Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 3

அடுத்து நக்ஷத்ரா வாதாட வேண்டிய வழக்கை பற்றி யுகேந்திரன் அலுவலக அறையில் வைத்து விளக்கிக் கொண்டு இருந்தான். இருவரும் சேர்ந்து பேசி குறிபெடுத்துக் கொண்டிருந்தனர்.

மாலை கிளம்ப வேண்டிய நேரம் வந்ததும் ஜனனி வந்து நக்ஷத்ராவை அழைக்க…

“இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு ஜனனி, நீ போ… நான் அப்புறம் போயிக்கிறேன்.” என்றாள். ஜனனி சரி என்று கிளம்பிவிட…. பிரசன்னாவும் பிரதீப்பும் இன்று நேரத்துடனே கிளம்பி இருந்தனர்.

அவள் எப்போதும் வர வேண்டிய நேரத்திற்கு வரவில்லை என்றதும், யோகேஸ்வரன் அவளைக் கைபேசியில் அழைக்க… “அப்பா யுகியோடதான் இருக்கேன். அவரோட வந்திடுறேன்.” எனவும் யோகேஸ்வரனும் சரி என்று வைத்தார்.

வழக்கு சம்பந்தமான வேலை முடிந்தும், நக்ஷத்ராவுக்கு அப்போதும் கிளம்ப மனமில்லை. “உனக்கு இப்போ என்ன தெரியனும்?” என யுகேந்திரன் கேட்க…

“உங்களுக்குத் தெரியாதா?” என்றாள்.

“சரி வா கார்ல பேசிட்டே போவோம்.” என அழைத்துச் சென்றான்.

“நீ என்னவோ என்னை அதிசய பிறவி மாதிரி எப்பவும் பார்க்கிற, நானும் சாதாரான மனுஷன் தான். காலேஜ்ல படிக்கும் போது எனக்கும் காதல் இருந்தது.”

“அப்போ ஏன் அவங்களைக் கல்யாணம் செஞ்சுக்கலை.”

“மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கிற வயசு அது. நமக்குச் சில விஷயங்கள் அந்த நேரத்துல புரியாது.”

“நான் லா காலேஜ் சேர்ந்த போது எனக்கு அங்க யாரையும் தெரியாது. நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு தான் இருந்தேன். முதல் ஆறு மாசம் அப்படித்தான் போச்சு. அப்புறம் சில பேர் சேர்ந்து ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்.”

“அதுல உதயகுமார் மதுரை பக்கம் ரொம்பக் கஷ்டபடுற குடும்பத்துல இருந்து வந்தவன். அவங்க அப்பா அம்மா தினக் கூலிகள் தான். ஆனா நல்லா படிப்பான். படிக்கிறது மட்டும் இல்ல… அவனுக்குப் பொதுச் சேவையிலும் ஆர்வம் இருந்தது. நான், அவன், பிறகு இன்னும் சில பேர் படிப்பை தவிர… மெடிகல் கேம்ப் நடத்துறது, ரத்ததானம் செய்யுறதுன்னு செஞ்சிட்டு இருந்தோம்.” என்றவன், தனது கடந்த காலத்திற்குச் சென்றான்.

கல்லூரி காலம் என்பது எல்லோருக்குமே வசந்த காலம் தான். யுகேந்திரனுக்கும் நிறைய நண்பர்கள் என்பதால்… கல்லூரி வாழ்க்கை மிகவும் கலகலப்பாகச் சென்றது. நிறைய நண்பர்கள் வெளியூரில் இருந்து வந்து படித்ததால்… கல்லூரி விட்டால் நண்பர்களின் அறை என்று நேரம் செல்லும். மூன்றாவது ஆண்டு வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு தான் ஆரம்பித்தது.

ஒருமுறை எதோ அவசர அறுவைசிகிச்சைக்கு ரத்தம் தேவை என மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருக்க… மதிய நேரம் கல்லூரியில் இருந்து நேராக யுகேந்திரன் மருத்துவமனை செல்ல… அங்கே அதே போல ரத்தம் கொடுக்க வந்தவள் தான் முல்லை. இருவரும் அடுத்த அடுத்தப் படுக்கையில் தான் ரத்தம் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது யுகேந்திரன் தான் பேச்சுக் கொடுத்தான்.

“இதுக்கு முன்னாடி உங்களைப் பார்த்தது இல்லையே… நீங்க யார் மூலமா தகவல் தெரிஞ்சு வந்தீங்க?” என்றதும்,

“நான் இதுக்கு முன்னாடி ரத்தம் கொடுத்தது இல்லை. இன்னைக்கு ஆபரேஷன் நடக்கப் போறது என்னோட கூடப் படிக்கிற பையனுக்கு. காலேஜ்ல சொன்னாங்க. என் க்ரூப்பும் அதுதான். விஷயம் தெரிஞ்சதும் மனசு கேட்கலை அதுதான்.” என்றாள் அந்தப் பெண்.

“ஒ நிஜமாவே உங்களுக்கு நல்ல மனசுங்க.” என்றான் யுகேந்திரன்.

ரத்தம் கொடுத்து முடித்திருக்க… முதலில் யுகேந்திரனின் கையில் இருந்து ஊசியை எடுத்ததும், அவன் எழுந்து கொள்ளாமல் படுத்திருக்க… முல்லை அவள் கையில் இருந்து ஊசியை எடுத்ததும் எழுந்துகொள்ள… அவளுக்கு ஒரு நிமிடம் தலை கிறுகிறுத்துப் போனது.

“எழுந்துக்காதீங்க…” என யுகேந்திரன் குரல் கொடுக்க… அதற்குள் நர்ஸ் பிடித்து அவளை மீண்டும் படுக்க வைத்தார்.

“உடனே எழுந்துக்கக் கூடாதுங்க உங்களுக்குத் தெரியாதா?” என நர்ஸ் கேட்க…

“அவங்க இப்போ தான் முதல் தடவை கொடுக்கிறாங்க. அவங்களுக்குத் தெரியாது.” என்றான் யுகேந்திரன். முல்லை பேசும் நிலையிலேயே இல்லை.

சிறிது நேரம் சென்று எழுந்த யுகேந்திரன், அவளுக்காக அங்கயே உட்கார்ந்து இருந்தான். ஐந்து நிமிடம் சென்று, “இப்போ எழுந்துக்கோங்க.” என்றவன், அவள் எழுந்ததும் நர்ஸ் கொடுத்த பழசாரை அவளிடம் கொடுத்து அருந்த சொன்னவன், தானும் அருந்தினான்.

அவள் குடித்து முடித்ததும், “இப்போ பரவாயில்லையா?” என்று கேட்க…

“ம்ம்.. இப்போ ஓகே.” என்றவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“நீங்க தனியா போயிடுவீங்களா?”

“இன்னைக்கு ஆபரேஷன் சொன்னதும், அப்படியே கிளம்பி வந்துட்டேன். கிளாஸ் நேரமா இருந்ததுனால கூட ப்ரண்ட்ஸ் யாரையும் கூட்டிட்டு வர முடியலை.” என்றாள். அவளுக்கு எங்கே மீண்டும் கிறுகிறுப்பு வந்துவிடுமோ என்று சற்று அச்சமாகத்தான் இருந்தது.

“நீங்க எந்தக் காலேஜ்?” என்றதும், ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியின் பெயரை தான் சொன்னாள்.

“வாங்க நான் விட்டுடுறேன்.” என்றதும் அவள் தயக்கமாகப் பார்க்க…

இவனின் பெயர் மற்றும் படிப்பை சொன்னதும் சற்று மரியாதையாகத்தான் பார்த்தாள்.

“நம்பி வாங்க, உங்க காலேஜ் போக வழி தெரியும் தானே… வேற வழியில போனா… பைக் தான குதிச்சு கூட ஓடிடலாம்.” என்றதும், லேசாகப் புன்னகைத்தவள், அவனோடு சென்றாள்.

செல்லும் வழியில் தான் அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டான்.

“உங்க பேர் என்ன?”

“முல்லை.” என்றதும், நல்ல பெயர் என நினைத்துக் கொண்டான்.

“இனிமே காலேஜ் போனாலும் கிளாஸ் முடியுற நேரம் ஆகிடுமே… வேணா உங்க வீட்ல விட்டுடுவா ?”என்றான்.

“நான் இந்த ஊர் இல்லை… வெளியூர். பி. ஜியில தங்கி இருக்கேன். அது காலேஜ் பக்கம் தான்.” என்றாள்.

“ஓ… எந்த ஊருங்க உங்களோடது.”

“ஊட்டி பக்கத்துல ஒரு கிராமம்.”

“அங்க இருந்தா இங்க படிக்க வந்தீங்க.”

“நான் டாக்டராகணும்னு தான் ஆசைபட்டேன். ஆனா நீட்ல பாஸ் பண்ணியும் சீட் கிடைக்கலை… அப்புறம் தான் இன்ஜினியரிங் சேர்ந்தேன்.”

அந்தப் பெண் விரும்பியதை கூடப் படிக்க முடியாமல் போய் விட்டதே என வருத்தம் கொண்டான்.

“பரவாயில்லை விடுங்க. இன்ஜினியரிங் முடிச்சா உடனே வேலை கிடைக்கும். சீக்கிரம் செட்டில் ஆகிடுவீங்க.” என்றான் ஆறுதலாக.

“ஆமாம் நானும் அதுதான் நினைச்சேன். எனக்கு அடுத்து ரெண்டு தங்கச்சிங்க வேற இருக்காங்க. நான் வேலைக்குப் போனா… அவங்களைப் படிக்க வைக்க ஈஸியா இருக்கும்.” என்றாள்.

கல்லூரியின் அருகில் இருந்த பி ஜியில் அவளை இறக்கி விட்டவன், “ஏன் காலேஜ் ஹாஸ்ட்டல்ல சீட் கிடைக்கலையா?” என்றதும், “காலேஜ் சீட் தான் மெரிட்ல கிடைச்சது. ஹாஸ்டல் பீஸ் ரொம்ப அதிகம். அதுதான் வெளியே தங்கி இருக்கேன்.” என்றாள்.

எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று அவள் பேச்சிலேயே புரிந்து கொண்டான். அவள் தங்கி இருத்த பி. ஜியும் சுமாரானது தான்.

முதல் சந்திப்பிலேயே அவளிடம் ஒரு ஈர்ப்பு உண்டானது என்னவோ உண்மை. அவளுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று அவனுக்கு ரொம்பவும் ஆர்வமாக இருக்க…. அவளை இறக்கி விட்டவன், அவனின் கைபேசி எண்ணைக் கொடுத்து, “எந்த உதவினாலும் கேட்கலாம் தயங்க வேண்டாம். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. இனிமே ஒன்னும் பண்ணாது.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

அங்கருந்து வந்த பிறகும் முல்லை அவன் நினைவுகளில் இருந்தாள். அவளிடம் ஈர்ப்பையும் தாண்டிய ஒன்று என்று புரிந்தது. அவளைச் சென்று சந்திப்போமா என அவன் நினைக்கும் போது… அவளே அவனை இரண்டு மாதங்கள் சென்று அழைத்தாள்.

“அவளுக்கு எதாவது பார்ட் டைம் வேலை வாங்கிக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள்.

“இப்போ வேலைக்குப் போக அவசியம் என்ன?”

“அப்பாவுக்கு உடம்பு முடியாம போனதுனால சரியா வேலைக்குப் போக முடியலை. என் செலவுக்கு நான் பார்த்துகிட்டா… அவருக்கு ஈஸியா இருக்கும்.” என்றதும்,

“சரி நான் பார்த்திட்டு சொல்றேன்.” என்றவன், அவளுக்கு வேலைக்குப் பார்க்கவில்லை. அவன் தான் கல்லூரி நேரம் போக ஒரு வக்கிலிடம் வேலைக்குச் சேர்ந்தான்.

Advertisement