இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 16

பிள்ளைகளைத் தினமுமே வனஜா உதவியுடன் கீழே இருக்கும் பூங்காவுக்கு நக்ஷத்ரா அழைத்துச் செல்வாள். ஆதித்யா அவன் நண்பர்களுடன் விளையாட… ஆதிரா ஊஞ்சல் ஆடிக் கொண்டிருக்க…. நக்ஷத்ரா அருகில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு  இருந்தாள்.

அருகில் இருந்த வயதான பெண்மணி அவராகவே பேச்சுக் கொடுத்தார்.உங்ககிட்ட வந்த பிறகு குழந்தை நல்லாவே இருக்கா. எங்க இருந்து எடுத்திட்டு வந்தீங்க? என அவர் சாதாரணம் போலக் கேட்க…. நக்ஷத்ரா ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவள், அந்த இடத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டாள். 


அவர் மட்டும் அல்ல…. அடுத்தவர் விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்த வேறு சிலரும் ஜாடைமாடையாக அவளிடம் விசாரித்துப் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் நக்ஷத்ராவிடம் இருந்து அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவே இல்லை. இதெல்லாம் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் எனச் சிலருக்கு புரிவதே இல்லை.

அன்று இரவு குழந்தைகள் உறங்கிய  பிறகு யுகேந்திரனின் தோள் வளைவில் இருந்தபடி மெதுவான குரலில் இதைப் பற்றிச் சொன்ன நக்ஷத்ரா, “ஆதிராவுக்கு நாம அவளோட அப்பா அம்மா இல்லைன்னு தெரியக் கூடாது யுகி.“ என்றாள்.

நாம சொல்லப் போறது இல்லைதான். ஆனா தானா தெரிய வந்தா… அப்பவும் நாம அவ வருத்தபடாம பார்த்துக்கலாம். நீ அதைப் பத்தி எல்லாம் யோசிக்காத.” என்றான். 


இளைய மகன் குடும்பத்துடன் வெளிநாடு சென்றதால்…. யுகேந்திரனின் அம்மாவும் இங்கயே வந்துவிட்டார். நேத்ரா போலக் குழந்தைகளின் பொறுப்பை முழுவதும் மாமியாரிடம் கொடுத்து விடாமல்… எப்போதும் போலவே வனஜா உதவியுடன்  நக்ஷத்ராவே பார்த்துக் கொண்டாள்.

 
ஒரு நாள் யுகேந்திரனின் அம்மாவே கேட்டுவிட்டார்.ஏன் நக்ஷத்ரா, நான் என்னோட சின்ன மகன் குடும்பம் இங்க வந்தவுடன் போயிடுவேன்னு என்னை விருந்தாளி மாதிரியே வச்சிருக்கியா?” 


அவர் கேட்டதில் யுகேந்திரன் கூடச் சற்று பதட்டமாகி விட்டான்.என்ன மா இப்படி பேசுறீங்க. இது உங்க வீடும் தானே… உங்களுக்கு எப்படி இருக்கணுமோ அப்படி இருங்க.” 


நீங்க இருங்க நான் சொல்றேன்.” என்ற நக்ஷத்ரா, “அத்தை, நீங்க இங்க இருக்கிறது எனக்கு எவ்வளவு டென்ஷனை குறைச்சிருக்கு தெரியுமா? முன்னாடி வெளிய வேலைக்குப் போனா கூட வீட்ல பசங்க என்ன பண்றாங்களோன்னு அதே யோசனையா இருக்கும். இப்போ நீங்க இருக்கிறதுனால தான் டென்ஷன் இல்லாம இருக்கேன். என்னதான் ஆள் வச்சுப் பார்த்துகிட்டாலும், வீட்டு ஆளுங்க இருக்கிறது போல ஆகுமா.” 


அதோட வயசாகிட்டா வீட்டை குழந்தைகளைப் பார்த்திட்டு பெரியவங்க வீட்ல மட்டும் இருக்கனுமா என்ன?” 


இனி கொஞ்சம் உங்களுக்காகவும் வாழுங்க அத்தை. வெளிய போகனுமா போயிட்டு வாங்க. உங்க ப்ரண்ட்ஸ் கூட ட்ரிப் போங்க. ஜாலியா இருங்க.” என நக்ஷத்ரா எடுத்துச் சொன்னதும் தான் கிரிஜாவுக்கும் வேறு விதமாக யோசிக்கத் தோன்றியது. 


காலையில் எழுந்தால்… பூஜை, சமையல், பேத்தியை பார்த்துக் கொள்வது என்று ஒரே மாதிரி தானே சென்றது. இப்போது தனக்காகவும் இருக்கலாமே என்று தோன்றியது. அவர்கள் இருப்பது அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் அதற்கு வசதியாகவும் இருந்தது. 


காலையில் இவர்கள் எல்லாம் கிளம்பியதும் யோகா வகுப்பிற்குச் செல்பவர், மாலையில் அவரே அங்கிருக்கும் பிள்ளைகளுக்குப் பாட்டு, ஸ்லோகம் என சொல்லிக் கொடுத்தார்.
அந்தக் குடியிருப்பில் இவர் வயதை ஒத்தவர்கள் நிறையப் பேர் இருக்க…. நண்பகல் நேரத்தில் கீழே சென்று பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்பார்கள். அவர்களோடு கோவில், சினிமா, மால் என்று வெளியே சென்று வரவும் ஆரம்பித்தார். குழந்தைகள் பள்ளியில் இருந்து வரும் நேரம், அவர்களுக்கு உண்ண ,குடிக்க எனப் பார்த்துக் கொள்பவர், நக்ஷத்ரா வந்த பிறகு தான் பாட்டு வகுப்பு எடுக்கச் செல்வார். 


ஆதிராவுக்கு மட்டும் அல்ல… கிரிஜாவுக்குமே புது வாழ்க்கையும், சூழலும் தான். ஆதித்யா இரவில் பெற்றோருடன் தான் உறங்குவான் ஆனால் ஆதிரா சில நாட்கள் கிரிஜாவின் அறையிலும் சென்று உறங்குவாள். அதுவும் யுகேந்திரன் ஊரில் இல்லாத நாட்களில் தான் செல்வாள். அதுதான் நக்ஷத்ராவுக்குக் கடுப்பாக இருக்கும்.
உங்க அப்பா இல்லைனா அந்த ரூமுக்கு போயடுவியே நீ.” என்பாள். 


திலீபன் வெளிநாடு சென்றவன், அங்கேயே தங்கிவிட… நேத்ராவும் அங்கே சென்ற பிறகு கருவுற்றாள். அவளின் பிள்ளைபேறு சமயம் கிரிஜாவும் சென்று சில மாதங்கள் அங்கே சென்று தங்கிவிட்டு வந்தார். திலீபனுக்கும் நேத்ராவுக்கும் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்திருந்தது. அவர்கள் இப்போதைக்கு இந்தியா வருவது போல இல்லை. 


பிள்ளைகள் வளர வளர வீட்டிலும் நிறைய மாறுதல்கள். ஆதித்யாவுக்கு முதலில் விளையாட்டு தான். பள்ளியில் இருந்து வந்தால் விளையாட சென்று விடுவான். ஆதிரா அப்படி அல்ல… வீட்டிற்கு வந்ததும் அன்றைய பாடங்களை அன்றே முடித்துவிட வேண்டும் என நினைத்து அப்போதே படித்து வைத்துவிட்டு தான் வெளியில் செல்வாள். அதனால் நக்ஷத்ராவுக்கு ஆதிராவை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவை இல்லை. ஆனால் அதற்கும் சேர்த்து ஆதித்யா படிக்கவும், உண்ணவும் படுத்தி வைப்பான்.
நீ ஹாஸ்டலுக்குப் போனாத்தான் வழிக்கு வருவ.” என யுகேந்திரனும் சொல்லிக் கொண்டு இருப்பான். 


நக்ஷத்ராவுக்குமே ஆதித்யாவை நினைத்துக் கவலையாக இருக்கும். ஆனால் பதின் பருவத்தில் அடியெடுத்து வைத்த பிறகு அவனுமே சிரத்தையாகப் படிக்க ஆரம்பித்தான். முன்புமே நன்றாகத்தான் படிப்பான் ஆனால் படியென்று யாராவது சொல்ல வேண்டும். ஆனால் இப்போதும் உணவு விஷயத்தில் அவனுக்குப் பிடித்ததாக இருந்தால் தான் உண்பான். இல்லையென்றால் வீட்டில் தகராறு தான். 


ஆதிரா அதிகம் பேச மாட்டாள். ஆனால் பேசினால் நச்சென்று பேசுவாள். 


அன்று சனிக்கிழமை யுகேந்திரனும் வீட்டில் இருக்க…. காலையில் பிள்ளைகள் இருவரின் தலையிலும் எண்ணெய் வைத்து நக்ஷத்ரா உட்கார வைத்து இருந்தாள். குடும்பமே ஹாலில் தான் இருந்தனர். 


நீ பெரிசானதும் என்ன ஆகப் போற?” நக்ஷத்ரா ஆதியிடம் கேட்க…. 


எனக்குப் படிச்சிட்டே எல்லாம் இருக்க முடியாது. சீக்கிரம் வேலைக்குப் போற மாதிரி எதாவது படிக்கணும்.” என்றான். 


யாரும் கேள்வி கேட்க முடியாதபடி ஒரு வேலையில உட்கார்ந்திடனும்னு பார்த்திட்டான்.” யுகேந்திரன் சொல்ல… கிரிஜாவுக்குக் கூடப் பேரன் சொல்வதை நினைத்துச் சிரிப்பு தான். 


நீ என்னவாகப் போற?” என நக்ஷத்ரா மகளிடம் கேட்க…. 


நான் அப்பா போல வக்கீல் ஆவேன்.” என்றாள் ஆதிரா. 


உங்க அப்பா மட்டும் தான் வக்கீலா…. நான் என்ன கோர்ட் வாசல்ல பாணி பூரி விக்கிறேனா?” நக்ஷத்ரா கடுப்புடன் கேட்க…. அதைக் கற்பனை செய்து பார்த்த பிள்ளைகள் இருவரும் சிரிக்க…. யுகேந்திரன் மட்டும் பிள்ளைகள் இருவரையும் கண்டிப்பது போலப் பார்த்தான். 


என்னப்பா அம்மா பார்ட் டைம் வக்கீல் தான…. அதுதான் ஆதிரா அப்படிச் சொல்றா.” என்றான் ஆதித்யா தங்கைக்குப் பரிந்து கொண்டு. 


அம்மாவை விட்டிருந்தா அவ என்னை எல்லாம் விடப் பெரிய வக்கீலா ஆகியிருப்பா…. என்னைப் பார்த்துக்க, உங்களைப் பார்த்துக்க, நம்ம குடும்பத்தைப் பார்த்துக்க, முக்கியமா உங்களைப் படிக்க வைக்கிறது அவதான். உங்களுக்காக அவ நிறைய விட்டுக் கொடுத்திருக்கா… நான் அப்படி இல்லை. எனக்கு வேலை தான் முதல்ல… அதனால அம்மாவை குறைவா நினைக்காதீங்க.” எனத் தந்தை எடுத்துச் சொன்னதும், பிள்ளைகளுக்கு அப்போது தான் அம்மாவை புரிந்தது. 


ஆண்களைப் போலப் பெண்கள் படித்திருந்தாலும், வேலைக்கே சென்றாலும், குடும்பப்பொறுப்பையும் சேர்ந்து கவனிக்கும் பெண்களுக்குத் தங்கள் வேலை இரண்டாம்பட்சம் தான். 


சரி இத்தனை நாள் அப்படிப் போயிடுச்சு. இனிமே நீங்க பெரிசாகிட்டீங்க, நாம நம்ம வேலையை நாமலே பார்த்துகிட்டா… அம்மாவும் அவள் வேலையைப் பார்ப்பா.” என யுகேந்திரன் சொன்னதற்குப் பிள்ளைகள் இருவரும் சரி என்றனர். 


வெறும் பேச்சோடு மட்டும் இல்லாமல்… யுகேந்திரன் பிள்ளைகளை அவர்கள் வேலையை அவர்களே செய்யும்படி பழக்கவும் செய்தான்.நக்ஷத்ரா அவங்களைக் கெடுக்கிறதே நீதான். நாம செஞ்சாத்தான் சரியா இருக்கும்னு நினைக்கக் கூடாது. நாம அவங்க கூடவே எப்பவும் இருக்க முடியாது. படிக்க, வேலைக்குன்னு அவங்க வெளிய போயிடுவாங்க, அப்போ நீதான் கஷ்ட்டபடுவ. எங்க அம்மாவுக்குச் சொன்னது தான் உனக்கும். உன் நேரத்தை உனக்காகச் செலவு பண்ணு.” 


கணவன் சொல்வது உண்மைதான் என நக்ஷத்ராவுக்குப் புரியத்தான் செய்தது. ஆனாலும் இந்த அம்மாக்களைத் திருத்த முடியாது என யுகேந்திரனுக்குத் தான் புரியவில்லை.
திலீபன் நேத்ரா தம்பதியரின் மூத்த மகள், அவர்கள் இருக்கும் வெளிநாட்டில் பெரிய பெண் ஆகியிருக்க… இங்கே இரண்டு வருடங்கள் கழித்து வந்த பொழுது தான் பெரிய விசேஷமாகச் செய்தனர். 


அதற்கு நக்ஷத்ரா மகளைப் பார்த்து பார்த்து அலங்காரம் செய்தாள். இப்போது ஆதிரா ஏழாம் வகுப்பில் இருக்கிறாள். சற்று பூசினார் போலத் தேகம் தான். குழந்தையாக இருந்த மகள் குமரியாக மாறிக்கொண்டு வருவதை ரசித்தபடி அவளது உடையைச் சரி செய்த நக்ஷத்ரா, மகளுக்குக் கன்னம் வழித்து டிஷ்ட்டி கழித்தாள். 


கிரிஜா இளைய மகன் வந்ததில் இருந்தே அவர்களோடு தான் இருக்கிறார். அதனால் இவர்கள் மட்டும் கிளம்பி சென்றனர். செல்லும் வழியில் நக்ஷத்ராவின் அம்மா இவர்களின் காரில் ஏறிக்கொண்டார். மண்டபத்தில் அல்லாமல் பெயர் பெற்ற சைவ உணவகத்தில் ஹால் எடுத்து இருந்தனர். விசேஷம் சிறப்பாக நடந்தது. ஆதிரா நக்ஷத்ரா செல்லும் இடத்திற்கு எல்லாம் அவளுடனே சென்று கொண்டு இருந்தாள். ஆதிக்கு இது போலக் கூட்டம் நிறைந்த இடங்களில் இருப்பதே அலர்ஜி தான். அதனால் விருந்து உண்ட பின், யார் கவனத்தையும் கவராமல் பின் வரிசையில் சென்று உட்கார்ந்து கொண்டான். 


அவனுக்கு முன் வரிசையில் தான் நேத்ராவின் தந்தை தியாகு இருந்தார். அவருக்கு எப்போதுமே வாய் துடுக்கு அதிகம் தான். பக்கத்தில் இருந்தவரிடம் மகளின் வெளிப்நாட்டு வாழ்க்கையைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டு இருந்தார். அருகில் இருந்தவர், “அவங்க அண்ணாவும் இங்க ஒன்னும் குறைச்சலா இல்லையே…. சுப்ரீம்கோர்ட் வக்கீலாமே…. பசங்களைக் கூடப் பார்த்தேனே…. பொண்ணு கூட அழகா இருந்தா.” யுகேந்திரனின் குடும்பத்தைப் பற்றி அவராகவே பெருமையாகச் சொல்ல… தியாகுவுக்கு அது பொறுக்கவில்லை. 


ஆமாம் பொண்ணு அழகுதான். பாவம் நல்லா இருக்கட்டும்.” என்றார். 


அந்த உறவினருக்குக் குழப்பம் ஆகிவிட்டது.அந்தப் பொண்ணுக்கு என்ன? ஏன் பாவம்?” என்றார். உடலில் தான் எதோ பிரச்சனை என நினைத்து. 


உங்களுக்குத் தெரியாதா… எடுத்திட்டு வந்து வளர்கிறாங்க. அதுதான் சொன்னேன்.” என்றார். 


அப்படியா பார்த்தா அப்படித் தெரியலையே….. நான் சொந்த பொண்ணுன்னு இல்ல நினைச்சேன்.” 


யுகேந்திரன் எப்பவுமே வீட்டுக்கு அடங்காதவன் தான். கல்யாணத்தின் போதும் அவன் இஷ்ட்டத்துக்கு வேற ஜாதி பெண்ணைக் கல்யாணம் பண்ணான். அவனுக்குக் குழந்தை இருந்தும், இன்னொரு குழந்தையைத் தத்து எடுத்தான். அவனுக்குத் தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு கர்வம்.” 


அதனால என்ன நல்லாத்தானே இருக்காங்க.” என மற்றவர் சொன்னதும், தியாகுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட… அவர் எழுந்து கொண்டார். செல்லும் போது தான் பின் இருக்கையில் இருந்த ஆத்தியாவை கவனித்தார். பார்த்ததும் பதைபதைப்பு தான். இவன் என்ன கேட்டானோ தெரியலையே என்று. ஆதி முகத்தில் இருந்து அவரால் ஒன்றும் அனுமானிக்க முடியவில்லை. அவர் எதோ பேச்சுக் கொடுக்க நினைக்க… ஆதி பிடிக் கொடுக்காமல் எழுந்து சென்றான். அப்படியே அப்பனை மாதிரியே திமிர் என நினைத்துக் கொண்டார். 


அப்போது இருந்து ஆதி வீட்டிற்குச் செல்ல வேண்டும் என அவன் கொடுத்த குடைச்சலில், நக்ஷத்ரா எரிச்சலாகி, “இவனைப் போய் வீட்ல விட்டுட்டு வாங்க.” என்று கணவனிடம் சொல்ல…. இவன் என்ன சின்னக் குழந்தையா, நான் போய் விட… நீ போறதுன்னா பஸ்ல போ.” என்றான் யுகேந்திரன். 


நீ என்னோட வரியா?” என ஆதி தங்கையிடம் கேட்க…. 


நான் அப்பா அம்மா கூடத் தான் வருவேன்.” என்றாள் அவள். 


செல்லும் முன் பெற்றோரிடம்.ஆதிராவை யார் கூடவும் தனியா விடாதீங்க.” எனச் சொல்லிவிட்டு சென்ற மகனை பெற்றோர் இருவரும் குழப்பத்துடன் பார்த்தனர். 


மகன் பின்னே விரைந்த யுகேந்திரன், “இரு கொஞ்ச நேரத்துல நாங்களும் வந்திடுறோம். நாம சேர்ந்து போகலாம்.” என்றவன், மகனின் கைபிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
ஆதி காரணமில்லாமல் அப்படிச் சொல்லி இருக்க மாட்டான் என்பதால்…. நக்ஷத்ராவும் சற்று கவனத்துடனே இருந்தாள். முன்பிருந்த கலகலப்பு இப்போது அவளிடம் இல்லை. 


எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. உடனே கிளம்பனும்.” என யுகேந்திரன் விடைபெற்றுக்கொள்ள…. 


நீ வேணா கிளம்பு, அவங்க இருக்கட்டும்.” எனச் சொல்ல வந்த கிரிஜா, நக்ஷத்ராவின் முகத்தைப் பார்த்துவிட்டு, “சரி கிளம்புங்க, நான் நாளைக்கு வந்திடுறேன்.” என அவர்களை வழுயனுப்பி வைத்தார். 


காரில் செல்லும் போது, யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் ஒரே யோசனை தான். பிள்ளைகளுக்குத் தெரியும் போது பார்த்துக்கொள்ளலாம் என அப்போது எளிதாக நினைத்தது இப்போது எளிதாக இல்லை. ஆதி ஆதிராவை இனி எப்படி நினைப்பான் என்ற கவலை இருவருக்கும் இருந்தது. அவனுக்குச் சரியாகப் புரிய வைக்க வேண்டுமே என்ற எண்ணம் தான். அப்போதும் அவர்கள் ஊரைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ கவலைப்படவில்லை. அது அவர்களுக்குத் தேவையும் இல்லை.