Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 4

முல்லை என்ற பெயரை முகநூலில் தேட… அங்கே முல்லை மலர், முல்லை கொடி என நூற்றுகணக்கில் இருக்க…. கல்லூரியின் பெயரை வைத்தும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யுகேந்திரனிடம் கேட்டால்… திட்டுவான் என்று தெரியும். என்ன செய்வது என யோசித்தபடி உறங்கிப் போனாள்.

மறுநாள் யுகேந்திரன் அலுவலகம் வரவில்லை. வந்த ஜூனியர் வக்கீல்களுக்கு வேலை கொடுத்து பிரசன்னா வெளியே அனுப்பி இருந்தான். அன்று கோர்ட் செல்லும் வேலை இல்லாததால்… நக்ஷத்ராவும் அலுவலகத்தில் தான் இருந்தாள்.

இந்நேரம் அவனைக் கேட்டிருப்பியே… யாரையும் அவன் லவ் பண்ணலை தான…” என பிரசன்னா கேட்க…

லவ் பண்ணாங்க தான். ஆனா யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.” என்றாள்.

ஓ… உன்கிட்ட சொல்வான், காலேஜ்ல இருந்து ப்ரண்டா இருக்கிற என்கிட்டே சொல்ல மாட்டானாமா…” அவன் வரட்டும்.” என்றான் பிரசன்னா கடுப்பாக.

ஹே… நீ வேற… நான் கேட்டேன் அதனால சொன்னாங்க.” என்றாள் நக்ஷத்ரா யுகேந்திரனுக்குப் பரிந்துகொண்டு.

நீ அவனுக்குச் சப்போர்ட்டுக்கு வந்திடுவியே… நீ அவனை என்ன வேணா சொல்லலாம், ஆனா நாங்க அவனை எதுவும் சொல்லக் கூடாது.” பிரசன்னா சொல்ல…

ஆமாம் எனக்கும் ஒன்னும் சரியா படலை… ரெண்டு பேரும் வேற ரூட்ல தான் போயிட்டு இருக்காங்க.” என பிரதீப்பும் சேர்ந்துகொள்ள… நக்ஷத்ராவுக்கு வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்தது.

மாலை வரை யுகேந்திரன் வரவில்லை. அதை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. வசதி இல்லாதவர்கள் எதாவது சட்ட ஆலோசனை கேட்டால்… அவர்கள் இடத்திற்கே சென்று பார்த்து பேசிவிட்டு வருவான்.

நக்ஷத்ரா கிளம்பும் நேரம் ஆகியும் வரவில்லை என்றதும்,

பிரசன்னா பாஸ் எங்க போனாங்க? உன்கிட்ட சொல்லிட்டு போனாங்களா?” என்று அவள் கேட்டதற்கு,

அவன் நான் எழுந்துக்கும் போதே வீட்ல இல்லை. அதனால எனக்குத் தெரியாது.” என்றான்.

உடனே நக்ஷத்ரா யுகேந்திரனை கைபேசியில் அழைக்க…தொடர்புகொள்ள முடியவில்லை என்றே வர…. அவள் மீண்டும் மீண்டும் முயன்று கொண்டே இருந்தாள்.

சொல்லிட்டுப் போகக் கூடாது. ஒரு போன்னாவது பண்ணாங்களா பாரு.” என நக்ஷத்ரா புலம்பல் தாங்காமல்… பிரசன்னாவும் அவனின் கைபேசியில் முயன்று பார்த்தான்.

நக்ஷத்ரா ஒரு இடத்தில் உட்காராமல் நடத்துக் கொண்டே இருந்தாள். ஜனனியை வீட்டுக்கு செல்ல சொல்ல… “நான் உன்னோட இருக்கேன்.” என ஜனனியும் இருந்து கொண்டாள்.

இப்போ எதுக்கு நீ இவ்வளவு டென்ஷன் ஆகிற?” என பிரதீப் கேட்க…

முன்தினம் இரவு ஒரு கார் அவர்கள் காரை உரசிவிட்டு சென்றதை சொன்னவள், “இவங்க எதிலாவது தலையைக் கொடுக்கிறாங்க டா… அதுதான் டென்ஷன் ஆகுது.” என்றாள்.

இவள் சொன்னதைக் கேட்டு மற்றவர்களும் சற்று பயந்து தான் போனார்கள். ஆனாலும் அதெல்லாம் அவன் வந்திடுவான் என்றான் பிரசன்னா.

நக்ஷத்ராவின் அப்பாவும் அவளை அழைத்து விட… “இங்க ஒரு முக்கியமான வேலையில இருக்கேன். யுகியோட வரேன்.” என வைத்து விட்டாள்.

அவன் யார் விஷயமாக எங்கே சென்றிருக்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் வேறு யாரை அழைத்துக் கேட்பது என்றும் தெரியவில்லை. ஒன்பது மணி ஆகியும் அவன் வரவில்லை என்றதும், நடந்து நடந்து ஓய்ந்து போன நக்ஷத்ரா பயத்தில் அழுதே விட…

எங்க போச்சு உன் தைரியமெல்லாம்.” என பிரசன்னா கேட்க…. அவள் பதில் சொல்லவில்லை.

பிரசன்னா மீண்டும் யுகேந்திரனுக்கு முயல… இந்த முறை அழைப்புப் போனது, ஆனால் யுகேந்திரன் எடுக்கவில்லை.

ஹே… இப்போ லைன் போகுது. ஆனா எடுக்க மாட்டேங்கிறான்.” என்றான். அதைக் கேட்டு தான் நக்ஷத்ரா சற்று உட்கார்ந்தாள்.

சிறிது நேரத்தில் யுகேந்திரனே அழைத்து விட்டான்.

எங்க டா போன?” என பிரசன்னா கத்த…

இங்க விழுப்புரம் பக்கம் ஒரு ஊருக்குப் போயிருந்தேன் டா… அங்க சிக்னல் இல்லை. திரும்ப வரும் போது சார்ஜ் இல்லாம போன் ஆப் ஆகிடுச்சு. லேட் ஆனதுனால நேரா வீட்டுக்கு வந்திட்டுப் போன்னை சார்ஜ் போட்டுட்டு இப்போதான் குளிக்கப் போனேன்.” என்றான்.

எங்க போனாலும் சொல்லிட்டு போக மாட்டியா… இல்ல அங்க இருந்து ஒரு போன் பண்ணியாவது சொல்லி இருக்கலாம் இல்ல… இங்க நாங்க எல்லாம் டென்ஷன் ஆகிட்டோம்.” என்றதும்,

நான் எப்பவும் சொல்லாம தான டா போவேன். இது என்ன புதுசா?”

நீ எப்பவும் இப்படித்தான் இருக்க…. ஆனா இங்க சில பேர் தான் புதுசா என்னலாமோ யோசிக்கிறாங்க.” என்றவன்,

நேத்து நீயும் நக்ஷத்ராவும் கார்ல போகும்போது உங்க காரை உரசிட்டு ஒரு கார் போச்சா… அதை வேற நினைச்சு, அவளும் பயந்து, இங்க எல்லோரையும் கலவரம் ஆக்கிட்டா…”

நீ எங்க போனாலும் எங்களுக்குச் சொல்றியோ இல்லையோ… இனி அவளுக்குச் சொல்லு.” என்றான்.

நான் தான் நேத்தே குடிச்சிட்டு எவனோ வண்டி ஓட்டிட்டு போறான்னு சொன்னனே…” என்றவன், “அவகிட்ட போன்னை கொடு .”என்று சொல்ல… நக்ஷத்ரா அவனிடம் பேச மறுத்து விட்டாள். யுகேந்திரன் அவளது கைபேசிக்கே அழைக்க, அப்போதும் அவள் எடுக்கவில்லை. அவளுக்குத் தெரியும், அவளைத் திட்ட தான் கூப்பிடுகிறான் என்று.

பிரதீப் ஏற்கனவே திருமணம் ஆனவன், அவனை வீட்டுக்கு செல்ல சொல்லிவிட்டு, ஜனனி மற்றும் நக்ஷத்ராவை வாடகை வண்டியில் ஏறிவிட்டு, பிரசன்னா பைக்கில் பின் தொடர…

நாங்க போயிடுவோம்.” எனப் பெண்கள் சொன்னாலும்… பரவாயில்லை என பிரசன்னா உடன் சென்றான்.

பிரசன்னா வீடு வர மிகவும் தாமதமாகிவிட்டது. அவன் யுகேந்திரனிடம் எதுவும் பேசு கொடுக்காததால்… யுகேந்திரனும் சென்று படுத்துவிட்டான். மறுநாள் பிரதீப்பும் பிரசன்னாவும் கோர்ட் வேலையாக வெளியே சென்றுவிட்டு மதியம் போல அலுவலகம் வர.. அன்று யுகேந்திரன் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தான். அன்று நக்ஷத்ரா வரவில்லை. நக்ஷத்ரா இருந்தால் தான் எல்லோரையும் வம்பு இழுத்துக் கொண்டு இருப்பாள். அவள் இல்லாததால் அலுவலகம் அமைதியாக இருக்க… அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அன்று இரவு வீட்டிற்குச் செல்வதற்கு முன் அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் யுகேந்திரன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அப்போது அவன் நடத்தும் வழக்குச் சம்பந்தமாக ஒருவர் வர… அவனுக்கு அலுவலகத்திலேயே மிகவும் தாமதமாகிவிட்டது. அதனால் அவன் செல்லவில்லை.

மறுநாள் அலுவலகம் வந்த நக்ஷத்ரா யுகேந்திரனை பார்ப்பதை கூடத் தவிர்த்தாள். அன்று அமைதியாக அவள் வேலை பார்த்தது தான் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

அன்று சனிக்கிழமை என்பதால் யாருக்கும் கோர்ட் செல்லும் வேலை இல்லை. எல்லோரும் அலுவலகத்தில் தான் இருந்தனர். நக்ஷத்ராவுக்குப் பெரும்பாலும் மதிய உணவு வீட்டில் இருந்து வரும், பிரதீப்பும் ஜனனியும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருவார்கள். இவர்கள் மூவர் கொண்டு வரும் உணவே பிரசன்னா யுகேந்திரன்னுக்கும் போதுமானதாக இருக்கும். அதுவும் நக்ஷத்ரா வீட்டில் இருந்து அதிகம் தான் வரும். என்றாவது யார் வீட்டிலிருந்தாவது உணவு கொண்டு வரவில்லை என்றால்… அன்று மட்டும் தேவைபட்டால் ஹோட்டலில் இருந்து வாங்கிக்கொள்வார்கள்.

அன்று யுகேந்திரனோடு பேசவே இல்லை நக்ஷத்ரா. ஆனால் முதலில் அவனுக்குதான் தட்டில் உணவு எடுத்து வைத்தாள். பிரதீப்பும் பிரசன்னாவும் கொலை வெறியோடு அவளைப் பார்த்தனர்.

அன்று மதியத்திற்கு மேல் ஒரு வழக்கை பற்றி யுகேந்திரன் விவரித்தான். “நம்மகிட்ட கேஸ் கொண்டு வந்தவங்க மேலத்தான் தப்பு. நிறையக் கணக்கு வழக்குல கோல்மால் பண்ணி இருக்காங்க. ஒழுங்கான வரி கட்டலை… எல்லா இடத்திலேயும் நஷ்ட்ட கணக்கை காமிச்சு…. வேலை செய்யுறவங்களுக்குச் சம்பளம் ஒழுங்கா தரலை… இப்போ அங்க வேலை செய்யுறவங்க எல்லாம் சேர்ந்து கேஸ் போட்டிருக்காங்க போல…. எப்படியாவது ஜெயிச்சு கொடுங்கன்னு நம்மகிட்ட கொண்டு வந்தாங்க. நாங்க எடுக்க முடியாது சொல்லிட்டேன்.”என்றவன், அதோடு இல்லாமல். “ஆனா வேற யார் இந்தக் கேஸ் எடுப்பாங்கன்னு தெரியலையே… இவங்க ஜெயிச்சிட்டா… பாவம் அந்தத் தொழிலாளிங்க.” என்றும் சொல்ல…

நான் வேணா அந்தக் கேஸ் எடுத்து வேணுமுன்னே தோத்துடவா பாஸ்.” என நக்ஷத்ரா ஆர்வ கோளாரில் கேட்டு வைக்க… யுகேந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

நீ ஒழுங்காவே யோசிக்க மாட்டியா? எதுல விளையாட்டுன்னே இல்லை.” என்று சொல்ல…

அவ இப்போ என்ன தப்பா சொல்லிட்டா… நீதான் வருத்தபட்ட உன் வருத்தம் பொறுக்காம சொல்லிட்டா…”

நீ எப்பவுமே அவளை டேக்கிங் பார் கிராண்ட்டா தான் எடுத்துக்கிற…”

அன்னைக்கு நீ வரலைனதும், நடந்து நடந்து அவளுக்குக் கால் வலியே வந்திடுச்சு தெரியுமா? நேத்து அதுதான் அவ ஆபீஸ் வரலை.”

நீ ஊர்ல இருக்கிறவங்களுக்கு என்னலாமோ செய்யுற… ஆனா உன் பக்கத்துல இருக்கிறவங்களோட அன்பு தெரியலை…. எப்படினாலும் அவ உன்னைவிட்டு போக மாட்டான்னு உனக்குத் தெரியும்.” என பிரசன்னா அன்று மனதிலிருந்ததை எல்லாம் கொட்டிவிட… அதிர்ச்சி யுகேந்திரனுக்கு மட்டும் இல்லை. அங்கிருந்த மற்றவர்களுக்கும் தான்.

யுகேந்திரன் பேசவே இல்லை. அவன் அமைதியாக இருக்க…

இவன் என் இதெல்லாம் பேசினான் என நக்ஷத்ராவுக்கு இருக்க… விட்டால் போதுமென்று ஜனனியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். எப்போதுமே சனிக்கிழமை மூன்று மணி வரைதான் அலுவலகத்தில் இருப்பார்கள்.

பிரதீப்போடு தானும் கிளம்பிய பிரசன்னா, “சாரி டா… எதோ கோபத்தில பேசிட்டேன்.” என, “பரவாயில்லை டா…. ஆனா நக்ஷத்ராவை ஈஸியா எல்லாம் நான் எடுத்துக்கலை… உண்மையில சொன்னா அவதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் வியந்து பார்க்கும் பொண்ணுடா அவ….” என்றான்.

நீ வியந்து எல்லாம் பார்க்க வேண்டாம். அவளைச் சாதாரணமா பாரு போதும். அப்போ உனக்கே நிறைய விஷயம் புரியும்.” என்ற பிரசன்னா விடைபெற்று செல்ல…

மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருந்துவிட்டு கிளம்பிய யுகேந்திரன், நக்ஷத்ராவை பார்க்க அவள் வீட்டிற்குச் சென்றான்.

இவன் சென்ற போது நக்ஷத்ராவின் அப்பாவும் அம்மாவும் வீட்டில் இல்லை. சனிக்கிழமை என்பதால் கோவிலுக்குச் சென்றிருந்தனர்.

யுகேந்திரனை பார்த்ததும், இவன்கிட்ட தனியா வேற மாட்டிகிட்டோமே என்றுதான் நினைத்தாள்.

Advertisement