Advertisement

மருத்துவமனையை அடைந்தவள் அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு அன்னையிடம் சொன்னது போலவே மூன்று மணிக்கு மருத்துவமனையில் அரைநாள் விடுப்பு சொல்லிவிட்டு கிளம்பி இருந்தாள். முன்கூட்டியே சொல்லி இருந்ததால், அவளுக்கு விடுப்பு கிடைப்பதும் சுலபமாகவே இருக்க, அடுத்த முக்கால் மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிட்டாள் அவள்.

தாய் இன்னும் வீட்டுக்கு வராமல் இருக்க, அவரை திட்டிக் கொண்டவள் கூடவே, அவரை இப்படி வேலை வாங்கும் அவர் முதலாளியையும் சேர்த்தே திட்டிக் கொண்டாள். “இன்னிக்கு ஒரு நாள் ஆச்சும் சீக்கிரம் அனுப்பலாம் தானே. எவ்ளோ வேலை செய்வாங்க.. அறிவிருந்தா வேலைக்கு வச்சிட்டு இருப்பானா?? ஒருநாள் கடைக்கு லீவ் விட்டுட்டு போக வேண்டியது தானே…” என்று புலம்பிக் கொண்டிருந்தாள் அவள்.

புலம்பல்களுக்கு இடையே குளித்து முடித்து, தன் சென்ற பிறந்தநாள் அன்று தன் அன்னை எடுத்து கொடுத்திருந்த அந்த சாம்பல் வண்ண சேலையை அணிந்து கொண்டவள், அதற்கு பொருத்தமாக தன்னிடம் இருந்த ஒரு ஆக்சிஜனேற்றப்பட்ட கவரிங் நெக்லஸையும், கம்மலையும் அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொள்ள திருப்தியாகவே இருந்தது அவளுக்கு.

ப்ளாக் மெட்டல் என்று அழைக்கப்படும் அந்த வகை நகைகளில் அவளுக்கு பிடித்தம் அதிகமிருக்க, எப்போதும் அவற்றை விரும்பி வாங்கி வைத்து கொள்வாள் அவள். இப்போதும் அவற்றை அணிந்து கொண்டு தயாராகி அரைமணி நேரத்திற்கும் மேலாக அவள் காத்திருக்க, அவள் பொறுமையை முழுதாக சோதித்து விட்டே வந்து சேர்ந்தார் வள்ளி.

வந்தவர் முதலில் பார்த்தது அவள் அணிந்திருந்த நகைகளை தான். “ஏண்டி, அதான் உனக்குன்னு வாங்கி வச்சிருக்கேனே. அந்த நகையை போட்டாதான் என்ன?? போட்டுட்டு இருந்த தங்க செயினை கழட்டிட்டு இதை மாட்டிட்டு நிற்கணும்மா இப்போ.. அப்படி என்னதான் இருக்கோ இந்த கறுத்து போய் பல்லை இளிக்கிற நகையில.” என்று சளித்துக் கொண்டவர் “நல்லாவே இல்லடி…” என்று கூற

“இப்போ நீ கெளம்புறியா, இல்லையா? இதை கழட்ட சொன்னா உன்கூடவே வரமாட்டேன் பார்த்துக்கோ..” என்றவள் அமைதியாக அமர்ந்துவிட

கையில் வைத்திருந்த பையை கோபமாக விட்டெறிந்த வள்ளி குளித்து கிளம்ப, இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி கோவிலை வந்தடைந்தனர். கோவிலில் பதினெட்டு படிகள் வைத்து அலங்கரிக்கப்பட்டு அதற்குமேல் அழகாக புகைப்படத்தில் வீற்றிருந்தார் வீரமணிகண்டன்.
மாலை அணிந்த ஐயப்ப சாமிகளுக்கு, இருமுடி கட்டிக் கொண்டிருக்க, அங்கு அமர்ந்திருந்த கூட்டத்தில் திருவும் ஒருவன். அவன் கவனம் முழுவதும் முன்பிருந்த ஐயப்பனின் மேல் இருக்க, யாரையும் கவனிக்கவில்லை அவன். அங்கு சொல்லும் கோஷங்களை திரும்ப சொல்லிக் கொண்டு அவன் அமர்ந்திருக்க, அவன் முறை வரவும் எழுந்து முன்னே சென்று அமர்ந்தான் அவன்.

வள்ளி மகளை அழைத்துக் கொண்டு, அருகில் சென்று நிற்க அவனுக்கு இருபுறமும் அமர்ந்து கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். அவனுக்கு உறவு நாங்கள் தான் என்பதுபோல் இருவரும் இருக்க, துர்கா தன் மூன்றாண்டு வழக்கமாக இந்த ஆண்டும் அவனிடம் நெய்த்தேங்காய் கொடுத்து முடித்தாள்.

அவனுக்கு இருமுடி கட்டி முடியவும், அடுத்த ஒருமணி நேரத்தில் அத்தனை பேரும் ஐயனை நாடி சபரிமலைக்கு புறப்பட்டு இருந்தனர். அவர்கள் வாகனம் செல்வதையே பார்த்திருந்த துர்கா தன்னையறியாமல் “ஐயப்பா.., எந்த பிரச்சனையும் இல்லாம எல்லாரும் நல்லபடியா போயிட்டு வரணும்ப்பா…” என்று கண்களை மூடி வேண்டிக் கொண்டவள் தன் அன்னையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
பாவம்.. அந்த ஐயப்பன் அவளுக்கே ஆயிரம் சோதனைகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறான் என்பது அப்போது அவளுக்கு தெரியவே இல்லை.
சரியாக திருநாவுக்கரசு சபரி மலைக்கு கிளம்பிய மூன்றாம் நாள். வள்ளி கடையில் வேலையாக இருந்த நேரம் அவரின் முன்பாக வந்து நின்றான் அவரது தம்பி சண்முகநாதன். சண்முகநாதன் வள்ளியின் சித்தி மகன், அவரைவிட ஏழு வயது சிறியவன்.. ஆரம்பத்தில் வள்ளிக்கு அவன்மீது பாசம் இருந்து இருந்தாலும், கணவர் இறந்த சமயம் உறவுகளின் பார்வையை உணர்ந்து தனித்து நின்று விட்டதால் பெரிதாக யாரையும் சேர்த்துக் கொண்டது இல்லை வள்ளி.

அவனோடான தொடர்பும் அப்போதே விட்டு போயிருக்க, அதன் பின் அவனின் நடவடிக்கைகளில் முழுவதுமாக அவனை வெறுத்து ஒதுக்கி இருந்தவர், அவன் முகத்தில் கூட விழிப்பது இல்லை. அப்பாவி பெண்களை முதலீடாக வைத்து, அவர்களை பணம் படைத்த மிருகங்களுக்கும், நான் பெரிய ஆள் என்று சொல்லி திரியும் சின்னத்தனமான பிறவிகளுக்கும் இரையாக்கி கொண்டிருந்தான் அவன்.

பெண்ணை பெற்றிருப்பவர் என்பதால் அவனின் குணம் தெரிந்த நொடியே அவனிடம் இருந்து விலகி கொண்டார் வள்ளி. மேலும் அவர் திருவின் பாதுகாப்பில் இருப்பதால் அவனும் பெரிதாக அவர்களை தொல்லை செய்வது இல்லை.

திருவிடம் சொல்லிவிட்டால் நையப்புடைத்து விடுவான் என்று தெரிந்து இருந்ததால் ஒதுங்கியே இருந்தான் அவன். ஆனால் ஆசை யாரை விட்டது?? மருத்துவமனைக்கு செல்லும்போதும், திரும்ப வரும்போதும் அவன் கண்ணில் படும் துர்கா அவன் ஆசையை தூண்டி விட்டிருக்க நாற்பது வயதாகும் அந்த மைனருக்கு அவள்மேல் ஆசை வந்திருந்தது இந்த வயதில்.
ஏற்கனவே ஒருமுறை தன் அக்காவிடம் இதை பற்றி பேசி இருந்தான் அவன். வள்ளி அப்போதே கையில் துடைப்பத்தை எடுத்தவர் அவனை அதிலேயே ரெண்டு வைத்திருக்க, அன்று அமைதியாக சென்று இருந்தவன் இன்று மீண்டும் அவரைத் தேடி வந்திருந்தான்.

அவனை பார்த்த கணம் வள்ளிக்கு அத்தனை ஆத்திரம் வர, அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் அவர். அவர் அருகில் வந்தவன் சலனமே இல்லாமல் “என்னக்கா எப்படி இருக்க??” என்று கேட்டதோடு நிறுத்தி இருக்கலாம்.

அவன் நேரம் “உன் தம்பி நான் இப்படி இருக்க, நீ எனக்கு அக்காவை இருந்து இப்படி கஷ்டப்படறியே, உனக்கு தேவையா இதெல்லாம்.” என்று கேட்க

“என்ன பண்றது??.. தெரு நாயெல்லாம் கடைக்குள்ள வரும்ன்னு எனக்கு தெரியாம போச்சே.. தெரிஞ்சு இருந்தா விளக்குமாறை எடுத்து தயாரா வச்சிருப்பேன்..” என்று அவர் பதில் கூற

“நீ என்னை புரிஞ்சிக்கவே மாட்டியா அக்கா.. நான் உன்னையும், உன் பொன்னையும் ராணி மாதிரி பார்த்துக்கணும்ன்னு நினைக்கிறன்.. ஆனா நீ” என்று அவன் நயமாகவே பேச

“என்னை அக்கா ன்னு கூப்பிடாத. அசிங்கமா விழுது என் காதுல… நாயே.. நீ என்னடா எங்களை ராணி மாதிரி பார்த்துக்கறது. எனக்கு தெரியும் என் பொண்ணை பார்த்துக்க.. மரியாதையா வெளியே போய்டு ” என்றவர் அவனை முறைப்பதை நிறுத்தவே இல்லை.

என்ன செய்தாலும் வள்ளி படியவே போவதில்லை என்பது அவனுக்கு புரிந்து போக, தன் அடுத்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கினான் அவன். அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தவன் “அக்காவா போய்ட்டியே… பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சிப்ப ன்னு நினைச்சேன். ஆனா நீ சரியா வரமாட்ட.. உனக்கு புரியுற மாதிரியே சொல்றேன்…”

“நீயா ஒத்துக்கிட்டு உன் பொண்ணை எனக்கு கட்டிவச்சா உங்களுக்கு நல்லது. இல்ல, அவளை தூக்கிட்டே போவேன். தாலியே கட்டாம நான் குடும்பம் நடத்தினா என்ன செய்ய முடியும் உன்னால. உன் பொண்ணுக்கு பின்னாடியே காவலுக்கு ஆள் போடுவியா.. எத்தனை நாளைக்கு முடியும்?? ஒழுங்கா நீயே அவளை எனக்கு கட்டி வச்சிடு” என்று மிரட்ட

அவன் மிரட்டலை ஒதுக்கியவர், அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டார். “பொண்ணுங்களை கூட்டி கொடுக்கிற கேவலமான பிறவி நீ.. உனக்கு என் மக கேட்குதா?? உன்னைத்தான் கட்டிக்கணும்ன்னு ஒரு நிலைமை வந்தா நானே விஷம் வச்சு அவளை கொன்னுடுவேன் நாயே… ”

“அடுத்து என்ன சொன்ன.. தூக்குவியா, நான் இப்போவே போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். உன் லட்சணத்தை எல்லாம் நானே சொல்றேன்… அதோட எப்பவும் நீ உள்ளே தான் கிடக்கனும்..” என்று ஆவேசமாக அவர் கத்த

“ஹாங்.. போலீசா, என்னை பார்த்தா போலீசுக்கு பயப்படறவன் போல தெரியுதா… மரியாதையா யோசிச்சுக்கோ. உனக்கு ரெண்டு நாள் தான் கெடு..” என்றுவிட்டு, அவரை கண்டு கொள்ளாமல் கிளம்பி இருந்தான்.

வள்ளியோ அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் கலங்கி போனவராக, மடங்கி அமர்ந்துவிட்டார். திருவும் அருகில் இல்லாத நேரத்தில் வயதுப்பெண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் நான் ? என்று திணறியவருக்கு ஒரு வழியும் அகப்படவே இல்லை.

Advertisement