Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 01

அந்த மருத்துவமனையின் ஓய்வு அறையில் கையில் ஒரு நாவலுடன் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தாள் அவள். தூய வெள்ளை நிற சுடிதாரும் அதற்கு மேல் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒரு வெள்ளை நிற கோட்டும் அணிந்திருந்தவள் தலையை கொண்டையிட்டு அதே வெள்ளை நிறத்திலான சிறிய தொப்பி ஒன்றை தலையில் அணிந்திருக்க, அந்த உடை அவளுக்கு பொருத்தமாக இருந்தது.

அவள் பணி நேரம் தொடங்குவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்க, நாவலை மூடி தன் கைப்பையில் வைத்து தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கபோர்டில் வைத்து பூட்டிவிட்டு அவள் அந்த அறையிலிருந்து வெளியே வர, அவளுக்கான அன்றைய வேலைகள் வரிசை கட்டி நின்றது.

பணியில் இருந்த செவிலி இவளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக கிளம்பிவிட, அந்த இடத்தில தான் பொறுப்பேற்றுக் கொண்டாள் நர்ஸ் துர்கா… துர்கா தேவி.. அவளுக்கு அன்று பொதுப்பிரிவில் டியூட்டி போட்டிருக்க, நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு வேலைகள் தான்.

பணியில் இருந்த மருத்துவருக்கு உதவி கொண்டு, நோயாளிகளின் வரவையும் குறித்து கொண்டு அவள் சுழன்று கொண்டிருக்க, கூட்டம் பன்னிரண்டு மணிபோல் தான் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. அவள் சற்று ஆசுவாசமாக தளர்ந்து அமர போகையில் தான் கையிலும், தலையிலும் காயத்துடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் அவன்.

ஆறடியில் அனைவரையும் குட்டையாக்கி கொண்டு நெடுநெடுவென வளர்ந்திருந்தவனின் கையை அவனுடன் வந்தவன் துணியை சுற்றி பிடித்து கொண்டிருக்க, முன்னேற்றியில் காயம்பட்டு அவன் சட்டை வரை வழிந்து இருந்தது ரத்தம்.

கருப்பு நிற சட்டையும் கருப்பு வேட்டியும் அணிந்து , கழுத்தில் துளசி மணி மாலையுடன் நடந்து வந்தவனை பார்த்து முகத்தை சுழித்துக் கொண்டாள் அவள். அவனை பார்த்தவுடனே ஒரு வேண்டாத உணர்வு முகத்தில் ஒட்டிக் கொள்ள, தன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் அவள்.

அவன் உடன் வந்த இருவரில் ஒருவன் துர்காவை கண்டதும் அவளிடம் ஓடி வந்து, “துர்கா, டாக்டரை பார்க்கணும்.. அண்ணனுக்கு அடி பட்டு இருக்கு.. சீக்கிரம் பாரு..” என்று கூற

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “அங்கே உட்காருங்க.. கேட்டு சொல்றேன்..” என்றுவிட்டு எழுந்து மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள். அடுத்த நிமிடம் வெளியில் வந்து “பேஷண்டை கூட்டிட்டு வாங்க…” என்றதும் அவர்கள் மருத்துவரின் அறைக்குள் நுழைய, தன் இருக்கைக்கு வந்தவள் தன் முன் இருந்த பதிவேட்டில் “திருநாவுக்கரசு” என்று அவன் பெயரை பதிந்து விட்டு, அவன் வயது, மற்றும் நேரத்தை குறித்து வைத்து விட்ட பிறகே எழுந்து மீண்டும் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தாள்.

அந்த நேரம் தான் மருத்துவர் அவன் காயத்தை பரிசோதித்து கொண்டு இருந்தவர் “என்ன ஆச்சு மிஸ்டர் திரு. எப்படி அடிபட்டது?” என்று கேட்க

அவனுக்கு முன் “என்ன ஆகி இருக்கும்.. எவனையாவது போட்டு அடிச்சி இருப்பான்.. அவன் பதிலுக்கு இவனை ரெண்டு போட்டு இருப்பான்..” என்று நக்கலாக நினைத்துக் கொண்டாள் அவள்.

ஆனால் அந்த திரு என்பவனோ “பைக்ல போகும்போது ஸ்கிட் ஆகி விழுந்துட்டேன் டாக்டர்… நாய் ஒன்னு குறுக்க வந்திருச்சு… ” என்று முடித்துக் கொண்டான்.

அந்த மருத்துவரும் அதற்கு மேல் அவனிடம் கேள்வி கேட்காது “நெற்றியில் காயம் ஆழமா இருக்கு திரு.. அட்லீஸ்ட் மூணு தையல் போடணும்…” என்றவர் கையின் காயத்தையும் பரிசோதித்து விட்டு, தன் முன் இருந்த அட்டையில் அவன் சிகிச்சை என்னவென்று குறித்து கொடுக்க, துர்கா கையில் வாங்கி கொண்டாள்.

அந்த திரு மருத்துவரை பார்க்க, அவளோ “வாங்க” என்றுவிட்டு முன்னால் நடந்தாள். இவளா தையல் போட போறா? என்று நினைத்துக் கொண்டே அவன் எழுந்து நடக்க, அந்த முறையோடு இணைந்திருந்த அடுத்த அறைக்குள் நுழைந்தவன் அங்கிருந்த கட்டிலை காட்டி அவனை படுக்க சொல்ல, அப்படியே நின்றான் அவன்.

தையல் போட தேவையான உபகரணங்களை எடுத்து வைத்துவிட்டு அவள் திரும்பி பார்க்க அவன் நின்று கொண்டே இருக்கவும், சலிப்புடன் “போய் படுங்க” என்று கூற

“டாக்டர் வரல..” என்று சந்தேகமாக கேட்டான் அவன். அவன் உடன் நின்று கொண்டிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் அவனை பார்க்க “உனக்கெல்லாம் நானே அதிகம்” என்பது போல் இருந்தது அவள் பார்வை.

“டாக்டர் வர மாட்டாங்க. நானே ஸ்டிச் போட்டுடுவேன்.. படுத்துக்கோங்க…” என்று விட்டவள் கையில் கிளவுசை மாட்டிக் கொண்டு நிற்க,

அவனோ அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு “இப்படியே இருக்கேன்.. படுக்க எல்லாம் வேண்டாம்… ” என்று கூற, “எனக்கென்ன வந்தது..” என்று நினைத்துக் கொண்டவள், அங்கிருந்த மேசையில் தன் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு அவனை நெருங்கி நின்றாள்.

தன் கையில் இருந்த பஞ்சை திரவத்தில் நனைத்து அவன் காயத்தை அழுந்த அவள் துடைத்து எடுக்க, வலி உயிர் போனது அவனுக்கு. பற்களை கடித்து அவன் வலியை பொறுத்துக் கொள்ள, பாவமாக இருந்தாலும், “இவனா பாவம்.. யாரை என்ன செஞ்சானோ..” என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள் அவள்.

கையில் அந்த மெல்லிய ஊசியுடன் அவனை நெருங்கி நின்று கொண்டு அவன் காயத்தை தைத்து முடிக்கும் வரை அவள் கவனம் வேறு எதிலும் பதியவே இல்லை. ஒற்றை புருவத்தை உயர்த்திக் கொண்டு, அத்தனை கவனமாக அவள் அவள் வேலையை பார்க்க, வலி தாள முடியாமல் கண்களை திறந்து பார்த்தவன் அவள் முகத்தை கண்டதும் பார்வையை திருப்பிக் கொள்ள முடியாமல் அவளையே பார்த்து இருக்க, அவளோ அவன் பார்வையை உணரவே இல்லை.

“தன் கடன் பணி செய்வதே” என்பது போல, அவள் பணி முடிந்ததும் தான் அவனை பார்த்தாள் அவள். அவள் பார்க்கவும் பார்வையை திருப்பிக் கொண்டவன் மீண்டும் இறுக்கமாக அமர்ந்துவிட்டான்.

அவன் கைகாயத்தை அவள் பார்வையிட, முழங்கைக்கும், தோள்பட்டைக்கும் இடையில் ஒரு ஜான் அளவிற்கு காயம் இருக்க, அவன் சட்டையை கழற்ற சொன்னாள். அவன் வேகமாக அவளை நிமிர்ந்து பார்க்க, “சட்டையை கழட்டுங்க… கட்டு போடணும்.. அதான் ஏற்கனவே கிழிஞ்சி தானே இருக்கு.. கழட்டுங்க” என்று அவள் கூறிவிட

“நான் சாமிடி…” என்று அவனுக்கு அவனே சொல்லி கொள்ள, அமைதியாக அவனை பார்த்து நின்றாள் அவள். அவன் அசையாமல் இருக்கவும், “எனக்கு நிறைய வேலை இருக்கு.. சட்டையை கழட்டுனீங்க ன்னா உங்க வேலையை முடிச்சிட்டு போவேன்..” என்று கூற

“இல்ல.. மாலை போட்டு இருக்கேன்.. தொடக்கூடாது.. ” என்று அவள் முகம் பார்க்காமல் சொன்னவன் “வேற யாரையாவது வர சொல்லு…” என்று கூற

“நீங்க மாலை போட்டு இருக்கீங்க.. அதனால எனக்கு என்ன??? நான் என் வேலையை தான் பார்க்க போறேன்.. அதோட உங்களை தப்பான எண்ணத்திலே தொட போறதில்ல. நான் செய்யுற வேலை கூட கடவுளுக்கு செய்யுறதை போல தான். மொதல்ல சட்டையை கழட்டுங்க… ” என்று வேகமாக கூறியவள், தன் கைகளை இறுக்கி கொண்டு நின்றுவிட

அவன் அருகில் நின்றிருந்தவன் “ண்ணா.. கை நல்லா வீங்கிடுச்சுண்ணா.. இதை அப்படியே விட்டா மலைக்கு எப்படி போவ.. சட்டையை கழட்டு.. அதான் துர்கா நீ சாமின்னு சொல்லிடுச்சே.. அப்புறம் என்னண்ணா ..” என்று அவனை சரிக்கட்ட

ஒருவழியாக சட்டையை கழட்டி விட்டு, தன் கையில்லாத பனியனுடன் அவள் முன்னால் அமர்ந்தான். அவன் கைகாயத்தை கழுவி துடைத்து மருந்திட்டு முடித்தவள், அவன் உடன் வந்தவனை “இங்கே வா ” என்று அழைக்க, அவன் அருகில் வரவும். அவன் மாலையை சற்றே உயர்த்தி அவனிடம் கொடுத்து அவன் கழுத்திலும், நெஞ்சு பகுதியிலும் அந்த வெள்ளி முகப்பு மாலை கீறி இருந்த இடங்களில் மருந்திட்டு முடித்து “சாமி சரணம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளின் முணுமுணுப்பு கேட்டாலும் கூட, காது கேட்காதவனை போல் அமர்ந்திருந்தவன் எழுந்து கொள்ள, மீண்டும் கையில் ஒரு ஊசியை எடுத்துக் கொண்டு அவனை நெருங்கினாள் அவள். அவன் அதிர்ச்சியாக பார்க்கும்போதே அவன் கையில் அந்த ஊசியை செலுத்தியவள், அவனுக்கு தேவையான மருத்துவ அறிவுரைகளை கூறி முடிக்க, வெளியில் வந்தான் அவன்.

அவன் கிளம்பவும் தலையை உலுக்கி கொண்டவள், “ஊப்” என்று நிம்மதியுடன் மூச்சை வெளியிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். அடுத்தடுத்து ஆட்கள் வரவும், அவனை அவள் அத்தோடு மறந்துவிட, தன் வீடு வந்து சேர்ந்தவனும் அவள் போட்டிருந்த ஊசியின் விளைவால் அமைதியாக உறங்கி விட்டிருந்தான்.

ஐயப்பமாலை போட்டுக் கொண்டு இருப்பதால் வெறும் தரையில் படுத்து அவன் உறங்கி இருக்க, உறக்கத்தில் கூட ஏதோ ஒரு இறுக்கம் தெரிந்தது அந்த முகத்தில். யாரும் அவனை நெருங்க முடியாது என்பது போல் அந்த பெரிய வீட்டில் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான் அவன்.

ஆம். கேட்டுக்கு அருகில் ஒரு சிறிய வராண்டா போன்ற இடம்.. அதை தாண்டி உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய ஹால்.. அதன் ஒரு பக்கத்தில் சமையல் அறை.. அதற்கு அடுத்து சாமி அறை என்று ஹால் முடிய, அதை தாண்டி சென்றால் எதிரெதிரே இரண்டு அறைகள்.. வீட்டை சுற்றிலும் கொஞ்சம் காலி இடம் விட்டு ஒரு ஆள் உயரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு இருந்தது அந்த வீடு.

வீட்டிற்கு வெளியே படி வழியாக மாடிக்கு சென்றால் மேலே ஒரு அறை. அதுவும் வசதியாகவே இருக்க அந்த முழு வீட்டிலும் அவன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவன் ஒருவனுக்கு நிச்சயம் அது பெரிய வீடு தான். அதுவும் சென்னையின் முக்கிய இடமான கோயம்பேட்டிற்கு அருகில், விருகம்பாக்கம் ஏரியாவில் அமைந்து இருந்தது அந்த வீடு.

அந்த ஏரியாவில் வரிசையாக நிறைய வீடுகள் இருக்க, இவன் வீடு மட்டுமே தனி வீடு.. மற்ற வீடுகளில் எல்லாம் இரண்டு, மூன்று குடும்பங்கள் வசித்துவர, இவன் ஒருவனே தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்தான் அந்த ஏரியாவில்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக இரண்டு கடைகள் இருக்க, எப்படியோ செலவை இறுக்கி ஒரு மினி லாரியும், ஒரு டெம்போவும் ஓடிக் கொண்டிருந்தது.

ஆறு வயதில் தனது ஒரே துணையான தாயை இழந்துவிட்டு, அனாதையாக, ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் அந்த கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்தவன் அவன்.

யாரோ காய்கறி மூட்டை தூக்கும் வேலை கொடுத்து உணவும் கொடுக்க, மூன்று வேளை உணவுக்காக மட்டுமே அவன் தன் வாழ்வை தொடங்கியது. உணவு மட்டுமே கூலியாக வாங்கி வேலை செய்தவனுக்கு இன்று அவனிடம் இருக்கும் பணம் மிகையானது தான் அல்லவா.

“பணம் அதற்கு தகுதியானவர்களிடம் மட்டுமே நிலைக்கும்” என்பதற்கு கண்முன் சாட்சி அவன். மூன்று வேளை உணவும் யாரோ வாங்கி கொடுக்க, நன்றாக உண்பவன் என்பதும், அவன் செய்யும் வேலையும் அவனுக்கு துணையாக இருக்க அந்த வயதிலேயே சற்று பெரியவனாக தான் தெரிவான் அவன்.

அவன் வயது சிறுவர்கள் அவனைவிட சிறியவர்கள் போல் காட்சியளிக்க, அவன் நட்பு வட்டமும் அவனைவிட பெரியவர்களுடன் தான்.

அங்கிருக்கும் இளசுகளுடன் சேர்ந்து கொண்டு வண்டி ஓட்ட கற்றுக் கொண்டவன் காய்கறி லோடு ஏற்றுக் கொண்டு ஊர் ஊராக கூட சென்று வருவான் சிலநேரம். சில நேரங்களில் காய்கறி வியாபாரம், அதிகாலை நேரங்களில் மூட்டை தூக்குவது என்று அத்தனை வேலைகளையும் செய்து சம்பாதித்தவன் நம்பிக்கைக்கு உரிய சிலரை அருகில் வைத்துக் கொண்டு அந்த பணத்தை பெருக்கியும் இருந்தான்.

அங்கிருக்கும் காய்கறி கடைகளில் காலையில் பணத்தை கடனாக கொடுத்து மாலையில் அதற்கு வட்டியாக ஒரு தொகை சேர்த்து வாங்கி கொள்வான் அவன். அவர்களுக்கும் அந்த தொகை நியாயமாக பட, அவன் உருவமும் அவனிடம் யாரையும் எட்டியே நிற்க வைக்க, அவன் நேரமும் கைகொடுத்தது அவனுக்கு.

அவன் தொட்டது துலங்க இன்று கூலியாக வாழ்வை தொடங்கிய அதே மார்க்கெட்டில் இரண்டு கடைகளுக்கு உரிமையாளன்.. அவன் முதல் கடையை வாங்கியபோதே அவனுக்கு வியாபாரத்திற்கு என்று துணைக்கு சேர்ந்து கொண்டவர் தான் வள்ளியம்மாள்.

அவன் வீடிருக்கும் பகுதியில் தான் ஒரு வீட்டில் வாடகைக்கு குடி இருந்தார் அவர். கணவன் அரசியல், குடி என்று ஊதாரியாக வாழ்வை வாழ்ந்து பாதியிலேயே மடிந்து போயிருக்க, எட்டு வயது மகளை வைத்துக் கொண்டு கிடைத்த அத்தனை வேலைகளையும் செய்து அவளுக்காகவே வாழ்வை நடத்திக் கொண்டு இருந்தார் அவர்.

அத்தனை கஷ்டத்திலும் கூட நேர்மையாகவும், அதே சமயம் எதற்கும் வளைந்து கொடுக்காமலும் நிமிர்ந்து நிற்கும் அவரின் தைரியத்திற்கு முதல் விசிறி திரு தான்.

அந்த மார்க்கெட் வாழ்வு அவனுக்கு அத்தனையையும் சொல்லி கொடுத்திருக்க, அவன் கண்முன் எத்தனையோ விஷயங்களை பார்த்துவிட்டான். அவன் சற்று வளைந்து இருந்தால் அத்தனை விஷயங்களும் அவனுக்கும் கிடைத்து தான் இருக்கும். ஆனால் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டவனாக அவன் நிமிர்ந்து நிற்க, அவனையும் மீறி அவனிடம் தொற்றிக் கொண்டது தான் அவனின் குடிப்பழக்கம்.

அதுவும் இளவயதில் நண்பர்கள் என்று சுற்றிக் கொண்டிருந்தவர்களுடன் சேர்ந்து கற்றுக் கொள்ள, அதில் பணத்தை அதிகம் இழப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்டவன் தன்னை விலக்கி கொண்டான். அதாவது அவன் வீட்டில் அவன் மட்டுமே அவன் நினைத்த நேரத்தில் மட்டுமே குடிக்க தொடங்கி இருந்தான்.

அவனின் குடிப்பழக்கம் அவனோடு கூடவே இருக்கும் தேவா, சரத் இருவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது இதுவரை. வள்ளியம்மாவுக்கு தெரிந்து இருந்தாலும் இதுவரை தெரிந்ததாக அவனிடம் காட்டிக் கொண்டது இல்லை அவர்.

அவரை பொறுத்தவரை அவன் முதலாளி, வயதில் சிறியவனாக இருந்தாலும் முதலாளி என்ற எண்ணம் தான் வள்ளிக்கு. அந்த எல்லையை தாண்டவே மாட்டார் அவர். அவர் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அதுவும் தன் பெயருக்கோ, தன் மகளுக்கோ எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாத ஊதியம். அவனிடம் வேலை செய்வதால் அந்த மார்க்கெட்டில் கிடைக்கும் குறைந்தபட்ச மரியாதை அவ்வளவுதான் அவருக்கு வேண்டியது.

தன் உழைப்பை மட்டுமே நம்பி ஓடிக் கொண்டிருக்கும் அவருக்கு ஒரே ஆறுதல் அவரின் செல்ல மகள். அன்னையின் துன்பமும், துயரமும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் அவரின் ஒரே ஊன்றுகோல் அவரின் மகள்தான்.

இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் மருத்துவராக ஆசைப்பட்டவள் இன்று செவிலியர் படிப்பை முடித்து ஒரு மருத்துவமனையில் நல்ல வேலையில் இருந்தாள். அவள் திருமணம் ஒன்றுதான் அவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்தது.

Advertisement