Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 14

போலீசார் வந்து பார்த்துவிட்டு, விசாரணை முடியும் வரை எதையும் தொட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள… பிரதீப் அவன் வீட்டில் இருந்து வேறு பூட்டுக் கொண்டு வந்து கொடுக்க…. அதை வெளி ஷட்டருக்கு போட்டுவிட்டு வீடு திரும்ப விடியற்காலை ஆகிவிட்டது.

“யாரு யுகி இதைப் பண்ணி இருப்பா? ஒருவேளை அந்தக் கோபாலா கிருஷ்ணனா இருக்குமோ….”

“அந்த ஆள் ஒரு வெத்து வேட்டு. நாம கேஸ் எடுக்காததுனால அவனுக்கு ஒரு நஷ்ட்டமும் இல்லை. பணம் கொடுத்தா வாதாட எத்தனையோ வக்கீல் இருக்காங்க.”

“அப்போ வேறு யாருக்கு நஷ்ட்டம்?” நக்ஷத்திரா யோசிக்க…

“எனக்கு அந்த ராகவேந்தரா மேல தான் சந்தேகமா இருக்கு. எனக்கு முதல்ல அவன் ஆள் மூலமா பணத்தாசை காட்டி பார்த்தான். நான் அதுக்கு மசியலைனதும், பெரிய இடம், அரசியல் பின்பலம் இருக்கு. எதுக்கு வீணா அவர்கிட்ட மோதுறீங்கன்னு மறைமுகமா மிரட்டல்….”

“இந்த அளவுக்கு இறங்கினவன் வேறு எதுவும் பண்ணாம இருப்பானா யுகி.”

“வேற எதாவது பண்றதா இருந்தா… இந்நேரம் பண்ணி இருப்பானே…. இது சும்மா நம்மைத் திசைதிருப்ப….”

“நீங்க எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.”

“நம்ம வேலை அப்படித்தானே…. நான் எப்பவும் ஜாக்கிரியாதையா தான் இருக்கேன். இது யார் செஞ்சதுன்னு மட்டும் தெரியட்டும். அப்புறம் அவங்களுக்கு இருக்கு.”

கணவன் மனைவி பேசிவிட்டு உறங்க வெகு நேரம் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் காலை நேரமே எழுந்து கொண்டனர்.

அன்றும் போலீசார் வந்து கைரேகை போன்ற ஆதராங்களைத் திரட்டிவிட்டு சென்றனர். பெண்கள் யாரையும் அலுவலகம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆண்கள் மட்டுமே இருந்தனர்.

மறுநாள் உடைத்த கதவை எல்லாம் புதிதாக மாற்றிவிட்டு, இறைந்து கிடந்த பொருட்களை எடுத்து அடுக்க ஆரம்பித்தனர்.

மேஜை நாற்காலிகளை எல்லாம் உடைத்து போட்டிருந்தனர். மேஜையில் இருந்த சட்ட புத்தகங்கள், கோப்புகளில் இருந்த பத்திரங்கள் என எல்லாம் கீழே இறைந்து கிடக்க….

எல்லா வழக்குகளின் விவரங்கள் தேவையான ஆதாரங்கள் எல்லாம் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றி, அதை ஒரு பாதுக்காப்பான இடத்தில் சேமித்தும் வைப்பதால்…. பத்திரங்கள் எதுவும் தொலைந்திருக்குமோ என்று கவலை இல்லை.

அன்று எல்லோருமே அலுவலகத்திற்கு வந்து முடிந்த வரை சிதறி கிடந்த பத்திரங்களை, அதற்குரிய கோப்புகளில் வைத்துக் கொண்டிருந்தனர்.

ஜனனிக்கு இது யாரோ வேண்டுமென்றே செய்தது என்று தெரியவில்லை. “திருட வந்தா திருடிட்டு மட்டும் போக வேண்டியது தான… எதுக்கு இப்படி எல்லாத்தையும் தூக்கி போடணும். இதை எல்லாம் அடுக்கி முடிக்கவே ஒரு வாரம் ஆகும் போல…. லூசு பயலுங்க .”எனத் திட்டிக் கொண்டு இருந்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் அலுவலகத்தை ஒழுங்கு செய்வதிலேயே நேரம் சென்றது. போலீசார் வந்து அக்கம் பக்கம் இருக்கும் கடைகளில் இருந்தும் ஒளிப்பதிவுகளைச் சேகரித்துச் சென்றனர்.

சிலர் பைக்கில் தான் வந்திருந்தனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தில் முகமுடி அணிந்திருந்தனர். யுகேந்திரனுக்குத் தெரியும் ராகவேந்தரா இதில் நேரடியாகச் சம்பந்தபட்டிருக்க மாட்டார் என்று…. ஆனால் இதை அப்படியே விட்டால்…. இன்னும் இது போலத் தொடரும் என்றே அவன் இதில் மும்முரமாக இருப்பது போலக் காட்டிக் கொண்டான்.

அவன் எதிர்ப்பார்த்தது போல…. இரண்டு பேர் மாட்டிக் கொண்டனர். யுகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்திருக்க….. அவன் முன்பு வைத்து தான் காவலர்கள் அவர்களை விசாரித்தனர்.

“அவர்கள் திருட மட்டுமே வந்ததாக.” சொல்ல….

“அப்போ எதுக்கு டா எல்லாத்தையும் அடிச்சு உடைச்சு போட்டுட்டு போனீங்க.” எனக் காவலர் சங்கர் கேட்க….

“இவர் பெரிய வக்கீல்ன்னு சொன்னாங்க. எல்லாப் பணமும் கணக்குல வராது இல்ல…. அதனால ஆபீஸ்ல பணம் இருக்கான்னு தேடும் போது… எல்லாம் கலைக்கிற மாதிரி ஆகிடுச்சு.” என்றனர்.

யாரோ சொல்லிக் கொடுத்து பேசுகிறார்கள் என்று புரிந்தது.

யுகேந்திரன் காவலரிடம் கண்ணைக் காட்டிவிட்டு, “சரி எடுத்திட்டுப் போன பணத்தை, என்ன செஞ்சீங்க?” எனக் கேட்க,

புரிந்து கொண்ட காவலரும், “ஆமா லட்ச் ரூபாய்க்கு மேல திருடு போயிருக்குன்னு புகார் கொடுத்திருக்கார். அதை என்ன பண்ணீங்க?” எனக் கேட்க….

அதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்கள், “நாங்க பணம் எதுவும் எடுத்திட்டு போகலையே?” என,

“வந்தது திருடன்னு சொன்னீங்க. அப்புறம் பணம் மட்டும் எடுக்கலையா?” யுகேந்திரன் கேலியாகச் சொல்ல….

திருட வந்ததாகச் சொன்னால்…. அதுவும் எதுவும் திருடு போகாத நிலையில்… குறைந்தபட்ச தண்டனையே கிடைக்கும் என்று நினைத்திருந்தனர். இப்போது யுகேந்திரன் லட்ச ரூபாய்க்கு மேல் திருடு போயிருக்கிறது என்றதும் மிரண்டு போனார்கள்

“ஒருவேளை நீங்க போனதும் வேற யாரும் வந்து எடுத்திட்டு போயிருப்பாங்களோ?” என்ற யுகேந்திரன், “எப்படியும் ரெண்டு வருஷம் ஜெயில்ல கலி திண்ண போறீங்க.” என்றதும், இன்னும் மிரண்டவர்கள், “சார் நாங்க திருடலை.” என்றனர்.

அதற்குள் அவர்கள் சார்பாக ஒரு வக்கீல் வர, அவரிடமும் காவல்துறை அதிகாரி ஒரு லட்சதிற்கு மேல் பணம் காணவில்லை என்று சொல்ல… அதை இவர்கள் தான் திருடி இருக்கிறார்கள். ஆனால் ஒத்துகொள்ள வில்லை என்று சொல்ல….

“சார் நான் பேசி பார்க்கிறேன்.” என்றவர், அவர்களைத் தனியே அழைத்துச் சென்று பேச…

என்ன பேசினார்களோ? திரும்ப வந்து நாங்கள் தான் பணத்தை எடுத்தோம். பணத்தைக் கொடுத்து விடுகிறோம். என்றனர். இது பணத்திற்காக நடக்கவில்லை என்றால்…எதற்கு என்ற கேள்வி வரும் தானே…. 

“எல்லாத்தையும் அடிச்சு உடைச்சிருக்காங்க. அதுக்கு யாரு பணம் கொடுக்கிறது?” என யுகேந்திரன் கேட்க…

“அதையும் வாங்கிக் கொடுத்திடுறேன் சார்.” என்றார் வக்கீல்.

“ஆமாம் நீங்க எப்படி இவங்களுக்காக வந்தீங்க?” என்றதும், அவர்கள் பெற்றோர் வந்து வழக்கை எடுத்துகொள்ளச் சொல்லி கேட்டதாகச் சொன்னார்.

யுகேந்திரனும் காவல்துறை அதிகாரியும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அந்த வக்கீல் சென்றதும், “சார் நீங்க இதை யோசிச்சு தான் புகார் கொடுக்கும் போதே பணமும் கொஞ்சம் திருடு போயிருக்குன்னு சொன்னீங்களா?” என்று ஷங்கர் கேட்க… “என்னை மிரட்ட தான் செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியும். நாமளும் முட்டாள் இல்லைன்னு காட்டனும் தான….”

“அது தான உங்ககிட்ட அவங்க வேலை நடக்குமா.”

இங்கிருந்து போன வக்கீல், போன்னில் விவரத்தை அவரை அனுப்பியவரிடம் சென்று சொல்ல…

அவர் சென்று ராகவேந்த்ராவிடம் சொல்ல…. “ஒரு வேலையும் உருப்படியா செய்ய மாட்டீங்களா… அவன் எதோ மிரண்டு பின்னடிச்சிடுவான்னு சொன்னீங்க. இப்போ உங்களால எனக்கு ஒன்னரை லட்சதுக்கு மேல தண்ட செலவு.” எனக் கத்தியவன், பணத்தை எடுத்து வந்து தூக்கி போட்டு, இதுல எங்கையும் என் பேர் வரக் கூடாது.” என்றான்.

அந்த விஷயம் ஒரு பக்கம் இருக்க….ராகவேந்தராவை எதிர்த்து நில உரிமையாளர்கள் கொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

யுகேந்திரன் கோர்ட்டில் ஆரம்பத்தில் இருந்து என்ன நடந்தது என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தான். அவன் தரப்பு சாட்சிகளையும் கோர்ட்டில் பேச வைத்தான். ராகவேந்தரா அன்று ஆஜராகவில்லை. அவரை விசாரிக்க வேண்டும் என்று அவன் கேட்டுக்கொள்ள… நீதிபதி அவனை ஆஜராகச் சொல்லியும், அடுத்த இரண்டு முறையும் ராகவேந்ராவுக்கு உடல்நலம் சரியில்லை என அவன் தரப்பு வக்கீல் வாய்தா வாங்கிவிட…. மூன்றாவது முறையும் அவன் கோர்ட்டுக்கு வரவில்லை.

அதற்கு அடுத்த முறையும் எதோ அவர்கள் நெருங்கிய சொந்தத்தில் யாரோ இறந்து விட்டார்கள் என எதோ கதை சொன்னார்கள்.

கோர்ட்டுக்கு வராமல் நில உரிமையாளர்களிடம் தனித்தனியாகப் பேசி வழக்கை திரும்பப் பெற வைக்க ராகவேந்தரா முயற்சி செய்ய…. ஆனால் அவர்கள் யாரும் ராகவேந்ராவை நம்புவதாக இல்லை.

யுகேந்திரன் வேறு விதமாக யோசித்தான்.

“ராகவேந்தரா திட்டமிட்டே கட்டிடத்தைக் கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பதாகவும். நில உரிமையாளர்களின் மன உளைச்சல் மற்றும் பண இழப்பை கருத்தில் கொண்டு அவருக்குப் பிடி வாரண்டு பிறப்பிக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொள்ள….

அடுத்தமுறையும் ராகவேந்தரா ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்டு தான் என நீதிபதி ராகவேந்ராவின் வக்கீலிடம் சொல்ல…. இதற்கு மேல் முடியாது என ராகவேந்தரா அடுத்தமுறை கோர்ட்டில் ஆஜரானான்.

ராகவேந்தரா நீதிபதியிடம், தான் சீக்கிரத்தில் கட்டிடத்தைக் கட்டி முடித்துத் தந்து விடுவதாகச் சொல்ல….

“கட்டித் தர்றதை பிறகு பார்க்கலாம். ஆனா இதுவரை ஏன் கட்டி முடிக்கலை? முதல்ல நான் கேட்கிற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க.” என்ற யுகேந்திரன், நீதிபதியிடம் ராகவேந்ராவை விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள… நீதிபதியும் அவனுக்கு அனுமதி வழங்கினார்.

அவனின் பெயர் அவன் எத்தனை வருடமாக இந்தத் தொழிலில் இருக்கிறான் என்று எல்லா விவரங்களையும் கேட்ட பிறகு, “ரெண்டு வருஷ அக்ரிமெண்ட் போட்ட நீங்க, அஞ்சு வருஷம் ஆகியும் இன்னும் முடிக்காம இருக்கக் காரணம் என்ன?”

“பணம் இல்லாதது தான். நான் வேற இடத்தில பணத்தைப் போட்டேன். ஆனா அங்க இருந்து என்னால உடனே பணத்தை எடுக்க முடியலை…. அதனால தான் இதை நிறுத்தி வைக்க வேண்டியதா போயிடுச்சு.”

நீதிபதி கூட அவன் சொன்னதை நம்பிவிட….

“அப்படியா…. அப்போ நீங்க சமீபத்துல செங்கல்பட்டுப் பக்கம் முப்பது ஏக்கர் நிலம் வாங்கி இருக்கீங்க அதுக்கு எங்க இருந்து பணம் வந்தது?” என்றான்.

“அது… அது…. என் பேர்ல இல்லையே….” என ராகவேந்தரா இழுக்க….

“உங்க பேர்ல இருந்தா என்ன? உங்க மனைவி பேர்ல இருந்தா என்ன?அதை விடுங்க, இதே போல இன்னொரு குடியிருப்பைக் கட்டி முடிச்சு ஒவ்வொன்னும் கோடி ரூபாய்க்கு மேல வித்திருக்கீங்க, அந்தப் பணம் எங்கே?” யுகேந்திரன் கேட்க….

“அது எல்லாம் என் அண்ணன் தம்பியோட சேர்ந்து செய்யுறது. அதனால அவங்க பணம் போட்டாங்க.” என ராகவேந்தரா சமாளிக்க….

“சரி நீங்க இப்போ நீலாங்கரை பக்கம் புது வீடு கட்டிட்டு இருக்கீங்களே…. எத்தனை கோடியில கட்டிட்டு இருக்கீங்க.” என்றவன்,

“கணம் கோர்ட்டார் அவர்களே…. நான் இப்போ சொன்ன அத்தனைக்கும் என்கிட்டே ஆதாரம் இருக்கு….” என எல்லா ஆதாரங்களையும் கொடுத்தவன்,  “இன்னும் ராகவேந்தரா பினாமி பெயரில் எத்தனை சொத்துக்கள் வைத்திருக்கிறாரோ…. ராகவேந்தரா கண்டிப்பாக பணத்தட்டுபாட்டில் இந்தக் குடியிருப்பைக் கட்டி முடிக்காமல் இல்லை. அவரிடம் பணம் இருக்கிறது, மனம் தான் இல்லை.”

“அவர் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்திருந்தா…. எனக்குப் பணம் கொடுத்து கேசல இருந்து விலக்கிக்கச் சொல்லி இருக்க மாட்டார். என்னை மிரட்ட என் ஆபீசை அடிச்சு நொறுக்க ஆட்களை அனுப்பி இருக்கவும் மாட்டார்.” என யுகேந்திரன் சொன்னதும், யுகேந்திரன் கண்டுபிடித்து விட்டது தெரிந்து, ராகவேந்ரா திடுக்கிட்டு தான் போனான்.

Advertisement