Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 03

கையில் பாட்டிலுடன் தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டிருந்தான் சண்முக நாதன். அவனின் அல்லக்கைகள் அவனுக்கு துணைக்கு இருக்க, அந்த பெரிய வீட்டின் ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் அனைவரும்.

கையில் இருந்த மது உள்ளே செல்ல, செல்ல துர்காவின் மீது இருந்த வெறி அதிகமாகி கொண்டே போக, ஏதேதோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான் அவன். அவன் எண்ணங்களில் மீண்டும் மீண்டும் துர்கா மட்டுமே நிறைய, அவள் தன் கைகளில் இருப்பதாக எண்ணிக் கொண்டவன் கீழ்த்தரமான கற்பனைகளில் மிதக்க ஆரம்பித்து இருந்தான்.

அவன் உடன் அமர்ந்திருப்பவர்களும் அவனுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்க, “இன்னும் ரெண்டு நாள்தான் துர்கா.. அப்புறம் நீ மொத்தமா எனக்குதான்..” என்று புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன். அந்த நேரம் வள்ளி அவனை இன்று கடையில் வைத்து அடித்ததும் நினைவு வர “அவ என்கைக்கு வரட்டும்… அப்புறம் அந்த கிழவிக்கு ஒரு வழி பண்றேன். என் மேலேயா கை வச்சா..” என்று வன்மமாக எண்ணமிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

அந்த நேரம் அங்கு வந்த பெண் ஒருத்தி, அவனுடன் அமர்ந்து குடித்து கொண்டிருந்தவர்களை பார்த்து முகம் சுழித்துவிட்டு, “டேய் எந்திரிச்சு போங்கடா..” என்று விரட்டி விட்டாள் அவர்களை. அவர்கள் அனைவரும் அந்த வீட்டுக்கு வெளியே சென்று விட, போதையில் தடுமாறிக் கொண்டிருந்தவனை கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவள் கதவை மூடிவிட, வெளியே வந்து அமர்ந்திருந்த அவன் அல்லக்கைகள் மூடிய கதவை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டனர்.

அவர்களுக்கு இது வழக்கமாக பார்க்கும் காட்சி தான் என்பதால் எதுவும் வேறுபாடாக தோன்றவே இல்லை. அதுவும் சண்முகநாதன் இவள் ஒருத்தி தான் என்று இல்லாமல், அவனிடம் இதற்கென்று வரும் பெண்கள் அனைவரையுமே முடிந்தவரை தானும் பயன்படுத்திக் கொள்ள தான் பார்ப்பான்.

இவளும் அதை போன்ற ஒருத்தி தான் என்பதால் அவர்கள் இவர்களை கண்டுகொள்ளாமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

——————————————————-

வள்ளி அன்றைய நாள் முழுவதையும் ஒருவித பயத்தோடே கழித்தவர், இரவு எட்டு மணி அளவில் தான் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார். அவரை பார்த்துக் கொண்டே இருந்த தேவா கூட “என்ன பிரச்சனை வள்ளிம்மா.. ஏன் இப்படி இருக்கீங்க?? பணம் எதுவும் வேணுமா.. அண்ணனுக்கு போன் போடவா ” என்று அக்கறையாக கேட்டிருக்க

“ஒண்ணுமில்ல தேவா, பணம் எல்லாம் வேண்டாம்… புள்ள மலைக்கு போயிருக்கு..நல்லபடியா திரும்பட்டும்.. நீ போன போட்டு தொந்தரவு பண்ணாத.” என்று அவன் வாயை அடைத்து விட்டிருந்தார்.

ஆனால் முகம் மட்டும் ஏதோ யோசனையிலேயே இருக்க, தேவா கவனித்தாலும் அவனால் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சரத் ஒரு லோட் ஏற்றிக்கொண்டு, ஆந்திரா செல்லும் அவர்களின் லாரியில் சென்றுவிட்டு இருக்க, தேவா ஒருவன் தான் வள்ளியுடன் கடையில்.

அவனும் சண்முகநாதன் வரும் நேரம் வெளியில் வசூலுக்கு சென்று இருந்ததால் அவன் வந்து போன விவரம் தெரிந்திருக்கவே இல்லை. அன்று நாள் முழுவதும் அவன் யோசித்தும் அவனுக்கு ஒன்றும் புலப்படாமல் போக, சரியாக ஏழு மணி அளவில் அவனிடம் வந்த வள்ளி “தேவா.. கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் போய் துர்காவை அழைச்சிட்டு வந்துடறியா.. உடம்பு முடியலன்னு சொல்லிட்டு இருந்தா.. கொஞ்சம் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுடேன்..” என்று கேட்க

அவரை ஆச்சரியமாக பார்த்தான் தேவா… அவர் மகளை பற்றி யாரிடமும் பேசவே மாட்டார் அவர். அவளிடம் இவர்கள் வாயடித்தாலும் கூட அதெல்லாம் அவள் வீட்டிற்கு எப்போதாவது செல்லும் போது மட்டும்தான் இருக்கும்.

இதுதான் முதல்முறை அவராக அவனிடம் இப்படி கெஞ்சலாக உதவி கேட்டு நிற்பதும். அவர் முகம் பார்த்தவனுக்கு மறக்கமுடியாமல் போக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்தான் அவன். மருத்துவமனை வாசலில் காத்திருந்தவன் துர்கா வரவும் அவளை அழைத்து சென்று வீட்டில் விட்டு கடைக்கு திரும்பி வரவும் தான் நிம்மதியாக மூச்சு வந்தது வள்ளிக்கு.

மருத்துவமனையில் காத்திருந்த தேவாவிடம் துர்கா கேள்விகளால் துளைத்து இருக்க, அவன்தான் நொந்து போயிருந்தான். “உன் அம்மாதான் உன்னை வீட்ல கொண்டு போய் விட சொல்லுச்சு. போய் அவங்க கிட்ட கேளு.. இப்போ வண்டில ஏறு” என்று அவளை அதட்டி தான் வீட்டில் விட்டு வந்திருந்தான் அவன்.

அதன்பிறகே கடையை மூடிவிட்டு கிளம்பி இருந்தனர் இருவரும். வள்ளி வீட்டை அடைய மகள் சமையலை முடித்து வைத்திருக்க, பார்த்தாலும் எதுவுமே பேசவில்லை அவர்.

அமைதியாக சென்று குளித்து விட்டு வந்தவர் அமைதியாகவே இருக்க, அவரின் அமைதியில் ஏதோ தோன்ற அவர் அருகில் அமர்ந்தவள் “ம்மா.. என்னமா.. உடம்பு ஏதும் முடியலையா.. என்ன பண்ணுது” என்று அவரிடம் கேட்க

சுதாரித்துக் கொண்டார் வள்ளி. தன் வேதனையை மகளிடம் இறக்கி வைக்க அவர் விரும்ப வில்லை. “எப்படியும் இரண்டு நாளில் திரு வந்து விடுவான். அவனிடம் சொல்லிவிட்டால் போதும், அவன் சண்முகநாதனை பார்த்துக் கொள்வான் ” என்று எண்ணியவர் “இதற்காக மகளை வாட்ட வேண்டாம் ” என்று முடிவு செய்து கொண்டார் தனக்குள்ளே.

அதன்படியே அவள் கேட்டபோதும் கூட “ஒண்ணுமில்ல துர்காம்மா.. திரு தம்பி வர ரெண்டு நாள் ஆகும் இல்லையா.. கடையில கொஞ்சம் வேலை இருக்கு, தம்பி வந்துட்டா நல்ல இருக்கும் ன்னு பேசிட்டு இருந்தோம்… அதே ஞாபகத்துல இருந்திட்டேன்மா..” என்று சமாளிக்க

தலையிலேயே அடித்துக் கொண்டாள் மகள்.. “உனக்கு ஏதாச்சும் இருக்காம்மா. அது அவன் கடை தானே, அவனுக்கு அக்கறை இருந்தா அவனே வந்து பார்த்துக்க போறான். அதுக்கு நீ இப்படி யோசிச்சிட்டே உக்காந்திட்டு இருப்பியா.. ”

“கொஞ்ச நேரத்துல பயந்தே போய்ட்டேன்… ஏம்மா இப்படி பண்ற..” என்று அவள் கத்திவிட

அவள் பேசியதை கவனத்தில் கொள்ளாதவர் “அது என்ன துர்கா.. திரு தம்பிய அவ்வளவு லேசா அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசுற…உன்னைவிட சின்னபையனா ?” என்று முறைத்தவர்

“சம்பளம் கொடுக்கற முதலாளி.. அந்த தம்பி இல்லன்னா இன்னிக்கு நீ படிச்சிருக்கவும் மாட்ட, இன்னிக்கு வேலைக்கும் போயிருக்க மாட்ட.. கைநீட்டி காசு வாங்கிக்கறோம்ல வேலை பார்க்கத்தான் வேணும்.. நீ என்னை பேசத்தான் உனக்கு உரிமை.. நம்ம வசதிக்கு அடுத்தவங்களை குறை சொல்ல கூடாது…”

“அப்படி நான் உன்னை வளர்த்தவும் இல்ல.. இதுதான் கடைசி, நீ திருவ மரியாதை இல்லாம பேசினது.. புரியுதா..” என்று கண்டிப்புடன் வள்ளி கூறிவிட

அன்னை கூறுவதில் இருக்கும் நியாயம் புரிந்தது அவளுக்கு. ஆனால் ஏற்றுக்கொள்ள தான் மனதில்லை. எப்போதும்போல அவர் முன் வாயைவிட்ட தன்னை நொந்து கொண்டு அமைதியாக தலையாட்டி வைத்தாள் அவள். அவள் முகம் வாடுவதை பொறுக்காதவராக “சாப்பாடு போட்டுட்டு வா.. சாப்பிடலாம், காலையில் வேளைக்கு போக வேண்டாமா நீ ” என்று கூறி அவளை எழுப்பிவிட

அமைதியாக சென்று உணவை எடுத்து வந்து வைத்தாள் அவள். உணவு தொண்டையில் சிக்கியது வள்ளிக்கு. இப்போது சாப்பிடாமல் போனால் அதற்கும் ஏதாவது பேசுவாள் என்று மகளை பற்றி தெரிந்தவராக தண்ணீரை குடித்து உணவை விழுங்கி முடித்தார் வள்ளி.

தாய், மகள் இருவரும் உண்டு முடித்து அமைதியாக படுத்து விட்டாலும் இருவருக்குமே உறக்கம் வரவில்லை. வள்ளிக்கு அவரின் வேதனையால் உறக்கம் வரவில்லை என்றால் மகளின் மனதில் திருவை பற்றிய எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டிருந்தது.

அவள் முதல்முறையாக திருவிடம் பேசியது நினைவு வந்தது அவளுக்கு. திருவிடம் அவர் அன்னை வேலைக்கு என்று சேர்ந்தபோது பதினான்கு வயது அவளுக்கு. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இருபத்து மூன்று வயதான திரு பார்வைக்கு அதைவிடவும் பெரியவனாகவே தெரிய, அவனை பார்த்தாலே சிறு பயம் வரும் அவளுக்குள்.

அதைக் கொண்டே அவன் கடை இருக்கும் பக்கம் கூட செல்லமாட்டாள் அவள். இத்தனைக்கும் வள்ளி அவன் கடையில் வேலைக்கு சேர்ந்தது முதல் அவளின் படிப்பு செலவுகளுக்கு கேட்டநேரம் பணம் கொடுத்து உதவுபவன் திரு தான். இது துர்காவுக்கு தெரிந்தே இருந்தாலும் கூட, அவனிடம் எட்டியே இருப்பாள்.

இவள் படிப்பை முடித்து வேளைக்கு என்று செல்லும்வரை கூட திரு என்ற ஒருவனிடம் நின்று ஒருவார்த்தை கூட பேசியது இல்லை அவள். அப்படி இருக்க, அவள் படிப்பை முடித்து வேளைக்கு சென்ற அடுத்த மாதத்தில் ஒருநாள் வள்ளி காய்ச்சலில் விழுந்தவர் ஒரு வாரத்திற்கு எழாமல் இருக்க, பயந்தே போனாள் துர்கா.

ஒரு வாரத்திற்கு பின் காய்ச்சல் விட்டு விட்டாலும் பயம் குறையவே இல்லை. அப்போதுதான் அவரை வேலையை விடச் சொல்லி அவள் ஆரம்பித்தது. ஆனால் வள்ளி அவள் சொல்லியதை ஏற்றுக் கொள்ளாமல் சில நாட்களில் கடைக்கு கிளம்பிவிட, அவரிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று புரிந்தவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திருவின் முன் சென்று நின்றாள்.

மார்க்கெட்டில் அவன் லாரி அருகில் அவன் சிலருடன் நின்று பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம்தான் அவள் சென்று நின்றது. அவளும் என்ன செய்ய முடியும் வள்ளி கண்களில் படாமல் சரியான நேரம் பார்த்து அதே நேரத்தில் இவனையும் பிடிக்க வேண்டுமே. அன்று வள்ளி கடைக்கு கிளம்பியதும் மருத்துவமனைக்கு கிளம்பியவள், இவனை பார்த்து விட வேண்டும் என்ற வேகத்தில் இங்கு வந்திருந்தாள்.

ஆனால், அத்தனை நேரம் இலகுவாக பேசிக் கொண்டிருந்த திருவின் முகம் இவளைக் கண்டநொடி ரௌத்ரமாக மாறிப் போக, அவர்களை விட்டு விலகி இவள் அருகே வந்தான் அவன்.

“எதுக்கு இங்கே வந்திருக்க??? உன் அம்மா கடையில இருக்காங்க.. போய்ப்பாரு..” என்று எடுத்த எடுப்பில் அவன் கூறி விட்டு திரும்ப

“நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன்’ என்றாள் வேகமாக.

நின்று அவள் புறம் திரும்பியவன், சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “என்ன.. என்ன பேசணும் ? சொல்லிட்டு கெளம்பு முதல்ல..” என்று கடுகடுவென கூற

“இவன்கிட்ட பேச எனக்கென்ன ஆசையா, ரொம்ப பண்றான்..” என்று நினைத்துக் கொண்டவள் “என் அம்மாவை வேலைக்கு வரவேண்டாம் ன்னு சொல்லிடுங்க… அவங்களால முடியல.. இப்போ நான் வேலைக்கு போறேன், நான் அவர்கள் பார்த்துப்பேன். நீங்க அவங்கள வர வேண்டாம்ன்னு சொல்லிடுங்க..” என்று ஒப்பிப்பது போல் வேகமாக கூறி முடிக்க

“லூசா இவ ” என்பதுபோல் தான் பார்த்தான் அவன். அவன் பார்வையை புரிந்தவளாக “நான் அம்மாட்ட சொல்லி பார்த்தேன். அவங்க கேட்கல, நீங்க வேலைக்கு வரவேண்டாம் னு சொல்லிட்டா, நான் வேற எங்கேயும் வேலைக்கு போகாம பார்த்துப்பேன் ” என்று கூறிவிட, திரு இவளை பார்த்தவன்

“என்னால சொல்ல முடியாது… உனக்கு வேணும்ன்னா உன் அம்மாவை அனுப்பாத.. நீயாச்சு, அவங்களாச்சு.. போய் உன் அம்மாகிட்ட பேசு. இனி இப்படி எல்லாம் என்னை தேடி வராத. உன் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான். கிளம்பு முதல்ல” என்று அதட்டலாக அவன் முடித்துவிட, அவள் மனதில் அன்று முதல் வேண்டாதவனாகவே தங்கி போனான் திரு.

“ம்ஹும், தப்புதான்.. என் அம்மாதான, உங்களுக்கு எப்படி வலி புரியும்.. உங்ககிட்ட பேச வந்தது என்னோட தப்பு..மன்னிச்சிடுங்க..” என்று குரல் நடுங்க கூறிவிட்டு, அவனை திரும்பி பார்க்காமல் நடந்து விட்டாள் அவள். மனம் முழுவதும் ஆத்திரம்தான் அப்போது, பொதுவாகவே பெரிதாக அழமாட்டாள் என்பதால் சமாளித்துக் கொண்டாள்.

“என்ன நினைத்து கொண்டிருக்கிறான் என்னைப்பற்றி, இவன்கிட்ட பேசத்தான் போய் நின்னேனா, எனக்கு மட்டும் ஆசையா? இந்த வளர்ந்து கெட்டவன் முன்னால போய் நிற்கணும் ன்னு. அறிவு கெட்டவன்” என்று திட்டிக் கொண்டவள் அன்று முதல் இன்று வரை அவனை பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை.
இப்போதும் அவனை மரியாதை இல்லாமல் விளித்ததை பற்றி எந்த உறுத்தலும் இல்லை அவளுக்கு. அவனுக்கெல்லாம் இதுவே அதிகம் என்ற நினைப்புதான். “ஒரு வயதான மனுஷியை இப்படி வேலை வாங்கிட்டு, இவன் ஓனர் ன்னு சொல்லி ஊரை சுத்திட்டு இருக்கான். இதுல நான் சொல்லிக்கூட அவங்களை வேலையை விட்டு அனுப்பவே இல்லை. இவனுக்கு மரியாதை ஒரு கேடு” என்று நினைத்துக் கொண்டவள் அவனை திட்டிக் கொண்டே உறங்கி போயிருந்தாள்.

வள்ளி இரவு முழுவதும் வெகுநேரம் உறங்காமல் இருந்தவர், பின்னிரவு நேரத்தில் தான் உறங்க தொடங்கி இருந்தார். ஆனால் அப்போதும் கூட தன் வழக்கமான நேரத்திற்கு எழுந்து விட்டவர் சாமையை முடித்து மகளை வேலைக்கு அனுப்பிவிட்டு தான் கிளம்பி இருந்தார்.

மகளை வேலைக்கு அனுப்ப மனம் இல்லாத போதும், அவளுக்கு பதில் சொல்லி மாளாது என்று நினைத்துக் கொண்டவர், மேலும் “ரெண்டு நாள் டைம் சொல்லி இருக்கானே, பார்த்துக்கலாம்” என்று ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அவளை அனுப்பி இருந்தார்.
துர்கா கூட விளையாட்டாக “என்னமா.. பத்திரம் நீளமா போயிட்டே இருக்கு, உனக்கு கடை லீவா இன்னிக்கு” என்று கிண்டல் செய்துதான் கிளம்பி இருந்தாள்.

மகளின் கிண்டலில் சிரித்துக் கொண்டே தான் கடைக்கு கிளம்பி வந்திருந்தார். என்றும் இல்லாத வழக்கமாக கடைக்கு சென்று கையிலிருந்த கூடையை அருகில் வைத்துவிட்டு, மகளுக்கு அலைபேசியில் அழைத்தவர் அவள் பத்திரமாக சென்று விட்டாளா ? என்று கேட்டுக் கொண்டார். அன்னையின் செயல் புரியாவிட்டாலும் அவருக்கு பதில் சொல்லி வைத்தாள் துர்கா.

அவளிடம் பேசிவிட்டு வைத்தவர் நிம்மதியாக தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தது அவருக்கு. “எப்போதும் இருப்பதுதானே..” என்று நினைத்துக் கொண்டு அவர் தொடர்ந்து வேலையை பார்க்க, அடுத்த பத்து நிமிடங்களில் வலி அதிகமாகி அவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தான் தேவா.

துர்காவுக்கும் அவன் அழைத்து சொல்லி இருக்க, வேகமாக அந்த மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் அந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தாள் அவள். அங்கே வந்தவளிடம் அவள் அன்னைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட, ஒன்றுமே புரியாமல் மயங்கி விழுந்திருந்தாள் அவள்.

Advertisement