Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 07

                                   வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே “இது சரியா வராதுமா.. விட்டுடு” என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருக்க, துர்காவிற்கு தான் ஏதோ தவறு செய்து விட்டதாக தோன்றியது.

                                    மீண்டும் வள்ளியின் அருகில் அமர்ந்தவள் “மா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோமா… இந்த கல்யாணமெல்லாம் இப்போ வேண்டாம்மா. அதுவும் அந்த திரு… அவரோட..வேண்டாம்மா.. என்னையும் கொஞ்சம் யோசிச்சு பாருமா ” என்று பொறுமையாக கூற

                                    அமைதியாக கேட்டுக் கொண்டவர் “திருவை கல்யாணம் பண்ணிக்கறதுல என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டு வைத்தார்.

                               என்னவென்று சொல்வாள் அவள். அவனின் அந்த திமிர்தான் தனது முதல் பிரச்சனையாக தோன்றியது அவளுக்கு. முதல் பேச்சிலேயே அத்தனை அலட்சியமாக நடத்தி இருந்தானே. என்னவோ அவனிடம் பேசுவதற்காக காத்துக் கிடந்ததை போல என்னவொரு திமிர் காட்டினான் அன்று, என்று நினைத்தவளுக்கு அவனோடு திருமணம் என்பது ஏனோ பிடிக்கவே இல்லை.

                             இப்போது அவன் செய்திருந்த உதவிகள் அனைத்தும் கண்முன் வந்து போனாலும், நன்றியுணர்ச்சி வந்ததே தவிர, வேறு ஏதும் எண்ணமில்லை அவளிடம். அதுவும் அவனை பார்க்கும் போதெல்லாம் அந்த அலட்சிய பாவனை வேறு அடிக்கடி நினைவு வந்து முள்ளாய் உறுத்தியது.

                               இதெல்லாம் சொன்னால் அன்னைக்கு புரியுமா ? என்பதைவிட இப்போது புரிந்து கொள்ள முயற்சிக்கவே மாட்டார்கள் என்றுதான் தோன்றியது அவளுக்கு. திருவின் மீதான வள்ளியின் பாசம் என்ன என்பதை அறியாதவளா அவள்.

                          அவனும் அதை அறிந்து தான் காய் நகர்த்தி இருக்கிறானோ? என்று இப்போது தோன்றியது அவளுக்கு. ஆனால் என்ன தேவைக்கு?? அவன் தகுதிக்கு நிச்சயம் தன்னை விட உயர்ந்த ஒருத்தியை அவன் திருமணம் செய்து கொள்ள முடியும் அவனால்.

                           அப்படி இருக்க, தன்னை ஏன் இதில் இழுத்து விட வேண்டும் என்றுதான் தோன்றியது அவளுக்கு. வள்ளியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இவள் தன் சிந்தனையில் மூழ்கிவிட, வள்ளி மகளின் கையை அசைத்தவர் அவளை கேள்வியாக பார்த்தார்.

                          அவரை மறந்துவிட்டதற்காக நொந்து கொண்டவள் ஏதோ பேச வாயைத் திறக்க வள்ளியே பேசினார். “நீ எவ்ளோ நேரம் யோசிச்சாலும் உனக்கு எந்த காரணமும் கிடைக்காது துர்கா… நீ சின்னப்பிள்ளை மாதிரி பேசிட்டு இருக்க… எப்படி இருந்தாலும் நான் உனக்கு கல்யாணம் பண்ண தான் போறேன்.

                      “அது திருவா இருந்தா, நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன். உன்னை வெளியே எங்கேயோ கட்டி கொடுத்திட்டு நீ எப்படி இருக்கியோ ன்னு நான் கிடந்து தவிச்சிட்டே இருக்கவா. இதே திரு ன்னா என் கண்ணுக்கு முன்னாடி இருப்ப தானே.” என்று அவர் பக்க காரணங்களை வள்ளி அடுக்க ஆரம்பித்துவிட்டார்.

                    துர்கா உஷாரானவள் “அம்மா… கொஞ்சம் மூச்சுவிட்டுக்கோ… நான் சின்னப்புள்ள தனமா நடந்துக்கல. நீதான் என்னை சின்னப்பிள்ளையாவே நடத்திட்டு இருக்கமா… நான் என்ன காரணம் சொல்றதுன்னு யோசிக்கல. உனக்கு எப்படி புரிய வைக்கணும்ன்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்.”

                        “நீதான சொல்வ.. திரு உன் முதலாளி.. நம்ம தகுதியை நாம மறக்கக்கூடாது. அவனை மரியாதையில்லாம பேசக்கூடாது ன்னு நீதான எப்பவும் சொல்வ. இப்போ மட்டும் நம்ம தகுதி என்னம்மா மாறிடுச்சு.” என்று கேட்டுவிட

                   வள்ளியோ “அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. அதுவும் திரு தம்பி அதுவா விரும்பி கேட்குது. தகுதி எல்லாம் மனசுக்கு தான் துர்கா. அந்த தம்பி உன்னை பிடிச்சு போய் தான கேட்குது. அப்பவே அத்தனையும் அடிபட்டு போய்டும்.. நீ என்ன சொல்ற.. நீ உன் காரணத்தை மட்டும் சொல்லு… என் மண்டையை கழுவ முயற்சி பண்ணாத” என்று தீவிரமாக கூறிவிட

                      “நீ என்ன சொன்னாலும் சரிதான். அவனுக்கு என்னை பிடிச்சா போதுமா.., எனக்கு அவனை பிடிக்க வேண்டாமா?? என்னை பத்தி கவலைப்பட மாட்டியா?” என்று துர்காவும் கொதிப்புடன் கேட்டுவிட்டாள்.

                  வள்ளி நிதானம் குறையாமல் அவளை பார்த்தவர் “மனசுக்கு பிடிச்சு தான் சண்முகநாதனை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொன்னியா??” என்று பதில் கேள்வி கேட்டுவிட

                   துர்காவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. கலங்கிய கண்களுடன் அவள் அன்னையை பார்க்க “என் நல்லதுக்கு ன்னு தான் அந்த முடிவை எடுத்த. அதுவரைக்கும் சரி. ஆனா இனி எப்படி போகும்ன்னு என்னால சொல்ல முடியாது துர்கா.

                     “இதுவரைக்கும் பயத்துல ஒரு எல்லையில இருந்தான், இனி உன் பொண்ணு சம்மதம் சொல்லிட்டான்னு வீடேறி வந்தாலும் வருவான். அவனுக்கு என்ன பதில் சொல்வோம் ??”

                    “இல்ல, நீ அவன் வீட்டுக்கு போனதை வச்சு, வேற மாதிரி கதை ஏதும் பரப்பிவிட்டு உன் பேரை கெடுக்க பார்த்தான்னா.. என்ன செய்ய முடியும் உன்னால??” என்று அவர் திட்டவட்டமாக நடப்பை எடுத்து கூற, பேயறைந்தவள் போலவே முழித்தாள் மகள்.

                   வள்ளி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தோ என்னவோ, விடாமல் அவளுக்கு வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தார். “கொஞ்ச நேரம் முன்ன நீ சொன்ன விஷயம் தான்.. நமக்கு நம்மள விட்டா யாருமே இல்ல.அவன் நம்மை ஏதும் செஞ்சா கூட ஏன்னு கேட்க நாதி இல்ல நமக்கு.

                        “இதுல நீ வேற போய் அவனை ஏத்திவிட்டுட்டு வந்து இருக்க.. அதுக்குதான் சொல்றேன். நான் நடமாட்டத்தோட இருக்கும்போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி முடிச்சிடறேன்.

                         கல்யாணமே நடக்கல ன்னாலும் திரு கேட்பான் தான். ஆனா ஊர்வாய் சும்மா இருக்காது… அதுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் துர்கா… நீ திருவ கல்யாணம் பண்ணிக்கோ.. அதுதான் எல்லாத்துக்கும் நல்லது…” என்று முடித்துவிட்டார்.

                         அன்னை முடிவெடுத்துவிட்டே தன்னிடம் பேசுவது துர்காவிற்கும் புரிய, அதற்குமேல் என்ன பேசுவது என்று புரியவில்லை அவளுக்கு. ஆனால் அதற்காக திருவை திருமணம் செய்து கொள்ளவும் மனம் விரும்பாமல் போக, அப்போதைக்கு அந்த பேச்சை முடித்துக் கொண்டாள்.

                       அமைதியாகவே அன்னைக்கு உணவை எடுத்து வந்து வைத்தவள், தானும் உண்டு முடித்து படுத்துவிட்டாள். ஆனால் உறக்கம் தான் அவளை அணுகவே இல்லை.

                           மனம் ஏதேதோ சிந்தித்து கொண்டிருக்க, நீண்ட நேர யோசனைக்கு பிறகு அவளையறியாமல் உறங்க தொடங்கி இருந்தாள்.

                           அடுத்தநாள் அமைதியாக கழிய, வள்ளியும் திருமணம் குறித்து அவளிடம் அதன்பின் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அன்னை அப்படி விட்டுவிட மாட்டார் என்பதும் புரிந்தே இருக்க, நடப்பது நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டு அமைதியாகவே தான் இருந்தாள்.

                            வள்ளியும் பெரிதாக பேசுவது இல்லை. மகளின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்பவர் மற்ற நேரங்களில் அமைதியாக டீவியை வெறித்துக் கொண்டிருப்பார். இல்லையென்றால் உறங்குவது போல் படுத்துக் கொள்வார்.

                          அவருக்கு மகளின் வாழ்க்கை ஒன்றே எண்ணமாக இருக்க, இவளை இப்படி வழிக்கு கொண்டுவந்தால் தான் உண்டு என்று புரிந்தவராக அவர் மௌனத்தை ஆயுதமாக்கி கொண்டார். அவர் திட்டமிட்டே இதை நடத்திக் கொண்டிருக்க, தவித்து போனதென்னவோ துர்கா தான்.

                     பின்னே, அந்த ஒற்றையறை வீட்டில் இருப்பதே இவர்கள் இருவர் தான். அதிலும் ஒருவர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, கேட்கும் கேள்விகளுக்கு எண்ணியெண்ணி பதில் சொன்னால் அவளும் தான் என்ன செய்வாள்.

                              பொறுத்து பார்த்தவள் வேலைக்காவது சென்று வருவோம் என்று முடிவெடுத்தாள். ஏற்கனவே நிறைய நாட்கள் விடுப்பு எடுத்திருக்க, இதற்கு மேலும் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று நினைத்தவள் அடுத்த நாள் காலையிலேயே எழுந்து விட்டாள். தன் அன்னைக்கு மதியத்திற்கு சமைத்து வைத்தவள், அவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகளையும் எடுத்து வைத்துவிட்டு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்.

                         வள்ளி அவள் பரபரப்பாக கிளம்புவதை பார்த்தவர், “எங்கே கிளம்பிட்ட..” என்று கேட்டுவைக்க, “என்கிட்டேயா பேசின” என்பதுபோல் நக்கலாக திரும்பி பார்த்தாள் மகள். வள்ளி அவளின் பார்வையில் கடுப்பாகி முறைக்க

                     “ஹாஸ்பிடலுக்கு போறேன்மா.. எத்தனை நாளைக்கு லீவ் எடுக்க முடியும். வேலையையும் விட முடியாது. நீங்க பார்த்துக்கோங்க, நான் உங்களுக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிட்டேன். மதியத்துக்கு சமைச்சு வச்சிருக்கேன்.. பத்திரமா இருங்க, நான் சீக்கிரம் வர மாதிரி பார்த்துக்கறேன்..” என்று அவள் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக கேட்டுக் கொண்டார் வள்ளி.

                    ஆனால் அவள் முடித்த நிமிடம் “நீ இனிமே வேலைக்கு போக வேண்டாம் துர்கா..” என்று ஒற்றை வரியில் முடித்துவிட்டார்.

                                     மகள் அவரையே பார்க்க “நீ ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி சொல்லிடு. உன்னை தனியா அனுப்பிட்டு நான் இங்க பயந்துட்டே இருக்க முடியாது.. அதுவுமில்லாம திருவும் கொஞ்ச நாளைக்கு உன்னை தனியா எங்கேயும் அனுப்ப வேண்டாம் ன்னு சொல்லி இருக்கு..” என்று திருவை வேறு அவர் இழுத்து விட்டுவிட, கண்மண் தெரியாத கோபம் தான் துர்காவிற்கு.

                         தன் கைப்பையை தூக்கி ஒரு மூலையில் அடித்தவள், கோபத்துடன் அந்த வீட்டில் இருந்த ஒரே சேரில் அமர்ந்துவிட்டாள். மருத்துவமனை கிளம்புவதற்காக கட்டியிருந்த காட்டன் புடவை, அவள் அமர்ந்த வேகத்தில் கால்களில் சிக்கிக் கொள்ள, கடுப்புடன் சேரில் காலை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

                            வள்ளியை வேறு முறைத்து கொண்டிருக்க, அவர் இதற்கெல்லாம் அசருவதாகவே இல்லை. “நீ செய்த வேலைக்கான பலன்தான் இதெல்லாம்” என்பதுபோல் தான் இருந்தார் அப்போதும். மகளுக்கு அவரின் இந்த பாவனை மேலும் கடுப்பேற்ற, இதற்கெல்லாம் காரணம் அவன்தான் என்று ஒட்டுமொத்த கோபமும் அவன் ஒருவனின் மீதே திரும்பியது.

                          அந்த கடுப்பில் அவள் அமர்ந்திருக்க, சரத் எதற்காகவோ வள்ளியை பார்க்க வந்தான் அந்த நேரம். சரத்தை பார்த்தவுடன் என்ன செய்வது என்பதை முடிவெடுத்துக் கொண்டவள் அவனுடன் கிளம்பி விட்டாள். வள்ளி எதுவோ சொல்லவர, அவரை திரும்பி முறைத்தவள் சரத்தை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

                           சரத்துடன் கிளம்பியவள் திருவை சந்திக்க வேண்டும் என்று அவனிடம் கூறி இருக்க, அவனோ நேராக திருவின் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான் அவளை. நிச்சயம் துர்கா இதை எதிர்பார்த்திருக்க வில்லை.

                           திருவை சந்திக்க வேண்டும் என்று கிளம்பி விட்டாள் தான். ஆனால் அவன் வீட்டிற்கே வந்து நிற்கக்கூடும் என்று நினைக்கவில்லை அவள். சரத் அவளை கடைக்கு அழைத்து செல்வான் என்று நினைத்திருக்க, அவனோ இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருந்தான்.

                         சரத்தை முறைத்தவள் “இங்கே ஏண்டா கூட்டிட்டு வந்த” என்று அவனை முறைக்க

           “நீதானே அண்ணனை பார்க்கணும்ன்னு சொன்ன. வா..” என்று அவளை அழைத்துவிட்டு அவன் வீட்டிற்குள் நுழைந்துவிட்டான். துர்கா தயங்கியவளாக அங்கேயே நிற்க, பார்வை சுற்றிலும் சுழன்றது. அதே தெருவின் இன்னொரு முனையில் தான் அவள்வீடும் என்பதால் அங்கு அனைவர்க்கும் அவளை தெரியும்.

                      வீணாக யாரின் பார்வைக்கும் காட்சிப் பொருளாக வேண்டாம் என்று நினைத்தவள் அங்கிருந்து கிளம்ப முற்பட, சரத் வெளியில் வந்தவன் “வா துர்கா..” என்று அவன் கையை பிடித்தே இழுத்து சென்றுவிட்டான்.

                            துர்காவிற்கு முதல் முறையாக வந்திருக்க கூடாதோ என்ற எண்ணம். அந்த வராண்டாவை தாண்டி உள்ளே செல்லவில்லை அவள். இரும்புகேட் மூடி இருக்க, இவள் இருப்பது வெளியில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் உள்ளே செல்ல விரும்பாமல் அங்கிருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

                         சரத் அழைத்தும்கூட, “இங்கேயே இருக்கேன்.” என்றுவிட்டாள்.

                 சரத் உள்ளே சென்றவன் சிறிது நேரத்தில் திருவுடன் வர, அவனை முறைத்து கொண்டே அமர்ந்திருந்தாள் துர்கா. துர்காவின் பார்வை புரிந்தாலும், இந்த முறைப்பு எதற்கென்று புரியவில்லை அந்த நல்லவனுக்கு. கையிலிருந்த சாவியை சரத்திடம் கொடுத்தவன் கண்ணை காண்பிக்க, சரத் வெளியேறினான்.

                        துர்கா அப்போதும் அமைதியாகவே அமர்ந்திருக்க, அவளுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “என்ன விஷயம்.. வீடுவரை வந்திருக்க..” என்று ஒன்றுமே தெரியாதவன் போல் தான் ஆரம்பித்தான்.

                 அவனின் இந்த அணுகுமுறையே எரிச்சலாக்கியது அவளை. செய்வதையும் செய்துவிட்டு, என்னையே கேட்பானா? என்று சினந்தவள் “அம்மாகிட்ட என்ன பேசினீங்க…” என்று கேட்க

               “என்ன பேசினேன்..” என்றான் அவன் புரியாதவனாக. மெய்யாகவே அவனுக்கு புரியவும் இல்லை. ஆனால் அவனுக்கு புரியவைக்கும் அளவுக்கு எதிரில் இருந்தவளுக்கு பொறுமையும் இல்லை.

                  அவன் கேட்ட கேள்வியில், ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்தவள் பல்லை கடித்துக் கொண்டு “என் விஷயமா என் அம்மாகிட்ட என்ன பேசினீங்க. நான் வேலைக்கு போகணுமா?வேண்டாமா? ன்னு முடிவு பண்ண நீங்க யாரு?” என்று அலட்சியமாக கேட்க,

                   சுட்டுவிரலை முன்னால் நீட்டி அவள் கேள்வி கேட்ட விதம், கடுப்பாக வந்தது அவனுக்கு. அவளை பிடிக்கும் என்றாலும் கூட, இந்த அலட்சியம் பிடிக்கவே இல்லை. அவளை நேர்பார்வையாக பார்த்தவன்

                  “கையை கீழ போடு முதல்ல” என்று அதட்டலாக கூற, அதை கேட்கும் எண்ணம் இல்லாதவள் போல், “முதல்ல என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.. ஏன் என் விஷயத்துல மூக்கை நுழைக்கிறீங்க.. நான் வேலைக்கு போனா உங்களுக்கென்ன?” என்று கத்தி வைக்க

                அவள் விரலை பிடித்து முறுக்கியவன்  “சொன்னா சொன்ன பேச்சை கேட்டு பழகணும். இப்படி கத்திகிட்டே இருக்கக்கூடாது… புரியுதா?” என்று கேட்க, கைகளை அவனிடம் இருந்து உருவ முயற்சித்தாள் அவள்.

                   முடியாமல் போகவும் “என் கையை விடுங்க. நான் ஏன் உங்க பேச்சை கேட்கணும்?  நான் அப்படிதான். கத்துவேன், சத்தம் போடுவேன்..” என்று அழுத்தமாக கூறிவிட

                    “ஓஒ.. சரி ஓகே.. சத்தம் போடு..” என்றவன் சற்றே அழுத்தமாக அவள்  விரலை நெறிக்க, கண்களில் கண்ணீர் வந்தது அவளுக்கு. அவள் கண்ணீரை பார்க்க சகிக்காதவனாக அவள் விரலை விடுவித்தான் அவன்.

                                    விரல்களை அவன் விடுவித்தும் கூட, எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள் அவள். கையில் இருந்த வலி கண்களில் தெரிந்துவிட, கண்ணீரை அடக்கி கொண்டவள் அவனை நேர்பார்வை பார்த்தாள்.

                       “நீங்க என் அம்மாகிட்ட என்ன பேசுனீங்க ன்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க நினைக்கிறது நடக்காது. எனக்கு உங்களை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமே இல்ல… என்னை கட்டாயப்படுத்தாதிங்க. அதோட என் விஷயங்கள்ல தலையிடாதிங்க..” என்று அவளுக்கே உரிய அழுத்தத்துடன் கூறி முடித்தவள் எழுந்து கொண்டாள்.

                      அவனோ முகம் இறுகி போனவனாக “உட்கார் துர்கா..” என்றுவிட, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்…” என்றாள் அவள்.

                     “நீ சொன்ன விஷயங்களுக்கு நான் பதில் கொடுக்கணும் இல்ல. உட்காரு..” என்று அவன் மிரட்ட, உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் அமைதியாகவே காட்டிக் கொண்டு அமர்ந்தாள்.

                  “முதல் விஷயம்… நான் உன் அம்மாகிட்ட பேசுனது, நம்ம கல்யாணத்தை பத்தி. அதுல எந்த மாற்றமும் இல்ல. இந்த கல்யாணம் நடந்தே தீரும்.

                    “அடுத்த விஷயம்… நான் உன்னோட விஷயங்கள்ல தலையிடக்கூடாது… அதுக்கு வாய்ப்பே இல்ல, இனி நீ சம்பந்தப்பட்ட அத்தனை விஷயமும் என் முடிவு தான். அதுவும் மாறாது..” என்றவன் முடிக்கும் முன்பே, துர்கா ஆவேசமாக எதுவோ கூறப்போக

                  வாய் மேல் விரல் வைத்து “ஷ்ஷ்….”என்றவன் “நீ எது பேசறதா இருந்தாலும் உன் அம்மாகிட்ட தான் பேசணும் இனிமே. இனி கல்யாணத்தை நிறுத்தணும்ன்னு என்முன்னாடி வந்து நிற்காத. ஒருவேளை உன் அம்மா சம்மதிக்கல ன்னா இந்த பேச்சை இதோட நிறுத்திப்போம்.”

                  “ஆனா, இனி எதுவா இருந்தாலும் உன் அம்மாதான் முடிவெடுக்கணும்.” என்று அவன் முடிவாக கூறிவிட, தன் அன்னையின் முடிவு தான் அவளுக்கு ஏற்கனவே தெரியுமே.

                                     “கடவுளே” என்று முனகி கொண்டவளுக்கு அவனிடம் என்ன பேசுவது என்றுகூட புரியவில்லை. அவன் முகத்தை பார்த்தவளுக்கு இன்னுமின்னும் கோபம் வர, அவன் முன் இப்படி அமர்ந்திருப்பது வேறு சங்கடத்தை கூட்டவும் எழுந்து விட்டாள்.

                                      திருவுக்கு அவளின் இந்த முகம் வேதனையளித்தாலும், அவளை விடுவதாக இல்லை அவன். முதலில் ஒதுங்கி நின்றவன் தான். ஆனால், அதற்காக அவளை அந்த அயோக்கியனிற்கு தாரை வார்க்கவும் அவன் தயாராக இல்லை.

                                           “என்ன ஆனாலும் சரி. என்னுடனே இருக்கட்டும்” என்று முடிவெடுத்தவனாக, வருவதை பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்து விட்டான். இப்போது அதே எண்ணத்தில்தான் அவளிடம் இப்படி அடாவடியாக பேசி வைத்ததும்.

                                            அமைதியாக பேசினால் நிச்சயம் அவளை சமாளிக்க முடியாது என்று நினைத்தே அவன் இந்த வழியை கையாண்டிருந்தான்.

                                       ஆனால், அவனின் இந்த செயல்களால் ஒருத்தி, முற்றிலும் உடைந்து அவன் இப்படித்தான் என்று ஒரு உருவகத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டாள் என்று அவன் அப்போது உணரவே இல்லை. இவன் சிந்தனை களைந்து இயல்புக்கு திரும்பும் நேரம் துர்கா தூரமாக சென்று கொண்டிருந்தாள்.

Advertisement