Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 02

அன்றைய வேலைநேரம் முடியவும், டியூட்டி டாக்டரிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு, அடுத்து வந்த செவிலியிடம் வேலையை ஒப்படைத்து வீட்டிற்கு கிளம்பினாள் துர்கா. வேலையில் சூட்டிகையாக இருப்பதால் வேலைக்கு சேர்ந்திருந்த இந்த ஆறு மாதங்களில் அந்த மருத்துவமனையில் நல்ல பெயர் வாங்கி இருந்தாள் அவள்.

யாரிடமும் அனாவசியமாக பேசாதவள் என்பதால் அவளால் அவளது வேலையை நிம்மதியாக செய்ய முடிந்தது. வெட்டி கதையோ, வீண் புரளிகளோ எதற்கும் காது கொடுக்காதவளாக அதே சமயம் இனிமையான புன்னகையுடன் அமைதியாக வலம் வரும் அவளை அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடிக்க ஆரம்பித்து இருந்தது.

அவள் மருத்துவமனை அமைந்திருப்பது கோடம்பாக்கம் ஏரியாவில் என்பதால், அங்கிருந்து பஸ்ஸை பிடித்து கூட்டத்தில் சிக்கி, திணறி ஒருவழியாக அவள் வீடு இருக்கும் தெருவை அடைந்தவள் அவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க, எதிரில் தன் வண்டியில் வந்து கொண்டிருந்தான் திரு.

அவள் அவனை கவனிக்கவே இல்லை, அவள் பாட்டிற்கு நேராக பார்த்து நடந்து கொண்டிருக்க, நிச்சயம் எதிரில் அவளுக்கு தெரிந்தவர் வந்தால் கூட தெரிந்திருக்காது அவளுக்கு என்பது போல் தான் இருந்தது அவள் நடை. சற்றே வேகமான நடை.

அவள் உயரத்திற்கு, நேரான பார்வையுடன் யாரையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டிற்கு நடந்து செல்ல, தூரத்தில் வரும்போதே அவளை கண்டு விட்டிருந்தான் திரு. காலையில் மருத்துவமனையில் பார்த்த உடை இல்லை. ஒரு நீல வண்ண சுடிதாரும், மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து இருந்தவள் தன் போக்கில் அவனை கடந்து நடந்துவிட, அவனும் அவளை திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டான்.

வீட்டை அடைந்தவள் மருத்துவமனை வாசம் போக குளித்து முடித்து, சீருடையை துவைத்து தங்கள் வீட்டிற்கு உள்ளே இருந்த கொடியில் நன்றாக பிழிந்து காயப் போட்டுவிட்டு, மின்விசிறியை இயக்கி இரண்டு நிமிடங்கள் அமர்ந்து கொண்டாள்.

சற்று ஆசுவாசப்பட்டதும் எழுந்து சென்று, சமையலறையில் பார்க்க, காலையில் காய்ச்சிய பால் ஒரு பாத்திரத்தில் இருக்க, அதை மீண்டும் அவள் காய்ச்சும்போதே திரிந்து போனது. சலித்து கொண்டவளாக, அதை தூக்கி பாத்திரம் கழுவுமிடத்தில் போட்டுவிட்டு, தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் காபி பொடி, ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிட்டவள் ரேஷனில் வாங்கி வைத்திருந்த வெல்லத்தையும் அதில் சேர்த்து டம்ளரில் வடிகட்டி கொண்டு அமர்ந்து விட்டாள்.

அந்த வீட்டில் இவர்களையும் சேர்த்து மொத்தம் நான்கு குடும்பங்கள் இருக்க, இவர்கள் இருந்த வீடு சற்றே சிறியது. வாசலை தாண்டியதும் ஒரு சிறிய அறை, அதில் ஒருபுறம் மேடை அமைத்து அதை சமையலறையாக மாற்றி இருக்க, அதை தாண்டி உள்ளே நுழைந்தால் அதைவிட சற்றே பெரிதாக ஒரு அறை. சமையல் அறையின் எதிரில் சற்று தள்ளி ஒரு குளியல் அறையும், அதனோடு இணைந்த கழிவறையும் இருக்க அவர்கள் இருவருக்கு கச்சிதமாக இருந்தது அந்த வீடு.

வீட்டின் உள் அறையில் இருந்த அந்த தொலைக்காட்சி பெட்டியை இயக்கியவள் ஒரு பாட்டு சேனலை வைத்துவிட்டு, ஒலியையும் குறைத்தே வைத்துவிட்டு, முன்னறைக்கு வந்தாள். காலையில் செய்த குழம்பு மதியதோடு தீர்ந்துபோய் பாத்திரம் காலியாக இருக்க, அரிசியை கழுவி உலையை ஏற்றியவள் ரசத்திற்கு கூட்டி மற்றொரு அடுப்பில் ஏற்றினாள்.

தன் அன்னை வைத்திருந்த அப்பளத்தை பொரித்து எடுத்து வைத்தவள், கூடவே அவர் வைத்திருந்த வெண்டைக்காயையும் பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி அன்றைய சமையலை முடிக்கும் நேரம் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தார் வள்ளி.
உள்ளே நுழைந்தவர் “நீ ஏண்டி சமைச்சிட்டு இருக்க, வந்தா ஒரு ஓரம் உட்கார வேண்டியது தான.. அப்படி என்ன அவசரம்..” என்று கடிந்து கொள்ள

அவரை நக்கலாக பார்த்தவள் “அவசரமா… மணியை பார்த்தியா…” என்று கேட்க

“ஏன் நேரத்துக்கு என்ன.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அதுக்கு அங்கேயும் வேலை பார்த்துட்டு, இங்கேயும் வந்து நீ அடுப்புல நிற்பியா..” என்றவர் “நகரு.. நான் பார்க்கிறேன்..” என்று அவளை நகர்த்தி முன்னே செல்ல, எல்லாம் முடிந்திருந்தது அங்கே. அவர் பாவமாக மகளை திரும்பி பார்க்க

“நான் காலையில இருந்து வேலை பார்த்துட்டு வரேன்…. நீ மார்க்கெட்ல நாள் முழுக்க விளையாடிட்டு வர… நல்லா பேசுற ம்மா நீ..” என்று கடுப்பாக சொன்னவள் “போய் குளிச்சிட்டு வந்து சாப்பாடு போடு.” என்றுவிட்டு உள் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

வள்ளி அவள் சொன்னதுபோல வேகமாக குளித்துவிட்டு வந்தவர், உணவை எடுத்து வைத்து தானும் அவளுடனே உண்ண அமர்ந்தார். இல்லையென்றால் மகள் அதற்கும் ஒரு பாட்டு பாடுவாள் என்று அறிந்தவர் ஆகிற்றே. இருவரும் உண்டு முடிக்கவும், பாத்திரங்களை எடுத்து வைத்தவர் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருக்க, மகள் நாளை அணிந்து செல்ல வேண்டிய உடையை எடுத்து வைத்து விட்டு பாயை விரித்து படுத்தாள்.

வள்ளி அப்போதுதான் நினைவு வந்தவராக “துர்காம்மா.. நாளைக்கு லீவு சொல்ல சொன்னேனேடா.. திரு தம்பி நாளைக்கு தான மலைக்கு போகுது.” என்று அவர் தொடங்க

“அதுசரி.. உன் திரு தம்பி மலைக்கு போனா நான் ஏன் லீவு போடணும்.” என்று இடக்காக கேட்டாள் அவள்.

“ஏண்டி, நீதான நெய்த்தேங்காய் கொடுத்து அனுப்பனும்.. அப்புறம் லீவு போடாம எப்படி கொடுப்ப..” என்று அவர் வேகமாக கேட்க

“அதெல்லாம் மூணு மணிக்கே வந்திடுவேன்.. நான் பார்த்துக்கறேன், லீவ் எல்லாம் போட வேண்டாம்..” என்று முடித்துக் கொண்டாள் அவள்.

“காலையில 10 மணிக்கு ஓடி மூணு மணிக்கு திரும்ப வர்றதுக்கு மொத்தமா லீவ் போட்டுட்டு போலாம்ல.. உனக்கும் ரெஸ்ட் கிடைக்கும்ல” என்று அவர் கூற

“ஆமா… நான் அங்க மலையை நகர்த்தி வைக்கிறேன் பாரு, எனக்கு ரெஸ்ட்.. அப்போ வாரத்துக்கு ஒரு நாள் லீவு கொடுக்கறாங்களே அதை எந்த கணக்குல சேர்க்கறது..” என்று நக்கலாக கேட்டவள்

“என்னை லீவு போட சொல்றியே.. நீ லீவு சொல்லிட்டியா, உன் ஆபிஸ்ல.. இல்ல நாளைக்கும் நீதான் ஆபிஸையே தூக்கி நிறுத்தணுமா??..” என்று கோபத்தில் முடித்தாள்.

அவள் கோபம் புரிந்தவராக “நான் அங்கே என்னடி வேலை பார்க்கறேன்.. சும்மா தான் உக்காந்திட்டு இருக்கேன் நாள் முழுக்க. எனக்கு என்ன லீவு.. அதுவும் தம்பி நாளைக்கு மலைக்கு கெளம்புது, வேலை அதிகமா இருக்கும். நான்தானே பொறுப்பா பார்த்துக்கணும்.. அதெல்லாம் நீ நெய்த்தேங்காய் கொடுக்கற நேரத்துக்கு கடைய மூடிட்டு நானும், தேவாவும் வந்து விடுவோம் ” என்று அவர் சமாதானம் கூற

அவரை முறைத்தவள் “உன்கிட்ட எல்லாம் பேசிட்டு இருக்கேன் பாரு.. என்னை சொல்லணும்.. போய் தூங்கு..”என்றவள் தான் படுத்து விட்டாள். வள்ளி அவள் அருகில் படுத்தவருக்கு உறக்கம் அத்தனை எளிதாக உறக்கம் வரவே இல்லை.

அவரின் உடல்நிலை ஒத்துழைக்கும்போதே மகளுக்கு ஒரு நல்ல வழியை செய்து விட வேண்டும் என்று அவர் மனம் துடித்துக் கொண்டிருக்க, அவர் உடல்நிலையும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது. அவருக்கு இதயத்தில் ஒரு அடைப்பு இருப்பதாக மருத்துவர் ஏற்கனவே சொல்லி இருக்க, மகளிடம் சொல்லாமல் தன் ரகசியத்தை காத்துக் கொண்டிருந்தார் அவர்.

இத்தனைக்கும் அவளே செவிலியாக இருந்தும் கூட, அவர் யாரிடமும் மூச்சு விடவில்லை இதை பற்றி. மருத்துவமனைக்கும் அவர் தனியாகவே சென்று வந்திருக்க, அன்னை பார்வைக்கு நன்றாக இருப்பதாலும், தங்களின் உணவு முறையாலும் எந்த பிரச்னையும் இல்லை என்று நம்பி இலகுவாக இருந்தாள் துர்கா.

அவளுக்கு இதைப்பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட வராத வகையில் தான் வள்ளியும் நடந்து கொண்டிருக்கிறார் இதுவரை. சமீப நாட்களாக மகள் அவரை வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறிக் கொண்டிருக்க, அவரோ தன்னால் முடியும்போதே அவளுக்கு சேர்த்து வைத்து ஒரு திருமணத்தை செய்து வைத்துவிட வேண்டும் என்று எண்ணியே ஓடிக் கொண்டிருந்தார்.

மகளுக்கும் இது புரிந்தே இருப்பதால் தான் அவ்வபொழுது அவரை வார்த்தையால் பந்தாடுவாள் அவள். அவளின் அக்கறை புரியும் என்பதால் வள்ளியும் மகளுக்கு பயப்படுவது போலவே இருந்து கொள்வார். யோசனைகள் அப்படியே எங்கெங்கோ ஓடிக் கொண்டிருக்க, தன்னை மறந்து உறங்கி இருந்தார் வள்ளி.

அடுத்தநாள் காலை மீண்டும் அவர்களின் நாள் வேகமாக விடிந்துவிட, வள்ளி முன்னமே எழுந்து சமையலை முடித்து மகளுக்கு கட்டிக் கொடுத்தவர், தானும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

Advertisement