Advertisement

“இரண்டு வருடத்தில் கட்டி முடிக்க வேண்டிய குடியிருப்பை ஐந்து வருடங்களாகியும் கட்டி முடிக்காமல் இழுத்தடித்ததற்கும் சேர்த்து, நில உரிமையாளர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்க வேண்டும்.” என யுகேந்திரன் தனது வாதத்தை முடிக்க….

“நீதிபதியிடம் சீக்கிரம் கட்டிக் கொடுக்கிறோம்.” எனச் சமாளித்துவிட்டு வந்துவிடலாம் என ராகவேந்தரா நினைத்ததற்கு மாறாக, யுகேந்திரன் நிறைய ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க…

எல்லாவற்றையும் ஆராய்ந்த நீதிபதி, வழக்கை மறுவாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இங்கே வழக்கு நடக்கும் அன்று யுகேந்திரனுக்கு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு இருந்ததால்…. அவன் டெல்லி செல்ல…. அவன் சார்பாக அந்த வழக்கை நக்ஷத்ரா எடுத்துக் கொண்டாள்.

நக்ஷ்த்ராவை பார்த்ததும், சின்னப் பெண் இவள், அப்படி என்ன வாதாடி விடப் போகிறாள் என ராகவேந்ரா சற்று மெத்தனமாக இருந்தான். அவள் பெண் சிறுத்தை என்று தெரியவில்லை.

“இன்னும் சிறிது கால அவகாசம் வேண்டும்.” என ராகவேந்தரா கேட்க…..

“இத்தனை பேரை மன உளைச்சசலுக்கு ஆளாகிட்டு. நீங்க எல்லாம் எப்படி நிம்மதியா சாப்பிடுறீங்க, தூங்குறீங்க. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லையா? உங்ககிட்ட நிறையச் சொத்து இருக்கலாம். ஆனால் இருந்த ஒரு நிலத்தையும் உங்ககிட்ட கொடுத்திட்டு காத்திட்டு இருக்கிறவங்களோட நிலைமை தெரியுமா…. ஏற்கனவே அஞ்சு வருஷம் இழுத்தடிச்சது பத்தாதா….” என நக்ஷத்ரா நாக்கை பிடிங்கி கொள்வது போலத்தான் கேட்டாள்.

“ஏற்கனவே ரொம்பத் தாமதமாகிடுச்சு.” என்றார் நீதிபதியும்.

“நீதிபதி அவர்களே…. ராகவேந்தரா பணத்தட்டுபாட்டில் கண்டிப்பாக இல்லை. வேண்டுமென்றே நிலத்தை வாங்கி வைத்துக்கொண்டு ஏமாற்றி இருக்கிறார். அதனால் செக்ஷன் 468 படி அவர் மீது மோசடி வழக்கில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நிலத்தையும் இவரிடம் இருந்து மீட்க வேண்டும்.” என்றாள் நக்ஷத்ரா உத்தரவாக.

இவளுக்கு யுகேந்திரனே பரவாயில்லை. அவனாவது நஷ்ட்டஈடு தான் கேட்டான். இவள் ஜெயிலில் அல்லவா வைக்கப் பார்க்கிறாள் என நினைத்த ராகவேந்தரா, “நான் சீக்கிரம் எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுறேன்.” என்றான் பதட்டமாக.

“அடுத்த ஒரு வருடத்தில் கட்டிடத்தைக் கட்டி முடித்து நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தனை நாள் தாமதத்திற்கும் சேர்த்து இத்தனை சதவீத நஷ்ட்ட ஈடும் வழங்க வேண்டும். அப்படி அதைச் செய்யத் தவறும் பட்சத்தில், அவர் மீது கிரிமினல் வழக்கு பதியலாம்.” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட….

இந்த வழக்கை இன்னும் வருஷ கணக்கிற்கு இழுத்தடித்திருக்க முடியும். ஆனால் யுகேந்திரன் ராகவேந்ராவுக்கு எதிராக எடுத்து வைத்த ஆதாரங்களே… இந்த வழக்கு விரைவாக முடிக்கக் காரணம்.

நில உரிமையாளர்கள் நக்ஷத்ராவிடம் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இன்றே தீர்ப்பு வந்துவிடும் என்று நக்ஷத்ரா நினைத்திருக்கவில்லை. அன்று இரவு வந்த கணவனிடம் அவள் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள….

“இதுவே நாலு மாசம் ஆகிடுச்சே. அதோட யாரு வாதாடினது, என் பொண்டாட்டியாச்சே… ஜட்ஜ் மிரண்டு போய், இன்னைக்கே தீர்ப்பை கொடுத்திட்டார் போல….” என்றான் யுகேந்திரன் சிரித்தபடி.

“நான் இப்படி வாதடுறேன்னா அதுக்குக் காரணம் நீங்கதான யுகி. எனக்கு எப்பவுமே நல்ல தோழனா…. எல்லாத்தையும் நீங்க தான் கத்து கொடுத்தீங்க.”

மனைவி சொன்னதைக் கேட்ட யுகேந்திரன், “உனக்குத் திறமையும் ஆர்வமும் இருந்தது, அதுதான் உண்மை.” என்றான்.

அலுவலகத் திருட்டு வழக்கில் விசாரணை முடிந்து, யுகேந்திரனுக்கு ஒன்னரை லட்சம் பணம் வந்திருக்க…. அவனுடைய அலுவலகத்தைச் சேதபடுத்தியதற்கு மட்டுமான பணத்தை எடுத்துக் கொண்டவன், மீதி இருந்த பணத்தை வசதி குறைவான இரண்டு காவலர்களின் பிள்ளைகளின் படிக்குக்காகக் கொடுத்தான். அதில் ஒருவர் பெண் காவலர். கணவரும் இல்லாமல் மகனை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு ஷங்கர் அவனுக்கு உதவினார். ராகவேந்ராவின் பணத்திமுருக்கு இது தேவை தான்.

யுகேந்திரன், நக்ஷத்ராவின் மகன் ஆதவனின் முதல் பிறந்த நாள் வர….. நக்ஷத்ரா மகனின் பறந்த நாளுக்குத் திட்டமிட ஆரம்பித்தாள்.

ஆதவன் இப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்தான். எங்கே தன்னைப் பார்த்து மகன் நடப்பதில் எதுவும் குறை வந்து விடுமோ எனப் பயத்தில் நக்ஷத்ரா, மகன் முன்பு தன் குறையைக் காட்டிக்கொள்ளவே மாட்டாள். மகன் நன்றாக நடந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதி.

மகனின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். அதற்கு அடுத்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என ஒவ்வொரு ஆண்டும் மகனின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். பிரசன்னா மட்டும் இப்போதும் யுகேந்திரனுடன் இருக்க… அவனுக்கு ஒரு பையன் இருக்கிறான். பிரதீப் அவன் சொந்த ஊரில் தனது வக்கீல் தொழிலை தொடர…. ஜனனி இப்போதும் இவர்களிடம் வேலை பார்க்கிறாள் அவளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

மகனின் நான்காவது பிறந்தநாள் அன்று நக்ஷத்ரா, தான் முன்னர் நினைத்ததை மீண்டும் கணவனிடம் நினைவு படுத்தினாள்.

“யுகி, நாம ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்துக்கலாமா?”

“நீ இன்னும் அதை நினைச்சிட்டு இருக்கியா? எனக்கும் அந்த எண்ணம் இல்லாம இல்லை” 

“நம்ம தொழில்ல நாம நிறைய முன்னேறி இருக்கோம். நமக்குப் பணத்துக்கு எந்தக் குறையும் இல்லை. இன்னொரு குழந்தை இருந்தா நல்லா இருக்கும். அதோட தத்து எடுத்தாலும் அந்தக் குழந்தையையும் நம்ம குழந்தையா வளர்க்கிற பக்குவம் நம்மகிட்ட இருக்கு.”

“ம்ம்… சரி யோசிக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

இருவருமே தங்கள் வீட்டில் தங்களுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது எனச் சொல்லி விட்டனர். தத்து எடுக்கலாமா வேண்டாமா என்று ஆலோசனை எல்லாம் கேட்கவில்லை. இரண்டு வீட்டிலும், உங்களுக்கு முழு மனசா இருந்தா செய்யுங்க என்று மட்டும் சொன்னார்கள்.

ரொம்பவும் சின்னக் குழந்தையாக எடுத்தால்…. நக்ஷத்ராவுக்குச் சிரமமாக இருக்கும் என்று இரண்டு வயதில் பெண் குழந்தை வேண்டும் என அதற்குரிய இடத்தில் உரிய முறையில் பதிந்து வைத்திருந்தனர்.

ஏழு மாதங்களுக்குப் பிறகு தான், அதுவும் இவர்கள் இரண்டு வயதில் கேட்டதால் கிடைத்தது. நிறையப் பேர் கைக்குழந்தையாகத் தான் கேட்பார்கள்.

ஏற்கனவே யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரிடமும் பேசி அவர்களுக்குக் கவுன்செல்லிங் கொடுத்துவிட்டு தான் குழந்தையைக் காட்டினார்கள். நக்ஷத்ரா சாயலில் இருக்கும்படியான குழந்தையைத் தான் காட்டினார்கள். மாநிறத்தில் ஒல்லியாக அரிசி பல் தெரிய இருந்த குழந்தையைப் பார்த்ததும் நக்ஷத்ரா ஆசையாகச் சென்று தூக்கிக் கொண்டாள். அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிய யுகேந்திரன், “எங்க வீட்டு இளவரசியா நீங்க.” எனக் கேட்க….

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பாளர், “குழந்தை இல்லாதவங்க தத்து எடுக்கிறது சாதாரண விஷயம். ஆனா உங்களுக்குன்னு குழந்தை இருந்து தத்து எடுத்திருக்கீங்க பாருங்க. இது ரொம்பப் பெரிய விஷயம். அதோட சில பேர் குழந்தையைப் பார்த்ததும், இன்னும் வேற குழந்தை இருக்கான்னு கேட்ப்பாங்க. ஆனா பார்த்ததும் இந்தக் குழந்தையை உடனே உங்க குழந்தையா நினைச்சீங்க பாருங்க. நிஜமா உங்ககிட்ட இந்தக் குழந்தை நல்லா வளருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றார் மகிழ்ச்சியாக.

யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் மிகவும் மகிழ்சியாக இருந்தது. அங்கே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு தங்கள் மகளுடன் வீடு வந்தனர்.

வீட்டில் இருவரின் வீட்டினரும் இருந்தனர். கிரிஜா குழந்தைக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். அதோடு ஆதவனிடம் உன் தங்கை என்று காட்ட…. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.

ஆதவனுக்கு ஐந்து வயதாகப் போகிறது. இதுவரை அவன் ஒருவன் மட்டுமே இருந்தது அவனுக்கும் போர் அடித்துப் போய் இருந்தது. அவனோடு விளையாட ஒரு ஆள் வந்ததும், அவனுக்கு மகிழ்ச்சி தான்.

“பாப்பா இங்க தான இருக்கும்?” என்று அவன் அம்மாவிடம் கேட்க….

“இங்க நம்மக்கூடத் தான் இருப்பா?”

“பாப்பா பேர் என்ன?”

“உன் தங்கச்சி தானே…. நீயே பேர் வை.” என்றதும், அவன் வகுப்பில் இருந்த பெண் பிள்ளைகளின் பெயர்களை எல்லாம் அவன் சொல்ல…. நக்ஷத்ரா மகனை முறைத்தாள்.

அவன் சின்னப் பையன், அவனுக்குத் தெரிஞ்சதை தான சொல்வான் என்று யுகேந்திரன் மகனுக்குப் பரிந்து கொண்டு வர…. என்ன பேர் வைக்கலாம் என அப்போதே எல்லோரும் யோசிக்க…

“நல்ல தமிழ் பெயரா வைக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

“முல்லைன்னு வைப்போமா?” என்ற நக்ஷத்ரா கணவனைப் பார்க்க….

“அந்தப் பேர் கூட ஓகே தான்.” என்றான் அவனும் வீம்புக்கு.

“முல்லை மல்லின்னு பழைய பேரா சொல்லிட்டு இருக்கீங்க.” என்ற கிரிஜா, “ஆதவனுக்குப் பொருத்தமா ஆதிரான்னு வைப்போமா?” என… அந்தப் பெயரே முடிவாகியது.

ஆதிராவுக்குப் புது உடைகள் போட்டு, சக்கரையில் ஆதிரா என்று பெயர் எழுதி, அன்று வீட்டில் விருந்து சமைத்து என வீடே களைகட்டியது.

மாலை மகனிடம் அந்தக் குடியிருப்பில் ஆதவனோடு விளையாடும் பிள்ளைகளுக்கு, “எனக்குத் தங்கச்சி பாப்பா வந்திருக்கான்னு சொல்லி சாக்லேட் கொடுத்திட்டு வா…” என நக்ஷத்ரா ஆதவனையும் அவனுடன் மீனாவையும் அனுப்பி வைத்தாள்.

அவன் அம்மா சொன்னதைப் போலவே சொல்லி…. ஆதவன் இனிப்பை கொடுக்க….

பிள்ளைகளோடு இருந்த அம்மாமார்கள் குழம்பி போனார்கள். இவங்க அம்மாவுக்கா குழந்தை பிறந்திருக்கு, அப்படி ஒன்னும் பார்க்கலையே….”

“அவன் தான் தெளிவா தங்கச்சி வந்திருக்கான்னு தான சொன்னான். பிறந்திருக்கான்னு சொல்லலையே… தத்து எடுத்திருப்பாங்களா இருக்கும்…” என அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.

இரவு வீட்டினர் எல்லாம் சென்ற பின்னர், அதுவரை நிறையப் பேர் இருந்ததால் ஆதிராவுக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் எல்லாம் சென்றதும், இவர்கள் நால்வர் மட்டுமே இருக்க… இது எப்போதும் இருந்த இடம் இல்லை. புது இடம் என்பதை உணர்ந்தவள் ஒரே அழுகை.

“அண்ணன் இருக்கான் பாரு.” என ஆதவனைக் காட்டித்தான் சமாளித்தார்கள். அப்போதும் அவள் அழுது கொண்டே இருக்க….

யுகேந்திரன் மகளைத் தூக்கிக் கொண்டு கீழே சென்றான். உடன் நக்ஷத்ராவும் ஆதவனும் சென்றனர்.

கீழே பார்க்கில் விளையாட விட்டு, வேடிக்கை காட்டி அவள் உறங்கிய பின்னரே வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் ஆதவனும் உறங்கிவிட…. பிள்ளைகள் இருவரையும் கட்டிலில் படுக்க வைத்தனர்.

பிள்ளைகள் இருவரையும் சேர்த்துப் பார்ப்பது யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

நக்ஷத்ரா இன்று நிறையத் தான் நடந்து விட்டாள். அவளுக்குக் கால் வலிக்க…. அவள் கால்களைத் தேய்த்து விட….

“இன்னைக்கு ரொம்பத் தான் நடந்திட்ட…. ரொம்ப வலிக்குதா?” என யுகேந்திரன் வந்து அவள் காலை பிடித்து விட…

“ஒரு நாள் தானே…. ஒத்தடம் கொடுத்தா சரியாகிடும்.” என்றவள்,

“ஆதிரா நம்ம கூட எல்லாம் சேர்ந்திடுவா தானே….” எனப் பயந்து கொண்டு கேட்க…

“சின்னக் குழந்தை தானே சீக்கிரம் சரியாகிடுவா…. நானும் ஒரு வாரம் வீட்ல தான் இருப்பேன். ரெண்டு பேருமா பார்த்துக்கலாம்.” என யுகேந்திரன் நம்பிக்கையாகச் சொல்லவும் தான் நக்ஷத்ராவுக்கு நம்பிக்கை வந்தது.

மனைவியின் முகத்தைப் பார்த்த யுகேந்திரன், ஜட்ஜையே மிரட்டுற ஆள் மா நீ…. இதுக்கெல்லாம் பயப்படலாமா…” எனக் கேலி செய்தான்.

“ஜட்ஜை தான் மிரட்ட முடியும், இவளை மிரட்டினா இன்னும் விலகித்தான் போவா.”

மனைவியின் கவலை யுகேந்திரனுக்குப் புரியாமல் இல்லை.

யுகேந்திரன் படுக்க வந்த பிறகும் நக்ஷத்ரா வராமல் இருக்க…. இன்னும் என்ன பண்றா என்பது போல அவன் பார்க்கும் போதே, நக்ஷத்ரா வந்தவள், ஆதிரா அழுதால் கொடுக்கப் பிளாஸ்கில் பால், டம்ளர் எல்லாம் தயாராக எடுத்து வந்திருந்தாள்.

தன் குழந்தையாக நினைக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்திலேயே… நிறையப் பேர் குழந்தையைத் தத்து எடுக்க யோசிப்பார்கள். அந்தப் பயம் நக்ஷத்ராவுக்கும் இருந்தது. ஆனால் அவளின் கால் வலி எல்லாம் மீறி, அவளுக்கு மகளின் பசி தான் பெரிதாகத் தெரிந்தது. அங்கே தாய்மை தான் ஓங்கி நின்றது. யுகேந்திரனுக்கு அது புரிந்தது. புன்னகையுடன் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement