Advertisement

யுகேந்திரன் சொன்னதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த நக்ஷத்ரா, “பாஸ் நீங்க எங்கையோ போயிடீங்க. அந்தப் பொண்ணுக்காக நீங்க வேலைக்குப் போனீங்களா?” என்றதும்,

“ஆமாம் எங்க அப்பாவும் இல்லாம, எங்க அம்மா வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கிற பணத்தை எடுத்து கொடுக்க மனசு வரலை. அதனால நான் வேலைக்குப் போனேன்.”

“நான் போய்ப் பணம் கொடுத்த போது, அவ வாங்கிக்க ரொம்ப யோசிச்சா… கடனா தரேன் வேலைக்குப் போனதும் திருப்பிக் கொடுத்திடுன்னு சொன்னதும் சரின்னு வாங்கிகிட்டா.”

“நீங்க லவ் பண்றேன்னு அந்தப் பொண்ணுகிட்ட சொல்லவே இல்லையா?”

“அதுக்குப் பிறகு நாங்க அடிக்கடி போன்ல பேசினோம், வெளிய பார்த்துகிட்டோம். அப்போ ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொல்லிகிட்டோம்.” என்றான்.

“எப்படிச் சொன்னீங்க பாஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.” என்றதும்,

“அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.” என்றான்.

“ச்ச… நான் குறுக்கப் பேசாம இருந்திருக்கலாம். நீங்க மேல சொல்லுங்க.” என்றதும்,

“நாங்க கடைசி வருஷத்துல இருந்த போது, என் ப்ரண்ட் உதயகுமார் இறந்திட்டான். அப்புறம் எல்லாமே மாறிடுச்சு என்றான்.

“என்ன ஆச்சு பாஸ்.”

“யுகேந்திரன் கல்லூரியில் மனம் விட்டு பேசுவது என்றால்…. அது உதயிடம் தான். அவனுக்கும் யுகேந்திரன் அப்படித்தான்.

அந்த முறை ஊருக்கு சென்றவன், அங்கருந்து யுகேந்திரனை அழைத்திருந்தான்.

“டேய் நான் இங்க ஒரு பெண்ணை லவ் பண்றேன்னு சொன்னேன் இல்ல டா… அந்தப் பொண்ணு வீட்ல எங்க விஷயம் தெரிஞ்சு…. பெரிய பிரச்சனை ஆகிடுச்சு.”

“நீ பேசி பார்க்க வேண்டியது தான…”

“நானும் சொல்லிட்டேன் டா… நான் நல்லா படிச்சிருக்கேன். நல்ல வேலை கிடைக்கும், நல்லா சம்பாதிப்பேன்னு. ஆனா நான் அவங்க ஜாதி இல்லையாம். அதனால பொண்ணு கொடுக்க மாட்டாங்களாம்.”

“இரு நாங்க அங்க கிளம்பி வரோம். அவங்க வீட்ல பேசி பார்க்கலாம்.” என்றதற்கு,

“அதெல்லாம் என்ன பேசினாலும் ஒத்துக்க மாட்டங்க டா… நான் ஜோதிகிட்ட பேசிட்டு சொல்றேன். ஒன்னு இங்க இருந்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரணும். இல்லைனா அங்க வந்து கல்யாணம் பண்ணிக்கணும். நான் என்னன்னு பார்த்திட்டு சொல்றேன்.” என்று வைத்தவனிடம் இருந்து பிறகு தகவலே இல்லை.

“யுகேந்திரனும் தினமும் அழைத்துப் பார்க்க… அவன் கைபேசி அனைத்து வைக்கபட்டிருக்க… பிறகு கல்லூரி அலுவலகத்தில் இருந்து அவன் தந்தையின் கைபேசி எண்ணை வாங்கி அழைக்க… அவர்தான் உதயகுமார் இறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது என்றார்.

கேட்ட யுகேந்திரனுக்கு அப்படியொரு அதிர்ச்சி. “வேற ஜாதி பெண்ணை விரும்பினா சும்மா இருப்பாங்களா… அவன் வண்டியில போகும்போது லாரியை விட்டு அடிச்சிட்டாங்க. இவன் படிச்சாவது எங்க குடும்பம் முன்னேறும்னு நினைச்சேன். ஆனா இனிமேயும் எங்க வாழ்க்கை அல்லாட்டம் தான். அவங்க அம்மா தான் பையனை பறிகொடுத்திட்டு சோறு தண்ணி இறங்காம இருக்கா…” என்றவர் இணைப்பை துண்டித்தார்.

யுகேந்திரனும் அவன் நண்பர்களும் கிளம்பி உதயகுமாரின் ஊருக்குச் சென்றவர்கள், காவல் நிலையத்திலும் சென்று விசாரித்தனர். காவல் நிலையத்திலும் விபத்து தான் என்றனர். விபத்து செஞ்சவனைப் பிடிச்சாச்சு. வேற என்ன பண்ணனும்னு சொல்றீங்க?” என்றனர்.

“யுகேந்திரனும் அவன் நண்பர்களும் சேர்ந்து உதயகுமாரின் பெற்றோருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் தங்கையின் படிப்புக்கும் உதவுவதாகச் சொல்லிவிட்டு வந்தனர். அவர்களால் அப்போது அதுதான் செய்ய முடிந்தது.

அதன் பிறகு யுகேந்திரன் இறுகி போனான். முல்லை அழைத்த போது அவளிடம் விஷயத்தைச் சொல்லி இருந்தான். அதன் பிறகு இவனும் அழைக்கவில்லை. அவளும் அழைக்கவில்லை.

வெகு நாட்கள் சென்றே அவளைப் பார்க்க சென்றான்.

பொதுவான நல விசாரிப்புக்கு பிறகு, முல்லை தான் சொன்னாள்.

“யுகி நாம பிரிஞ்சிடலாமா?” என்று. திடிரென்று அவள் அப்படிச் சொன்னதும் யுகேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. “எங்க வீட்ல நம்ம விஷயம் தெரிஞ்சா என்ன நடக்கும்னு நினைக்கிறீங்க? என்னை வெட்டி வேணா போடுவாங்க, ஆனா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க விடமாட்டாங்க. அதோட என் தங்கச்சிங்க படிப்பையும் நிறுத்திடுவாங்க. ரெண்டு பேரும் இப்போதான் எட்டவதும் ஒன்பதாவதும் படிக்கிறாங்க. என்னால அவங்க படிப்பும் போயிடும்.” என்றாள்.

“நீ ஏன் இப்பவே கல்யாணத்தைப் பத்தி யோசிக்கிற… நீ படிச்சு முடிச்சு வேலை பார்ப்ப… நானும் வேலை பார்ப்பேன். இப்பவேவா கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“எப்போ கல்யாணம் பண்ணிகிட்டாலும் இதுதான் நிலைமை. அப்படியே வேலை பார்த்தாலும், அடுத்து ரெண்டு வருஷத்துல எப்படியும் எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அப்போ நம்ம விஷயத்தை எப்படியும் சொல்லத்தானே வேணும். அதோட என்னையும் எவனுக்காவது கட்டி வச்சு… என் தங்கச்சிங்களையும் படிக்க விடாம செஞ்சிடுவாங்க.”

“எனக்குத்தான் அறிவு இல்லை. எனக்கு என் குடும்ப நிலவரம் தெரியும். அப்புறமும் நான் ஏன் இப்படிப் பண்ணேன்?”

“என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் என்னை விட நல்லா படிப்பாங்க. டாக்டர் ஆகணும் கலெக்டர் ஆகணும்னு கனவு கண்டுட்டு இருக்காங்க. என்னால அவங்க வாழ்க்கையும் வீணாகப் போகுது.” என்று அழுதவளை பார்த்து யுகேந்திரனுக்குப் பாவமாகத்தான் இருந்தது.

அப்போது அவள் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்ததால்… பிறகு பேசிக்கொள்வோம் என நினைத்து வந்துவிட்டான்.

பிறகு அவன் கைபேசியில் அழைத்த போதும் ,அவள் எடுக்கவில்லை. அவனிடம் இருந்து பணம் வாங்கிகொள்ளவும் மறுத்துவிட்டாள்.

அவளுக்குச் சற்று நேரம் கொடுத்து மீண்டும் அவளைச் சந்திக்கச் சென்றான்.

“எனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருக்கு தெரியுமா?” என யுகேந்திரன் சொன்னதற்கு,

“எனக்கு மட்டும் இல்லையா… உங்களை வேண்டாம்னு சொல்றது எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா? ஆனாலும் வேண்டாம்னு சொல்றேன். இங்க எதுவும் மாறலை. எல்லோரோட ட்ரெஸ் தான் நாகரிகமா மாறி இருக்கு. மனசுக்குள்ள இருக்க வக்கிரம் அப்படியே தான் இருக்கு.”

“என்னால நீங்க கஷ்ட்டப்பட்டு, என் தங்கச்சிங்க கஷ்ட்டப்பட்டு இதெல்லாம் தேவையா? நான் உங்களைப் பார்த்தே இருக்கக் கூடாது.” என அழுதாள்.

இப்போது தான் நண்பனை இழந்திருக்கிறான். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று நம்பிக்கையாகச் சொல்ல முடியவில்லை. இவள் நல்லமுறையில் படித்து முடித்தாலாவது, அவள் தங்கைகளையும் படிக்க வைப்பார்கள். அப்போது யுகேந்திரனுகும் தன் காதலை விட… அந்தப் பெண்களின் வாழ்க்கை முக்கியமாகப்பட்டது.

“சரி அழாத. நான் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.” என்றான்.

“நீங்க கொடுத்த பணத்தை வேலைக்குப் போனதும் கொடுத்திடுறேன்.” என்றாள்.

“வேண்டாம்.” என யுகேந்திரன் சொல்ல…

“பணத்துக்காக உங்களோட பழகின மாதிரி இருக்கும்.” என்றதும்,

“நான் அப்படி நினைக்கலை. நீ அந்தப் பணத்தை உன்னைப் போலத் தேவைபடுற ஒருத்தருக்கு கொடுத்திடு.” என்றவன், அப்போதும் எதாவது உதவி தேவை என்றாள் அழைக்கலாம் என்று சொல்லிவிட்டு தான் வந்தான். ஆனால் அதன் பிறகு அவள் அவனை அழைக்கவே இல்லை.

அவள் கல்லூரி படிப்பு முடிக்கும் வரை… அவளோடு பேசவில்லை என்றாலும், அவளைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது. கல்லூரி படிப்பு முடிந்ததும், அவளைப் பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.அவன் நினைத்தால் தெரிந்து கொண்டிருக்கலாம். அவள் விருப்பத்திற்கு மதிப்பளித்து விட்டுவிட்டான். 

நக்ஷத்ராவின் வீடு நெருங்கி இருந்ததால்… யுகேந்திரன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு திரும்பி அருகில் இருந்தவளை பார்க்க…. நக்ஷத்ராவின் கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் கொட்டி கொண்டிருக்க….

“எப்பவோ நடந்ததுக்கு இப்ப ஏன் அழற?”என்றவன், அவள் கண்ணீரை துடைத்துகொள்ளக் காரில் இருந்த டிஷு பேப்பரை எடுத்துக் கொடுத்தான்.

“உங்களுக்குக் கஷ்ட்டமா இல்லையா பாஸ். இப்போ அவங்களைத் தேடி கண்டுபிடிக்கிறது கூட ஈஸி.” என்றவள், அவளின் கைபேசியை எடுக்க…அவளிடம் இருந்து கைபேசியை வாங்கி வைத்தான்.

“தேடி கண்டுபிச்சா மட்டும்.”

“அவங்களும் ஒருவேளை கல்யாணம் பண்ணாம இருந்தா?”

“அவங்க பக்கம் இருந்து எந்தப் பிரச்சனையும் இல்லைனா… அவளே என்கிட்டே பேசி இருப்பா.”

“அதோட இதெல்லாம் நடந்தது ஒன்பது வருஷங்களுக்கு முன்னாடி. அப்போ இருந்த காதல் இப்பவும் இருக்கணும்னு அவசியம் இல்லை. இப்போ இருக்கிற யுகேந்திரனை அவளுக்கும் பிடிக்காமல் போகலாம். இப்போ இருக்கிற முல்லையை எனக்கும் பிடிக்குமான்னு தெரியலை. அதனால நீ தேவையில்லாத ஆராய்ச்சி எல்லாம் பண்ணாத.”

“இப்போ நிகழ்காலத்துல தான் வாழனும்.”

“இப்போ உங்களுக்கு யாரை பாஸ் பிடிச்சிருக்கு?”

“என் வேலையைத் தான் பிடிச்சிருக்கு. இதுவரை நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை. ஆனா அம்மா ரொம்பச் சொல்றாங்க. அவங்களுக்காக இல்லாம எனக்கே பிடிச்சுக் கல்யணம் பண்ணனும்.” என்றவன், காரை எடுத்து சிறிது தூரம் தான் சென்றிருப்பான். அப்போது அருகில் வந்த இன்னொரு கார் ,இவர்களின் கார் மீது நன்றாக உரசிவிட்டு செல்ல… நக்ஷத்ரா பயந்தே போனாள்.

“குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு போறான்.” என யுகேந்திரன் சொல்ல… நக்ஷத்ராவுக்கு அது யாரோ வேண்டுமென்றே செய்தது போல இருக்க…. ஆனால் அதை யுகேந்திரன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அவளை வீட்டில் விட்டுவிட்டு யுகேந்திரன் உடனே சென்றுவிட்டான். ஆனால் அரைமணி நேரத்தில் நக்ஷத்ரா அழைத்து அவன் வீட்டுக்கு போய் விட்டானா என்று கேட்க…

“என்ன பயம் உனக்கு? அதெல்லாம் நான் வந்திட்டேன்.” என்றான். பிறகுதான் அவளுக்கு நிம்மதியாக இருக்க முடிந்தது.

“இங்க பாரு, இன்னைக்கு நான் உன்கிட்ட பேசினதை வேற யார்கிட்டயும் சொல்லக் கூடாது. நான் ஒரு ப்ரண்டா உன்கிட்ட ஷேர் பண்ணிகிட்டேன்.”

“எனக்குத் தெரியாதா, ஆனா பாஸ் உங்க லவ் ஸ்டோரியில ரொமான்ஸ் ரொம்பக் கம்மியா இருந்த மாதிரி இருந்துதே…என்கிட்டே எதாவது சொல்லலையா பாஸ்?” என,

“அடங்கவே மாட்டியா நீ…. நான் அவளைத் தொட்டுக் கூடப் பேசினது இல்லை. போதுமா உனக்கு. என்னை ஆள விடு. உன்கிட்ட தெரியாம உளறி தொலைச்சிட்டேன்.” என்றான்.

“நானும் தான் ரொம்ப எதிர்பார்த்திட்டேன். உங்க காதல் கதை இப்படித்தான் இருக்கும்.”

“என் வலி எனக்குத்தான் தெரியும்.”

“உங்க வலியை விட முல்லை வலி தான் பெரிசு. ரொம்பப் பிடிச்சவங்களை வேண்டாம்னு சொல்றது அவங்களுக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருந்திருக்கும்.”

“அதை நினைச்சு தான் நான் விலகினேன். என்னைப் பார்க்க பார்க்க அவளுக்கு வருத்தம் தானே… எனக்கும் தான்.”

“சாரி பாஸ் இனிமே இதைப் பத்தி பேச வேண்டாம். நீங்க சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க.” என்றவள், கைபேசியை வைத்துவிட்டு, அவள் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கைக்கு வந்தவள், முல்லையை முகநூலில் தேட ஆரம்பித்தாள்.

Advertisement