ்வு என்பது தான் அவளது கேள்வி.

                           அவனின் அலட்சியமும், அவன் கண்களில் தெரியும் அந்த திமிரும் தான் அவளுடைய பயம். வாழ்வு முழுமைக்கும் எப்படி அவனது அலட்சியப்பார்வையை எதிர்கொள்ள முடியும் என்பதே அவள் கேள்வி. ஆனால் இதை எடுத்து சொல்லி புரிய வைக்கும் பக்குவமும் அவளுக்கு இல்லை. அவளுக்கு இல்லை என்பதை விட யாருக்கு புரிய வைக்க என்ற எண்ணமும் முழுமையாக வியாபித்து விட்டது.

                           அவளுக்குள் நடந்த அந்த போராட்டத்தின் விளைவாக தான், அன்னை வீடு திரும்பிய தினம் திருவை மணந்து கொள்வதாக அவரிடம் கூறி விட்டாள். வள்ளி கண்களில் அந்த நொடி தெரிந்த மகிழ்ச்சிக்காக திருவை பொறுத்துக்க கொள்ளலாம் என்று தோன்றிவிட, தன்னை தயார் செய்ய தொடங்கி இருந்தாள் பெண்.

                         ஆனால் அவளது சிந்தனைகள் தான் அவளை விடாமல் இழுத்துக் கொண்டே இருந்தது. இதோ இப்போது கூட, மணப்பெண்ணாக லட்சணமாக கனவு காணாமல், அவள் யோசனையில் மூழ்கி இருக்க, ஐயர் “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்” என்று குரல் கொடுத்துவிட்டார்.

                          அவள் அதற்குள்ளாகவா என்பது போல் அப்போதும் ஐயரை தான் நிமிர்ந்து பார்த்தாள். அவள் நிமிர்ந்த நிமிடத்தில் திரு அவளை சுற்றி கைகளை கொண்டு வந்திருக்க, சட்டென அவனை திரும்பி பார்த்தாள் அவள். அவள் பார்வையை அழுத்தமாக சந்தித்தவன் அதே அழுத்தத்துடன் அவள் தோள்களை உரசிக் கொண்டு, அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை அவனே இட்டு அவளை தனக்கு சொந்தமாக்கி கொண்டான்.

                           தன்னை சுற்றி இருந்த அவன் கைகளையும், கழுத்தில் புதிதாக விழுந்த அந்த மஞ்சள் கயிற்றையும் பார்த்தவளுக்கு, அது விடுபட முடியாத விலங்காகவே தோன்றியது அந்த நிமிடம். சுற்றி இருக்கும் யாரின் நினைவும் இல்லாமல் அவள் தன் எண்ணங்களில் மூழ்கி இருக்க, திரு இதற்குள் மீண்டும் அவளை சுற்றி வளைத்திருந்தான்.

                               அவன் தொடுகையில் அவள் அதிர்ந்து திரும்பும் போதே, அவள் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் இட்டவன், அவள் கண்களை சந்திக்கும்போது சிரித்துவிட்டான். லேசான சிரிப்போடு என்ன என்பது போல் அவன் தலையசைக்க, அமைதியாக தலையை குனிந்து கொண்டாள் அவள்.

                               அவள் செயலில் புன்னகை பெரிதாக விரிய, சரத்தும், தேவாவும் அவனை இருபுறமும் கட்டிக் கொண்டனர் இதற்குள். அவர்களை பார்த்து சிரித்தவன் கீழே அமர்ந்திருந்த வள்ளியை பார்க்க கலங்கிய கண்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார் அவர். அவன் எத்தனை அழைத்தும் மேடைக்கு வர மறுத்துவிட்டவர் முதல் வரிசையில் அமர்ந்து தன் மகளையும், மருமகனையும் கண்ணார ரசித்துக் கொண்டிருந்தார்.

                                                                     அடுத்தடுத்து ஐயர் ஒவ்வொரு சடங்காக கூற, எதையும் விட்டுவிடாமல் நிதானமாக திரு செய்து கொண்டிருக்க, அவன் செயல்களில் அமைதியாக உடன் நிற்பது மட்டுமே துர்காவின் வேலையாக இருந்தது.

                                   அவன் கைகளை பற்றிக் கொண்டு அக்னியை வளம் வரும்போதும், அவன் அவளது பாதங்களை பற்றி ஏழு அடிகள் எடுத்து வைத்து மெட்டி அணிவிக்கும்போதும் நிச்சயம் உள்ளுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு. அவன் தலையையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் சட்டென நிமிரவும் குனிந்து கொண்டாள்.

                                 இப்படியே அனைத்து சடங்குகளையும் அவன் முகம் பார்க்காமலே அவள் செய்து முடிக்க, வள்ளியிடம் வந்து நின்றனர் இருவரும். வள்ளி காலில் விழுந்த இருவரையும் ஆசிர்வதித்து எழுப்பி நிறுத்தியவர் தன் மகளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட, கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டாள் பெண்.

                               அவளை விலக்கி திருவின் அருகில் நிறுத்தியவர் திருவின் முகம் பார்க்க, அவரை பார்த்து புன்னகைத்தவன் துர்காவின் கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டான். வள்ளிக்கும் அதுவே போதுமானதாக இருந்தது.

                                இருவரும் வள்ளியையும் உடன் அழைத்து கொண்டு முருகனின் சன்னிதானத்தில் சென்று நிற்க, பழனி ஆண்டவர் அரச கோலத்தில் அத்தனை அம்சமாக வீற்றிருந்தார் அங்கே. திரு கண்களை மூடியவன் முழுவதுமாக அவரை சரணடைந்து விட்டான்.

                           “முருகா.. இவளை எப்பவும் நான் நல்லபடியா வச்சுக்கணும். என் வாழ்க்கை முழுக்க இவளுக்கு நல்ல புருஷனா நான் இருக்கணும் ஆண்டவா…” என்று அவன் வேண்டிக் கொள்ள

                                துர்காவுக்கு வாழ்வை பற்றிய பயம் இல்லை போலும்.” கடவுளே.. எனக்கு நிறைய பொறுமையை கொடு..” என்றே வேண்டிக் கொண்டாள் அவள். அவள் மனம் நிச்சயம் ஒருநிலையில் இல்லை. இதுதான் வாழ்க்கை என்றானபின் காயப்படுத்தி, அவளும் காயப்பட்டு அதையெல்லாம் நினைக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.

                              என்ன நடந்தாலும் ஏற்றுக் கொள்ளும் திடமான மனதையும், சகித்துக் கொள்ளும் பொறுமையையும் மட்டுமே வேண்டி நின்றாள் அவள்.

                                திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் அருகில் இருந்த ஒரு உணவகத்தில் திரு உணவுக்கு ஏற்பாடு செய்திருக்க, மணமக்களும் அவர்களுடனே சாப்பிட்டு முடித்து வீட்டை நோக்கி பயணித்தனர். திரு அவன் நண்பன் ஒருவனின் காரை எடுத்து வந்திருக்க, திருமணம் முடியவும் கிளம்பி இருந்தனர்.

                               வந்திருந்த அனைவரையும் வேனில் ஏற்றி அனுப்பி இருந்தவன் வள்ளியை தங்களுடன் அழைக்க, அவர் மறுத்துவிட்டு தேவாவுடன் புறப்பட்டு இருந்தார். சரத் டிரைவர் சீட்டில் அமர்ந்து கொள்ள, பின்னால் திருவும், துர்காவும் மட்டுமே. துர்கா வெளியில் தெரிந்த போக்குவரத்தில் இருந்து கண்களை அகற்றவே இல்லை.

                             அவள் தன் பார்வையை சந்திக்க மறுப்பது திருவுக்கு புரிந்தே இருக்க, இது அதைப்பேசும் நேரமில்லை என்பதால் அவனும் அமைதியாகவே இருந்தான். கையில் இருந்த மாலை மணிக்கட்டில் உரசிக் கொண்டு இருப்பது, ஏதோ போலாக பக்கவாட்டில் அதை வைத்துவிட்டவன் லேசாக துர்காவின் பக்கம் நகர்ந்து அமர, திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

                               அவள் பார்வையில் சிரிப்புதான் வந்தது திருவுக்கு. எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறா?? என்று நினைத்துக் கொண்டவன் சரத்தை வைத்துக் கொண்டு எதுவும் பேச விரும்பாமல் அமைதியாக தானும் வெளியில் திரும்பிக் கொண்டான்.

Advertisement