Advertisement

அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றவள், யுகேந்திரன் காபி பிரியன் என்பதால்… அவனுக்கு அவளே காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

இது இருக்கட்டும், நீ உட்காரு.” என்றான். அவன் கையில் காபியை கொடுத்துவிட்டே உட்கார்ந்தாள்.

சாரி நக்ஷத்ரா, நான் உன்னைக் காயபடுத்த அப்படிப் பேசலை… ஒரு உரிமையில தான் பேசிட்டேன்.” என்றவன் பிரசன்னாவிடம் சொன்னதையே சொல்ல….

எனக்குத் தெரியும் யுகி. நீங்க அன்னைக்கு ரொம்ப நேரமா வரலைனதும், நான் எல்லோரையும் டென்ஷன் பண்ணிட்டேன். அதுதான் பிரசன்னா அப்படிப் பேசிட்டாங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க.”

அது ஓகே… ஆனா நீ ஏன் டென்ஷன் ஆகணும்? எனக்கும் என் உயிர் முக்கியம் தான். அதோட எதுனாலும் நான் சட்டபடி தான் போவேன். யாரையும் தரக்குறைவா பேசுறதோ இல்ல… சண்டை போடுறதோ இல்லை. அதனால முதல்ல இப்படித் தேவையில்லாம பயப்படாத.”

ஓகே ஓகே புரியுது.”

அன்னைக்கு ரொம்ப நேரம் நடந்தியா… இப்போ கால் வலி எப்படி இருக்கு? எதுக்கும் டாக்டரை போய்ப் பார்த்திட்டு வந்திடலாமா?”

ஒத்தடம் கொடுத்துத் தைலம் தேயச்சதும் வலி இல்லை.”

எதோ காரணத்தினால உடம்பு முடியாம போறது வேற… இப்படி நாமே இழுத்து வச்சுக்கக் கூடாது. இனிமே இப்படிப் பண்ணாத.” என்றான்.

அவன் சொன்னதற்கு எல்லாம் சரி சரி என்றாள்.

காபி குடித்துவிட்டு யுகேந்திரன் அப்போதே கிளம்ப…

இருங்க சாப்பிட்டு போகலாம்.” என்றாள்.

இல்ல… நான் போய்க் கொஞ்ச நேரம் உடற்பயிற்சி பண்ணிட்டு, குளிச்சிட்டு, அப்புறம் தான் சாப்பிடுவேன்.” என்றவன், அவளிடம் விடைபெற்றுச் சென்றான்.

வீட்டிற்கு வந்த யுகேந்திரன் அவன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், எதோ யோசனையிலேயே இருந்தான். ரொம்பவும் வேலை வேலை என்று இருக்கிறோமோ என அவனுக்கே தோன்ற… இனிமே கொஞ்சம் ரிலாக்ஸாவும் இருக்கணும் என அவனே நினைத்துக் கொண்டான். இன்னும் அவன் பிரசன்னா சொன்னதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

அதன் பிறகு வந்த நாட்கள் யுகேந்திரன் தனது இறுக்கத்தை விட்டு சற்று கலகலப்பாக இருந்தான். நாட்களும் வேகமாகச் செல்ல… இன்னும் பிரசன்னாவின் திருமணதிற்குப் பத்து நாட்களே இருந்தது.

அன்று சனிகிழமை என்பதால் மதியத்திற்கு மேல் எல்லோரும் சேர்ந்திருக்கும் போது, “கல்யாணத்துக்கு யார் எப்படிப் போறதுன்னு ப்ளான் எதுவும் போட்டு வச்சிருக்கீங்களா?” என யுகேந்திரன் கேட்க…

கல்யாணம் கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு கிராமத்துல… கார்ல போனா…. போகும்போது வரும் போதும் ஊரையும் சுத்தி பார்த்திட்டு வரலாம்.” என்றாள் நக்ஷத்ரா.

நீ எப்படி டா?” என பிரதீப்பிடம் கேட்க…

குழந்தை இருக்கிறதுனால என் பெண்டாட்டி வரமாட்டா… நீங்க கார்ல போனா நானும் உங்களோட கார்ல வரேன்.” என்றான்.

பிரசன்னா ஒருவாரம் முன்னாடியே அவனோட ஊருக்குப் போறதா சொன்னான். அப்போ நாம நாலு பேரும் கார்ல போயிட்டு வந்திடலாம்.” என்ற யுகேந்திரன், ஜனனியிடமும் ஓகே வா என்று கேட்க… அவள் சரி என்றாள்.

திருமணதிற்குச் சில புது உடைகள் வாங்க யுகேந்திரன் நக்ஷத்ராவை தான் கடைக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

ஒரே மாதிரி போடாம கொஞ்சம் வித்தியாசமா போடுங்க பாஸ்.” என்றவள், அவனுக்குச் சட்டையிலேயே வேறு மாதிரி எல்லாம் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாள்.

இருவரும் திரும்பி வரும்போது, யுகேந்திரனின் அம்மாவை சென்று பார்த்துவிட்டு வந்தனர். நிர்மலின் குடும்பம் அவனின் மாமனார் வீட்டிற்குச் சென்றிருந்தால்… அம்மா மட்டும் தான் வீட்டில் இருந்தார்.

டேய்… யாரையாவது லவ் பண்ணா அந்தப் பெண்ணையாவது சீக்கிரம் கல்யாணம் பண்ணும் வழியைப் பாரு.” என்றார் கிரிஜா.

அவரும் அவனுக்கு நிறைய வரன்கள் பார்த்துச் சொல்லத்தான் செய்தார். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. மகன் திருமணம் முடித்தால் போதும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தார்.

திரும்ப வரும் வழியில், “பாருங்க பாஸ் உங்க அம்மாவே உங்க லவ்வுக்கு ஓகே சொல்லிட்டாங்க. நீங்க முல்லையை விட்டிருக்கக் கூடாது.” என்றாள்.

எந்தப் பின்பலமும் இல்லாத குடும்பத்துல இருந்து வந்தவங்களுக்கு அவங்க படிப்பு மட்டும் தான் சொத்து. அவளை நான் கல்யாணம் பண்ணிகிட்டா அதோட முடியதுற இல்ல.. ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்காங்க. அவங்க படிப்பு அதெல்லாம் முக்கியமா பட்டுச்சு. காதலெல்லாம் முக்கியமாபடலை.

இப்ப முல்லை என்ன பண்றாங்களோ….”

அவ அப்பவே தெளிவா முடிவு எடுத்தா… எங்க இருந்தாலும் நல்லாத்தான் இருப்பான்.” என்றான் யுகேந்திரன் நம்பிக்கையாக.

ஞாயிற்றுக்கிழமை திருமணம் என்பதால்… சனிக்கிழமை அதிகாலையே பிரசன்னாவை தவிர மற்ற நால்வரும் காரில் சென்றனர். பின் இருக்கையில் நக்ஷ்த்ராவும் ஜனனியும் இருக்க… முன் இருக்கையில் பிரதீப் கார் ஓட்ட… அவன் அருகில் உட்கார்ந்திருந்த யுகேந்திரன் பேசிக்கொண்டே வந்தான்.

என்ன நக்ஷத்ரா பிரசன்னா கல்யாணத்துல உனக்கு ஒரு பையனை பார்த்திடலாமா?” என அவளை வம்பிழுக்க…

என்ன பாஸ் ரொம்ப ஜாலி மூடல இருக்கீங்க போல… உங்களுக்கு தான் பாஸ் வயச்ச்கிடுச்சு. அதனால முதல உங்களுக்கு பார்க்கலாம்.” 

“மேடம் எனக்கு வயசாகிடுச்சு ஒத்துக்கிறேன். ஆனா உங்களுக்கும் ஒன்னும் கம்மி இல்லையே….  இருபத்தியேழு கல்யாணம் வயசு இல்லையா?” 

“நான் எனக்கு பார்த்துக்கிறேன், முதல்ல உங்களுக்குப் பாருங்க.” என்றாள் நக்ஷத்ராவும் கிண்டலாக.

யுகேந்திரன் ஜனனியிடம் வேலை விஷயமாகப் பேசுவானே தவிரத் தனிப்பட்ட பேச்சு வார்த்தைகள் இருக்காது. அன்றுதான் அவள் குடும்பத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டான். நக்ஷத்ராவே அவனை ஆச்சர்யமாகத் தான் பார்த்தாள்.

வழியில் நிறுத்தி நிறுத்தி சென்றாலும், நக்ஷத்ராவுக்கும் வசதியான இடமாகப் பார்த்து தான் நிறுத்தினர். மாலை நேரம் கோயம்புத்தூர் சென்றும் சேர்ந்திருந்தனர். திருமணம் நடக்கும் ஊர் கோயம்பத்தூரில் இருந்து ஒரு மணி நேர பிரயாணம். அதுவும் ஊட்டி மலை அடிவாரத்தில் இருந்ததால்… மிகவும் குளிர்ச்சியாகக் கண்ணுக்குப் பசுமையாக இருந்தது.

எல்லோருக்குமே அந்த இடம் மிகவும் பிடித்துவிட… நால்வரும் அவர்களுக்கு என ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு சென்று, மாலை வரவேற்பிற்குத் தயாராகி வந்தனர். நக்ஷ்த்ராவும் ஜனனியும் காக்ரா சோலி அணிந்திருக்க…. நக்ஷத்திர தேர்ந்தெடுத்த உடையை யுகேந்திரன் அணிந்திருந்தான்.

வரவேற்பு ரகளையாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று சென்றது. கடைசியாகப் பிரசன்னா , அவன் திருமணம் செய்யப்போகும் பெண், நக்ஷத்ரா, ஜனனி, பிரதீப் எல்லாம் சேர்ந்து ஆட… யுகேந்திரன் அவர்கள் ஆடுவதைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்கள் தங்கி இருந்த விடுதியில் தான் பிரசன்னாவுக்கும் அறை என்பதால்…. நள்ளிரவு எல்லோரும் சேர்ந்து தான் அங்குச் சென்றனர்.

யுகேந்திரன் உடைமாற்ற அறைக்குள் சென்றுவிட… வெளி வரண்டாவில் நின்று பிரசன்னாவும் பிரதீப்பும் பேசிக் கொண்டு இருந்தனர். “இது எதுவும் சரியா வரும்னு தோணலை… இவ அவன்கிட்ட சொல்லப் போறதே இல்லை. இன்னைக்கு அவன் ஜனனியை விசாரிச்சிட்டு இருந்தான்.” என பிரதீப் சொல்ல… அப்போது அவள் அறையில் இருந்து நக்ஷத்ரா வெளியில் வர… “இங்க வா…” என அவளை அழைத்த பிரசன்னா…

இங்க பாரு…. நீ யுகேந்திரனை ஏமாத்தலாம், எங்களை ஏமாத்த முடியாது. ஒழுங்கா உண்மையைச் சொல்லு… உனக்கு அவனைப் படிக்கும் தான….”

நான் எப்ப பிடிக்கலைன்னு சொன்னேன்? எப்பவுமே எனக்காக யுகி இருப்பார்.”

அந்த வெங்காயமெல்லாம் எங்களுக்கும் தெரியும். நான் அதைக் கேட்கலை… நான் என்ன கேட்கிறேன்னு உனக்குத் தெரியும்.” என்றதும்,

யுகிக்கு எதுனாலும் பெஸ்ட்டா கிடைக்கனும்னு நினைப்பேன். அப்புறம் நான் எப்படி டா?” என்றாள் நக்ஷத்ரா கண்கள் கலங்கியபடி….

உன்னைப் பத்தி நீ இவ்வளவு குறைவாவா நினைச்சிட்டு இருக்க.” என பிரசன்னாவும்.

இதை உங்கிட்ட எதிர்பார்க்கலை.” என பிரதீப்பும் சொன்னார்கள். அவர்கள் பேசுவதை அறை வாசலில் நின்று ஜனனியும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

யுகேந்திரன் அறைக்குள் இருந்து வருவதைப் பார்த்த நக்ஷத்ரா, “ப்ளீஸ் யுகிகிட்ட சொல்லிடாதீங்க. அவங்க அந்த மாதிரி என்னைப் பார்க்கலை… எனக்குத் தெரியும்.” என்றாள்.

சரி சொல்லலை…” என்றனர். நக்ஷத்ரா தன் முகத்தைச் சரி படுத்திகொள்ள… அதற்குள் யுகேந்திரன் அவர்களை நெருங்கி இருந்தான்.

கல்யாண மாப்பிள்ளை நேரத்துக்குப் போய்த் தூங்கு.” என பிரசன்னாவை பார்த்து சொன்னவன், மற்றவர்களையும் பார்த்து, “காலையில கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பனும். போய்ப் படுங்க.” என்றான்.

யுகேந்திரனும் பிரதீப்பும் ஒரே அறையில் தான் தங்கி இருந்தனர்.அதை போல நக்ஷத்ராவும் ஜனனியும் ஒரே அறையில் தங்கி இருந்தனர்.

அறைக்குள் வந்ததும் ஜனனி, “ஏன் நக்ஷத்ரா என்கிட்டே கூடச் சொல்லலை.” என்றாள்.

எனக்கு யுகியை எப்பவுமே பிடிக்கும். அது எந்த மாதிரின்னு எனக்கே தெரியாமதான் இருந்தது. ஆனா அன்னைக்கு அவங்க ரொம்ப நேரமா வரலை பாரு. அப்போதான் எனக்கே புரிஞ்சது.”

நான் உன்னை நல்ல ப்ரண்டா தான நினைச்சேன். நீ எப்படி இப்படி நினைச்சேன்னு யுகி கேட்டுட்டா… என்னால அதைத் தாங்க முடியாது.”

யுகிக்கு நீ ஸ்பெஷல் தான். அவர் சொல்லலைனாலும் எங்க எல்லோருக்கும் அது தெரியும். நீ தேவையில்லாம குழப்பிக்கிற.”

என்னால யுகியோட நட்பை எப்பவும் இழக்க முடியாது. இதை இதோட விட்டுடலாம்.” என்ற நக்ஷத்ரா சென்று படுத்துக் கொண்டாள்.

காலையில் யுகேந்திரன் வேஷ்ட்டி சட்டையில் தயாராகி வர… நக்ஷத்ராவும் பட்டுபுடவை கட்டி இருந்தாள். அவனை இன்றுதான் வேஷ்ட்டி சட்டையில் பார்க்கிறாள். அவனுக்கு மிகவும் பாந்தமாக இருந்தது. அவளிடம் நல்லா இருக்கா எனக் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டான். அவன் சாதாரணமாகப் பேசியதும் தான், நக்ஷத்ராவும் நிம்மதியாக இருந்தாள்.

காலையில் திருமணம் முடிந்தவுடன் சாப்பிட்டு விடுதிக்கு வந்து உடைமாற்றிவிட்டு கிளம்பிவிட்டனர். திரும்ப வரும் வழியிலும் யுகேந்திரன் தான் பேசிக் கொண்டு வந்தான். நக்ஷத்ரா அமைதியாக வந்தாள். அவளின் அமைதி அவனுக்கு வியப்பாக இருந்தது.

என்ன ஆச்சு இவளுக்கு?” என ஜனனியிடம் கேட்க… அவள் கஷ்ட்டப்பட்டுப் புன்னகைக்க… பிரதீப்பும் சரியாகப் பேசவில்லை. என்ன எல்லாம் ஒரு மாதிரி இருக்காங்க என நினைத்துக் கொண்டான். ஊர் திரும்ப இரவாகிவிட்டது.

யுகேந்திரன் எல்லோரையும் அவரவர் இடத்தில் இறக்கி விட்டுத்தான் சென்றான்.

வீட்டிற்கு வந்ததும்,“இப்படி எல்லார் கல்யாணத்துக்கும் போ… ஆனா நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்காத. எங்களுக்கும் வயசாகிட்டே போகுது. எங்களுக்குப் பிறகு உனக்கு யாரு இருக்கான்னு நினைச்சாலே கவலையா இருக்கு.” என நக்ஷத்ராவின் அம்மா புலம்ப…

இப்போ என்ன கல்யாணம் பண்ணிக்கனுமா? யாரை வேணாலும் கொண்டு வாங்க கல்யாணம் பண்ணிக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் செல்ல… அவள் பெற்றோருக்கு அப்போதுதான் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தது.

பிரசன்னாவும் பிரதீப்பும் கண்டுகொண்டதை யுகேந்திரன் கண்டுகொண்டால்… என்ன ஆகுமோ என நக்ஷத்ராவுக்கு பயம் வந்துவிட்டிருந்தது. அதனால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சரி என்று சொல்லி விட்டாள். 

Advertisement