Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 2

விழா முடிந்து விருந்தினர்கள் சென்ற பிறகே நக்ஷத்ரா கிளம்ப… அவளையும் ஜனனியையும் அழைத்துக் கொண்டு யுகேந்திரன் தனது காரில் சென்றான்.

ஜனனியும் நக்ஷ்த்ராவும் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள் பேசி சிரித்தபடி வந்தனர்.

“நீ இன்னைக்கு இந்த் டிரஸ் போட்டதுக்கு யுகேந்திரனும் உன்னைப் பார்த்திட்டார் சந்தோஷமா?” என அவள் கேட்க… ஜனனி வெறுமனே சிரித்து வைத்தாள்.

அவள் இடம் வந்ததும் ஜனனி இறங்கிக்கொள்ள… அதன் பிறகும் யுகேந்கிரன் அவன் யோசனையிலேயே இருக்க… “என்ன யுகி ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள்.

“இன்னைக்கு வீட்டுக்கு போனேன் இல்ல… அம்மாவோட நிறைய பேசினேன். அப்பா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். நான் இன்னைக்கு இப்படி இருக்கேன், ஆனா அதைப் பார்க்க எங்க அப்பா இல்லையே… அதுதான் யோசிச்சிட்டு இருந்தேன்.”

“உங்க அப்பா எங்க இருந்தாலும் உங்களைப் பார்த்திட்டு தான் இருப்பார் யுகி.”

“பூலோகம் எல்லாம் ஆராய்ச்சி பண்ணி இப்போ மேலோகத்தையும் ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டியா?” என யுகேந்திரன் சிரிக்க…

“உங்ககிட்ட போய்ச் சொன்னேன் பாருங்க என்னைச் சொல்லணும். விட்டா நீ மேலோகம் போய்ப் பார்த்தியான்னு கேட்டு வைப்பீங்க.”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுங்க. உங்க தொல்லை தாங்கலை….”

“என்னைச் சொல்ற நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான…”

“நான் பண்ணா காதல் கல்யாணம் தான் அதுக்காகத் தான் வைட்டிங்.”

“உன்னைப் போலத் தான் நானும். ஏன் நாங்க எல்லாம் காதலிக்க மாட்டோமா?” என யுகேந்திரன் சொல்ல…

“இனிமே நீங்க காதலிச்சு எப்போ கல்யாணம் பண்றது?”

“எனக்கு ஒன்னும் அப்படி வயசாகிடலை… அதோட நான் முன்னாடி லவ் பண்ணலைன்னு உனக்குத் தெரியுமா?”

“யுகி, நீங்க லவ் பண்ணீங்களா… இந்தப் பிரசன்னா கடன்காரன் கூடச் சொல்லலையே… ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்க. இந்தச் சம்பவம் எப்போ நடந்துச்சு.”

“அதெல்லாம் பெர்சன்னல் சொல்ல முடியாது.” என யுகேந்திரன் அலட்டிக் கொள்ள… அதற்குள் நக்ஷத்ராவின் வீடும் வந்திருந்தது.

“ரொம்பப் பண்ணாதீங்க, நானே கண்டுபிடிக்கிறேன் பாருங்க.”

“பிரசன்னாவை கேட்ப… ஆனா அவனுக்குத் தெரியாதே… ஏன்னா அந்தப் பொண்ணு லா காலேஜ் இல்ல….”

“ஒ… இருந்தாலும் நான் கண்டுபிடிப்பேன்.” என்றவள், காரின் கதவில் கைவைக்க… அதற்குள் இறங்கி அவள் பக்கம் வந்த யுகேந்திரன் பின் இருக்கையில் இருந்த ஊன்றுகோலை எடுத்து அவளிடம் கொடுத்தவன், அவனும் அவளோடு உள்ளே சென்றான்.

அபார்ட்மெண்ட் என்பதால் மின் தூக்கியில் இருவரும் மூன்றாவது தளம் சென்றனர். நக்ஷத்ரா அவளிடம் இருந்த சாவியால் கதவை திறக்க… உள்ளே ஹாலில் அவளின் தந்தை உட்கார்ந்து மகளுக்காகக் காத்திருக்க…

“அப்பா, நான் உங்களைத் தூங்க தானே சொன்னேன்.” என்றாள்.

“நீ வீட்டுக்கு வராம படுத்தலும் தூக்கம் வராதும்மா…” என்றவர், யுகேந்திரனை பார்த்து, “வா யுகி… பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அவரின் மனைவி ஹாலுக்கு வந்தவர், யுகேந்திரனை வரவேற்றுவிட்டு அவனைச் சாப்பிட சொல்ல… சாப்பிட்டு தான் வந்தோம் என்றான்.

பொதுவான நல விசாரிப்புக்கு பிறகு அவன் பார்க்கும் வழக்குகள் பற்றி யோகேஸ்வரன் கேட்க… பேச்சு அந்தப் பக்கம் செல்ல… உடைமாற்றி முகம் கழுவி வந்த நக்ஷத்ராவும் அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

யுகேந்திரன் சட்டம் முடித்ததும் முதலில் வேறு ஒரு வக்கிலிடம் ஜூனியராக இருந்தவன், பிறகு யோகேஸ்வரனிடம் வந்து சேர்ந்தான். அவனுக்கு அவர்தான் குரு. அவனுக்கு நிறையச் சொல்லிக் கொடுத்திருகிறார். ஆனால் மகள் சட்டம் படித்து முடித்த போது, உடலளவில் மிகவும் தளர்ந்து விட்டார். அதனால் நக்ஷ்ராவை முழுவதும் தயார் செய்வது யுகேந்திரனின் பொறுப்பானது.

“நீங்க ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்கிறது உங்க உடம்புக்கு நல்லது இல்லை. இன்னொரு நாள் பகல்ல வரேன் நிறையப் பேசலாம்.” என்ற யுகேந்திரன் விடைபெற….

“யுகி, எனக்குக் கொஞ்ச நேரம் நடக்கணும். ஆனா ஸ்டிக் வேணாம்.” என நக்ஷத்ரா சொல்ல… யுகேந்திரன் எழுந்து அவளுக்குக் கை கொடுத்தான். அவனின் கையைப் பற்றியபடி மெதுவாக நடந்தவள், “அப்பா, நீங்க போய்த் தூங்குங்க.” என, யோகேஸ்வரனும் நிம்மதியாக உறங்க சென்றார்.

அவர்கள் வீட்டின் முன் வராண்டாவிலேயே இருவரும் நடந்தனர். அந்தத் தளத்தில் இரண்டு வீடுகள் தான்.

“கால் வலிக்கப் போகுது. உனக்கு என்கிட்ட என்ன பேசணும்?” என யுகேந்திரன் கேட்க…

“உங்க லவ் மேட்டர் சொல்லுங்க.” என்றதும், யுகேந்திரன் கடுப்பாகி விட்டான்.

“ஹே… எதோ முக்கியாம பேசப் போறேன்னு நினைச்சேன். போ லூசு எனக்கு வீட்டுக்கு போகணும்.” என்றவன், அவளை வீட்டில் விட்டுவிட்டு கிளம்ப….

“அந்நியன் மாதிரி நேரத்துக்கு ஒரு மாதிரி இருப்பான். ஆபீஸ்ல வச்சு வேற பேச மாட்டானே… என்ன செய்வது?” என நக்ஷத்ரா யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் வீட்டில் இருந்து அவன் வீட்டிற்கு அரைமணி நேரத்திற்குள் வந்துவிட்டான். உடைமாற்றி முகம் கழுவி வந்தவன், பிறகே பிரசன்னா வந்துவிட்டானா என்று பார்க்க… பிரசன்னா இன்னும் வந்திருக்கவில்லை. அவன் வரட்டும் எனப் பால்கனியில் சென்று நின்றவனுக்கு… பார்வை எங்கோ நிலைத்திருந்த போதும், மனம் வேறு சிந்தனையில் இருந்தது. 

யோகேஸ்வரனிடம் ஜூனியராக இருந்தவன், பிறகு அவனே வழக்குகள் எடுத்து நடத்தும் அளவிற்கு முன்னேறி இருந்தான். அப்போது தொடர்ந்து சில நாட்கள் யோகேஸ்வரன் அலுவலகத்திற்கு வரவில்லை. அவர் வாதாட வேண்டிய வழக்குகள் எல்லாம் நிலுவையில் வைக்கப்பட… மற்ற வழக்குகளை யுகேந்திரன் பார்த்துக் கொண்டான்.

என்ன ஆச்சு இவருக்கு? இப்படி இருக்க மாட்டாங்களே என யுகேந்திரனுக்குத் தோன்றிக் கொண்டே தான் இருந்தது. பிறகு தான் அவர் மகளுக்கு விபத்து நடந்தது பற்றி அவனுக்குத் தெரியும். அவரே தான் அவனிடம் சொன்னார்.

“அவ எதாவது விதி மீறலோ இல்லை கவனக்குறைவா இருந்து இந்த விபத்து நடந்திருந்தா கூட… நம்ம மகள் செஞ்ச தப்புக்கு தண்டனைன்னு மனசு ஆறி இருக்கும் யுகி. ஆனா அவகிட்ட இருந்து திருடுறதுக்காக, நைட் நேரம் வண்டியில வந்திட்டு இருந்தவ முன்னாடி திடிர்ன்னு ஒரு கல்லை போட்டு, அவளை விழ வச்சு… திருடிட்டு போயிருக்காங்க.

“நல்ல அடி அவளுக்கு. எழுந்துக்க முடியலை போல… இவ விழுந்து கிடக்கிறது தெரியாம திருப்பத்துல வந்த கார் அவ கால்ல ஏத்திடுச்சு…. டாக்டர்ஸ் காலையே எடுக்கனும்னு தான் சொன்னாங்க. ஆனா நக்ஷத்ரா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டா… நான் நடப்பேன்னு அவ நம்பிக்கையா இருக்கா.”

“அவளை இப்படி ஆக்கினவங்களைப் போலீஸ் பிடிச்சிடுச்சு… அவ செல் போன்னை வெறும் ஆயிரத்தி ஐநூறுக்கு வித்திருக்காங்க. அதுக்காக என் பொண்ணு காலை முடமாக்கிடாங்க.”

யுகேந்திரன் சில முறை நக்ஷத்ராவை பார்த்திருக்கிறான். அவள் அப்பாவை பார்க்க இங்கே வருவாள். அப்போது தான் சட்டக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.

யாரோ செய்த தவறுக்குக் காலமெல்லாம் வலியும் வேதனையும் அனுபவிக்கப் போவது அவள் அல்லவா… நினைக்கும் போதே யுகேந்திரனுக்கு ரத்தம் கொதித்தது.

அவனே தான் அந்த வழக்கில் ஆஜரானான். திருட மட்டும் தான் செய்தோம் எனக் குற்றவாளிகள் தரப்பில் சொல்லப்பட்டது. குற்றவாளிகளுக்குப் பயம் என்பதே இல்லை. எப்படியும் வெளியே வந்து விடலாம். தண்டனை கிடைத்தாலும் குறைந்தபட்ச தண்டனை தான் கிடைக்கும் என்று அலட்ச்சியமாகவே இருந்தனர்.

“வண்டி முன்னாடி கல்லை போட்டு விழ வைக்கிறது சின்ன விஷயமா… வண்டியில இருந்து விழுந்ததுல தலையில அடிபட்டிருந்தா… இது திருட்டு மட்டும் இல்லை… கொலை முயற்சியும் தான். இனி ஒருத்தருக்கு இப்படிச் செய்யத் துணிவு இருக்கக் கூடாதுன்னா… தண்டனையும் கடுமையா தான் இருக்கணும்.” என வாதாடி யுகேந்திரன் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுத்தான்.

அதோடு மேலும் அவனின் கிடுக்குபிடி விசாரணையில், வடமாநிலத்தில் இருந்து கொலையும் கொல்லையும் செய்ய ஒரு கும்பலே வந்திருப்பது தெரிந்து, நீதிபதி அந்த வழக்கை காவல்துறையினரிடம் விசாரிக்கச் சொல்ல… சென்னை முழுவதும் வேட்டையாடி போலீசார் நிறையப் பேரை கைது செய்தனர்.

நக்ஷத்ராவுக்கு நியாயம் கிடைக்கச் செய்ததோடு… மேலும் இது போலச் சம்பவம் வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க… தன் வரையில் ஆனதை யுகேந்திரன் செய்திருந்தான். யோகேஸ்வரன் அதை மகளிடமும் சொன்னார்.

அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த பிறகு தான் நக்ஷத்ராவை பார்க்க சென்றான். அதுவரையில் செல்லக் கூடாது என்று இருந்தான்.

“கேஸ் சூப்பரா வாதாடினீங்கன்னு அப்பா சொன்னார். நான் படிச்சு

முடிச்சதும், என்னை உங்க பார்ட்னரா சேர்த்துக்கோங்க.” என்று வீட்டில் இருந்த படுக்கையில் படுத்தபடி நக்ஷத்ரா அவனிடம் சொல்ல….

“பார்ட்னரா… முதல்ல எனக்கு ஜூனியரா சேர்ந்து வேலை பண்ணு… அப்புறம் பார்ட்னர் ஆகலாம்.” என்றான்.

வேறு யாராவதாக இருந்திருந்தால்… அவள் இருக்கும் நிலையில் பரிதாபம் கொண்டு, ஓகே என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் யுகேந்திரன் அவளைத் தூண்டி விடுவது போலப் பேச…. அதுவே அவளுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்க… “உங்களை விட நான் நல்லா வாதாடுவேன் பாருங்க.” என்றாள் நம்பிக்கையாக.

மூன்றாம் மாதம் வீல் சேரில் உட்கார்ந்து தான் கல்லூரிக்கு சென்று வந்தாள். ஆனால் அதன் பிறகு நிறைய அறுவை சிகிச்சைகள் செய்து இப்போது ஓரளவு நடக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கிறாள். ஆனால் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின் போதும், அவள் அனுபவித்த வலியும் வேதனையும் அதிகம். அதைப் பார்த்து தான் யோகேஸ்வரனுக்கு உடல்நலம் மோசமாகியது.

சொன்னது போலப் படித்து முடித்து யுகேந்திரனிடமே ஜூனியராகச் சேர்ந்தாள். யுகேந்திரனுக்கு அவள் மேல அக்கறை உண்டு. ஆனால் பாவமே பார்க்க மாட்டான். அவன் சொல்வது தான். அதுவே நக்ஷத்ராவை தூண்டி விடும் தூண்டுகோல் ஆனது.

அவளும் அவன் சொல்வது எல்லாம் சரி என்று கேட்டுவிட மாட்டாள். அவனிடம் ஏட்டிக்குப் போட்டியாகத் தான் பேசுவாள். அவனுக்குமே அவள் அப்படி இருப்பது பிடிக்கத்தான் செய்யும்.

பிரசன்னா வந்ததும், “என்ன டா உன்னோட பேச்சிலர் பார்ட்டி எல்லாம் உன் கல்யாணத்துக்குப் பிறாகவது நிற்குமா?” என யுகேந்திரன் கேட்க….

“நிறுத்தி தான் ஆகணும். இன்னைக்கே ஏகப்பட்ட போன், இன்னும் வீட்டுக்கு போகாம என்ன பண்றீங்கன்னு.” என்றான் பிரசன்னா சிரித்தபடி.

“உனக்கெல்லாம் இப்படித்தான் ஒரு ஆள் வரணும்.” என்று சொல்லியபடி யுகேந்திரன் அவன் அறைக்குச் சென்றான்.

மறுநாள் காலை பத்தரை மணி போல நக்ஷத்ரா அலுவலகம் வந்த போது, ஜனனியும் பிரசன்னாவும் மட்டும் தான் இருந்தனர். பிரதீப் அன்று கோர்ட்டுக்குச் சென்றிருக்க…. யுகேந்திரன் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தான். அவன் எப்போதுமே அப்படித்தான். வக்கீல் வேலையை மட்டும் பார்ப்பது இல்லை.

Advertisement