Advertisement

இது தான் சமயம் என்று நினைத்த நக்ஷத்ரா பிரசன்னாவிடம், யுகேந்திரனின் காதலை பற்றிக் கேட்க… “அவன் லவ் பண்ணானா என்ன? எனக்கு தெரியாதே.” என்றான்.

“நீயெல்லாம் ஒரு ப்ரண்டா… உன் ப்ரண்ட் லவ் பண்ணது கூட உனக்குத் தெரியாதா?”

“யுகிக்கு நான் லேட்டா தான் ப்ரண்ட் ஆனேன். அதோட அவன் எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். அவனுடையது பெரிய கேங். அதுல ரொம்ப க்ளோஸ்ன்னா உதயகுமார் தான். ஆனா…” என பிரசன்னா சொல்லிக் கொண்டிருக்கும் போதே… யுகேந்திரன் வந்துவிட… பேச்சும் அதோடு நின்றது.

யுகேந்திரன் வந்ததும் வேலை பார்க்க உட்கார்ந்து விட….

“சாரி ஜனனி, நான் வேற உன்னை யுகியோட சேர்த்து வச்சுப் பேசிட்டேன். யுகி லவ் பண்ணுவாருன்னு எல்லாம் நான் நினைக்கலை சாரி.” என்றாள்.

“நீதான் சொல்லிட்டு இருந்த… ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.”

“அப்போ நீ பாஸ்ஸ சைட் அடிக்கலை.”

“சைட் அடிச்சேன் தான். ஆனா லவ், கல்யாணம் அந்த அளவெல்லாம் போகலைன்னு சொல்ல வந்தேன்.”

“அது தான சொல்லித்தான் பாரேன்.” என்றவள், நேராக யுகேந்திரனிடம் சென்று, “பாஸ், உங்க ப்ரண்ட் உதயகுமாரை பார்க்கணும். அவர் நம்பர் தர்றீங்களா… இல்லைனா நம்ம ஆபீஸ்க்கு வர சொல்லுங்க பாஸ். ஏன் உங்க ப்ரண்ட்ஸ் யாரும் ஆபீஸ்க்கு வர்றது இல்லை?” என அவள் பேசிக்கொண்டே செல்ல… பிரசன்னா அந்தப் பக்கம் இருந்து பேசாதே எனச் சைகை காட்டியதை அவள் கவனிக்கவில்லை.

“காலையில இருந்து வந்து என்ன வேலை பார்த்த?”

வரதராஜன் கேஸ் எந்த அளவுல இருக்கு?

“ஆபீஸ்க்கு வந்தா போதாது, வேலை பார்க்கணும்.”

“நீ வேலை பார்க்காம என்னை ஏமாத்தலாம்னு நினைச்சா… இது அதுக்கான இடம் இல்லை.” என யுகேந்திரன் கோபமாகச் சொல்ல…

“ரொம்பப் பேசுறீங்க பாஸ்… நான் வேலை பார்க்கலைன்னு உங்களுக்குத் தெரியுமா? எனக்கு இங்க இடம் இல்லைன்னு சொல்றீங்களா…”

“இந்த ஆபீஸ்ல எனக்கும் உரிமை இருக்கு.” எனப் பதிலுக்கு நக்ஷத்ரா கத்த.

“இப்போ எதுக்குக் கத்துற… நான் மெதுவா தானே பேசுறேன்.”

“நீங்க மஹான் பாஸ், நான் மனுஷி. நான் இப்படித்தான் இருப்பேன். உங்களுக்கு நீங்கதான் எங்க எல்லோரையும் தூக்கி சுமக்கிறதா நினைப்பு.”

“பிரசன்னா, ஆபீஸ்க்கு நடுவுல கோடு போடு. இனிமே நான் தனியா பார்த்துக்கிறேன்.” என்றாள். 

“நூத்தி பத்தாவது முறை…” என பிரசன்னா கேலியாகச் சொல்ல… ஜனனிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“இந்தத் தடவை நான் நிஜமாவே தனியா போறேன். ஜனனி, இனி எனக்கு வர்ற கேஸ்ஸ தனியா என்கிட்ட மட்டும் சொல்லு.” என்றதும்,

“அப்படி ஒன்னு வந்தா தானே… உன்னை நம்பி எல்லாம் யார் கேஸ் கொடுப்பா… யுகி அவனுக்கு வர்றதுல தான உனக்குக் கொடுக்கிறான்.” என பிரசன்னா வார…..

அவனைக் கைகாட்டி தடுத்த யுகேந்திரன், “ஜனனி, மேடம் சொல்றபடி செய்யுங்க.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டான்.

அவன் உள்ளே சென்று கதவை சாற்றியதும், என்ன இப்படிச் சொல்லிட்டாங்க என அவள் சொல்ல…

“பின்ன எத்தனை தடவை அவனும் பொறுத்துப் போவான். ஆனா அவன் ப்ரண்டை பத்தி நீ பேசினதுக்கு, உன்னை எட்டி அடிக்காம விட்டானே அதுவே பெரிசு.”

“ஏன் டா?”

“முழசா தெரியாம எதுக்குப் பேசுற? அந்த உதயக்குமார் இப்போ உயிரோட இல்லை.”

“என்னது உயிரோட இல்லையா…”

“ஆமாம் இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காத… எதுனாலும் யுகிகிட்ட பேசிக்கோ.” என பிரசன்னா சொல்லிவிட்டு செல்ல… நக்ஷத்ரா அமைதியாக அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் மனதிற்குள் என்ன ஆனது என்ற கேள்வி ஓடிக் கொண்டே இருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் யுகேந்திரன் அவளோடு பேசவே இல்லை.

இதற்கு முன்பும் நிறைய முறை பேசாமல் இருந்திருக்கிறார்கள் தான். ஆனால் இந்தமுறை தான் கொஞ்சம் அதிகம்தான் பேசிவிட்டோம் என நக்ஷத்ராவுக்கு தோன்ற… அவன் கோபம் குறைய காத்திருந்தாள். 

அன்று நக்ஷத்ராவுக்கும் கோர்ட் வேலை இருந்தது. அதனால் காலையிலேயே கோர்ட்க்கு வந்திருந்தாள். அனால் எதிர்தரப்பு வாயுதா வாங்கியதால்…. அவளுக்கு வேலை இல்லாமல் போய்விட… அன்று யுகேந்திரனுக்கு வழக்கு இருந்ததால் அங்குச் சென்றாள்.

சென்னையை விட்டு வெளியே இருந்த ரசாயன உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு காற்றால் அங்கிருந்த  மக்களுக்குக் கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட, அதோடு  அங்கிருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுகளால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீரும் கெட்டுவிட… அந்தப் பகுதியில் வாழும் மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தத் தொழிற்சாலைக்கு எதிராகப் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் திடிரென்று கலவரம் வெடிக்க… அதில் சிலரை போலீசார் கைது செய்திருந்தனர்.

கும்பலாகச் சிலர் குற்றவாளி கூண்டில் ஏற்றபட்டிருக்க… அதில் நிறையப் பேருக்கு காயங்களும் இருந்தது. போலீஸ் தரப்பில் வாதாடிய வக்கீல் பேசி முடித்ததும், யுகேந்திரன் அவன் வாதத்தை ஆரம்பித்தான்.  அவர்களைக் கைது செய்த போலீசாரை விசாரிக்க வேண்டும் என்று யுகேந்திரன் கேட்டுக்கொள்ள… நீதிபதி அனுமதி வழங்கினார்.

“உங்க பேர் என்ன?”

“கஜேந்திரன்.”

“இவங்களை எங்க? எப்போ கைது செஞ்சீங்க?”

“கலவரம் நடந்த அன்னைக்கு நைட், அவங்கவங்க இருந்த இடத்துக்கே போய்க் கைது செஞ்சோம்.

“இவங்க கலவரம் செஞ்சதுக்கான ஆதாரம் உங்ககிட்ட இருக்கா?”

“இவங்களும் அந்தப் போராட்டத்துல இருந்தாங்க.”

“நாட்டில போராடவே கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா? போராட்டத்துல இருந்தாங்க சரி. ஆனா கலவரம் செஞ்சதுக்கான ஆதாரம்.” 

“அங்க இருந்த மத்தவங்க சொன்னாங்க.”

“அப்போ உங்ககிட்ட ஆதாரம் இல்லை.”

யுகேந்திரன் கேட்ட கேள்விக்கு அந்தக் காவலரிடம் ஒழுங்கான பதில் இல்லை.

“இவங்க தான் காரணும்னு சொன்னங்களையாவது உங்களால கூட்டிடிட்டு வர முடியுமா?”

“கலவரம் நடந்த இடத்துல விசாரிச்சதுல தெரிய வந்தது.”

“அப்போ இவங்க தான் கலவரம் பண்ணாங்கன்னு சொல்ற சாட்சிகள் உங்ககிட்ட இல்லை.”

“இவங்கதான் கலவரம் பண்ணாங்களா இல்லையானே தெரியாம… எல்லோரையும் கைது பண்ணி அடிச்சிருக்கீங்க.”

“கலவரம் நடக்கும் போது போலீஸ் அங்க இருந்தாங்களா… இல்லையா?”

“கலவரம் நடக்கிறதா கேள்விபட்டு நாங்க கொஞ்ச நேரத்துல வந்துட்டோம்.”

“அங்க போராட்டம் நடந்திட்டு இருக்கிறது உங்களுக்குத் தெரியுமா இல்லையா?”

“தெரியும்.”

“அப்போ ஏன் முன்னாடியே போலீஸ் அங்க இல்லை.”

“போலீஸ் இல்லைன்னு யார் சொன்னா… சில பேர் இருந்தாங்க.”

“அப்போ ஏன் ஸ்பாட்ல வச்சு யாரையும் கைது செய்யலை.”

“கலவரத்தை தடுக்கிறதுக்காக அங்கிருந்தவங்களை கலைச்சு விட லத்தி சார்ஜ் பண்ணோம். அதனால அப்போ யாரையும் கைது செய்யலை.”

“ஸ்பாட்ல போலீஸ் இருந்தும் அங்க யாரையும் கைது பண்ணலை. யாரோ சில பேர் சொன்னதா சொல்லி… நீங்களே சில பேரை கைது செஞ்சிருக்கீங்க. எந்த அடிப்படையில இவங்களைக் குற்றவாளிகள் என    சொல்ல முடியும்.” என்றவன்,

“முன்பகையின் காரணமாகவோ… இல்ல தவறுதலாகவோ கூடச் சில பேர் சில பேரை சொல்லி இருக்கலாம் இல்லையா…” என கேட்க…

அந்தக் காவல்துறை அதிகாரி விழித்தார்.

“மரியாதைக்கு உரிய நீதிபதி அவர்களே… சில விஷயங்களுக்குப் போராட்டம் அவசியம். போராட்டம் செய்யாமல் சில விஷயங்கள் வெளியே தெரியாவோ…. இல்லை அதுக்கான தீர்வோ கிடைக்காது. போராட்டம் பண்றவங்களை எல்லாம் கலவரம் செய்யுறவங்க, தீய சக்தின்னு சொல்லி அடக்கி வச்சிட்டா… போராட்டம் பண்ற துணிவு யாருக்கும் வாராதுன்னு நினைக்கிறாங்க. இதுவும் ஒரு வகையில அடக்குமுறை தான். இனிமே வேற யாரும் எதிர்த்து குரல் கொடுக்கப் பயப்படணும்னு செய்யுறது.

“ஏன் இந்தக் கலவரத்தை அந்தத் தொழிற்சாலை முதலாளியே ஆள் வச்சுச் செஞ்சிருக்கக் கூடாது?”

“இவங்க தான் கலவரத்தை செய்தார்கள் என்பதற்கு எந்த ஆதரமோ நேரடி சாட்சியோ இல்லை. அதனால் இவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என யுகேந்திரன் தனது வாதத்தை முடிக்க…

போலீஸ் தரப்பு வக்கீல் எழுந்து எதோ சொல்ல வர… “உங்ககிட்ட இவங்கதான் குற்றவாளின்னு சொல்ல சாட்சி இருக்கா…” என நீதிபதி கேட்க…

“இல்லை ஆனா… என அவர் இழுக்க…

“இல்லை… அவ்வளவு தான்.” என்ற நீதிபதி.

“தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் வரும் போது பொதுமக்கள் போராடத்தான் செய்வாங்க. அவங்களுடைய பயத்தைப் போக்க வேண்டியது அரசாங்கத்தோட கடமை. அதை விட்டுட்டுக் கலவரம் செஞ்சாங்கன்னு சொல்லி போராட்டத்தைத் திசை திருப்பக் கூடாது.”

“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்தச் சாட்சியும் இல்லாததால்… இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுக்கிறார்கள். ” என நீதிபதி தனது தீர்ப்பை சொல்லிவிட்டு சென்றார்.

அதிக அலட்டல் இல்லாமல், தனது நிதானமான மற்றும் தெளிவான பேச்சில்… வழக்கிற்கு என்ன தேவையோ அதை மட்டும் அந்தக் காவலரின் வாயில் இருந்தே வரவழைத்ததோடு, அவன் எதிர்தரப்புக்கு வாதாட எதையும் விட்டு வைக்கவில்லை. 

எப்போதும் போலவே தெளிவாக வாதாடிய யுகேந்திரனை நக்ஷத்ரா பெருமையாகப் பார்த்தாள். இந்த வழக்கிற்கு அவன் ஒரு பைசா கூட வாங்கி இருக்க மாட்டான் என்று தெரியும். 

யுகேந்திரன் மற்றவர்களுடன் பேசிவிட்டு வரும்வரை அவனுக்காக காத்திருந்தவள், அவன் வந்ததும் இணைந்து நடந்தாள்.

“உன் கேஸ் என்ன ஆச்சு? என்றான் அவனாகவே. 

“எப்போதும் போல வாயுதா…” 

அவர்கள் அருகில் வருவதற்காக காத்திருந்த கஜேந்திரன், “வக்கீல் சார் ஜெயிச்சிட்டோம்னு பெருமைபட்டுக்காதீங்க. வாங்கின அடி அப்படி, இனி எவனும் போராட்டம்னு வாயை திறக்க மாட்டான்.” என்று சொல்ல….

“அவங்க அவங்களுக்காக மட்டும் போராடலை… இன்னைக்கு அவங்க ஊருக்கு வந்தது, நாளைக்கு நமக்கும் நடக்க ரொம்ப நாள் ஆகாது. அப்போ அதுல நீங்களும் தான் பாதிக்கப்பட போறீங்க.”

“போராட்டத்தை மட்டும் பார்க்காதீங்க, எதுக்காக போராடுறாங்கன்னும் பாருங்க.” என்றான் யுகேந்திரன்.

“அதெல்லாம் இவருக்கு தெரிஞ்சா…. இவர் ஏன் இப்படி இருக்க போறார்?” என நக்ஷத்ரா சொல்ல…

“மேடம் முதல்ல உங்க கால்ல நில்லுங்க. அப்புறம் மத்தவங்களை பத்தி பேசலாம்.” என்றார் கஜேந்திரன் கிண்டலாக. அவர் அப்படி சொல்வார் என நக்ஷத்ரா எதிர்பார்க்காததால் அவள் திகைத்து நின்றுவிட…

“மரியாதையா பேசுங்க கஜேந்திரன். அப்படி பேச தெரியாதுன்னா பேசாதீங்க. மரியாதை தெரியாத உங்களோட பேச எங்களுக்கு விருப்பம் இல்லை.” என்றவன், “வா நக்ஷத்ரா.” என அவளை அழைத்துக் கொண்டு  அங்கிருந்து சென்றான்.

அதன் பிறகு யுகேந்திரன் தான் மனம் சரியில்லாமல் இருந்தான். நக்ஷத்ரா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. 

“விடுங்க யுகி, இது என்ன எனக்கு புதுசா? இந்தக்காலை வச்சிட்டு எப்படி காலேஜ் வர? எப்படி கோர்ட் போய் வாதாடுவ? பேசாம வீட்ல இருக்க வேண்டியது தானான்னு சொன்னவங்க எல்லாத்தையும் பார்த்திட்டேன். அவங்க அப்படி பேச பேச தான் எனக்கு இன்னும் பெரிசா சாதிக்கணும்னு தோணுது.” என்றவளை எப்போதும் போல வியப்பாகவே பார்த்தான் யுகேந்திரன். 

மதியம் இருவரும் ஒன்றாக அலுவலகத்திற்குள் நுழைய… இருவருக்குள்ளும் எல்லாம் சரியாகிவிட்டது என மற்றவர்களுக்கு புரிந்தது. 

   

Advertisement