Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 5

பிரசன்னா திருமணம் முடிந்து மறுவாரம் வந்தவன், அதே குடியிருப்பில் வேறு வீட்டில் மனைவியுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்தான். பிரசன்னா அவன் வீட்டில் யுகேந்திரனை இரவு உணவு உண்ண சொல்லி சொல்ல….. யுகேந்திரன் எப்போதும் போல மெஸ்ஸில் வாங்கி உண்டு கொள்வதாகச் சொல்லிவிட்டான்.

நக்ஷத்ரா அவள் வீட்டில் மாப்பிள்ளை பாருங்கள் என்று சொன்ன தினத்தில் இருந்து மிகவும் அமைதியாகி போனாள். அலுவலகத்திலும் அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருக்க…. மற்றவர்களுக்கு அவள் எதோ காரணமாக அப்படி இருக்கிறாள் என்று புரிந்தது. ஆனால் யுகேந்திரன் தான் என்ன ஆச்சு? உடம்பு எதுவும் சரியில்லையா? வீட்ல அப்பா அம்மா ஓகே தானே என மாறி மாறி அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். அவளின் மௌனம் அவனை மிகவும் பாதித்தது. ஆனாலும் சில நேரம். “இப்போதான் காது வலிக்காம இருக்கு.” என அவளைச் சீண்டவும் செய்தான்.

நக்ஷத்ரா எல்லாவற்றிருக்கும் ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தாள்.

சனிக்கிழமை எதோ மாடலிங் ஷோ இருக்கிறது என்று நக்ஷத்ரா ஜனனி இருவருமே வரவில்லை. ஆண்கள் மூவர் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தனர். அந்த நேரம் கிரிஜா யுகேந்திரனை கைபேசியில் அழைத்தவர், “நீ இப்படியே கல்யாணம் பண்ணிக்காம தனி மரமா நின்னுடுவியோன்னு எனக்குக் கவலையா இருக்கு.”

“உன் அப்பா இருந்திருந்தா நீ இப்படி இருந்திருப்பியா… நானும் உன் இஷ்ட்டதுக்குத் தான் விட்டேன். கிடைச்ச ஐ ஐ டியை விட்டு வக்கீலுக்குப் படிப்பேன்னு சொன்ன… வேலை கிடைச்சதும் வீட்ல இருந்து வெளிய போன… வெறும் வக்கீல் வேலை மட்டுமா பார்க்கிற? நான் எதையும் கண்டுக்காம உன் இஷ்ட்டத்துக்குத் தான் விடுறேன். என் ஆசைக்காகக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?”

“இப்போ எதுக்கு மா திடிர்ன்னு இப்படிப் பேசுறீங்க?”

“நம்ம சாவித்திரி மாமி இல்ல… பாவம் அவங்க வீட்டுக்காரர் இறந்ததும், அவங்களுக்குத் தான் பிள்ளை இல்லையே… அவங்க அண்ணன் வீட்ல போய் இருந்தாங்க. அண்ணிக்காரி ஒரே கெடுபிடியாம். இவங்க எதிர்ல வந்தாக் கூடச் சத்தம் போடுவாளாம். அதனால இப்போ திரும்ப அவங்க வீட்டுக்கே வந்திட்டாங்க. நைட் வேலைக்காரி தான் துணைக்கு வந்து படுத்துக்கிறா. பாரு அவங்களுக்குன்னு ஒரு பிள்ளை இருந்திருந்தா அவங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?”

“அம்மா எந்தக் காலத்தில இருக்கீங்க? என்னைக் கேட்டா எந்த எதிர்ப்பார்ப்பும் பிள்ளைங்ககிட்ட வச்சுக்கவே கூடாதுன்னு சொல்லுவேன். அதோட இதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

“இப்போ உன் தம்பி என்னைப் பார்க்கலைன்னா… நீ என்னை விட்டுடுவியா? நான் உன்னைக் கேட்கலைனாலும் நீ என்னைப் பார்த்துப்ப எனக்குத் தெரியும். அது போல எனக்குப் பிறகு உனக்கு யாராவது இருந்தா தான் என்னால நிம்மதியா சாகக் கூட முடியும் புரிஞ்சிக்கோ டா ?”

“சரி மா நான் கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்றவன் கைபேசியை வைத்துவிட்டு நெற்றியை தேய்த்துவிட… என்னவென்று பிரசன்னா கேட்டதும், யுகேந்திரன் அவன் அம்மா பேசியதை சொன்னான்.

“அவங்களை ஏன் டா இந்த வயசுல கஷ்ட்டபடுத்துற?”

“அவங்களுக்காக இல்லாம எனக்கே பிடிச்சுக் கல்யாணம் பண்ணனும் டா… அப்படி யாரு இருக்கான்னு தான் யோசிக்கிறேன்.” என்றதும், பிரசன்னாவும் பிரதீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“நீ நிஜமாவே தெரியாம தான் சொல்றியா?” என்ற பிரதீப், யுகேந்திரன் அவனைப் புரியாமல் பார்க்கவும், “இல்லை நக்ஷத்ராவை எல்லாம் உனக்குத் தெரியலையா? இல்ல அவளுக்கு இருக்கப் பிரச்சனையால வேண்டாம்னு நினைக்கிறியா…” என்றான்.

“இவன் என்ன டா பேசுறான்?” என யுகேந்திரன் பிரசன்னாவிடம் சொல்ல…

“எனக்கும் அந்தச் சந்தேகம் இருக்கு டா. நக்ஷத்ரா அளவுக்கு உன்னை யாரும் புரிஞ்சு வச்சிருக்க முடியாது. அவளைவிட உனக்கு யார் பெஸ்ட்டா வந்திட போறா… ஆனா நீ அதைப் பத்தி யோசிக்கக் கூட இல்லைனா… அப்போ இதுதான காரணமா இருக்க முடியும்.” என்றான் பிரசன்னாவும்.

“ச்ச நான் அவளுக்கு இருக்கிறது எல்லாம் ஒரு குறையா பார்த்ததே இல்லை. அவ உலகம் வேற… நான் அங்க பொருந்த மாட்டேன்னு எனக்கு ஒரு எண்ணம். அதனால வேணா நான் அப்படி யோசிச்சிருக்க மாட்டேன். மத்தபடி நீங்க சொல்ற மாதிரி இல்ல…”

“நீ அப்படி யோசிச்சாலும் தப்பு இல்லைடா… ஆனா நக்ஷத்ரா பேசுறது வச்சு, நீ அப்படி நினைச்சிட்டு இருக்க… ஆனா அது அவ வெளிய போடுற வேஷம்.” என்ற பிரசன்னா, “கல்யாணம் உன் சொந்த விஷயம் நாங்க இதுக்கு மேல தலையிட முடியாது.” என்றான்.

பிரசன்னாவும் பிரதீப்பும் சென்ற பிறகும் யுகேந்திரன் அலுவலகத்திலேயே வெகு நேரம் இருந்தான். ஆனால் ஒரு வேலையும் ஓடவில்லை. மனம் இதையே நினைத்துக் கொண்டிருந்தது.பிறகு வீட்டிற்குச் சென்று விட்டான்.

பிரதீப் பிரசன்னா பேசியதை வைத்து அவன் உடனே நக்ஷத்ராவை திருமணம் செய்யும் அளவு யோசிக்கவில்லை. அவனுக்கு இன்னுமே நக்ஷத்ரா தன்னை விரும்பப் கூடும் என்ற எண்ணமில்லை. அவனைப் போல இறுக்கமாக இல்லாமல் இலகுவாகப் பழகுபவனையே நக்ஷத்ராவுக்குப் பிடிக்கும் என்று நினைத்தான்.

அடுத்து வந்த நாட்கள் எல்லோரும் வழக்குகளில் பிஸியாக இருந்தனர். தொடர்ந்து வேலை பார்த்ததால் இறுக்கத்தைத் தளர்த்த எங்காவது வெளியில் சென்று வரலாம் என்று நினைத்து பாண்டிச்சேரி பீச் ரெசார்ட் சென்றனர்.

சனிக்கிழமை காலை பத்து மணிப்போல இரண்டு கார்களில் சென்றனர். பிரதீப்பும் பிரசன்னாவும் குடும்பத்துடன் வந்திருந்தனர். வழியில் நிறுத்தி நிறுத்தி சென்றதால்… இவர்கள் சென்று சேரும் போது மாலையாகி விட்டது. தனித் தனி அறையே பதிவு செய்திருந்தனர்.

நக்ஷத்ராவுக்கு அப்படி எந்த வரணும் சரியாக அமையவில்லை. அதில் கொஞ்சம் குஷியாக இருந்தாள். இப்போது வெளியில் வந்ததும், அவளது இயல்பான குணம் தலைதுக்கியது. எல்லோரையும் கேலி கிண்டல் செய்தபடி வந்தாள்.

இவர்கள் உடைமாற்றிக் கடற்கரைக்குச் சென்ற போது இருட்டி விட்டது. எல்லோரும் கடலில் ஆட… யுகேந்திரன் காலை மட்டும் நனைத்தவன், அங்கே கரையிலேயே நின்று கொண்டு மற்றவர்கள் நீரில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நக்ஷத்ராவும் மற்றவர்களும் அழைத்தும் அவன் நீருக்குள் செல்லவில்லை.

நன்றாக இருட்ட ஆரம்பிக்க… “போதும் வாங்க…” என யுகேந்திரன் அழைக்க… மற்றவர்கள் வந்துவிட… நக்ஷத்ரா மட்டும் வரவேயில்லை. தண்ணீருக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

“நக்ஷத்ரா போதும் நாளைக்கு வரலாம்.” என யுகேந்திரன் சொல்ல… “வரேன் பாஸ்…” எனச் சொல்லிக் கொண்டே இருந்தவள், சிறிது நேரம் சென்று அவன் அழைத்த போது பதில் சொல்லாமல் இருக்க…

“நக்ஷத்ரா… நக்ஷத்ரா என யுகேந்திரன் பதறிப் போனேன்.

“வருவா டா…” எனப் பிரதீப்பும், பிரசன்னாவும் சொல்ல…

ஜனனி மட்டும் வந்தவள், “எங்கே நக்ஷத்ரா?” என்று கேட்க… யுகேந்திரன் பதறிப் போய் நீரில் பாய்ந்து தேட ஆரம்பித்தான். மற்றவர்களும் பதறித்தான் போனார்கள்.

“பாஸ் நான் இங்க இருக்கேன்.” என நக்ஷத்ரா குரல் கொடுக்க…. இவர்கள் இருந்த இடத்திற்குச் சற்று தள்ளி இருந்தவளை பார்த்துவிட்டு பிரசன்னாவும், பிரதீப்பும்.“டேய் யுகி, நக்ஷத்ரா இங்க இருக்கா டா…” என்றதும் யுகேந்திரன் திரும்பி கரைக்கு வந்தான்.

தண்ணீரில் தவழ்ந்தே தள்ளி சென்றிருந்தாள். ஜனனி சென்று அவளுக்குக் கைக் கொடுக்க… மெதுவாக எழுந்து கரைக்கு வந்தாள். முழுவதுமாக நீரில் நனைந்திருந்த யுகேந்திரனை பார்த்ததும், “நாங்க தண்ணிக்கு கூப்பிட்டா வந்தீங்களா…. அதுக்குத் தான்.” என்றதும், யுகேந்திரனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

எதோ திட்ட வந்தவன், பிறகு எதுவும் சொல்லாமலே “நான் ரூமுக்கு போறேன்.” எனச் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

“யுகி சும்மா விளையாட்டுக்குத்தான்.” என நக்ஷத்ரா சொல்ல சொல்ல… அதைக் காதில் வாங்காமல் சென்று கொண்டே இருந்தான்.

“உனக்கு எதுல விளையாட்டுனே இல்லை. அவன் உன்னைத் திட்டுறதுல தப்பு இல்லை.” என்றான் பிரசன்னா.

இந்த அளவுக்கு யுகேந்திரன் எதற்கும் பதட்டபட்டதே இல்லை.

அறைக்கு வந்தவன் குளித்துவிட்டுக் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். மனம் சமன்படவே இல்லை.

எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்பினர். நக்ஷத்ராவும் ஜனனியும் ஒரு அறையில் இருக்க… “இன்னைக்கு நீ பண்ணது அதிகம் தான். நானே பயந்திட்டேன்.” என்றதும்,

“சும்மா விளையாட்டுக்கு பண்ணேன். யுகி இப்படிக் கோவிச்சிப்பாருன்னு நினைக்கலை.” என்றவள், அவரை வேற எப்படி மலை இறக்கிறதுன்னு தெரியலையே எனப் புலம்பியபடி குளிக்கச் சென்றாள்.

Advertisement