Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 04

துர்கா மருத்துவமனைக்கு வந்து உடையை மாற்றி வெளியே வரும் நேரம் தான் வள்ளி அவளுக்கு அழைத்திருந்தார். அவரிடம் பேசிவிட்டு வைத்தவள் தன் மொபைலை அந்த ஓய்வறையில் வைத்துவிட்டு தான் பணிக்கு சென்று இருந்தாள். அவள் அவளுடைய வார்டில் இருக்கும் நேரம் அவளுக்கு அழைப்பு வந்திருப்பதாக ரிசப்ஷனில் அழைக்கவும், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே தான் அவள் சென்று அழைப்பை ஏற்றது.

மறுமுனையில் பேசிய தேவா அவள் அன்னைக்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டதாகவும், அவரை அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூற ஒருநிமிடம் ஒன்றுமே புரியாமல் நின்றுவிட்டாள் அவள்.

அதற்குள் தேவா “துர்கா.. துர்கா..” என்று கத்தியவன் “நீ சீக்கிரமா வந்து சேரு.. நான் இங்க கூடவே தான் இருக்கேன்.. கொஞ்சம் பயமா இருக்கு துர்கா.. சீக்கிரமா வாயேன்..” என்று பதட்டமாக கூறினான்.

அப்போதுதான் தன் நிலையை உணர்ந்தவள், வந்து விடுவதாக கூறி அழைப்பை துண்டித்து, மருத்துவமனையில் தகவல் சொல்லி கிளம்பிவிட்டாள். மனம் முழுவதும் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, எப்படியோ தன் அன்னையை சேர்ந்திருந்த அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் அவள்.

தேவா ஏற்கனவே தன் கையில் இருந்த அன்றைய வசூல் பணத்தை முன்பணமாக கட்டி இருக்க, அவருக்கு சிகிச்சை ஆரம்பித்து இருந்தது. இவள் உள்ளே நுழையும் நேரம் தேவா, வள்ளியை அனுமதித்திருந்த அறைக்கு வெளியே கண்ணீருடன் நின்று கொண்டிருந்தான்.

பார்ப்பதற்கு பெரியவன் போல் தோன்றினாலும், துர்காவை விட சிறியவன் அவன். படிப்பு வராமல் போகவும் திரு விடம் வேலைக்கு சேர்ந்து கொண்டிருந்தான். அங்கே வைத்து தான் வள்ளியும் பழக்கம். காலையில் நன்றாக இருந்தவர் திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்துவிட, அந்த நேரம் எப்படியோ அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தான் அவன்.

ஆனால், இப்போது நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு. அவருக்கு என்னவாக இருக்குமோ என்று பதட்டத்தில் தான் இருந்தான். கண்களில் தன்னையறியாமல் கண்ணீர் வர, துர்கா வந்துவிட வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டே நின்றிருந்தான் அவன்.

துர்கா வரவும், சற்று நிம்மதியாக உணர்ந்தவன் நடந்ததை அப்படியே அவளிடம் கூறி முடித்தான். துர்காவிற்கு பதட்டமாக இருந்தாலும், வெளியில் காட்டிக் கொள்ளாமல் திடமாகவே நின்றிருந்தாள் அவள். அம்மாவுக்கு ஒன்றும் ஆகாது என்று அவள் மனம் விடாது வேண்டிக் கொண்டே இருக்க, அந்த அறையின் வாயிலில் யாருமே துணைக்கு இல்லாமல் அவர்கள் இருவர் மட்டுமே நின்றிருந்தனர்.

இவர்களின் வெகுநேர காத்திருப்புக்கு பிறகு மருத்துவர் அவர் அன்னையின் அறையில் இருந்து வெளியே வந்தவர் இவர்களை தன்னுடைய அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றுவிட, அவர் பின்னால் ஓடினர் இருவரும்.

அவரோ அறைக்கு வந்த இருவரையும் அமர சொன்னவர், கேட்ட முதல் கேள்வி “அவங்களுக்கு இதுக்கு முன்னாடி எப்போ நெஞ்சு வலி வந்தது? என்பதுதான்.

இருவருக்குமே தெரியவில்லை. வள்ளி தனக்கு நெஞ்சுவலி இருக்கும் விஷயத்தை தான் யாரிடமும் சொன்னதே கிடையாதே. இருவரும் முழித்ததிலேயே அவருக்கு பதில் கிடைத்துவிட “என்னமா.. படிச்சு இருக்கீங்க.. நீங்களே இந்த ப்ரொபஷன்ல இருக்கீங்க,, அவங்களை பார்த்துக்க வேண்டாமா?” என்று கடிந்து கொண்டவர்

“அவங்க இதயத்தில் பிரச்சனை இருக்கு.. அவங்க இதயத்திற்கு ரத்தம் செல்லும் குழாய்கள்ல அடைப்பு இருக்கு. அவங்களுக்கு உடனடியா ஆஞ்சியோ பண்ணனும்… கொஞ்சம் தாமதிச்சாலும் அவங்களோட உயிருக்கே ஆபத்தா முடியலாம்..” என்று ஒரு படித்ததை ஒப்புவிக்கும் குரலில் அவர் சொல்லி முடிக்க, துர்காவுக்கு தான் தலையை சுற்றியது.

அன்னைக்கு இதற்கு முன் நெஞ்சுவலி இருந்திருக்கிறது என்பதே அவளுக்கு அதிர்ச்சி தான். அதற்குமேல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறுவதும், உயிருக்கே ஆபத்து என்று கூறுவதும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை அவளால்.

இன்று காலையில் என்னை சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தவர் அதற்குள் எப்படி உயிர்க்கு போராடும் நிலையில் இருப்பார்??? இது எப்படி சாத்தியம்?? என்று அவள் தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்க, அங்கே அந்த மருத்துவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

“இங்கே சர்ஜரி பண்ணினா நிறைய செலவு ஆகும், ஆஞ்சியோ ட்ரீட்மெண்ட், ஹாஸ்பிடல் பீஸ் எல்லாம் சேர்த்து கண்டிப்பா மூணு லட்சத்தை நெருங்கிடும்.. உங்களால செலவு செய்ய முடியுமா, பார்த்துக்கோங்க..” என்றவர் “ஓகே ன்னா மெயின் கவுண்டர்ல பணத்தை கட்டிடுங்க.. அவங்க சர்ஜரிக்கு ரெடி பண்ணிடுவாங்க ” என்று முடித்து விட்டார்.

மருத்துவரின் அறையில் இருந்து வெளியே வந்துவிட்ட இருவருக்குமே அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை தான். ஒருத்தி இதுவரை வாழ்ந்த வாழ்வு முழுவதும் அன்னையின் முந்தானைக்குள்ளே வாழ்ந்துவிட்டவள். உடன் நின்றிருந்தவனுக்கோ அனைத்துமே அவனின் தந்தையும், திருவும் தான் பார்த்து வந்திருக்க, இப்போது அவர்களாக முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு அவர்களை தள்ளி இருந்தது விதி.

தேவா துர்காவிடம் திரும்பியவன் “பணத்துக்கு என்ன பண்றது துர்கா.. உனக்கு ஏதாவது தோணுதா.. என்கிட்டே இருந்த திரு அண்ணாவோட காசைத்தான் நான் மொத்தமா காலையில கட்டிட்டேன். அண்ணா ஊர்ல இருந்து வர ரெண்டு நாள் ஆகும் துர்கா. அவருக்கு போன் போகவே இல்ல..”

“உன்னால எதுவும் ஏற்பாடு பண்ண முடியுமா.??” என்று கேட்க

அவனை பார்த்து முழித்தவளுக்கு அப்போதுதான் பணத்திற்கு என்ன செய்வது என்று கலக்கம் தொடங்கியது. வீட்டில் இருக்கும் தன்னுடைய நகைகள் நினைவு வர, தெளிந்த முகம் சட்டென தோய்ந்தது. வெறும் இரண்டு பவுன் நகைகளுக்கு பெரிதாக என்ன மதிப்பு இருக்கும்.

மூன்று லட்ச ரூபாய் எப்படி புரட்ட முடியும் என்று யோசித்தவளுக்கு எந்த வழியும் புலப்படாமல் போக, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அந்த நிமிடம் அவள் உடல் அத்தனை லேசானதுபோல் தோன்ற, எங்கோ பறப்பது போல் இருக்க, கண்களை மூடியவள் அந்த வராண்டாவில் மயங்கி விழுந்திருந்தாள்.

தேவா சட்டென அவளை தாங்கி கொண்டவன் அவளை அங்கிருந்த இருக்கையில் அமர்த்திவிட்டு, தண்ணீரை கொண்டு வந்து முகத்தில் தெளிக்கவும் லேசாக கண்விழித்து பார்த்தாள் அவள். தேவாவின் பயந்த முகம் முன்னால் தெரிய, தன்னையே நொந்து கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.

அப்படியே பத்து நிமிடங்கள் இருவரும் அமர்ந்திருக்க, இடையில் அன்னையை சென்று ஒருமுறை பார்த்து வந்தாள் துர்கா. அவரின் அமைதியான முகம் கண்ணீரை வரவழைக்க, அவர் கைகளை பிடித்து கண்ணீர் விட்டவள் “உனக்கு எதுவும் ஆகாதும்மா..” என்று தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டவள் வெளியே வந்து சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

தன் யோசனையிலேயே இருந்தவளுக்கு, அப்போது தான் சண்முகநாதனின் முகம் நினைவுக்கு வந்தது. நெருக்கமான உறவு இல்லையென்றாலும், தங்களுக்கென்று இருக்கும் ஒரே உறவு என்பது நினைவில் வர. கூடவே அவனின் அயோக்கிய தனங்களும் சேர்ந்தே நினைவு வந்தது அவளுக்கு.

ஆனால் இப்போதிருக்கும் நிலையில் தனக்கு உதவுபவர் யாருமில்லை என்ற நிதர்சனமும் புரிய, அவனிடம் கேட்டுப்பார்த்தால் என்ன? என்று தான் தோன்றியது அவளுக்கு. அவனிடம் பணத்திற்கு குறைவில்லை என்பதோடு அன்னையின் மீதான அவனின் பாசமும் நினைவு வந்தது அவளுக்கு.

அவள் பார்த்த நேரங்களில் எல்லாம் பாசமாக அக்கா என்று அழைத்துக் கொண்டு வள்ளியின் முன் வந்து நின்றவன் தான் சண்முகநாதன். இப்போது அதே பாசம் இருந்தால் உதவுவானே. அன்னை உயிர் பிழைத்த விடுவாரே!! என்று தோன்ற, ஒரு உபாயம் தோன்றவும் அதற்கு சாதகமாக வரிசையாக காரணங்களை உருவாக்கி கொண்டிருந்தாள் அவள்.

சண்முகநாதனை பற்றி சிந்தித்தவள் ஆயிரத்தில் ஒருமுறை கூட இது சரிவருமா ? என்று யோசித்திருக்கவே இல்லை. தன் அன்னையின் உறவுதானே என்ற எண்ணம்தான் அவளிடம்.

முடிவு செய்துவிட்டவளாக எழுந்து கொண்டவள் தேவாவிடம் “நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் தேவா.. நீ இங்கே பார்த்துக்கோ. ஏதாவது தேவைன்னா போன் பண்ணு.” என்று கூறிவிட்டு கிளம்பி இருந்தாள்.

இவள் வெளியே சென்ற அதே நேரம் சரத் அரக்கப்பரக்க அந்த மருத்துவமனைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். வெளியே சென்ற துர்காவை அவன் கவனிக்காமல் போக, அவளும் பணம் ஒன்றே குறியாக கிளம்பி இருந்தவள் எதிர்ப்படும் அவனை கவனிக்காமல் சென்றிருந்தாள்.

சண்முகநாதனின் வீடு அந்த ஏரியாவிலேயே இருப்பதால், பெரிதாக தேட வேண்டிய தேவை இருக்கவில்லை துர்காவிற்கு. ஆனால் அந்த வீட்டிற்கு அருகில் செல்லும்போதே அங்கு இருந்தவர்களின் பார்வையில் அருவறுத்துவிட்டது துர்காவிற்கு.

ஆனால் இது தனது சுகத்தை நினைக்கும் நேரம் இல்லை என்று கூறிக் கொண்டவள் முகத்தை கல்போல் வைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். ஹாலில் உட்கார்ந்து இருந்த சண்முகநாதன் இவளை நிச்சயம் அங்கே எதிர்பார்க்கவில்லை.

அவள் வருகையில் உள்ளுக்குள் துள்ளி குதித்தவன் “துர்கா கண்ணு.. வாம்மா.. வா வா ” என்று பாசமாகவே அழைக்க, சற்று நிம்மதியாக உணர்ந்தவள் உள்ளே நுழைந்தாள்.

அவனுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமரவும், அவளுக்கு குடிக்க கொண்டுவர சொன்னான் அவன். வேண்டாம் என்று மறுத்துவிட்டவள் அவனை ஏறிட்டு பார்க்காமல் குனிந்த தலையுடன் அன்னையின் உடல்நிலையை பற்றி கூறி முடித்தாள்.

அவனும் பொறுமையாக கேட்டுக் கொண்டவன் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள, மூன்று லட்சம் பணம் தேவைப்படுவதாக கூறியவள் “நான் எப்படியும் திருப்பி கொடுத்திடுவேன்.. நீங்க என்னை நம்பலாம்.ப்ளீஸ் எனக்கு இந்த ஒருமுறை உதவி பண்ணுங்க..” என்று ஒருவழியாக கேட்டு முடிக்க,

“அட, நீ ஏன் துர்காக்கண்ணு ப்ளீஸ் எல்லாம் சொல்ற.. நீ கொடுடா ன்னு உரிமையா சொல்ல வேண்டாமா? என்றவன் அப்போதே அங்கிருந்த ஒருவனிடம் சொல்லி பணத்தை எடுத்துவர சொல்ல, அவன் எடுத்து வரவும் பணத்தை அவன் கையில் வாங்கி வைத்துக் கொண்டவன்

“ஆனா., பாரு துர்கா கண்ணு.. இது தொழில் பண்ற இடம், இங்கே பணத்தை சும்மா தூக்கி கொடுத்து பழக்கபடுத்த முடியாது. உனக்கே தெரியும் வெளியே வாங்கினா என்ன வட்டி கேட்பானுங்க ன்னு” என்று அவன் கூறும்போதே

“நான் அதெல்லாம் சரியா கொடுத்தர்றேன்.. எவ்ளோ வட்டி இருந்தாலும் பரவாயில்ல..” என்றிருந்தாள் அவள்.

சிரித்துக் கொண்டவன் “நீ ஏன் அக்கா பொண்ணு துர்கா கண்ணு. உன்கிட்ட நான் என்ன வட்டி வாங்குறது.. இங்க எல்லாருமே பணத்துக்கு ஈடா ஏதோ ஒரு வேலை செய்வாங்க..” என்று அவன் கூறும்போதே உடல் நடுங்க தொடங்கிவிட்டது அவளுக்கு.

அவன் பேச்சு புரிய பெரிய அறிவு தேவையில்லையே.உயிரே போனாலும் இது தன்னால் முடியாது என்று தோன்றிவிட்டது. அவள் எழுந்து கொள்ள முற்படும் வேளையில் “ஆனா.. பாரு நீ என் அக்கா மக.. நான் உன்கிட்ட அப்படியெல்லாம் வேலை வாங்க முடியுமா?? நான் ரெண்டு பேருக்கும் சேதாரம் இல்லாம ஒரு வழி சொல்றேன்.” என்றான் அந்த அயோக்கியன்.

அவள் அவனை சந்தேகமாக பார்க்கும்போதே “நீ யோசிக்கிற மாதிரி எதுவும் இல்ல.. என்னைக் கட்டிக்கோ.உன் அம்மாவோட வைத்தியத்துக்கு நான் பொறுப்பு ” என்றிருந்தான்.

தைரியமானவளாகவே இருந்தாலும் அவனின் வார்த்தைகளில் உடல் அதிர்ந்து நின்றது அவளுக்கு. என்ன தைரியம் இவனுக்கு? எண்டு யோசித்தவள் கூடவே “உன்னிடம் கேட்க என்ன தைரியம் வேண்டும்?? உன் இன்றைய நிலைக்கு அவன் உன்னை கொன்றே போட்டால் கூட கேட்பதற்கு உனக்கு ஒரு நாதியும் கிடையாது. முக்கியமாக இவன் சட்டையை பிடித்து இவனை நன்கு மிதிக்கும் அளவுக்கு உன் வீட்டில் ஓர் அண்ணனோ, தம்பியோ யாருமே இல்லை. உனக்கு ஆதரவாக இருந்த ஒரே ஜீவனும் இப்போது மருத்துவமனையில்.” என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.

கழிவிரக்கம் ஒரு மனிதனை எந்த எல்லைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்வுபூர்வமாக அங்கே அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

“எழுந்து சென்றுவிடு” என்று உயிர் மொத்தமும் கெஞ்சிக் கொண்டிருக்க, “என் அன்னையை என்ன செய்வேன்..” என்று நெஞ்சின் ஒரு ஓரம் துடித்தது அவளுக்கு. எனக்கு என்ன நிலை வந்திருந்தாலும், இவனிடம் இப்படி வந்து நின்றிருக்க மாட்டேனே, இப்போது ஆபத்தில் இருப்பது என் அன்னையின் உயிரல்லவா..” என்று தன்னையே கேட்டுக் கொண்டவளுக்கு கண்முன் தெரிந்த அந்தப்பணம் அப்போது கடவுளாகவே தெரிந்தது.

ஆனால் அதை அடையும் வழி சாக்கடைக்கு இணையான அருவருப்பை தர, உமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

சிறிது நேரம் யோசித்தவள் இப்போதைக்கு பணத்தை வாங்கி கொள்வது என்று முடிவெடுத்தாள். இவனை பற்றி பிறகு யோசிப்போம். அன்னை தெளிவாகி விட்டால் அவரே தண்னி காப்பாற்றி விடுவார் என்று தோன்றவும், அவனை நிமிர்ந்து பார்த்து பணத்துக்காக கையை நீட்டினாள்.

தன் வாழ்வில் அவள் தன்னையே வெறுக்கும் ஒருநொடி வரும் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டாள் அவள். இந்த உயிர் இந்த நிமிடமே பிரிந்துவிடாதா ? என்று அத்தனை கடவுள்களையும் வேண்டியபடியே அவள் கையை நீட்ட, சண்முகநாதன் தன் திட்டம் வெற்றி கண்டதில் மிகுந்த திருப்தியாக உணர்ந்தான்.

“இந்த பணத்தை ஹாஸ்பிடல்ல நானே கட்டிடறேன் துர்கா. இதுக்குமேல செலவு ஆனாலும் நானே பார்த்துக்கறேன்.. ஆனா ஒரு விஷயம்.” என்று அவன் நிறுத்த துர்கா அவன் முகம் பார்க்கவும் “நமக்கு நாளைக்கே கல்யாணம் நடக்கணும்.” என்று முடித்தான் அவன்.

அவளோ “அது எப்படி அம்மா இல்லாம.. முடியாதே..” என்று மறுக்க

“ஏன் முடியாது.. எப்படி இருந்தாலும் என்னை கல்யாணம் பண்ணிக்க போற.. அது நாளைக்கே பண்ணிக்குவோம்.என்னை ஏமாத்த முடியாது துர்கா..இதுக்கு சம்மதம் ன்னா சொல்லு. இப்போவே கிளம்புவோம்” என்று அவன் ஒரே குறியாக அவளை நெருக்க

நாளைய நாள் எனக்கு விடிந்தால் தானே திருமணம்? என்று தனக்குள் சொல்லிக் கொண்டு எழுந்து அவனுடன் கிளம்பினாள் அவள்.

காரை அவனே எடுக்க, கண்ணீரை கூட வெளியே விடாமல் “பொறு மனமே பொறு” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கல்போல் பின்சீட்டில் அமர்ந்து கொண்டிருந்தாள் அவள். சண்முகநாதனோ எதைப்பற்றியும் கவலை அற்றவனாக கார இயக்கி கொண்டிருந்தான்.

கிளி தானாகவே வந்து தன் வலையில் விழும் என்று கனவா கண்டான் அவன்? அவன் ஏதோ நினைத்து திட்டம் தீட்டி இருக்க, விதி தானாகவே அவனுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதை விடாமல் பற்றிக் கொள்பவன் போல் வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.

பின்னால் அமர்ந்திருந்தவளின் கண்ணீர் காய்ந்து வறண்டு போன முகமோ, அவளின் ஜீவனற்ற கண்களோ எதுவுமே அவனுக்கு புலப்படவில்லை. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஐந்தரை அடி உயர உடல் தான். அதன் செழிப்பு மட்டுமே கண்ணில்பட, கண்களால் அவளை துகிலுரித்துக் கொண்டிருந்தான் அவன்.

ஆனால் இவர்கள் இருவருமே மறந்துவிட்ட ஒரே விஷயம் திரு…

Advertisement