Advertisement

அன்று இரவு யுகேந்திரன் மகனிடம்,”எப்போ டா நீ தூங்குவ?” என்று கேட்டுக் கொண்டிருக்க….

“அவன் பாட்டுக்கு தான படுத்திருக்கான். உங்களை என்ன பண்ணான்?” என நக்ஷத்ரா கேட்க….

“அவன் தூங்கினா நான் என் வேலையைப் பார்ப்பேன்.” என யுகேந்திரன் சொன்னதை நக்ஷத்ரா அலுவலக வேலை என்றே நினைத்துக் கொண்டாள்.

“எப்ப பாரு ஆபீஸ் வேலை தானா….”

“நான் சொன்னேனா ஆபீஸ் வேலைன்னு.”

“அப்போ வேற என்ன வேலை?” என்றவளுக்குப் புரிந்துவிட… இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.

அவர்கள் மகன் எங்கே உறங்கினான். அதற்கு முன் யுகேந்திரன் உறங்கிவிட…. காலையில் நக்ஷத்ரா கணவனைத் தொட்டு எழுப்ப….

“டைம் என்ன?” என்றான்.

“டைம் ஒன்னும் அதிகம் ஆகலை. உங்க பையன் இப்போதான் எழுந்து பால் குடிச்சிட்டுத் திரும்பத் தூங்கினான்.” என்றதும்,

“நானும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறேன்.” என்றவனைப் பார்த்து முறைத்தவள்,

“இன்னைக்கு நைட்டும் உங்க பையன் தூங்கிற வரை காத்திட்டு தான் இருக்கணும்.” என்றதும் புரிந்து கொண்டவன், மனைவியை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.

மகன் எழுவதற்குள் யுகேந்திரனும் நக்ஷத்ராவும் தங்கள் காலை வேலைகளை முடித்துக் கொண்டு, மகன் எழுந்ததும் அவனோடு தான் நேரம் செலவு செய்வார்கள். அவர்களின் காலை வேளை மிகவும் இனிமையாகக் கழியும். இரவு எப்படிப் பார்த்தாலும் யுகேந்திரன் வர எட்டு ஒன்பது மணி ஆகிவிடும். வீட்டிற்கு வந்தாலும் உண்டுவிட்டு, அவன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் யுகேந்திரன் எந்த வேலைகளையும் வைத்துகொள்வது இல்லை. அன்று முழுக்க மனைவி மகனோடு தான். அவர்களை அழைத்துக் கொண்டு எங்காவது வெளியே சென்று வருவான்.

யுகேந்திரன் வழக்குக்காக டெல்லி சென்று தங்க நேர்ந்தால்…. நேத்ராவின் பெற்றோர் வந்து இங்கே மகளுக்கும் பேரனுக்கும் துணை இருப்பார்கள்…. சில நாட்கள் கிரிஜாவும் வந்து தங்குவார்.

மகனுக்கு எட்டு மாதங்களான பிறகு நக்ஷத்ரா தினமும் இல்லையென்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். மகனை அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்று வருவாள்.

யுகேந்திரன் அடிக்கடி டெல்லி சென்று விடுவதால்… இங்கே பிரதீப்புக்கும் பிரசன்னாவுக்குமே அதிகம் வேலை இருந்தது. நக்ஷத்ரா வந்தது அவர்களுக்குப் பெரிய உதவியே. ஆனாலும் ஒத்துகொள்ளாமல் அவளை வம்பிழுப்பர்கள்.

“நான் பாஸ் பெண்டாட்டி டா….” என இவளும் அவர்களை வெறுப்பேற்றுவாள்.

அன்று பிரதீப் பிரசன்னா இருவரும் அலுவலகத்தில் இல்லை. அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்க… அப்போது ஒரு படையே அலுவலகத்திற்குள் நுழைந்தது. பார்க்கும் போதே தெரிந்தது. அரசியல் தலைகள் என்று.

“யுகேந்திரன் சார் இருக்காங்களா பார்க்கணும்.” என்றதும்,

“அவர் இல்லை என்ன விஷயம்னு சொல்லுங்க.” என்றாள் நக்ஷத்ரா.

“இல்ல ஒரு கேஸ் விஷயமா பார்க்கணும்.” என்றதும்,

“அது தான் என்ன கேஸ்?”

“அவர்கிட்ட தான் சொல்லணும்.” என்றார் வந்தவர் திமிராக.

“அப்போ போய்ட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க. அவர் இங்க இல்லை டெல்லியில இருக்கார்.” என நக்ஷத்ரா சூடாகச் சொல்ல….

“அப்போ இப்ப பார்க்க முடியாதா?” என்றது ஒரு பெரிய தலை.

எத்தனை விதமாகக் கேட்டாலும் பதில் ஏற்கனவே சொல்லிவிட்டதால்… நக்ஷத்ரா அமைதியாக அவள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கொஞ்சமாவது மதிக்குதா பார்த்தியா?” என அந்தப் பெரிய தலை பக்கத்தில் இருந்தவனிடம் சொல்ல…

“நம்மளை பத்தி தெரியாது தலை….” என்றான் அவன்.

நக்ஷத்ரா காதில் எல்லாம் விழுந்தாலும், அவள் கேட்டது போலவே காட்டிக்கொள்ளவில்லை.

பிறகு வேறு வழியில்லாமல் அந்தப் பெரிய தலை நக்ஷத்ராவின் எதிர் இருக்கையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்.

“எங்களுக்கு வேற வக்கீல் இல்லாம இங்க வரலை….” என அவர் சொல்ல…. அப்போ அங்கயே போக வேண்டியது தானே என நக்ஷத்ராவின் பார்வையே கேட்டது. அதைப் புரிந்து கொண்டவர், எல்லாம் நேரம் என நினைத்துக் கொண்டு, “யுகேந்திரனை பற்றிக் கேள்விப்பட்டோம், சமீபத்துல கூட ஒரு கேசை பிரமாதமா வாதாடினாராமே…. எங்களுக்கு இந்தக் கேஸ் ஜெயிக்கிறது ரொம்ப முக்கியம். இது எங்க கவுரவம் சம்பந்தப்பட்டது. அதுதான் இங்க வந்தோம்.” என்றவர் நக்ஷத்ராவை பார்த்து, “நான் இவ்வளவு சொல்றேன், நீங்க எதுவும் சொல்ல மாட்டேங்கிறீங்க.” என கேட்க….

“இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சது தான். நீங்க முதல்ல கேஸை பத்தி சொல்லுங்க. அதுக்கு முன்னாடி நீங்க யாருன்னு சொல்லுங்க.” என்றாள்.

“என் பேரு கோபால கிருஷ்ணன். நான் இந்தக் கட்சியில முக்கியப் பொறுப்பில இருக்கேன்” என அவர் சொன்ன கட்சியின் தலைவர் ஒரு சினிமா பிரபலம். வெறும் சாதி ஓட்டை நம்பி தொடங்கபட்ட ஒரு துக்கடா கட்சி. தேர்தலில் நின்றால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க மாட்டார்கள். ஆனால் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஒட்டிக் கொண்டு இருந்தனர். இவர்களின் ஜாதி ஓட்டுக்காகப் பெரிய கட்சிகளும் தேர்தல் நேரத்தில் சேர்த்துக் கொள்வார்கள்.

இதுல இவர் அந்தக் கட்சியில முக்கியப் பொறுப்பாம் என நக்ஷத்ரா கேலியாக நினைத்துக் கொண்டாள்.

“என் பையன் இப்ப ஜெயில்ல இருக்கான். போதை மருந்து கேசுன்னு சொல்றாங்க. எப்படியாவது அவனை வெளிய எடுக்கணும்.” என்றார்.

நக்ஷத்ரா மேலும் விவரங்கள் விசாரிக்க…. அவர் மகன் மீது அரசியல் பகை காரணமாகப் போதை மருந்து கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் சொல்ல….

“உங்க பையனுக்குப் போதை மருந்து பழக்கம் இருக்கா?” என்று அவள் கேட்க இல்லை என்றார்.

“நிஜமா உங்க பையனுக்கு இதுல சம்பந்தம் இல்லையா?” நக்ஷத்ரா சந்தேகமாகக் கேட்க….

“இல்லவே இல்லை…” என்று சாதித்தார் கோபால கிரிஷ்ணன்.

“சரி யுகேந்திரன் சார்கிட்ட சொல்றேன். அவர்தான் கேஸ் எடுக்கிறதா இல்லையான்னு முடிவு பண்ணுவார்”. என்றவள், அவர்களை இரண்டு நாட்கள் கழித்து வர சொன்னாள்.

நக்ஷத்ராவுக்குச் சந்தேகமாக இருக்க…. அவளுக்குத் தெரிந்த காவலரை அழைத்துக் கேட்க… அவர் விசாரித்து விட்டுச் சொல்வதாகச் சொன்னார்.

இதைப் பற்றி எதாவது செய்தி வந்திருக்கிறதா என அவள் பத்திரிக்கையை ஆராய…. அப்படி எந்தச் செய்தியும் இல்லை.

சிறிது நேரத்தில் அந்தக் காவலரே அவளை அழைத்து விட்டார். பிறகே அவளுக்கு முழு விவரம் தெரிய வந்தது.

வினோதன் கல்லூரியில் படிக்கும் போதே உடன்படித்த நண்பர்களுடன் போதை பழக்கத்திற்கு அடிமையானவன். ஒரு கட்டத்தில் தினமுமே அவனுக்குத் தேவைப்பட… அவனே போதை மருந்து கடத்தும் தொழிலில் இறங்கி இருந்தான். போதை தடுப்புப் பிரிவினரிடம் வசமாகச் சிக்கியும் விட்டான். அதுவும் அதிக அளவு போதை மருந்துகளோடு.

வழக்கு சி பியையிடம் சென்றுவிட்டது. இங்கே இருக்கும் காவாலர்கள் என்றால்… அரசியல் தலையிட்டால்… எதாவது செய்திருக்க முடியும். இப்போது அப்படி எதுவும் முடியாததால்…. அவர்களுக்குச் சிறப்பாக வழக்காட ஒரு வக்கீல் வேண்டும். அதற்குத் தான் யுகேந்திரனை தேடி வந்தது.

போதை மருந்து எடுத்தது மட்டும் அல்லாமல்… அதைக் கடத்தியும் இருக்கிறான். இப்படிப்பட்ட வழக்கிற்குக் கோடி கொடி ரூபாய்க் கொடுத்தாலும் யுகேந்திரன் எடுக்க மாட்டான்.

இரண்டு நாட்கள் சென்று கோபால கிருஷ்ணன் வந்த போது யுகேந்திரனும் இருந்தான். ஏற்கனவே நக்ஷத்ரா இந்த வழக்கை பற்றிச் சொல்லி இருந்ததால்…. நிறைய வழக்குகள் இருப்பதால்… அதோடு டெல்லி சென்று வரும் வேலையும் இருப்பதால்… தன்னால் இப்போது இந்த வழக்கை எடுக்க முடியாது என யுகேந்திரன் தட்டிகழிக்க….

“நான் யாருன்னு தெரியும் இல்லையா… நல்லபடியா தொழில் செஞ்சிட்டு இருக்கீங்க. அதைக் கெடுத்துக்கப் போறீங்களா?” என மறைமுகமாகக் கோபால கிருஷ்ணன் மிரட்ட…

“உங்க பையன் போதை மருந்தது எடுத்தது மட்டும் இல்லாம கடத்தியும் இருக்கான். உண்மையா இல்லையா?” யுகேந்திரன் கேட்க…

“அது பெரிய இடத்து பிள்ளைங்க எல்லாம் செய்யுறது தான்.”

“எது போதை மருந்து எடுக்கிறதா… அவன் மட்டும் இல்லாம சுத்தி இருக்கிறவங்களையும் நாசமாக்கிறதா?”

“எதோ தெரியாம பண்ணிட்டான். இந்த முறை எதாவது பண்ணி வெளிய எடுங்க. அப்புறம் நான் அவன் அதைச் செய்யாம பார்த்துக்கிறேன்.”

“இனிமே செய்யாம இருக்கிறது சரி…. ஆனா இதுக்கு முன்னாடி செஞ்சதுக்குத் தண்டனை வேண்டாமா?” என்ற யுகேந்திரன், “நான் இந்தக் கேஸ் எடுத்துக்க முடியாதுங்க. நீங்க கிளம்புங்க.” என்றான்.

“வேற வக்கீல் இல்லாம இங்க வரலை…. இந்தக் கேஸை எடுத்திருந்தா… நீயும் பெரிய ஆள் ஆகியிருப்ப…. நீ எவ்வளவு பணம் கேட்டாலும் நான் கொடுப்பேன். உனக்கு அதிர்ஷ்டம் இல்லை.” என்றவர்,

“உன்னை விடப் பெரிய வக்கீல் மூலமா எனப் பையனை வெளிய கொண்டு வரேன்.”

“அதோட நான் கேட்டு முடியாதுன்னு சொன்ன இல்ல…. நான் யாருன்னு காட்டுறேன்.” எனக் கத்திவிட்டு கோபால கிருஷ்ணன் செல்ல… அதைப் பார்த்து யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் சிரிப்பு தான் வந்தது.

தன் மகன் மேல் எந்தத் தவறும் இல்லை… யாரோ இதில் அவனைச் சிக்க வைத்தார்கள் என வெளியுலகத்துக்குக் காட்டவே கோபால கிருஷ்ணன் யுகேந்திரனை தேடி வந்தது. அவன் இந்த வழக்கை எடுத்து நடத்தினால்…. உண்மையாக வினோதன் மீது தவறு இருக்காது என மற்றவர்கள் நம்புவார்கள் என நினைத்தார்.

கோபால கிருஷ்ணன் வழக்கை எடுத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டினார் என்றால்…. இன்னொரு பெரும் பணக்காரர், அவனை வழக்கை எடுக்கக் கூடாது என்று மிரட்ட… மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாமல் யுகேந்திரன் அந்த வழக்கை எடுத்துக் கொண்டான்.

நில மோசடி வழக்கு. காலி நிலமாக இருந்த குயிருப்பில்… ராகவேந்தரா என்பவர் அதன் உரிமையாளர்களிடம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி தருவதாகச் சொல்லி…. மொத்தமாக நிலத்தை அபகரித்துக் கொண்டு… கால்வாசி கட்டிடம் மட்டும் கட்டிவிட்டு…. அப்படியே வேலையை நிறுத்திவிட்டனர்.

நில உரிமையாளர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் காலாவதி ஆகியிருக்க… பணத்தை வேறு ஒரு தொழிலில் போட்டிருபப்தால் தான். இப்போது முடிந்துவிடும் அப்போது முடிந்துவிடும் என நாட்களைக் கடத்தி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. குடியிருப்பையும் கட்டி முடிக்காமல், நிலத்தை மீட்கவும் முடியாமல், நிறையப் பேர் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். வேறு ஒரு வக்கீல் மூலம் வழக்கு கொடுக்க முயன்றனர். ஆனால் அந்த வக்கீல் இவர்களோடு சேர்ந்து கொண்டு… இப்போ முடிஞ்சிடும் அப்போ முடிஞ்சிடும் என நாட்களை இழுத்து அடித்தது தான் மிச்சம்.

சில பேர் குடியிருப்புக்குப் பதில் பணம் கொடுத்தால் கூடப் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதுதான் ரகவேந்தரனின் திட்டமும் கூட… சொற்ப பணத்தைக் கொடுத்து அவர்களை அப்புறபடுத்தி விட்டால்… பிறகு அதே குடியிருப்பைக் கட்டி முடித்துப் பெரும் தொகைக்கு விற்கலாம் என்ற திட்டம்.

சில பேர் பணம் கொடுத்தால்… போதும் என்ற முடிவுக்கு வந்திருக்க…. ஆனால் மற்றவர்கள் அது எப்படி இடத்தைக் கொடுத்திட்டு அஞ்சு வருஷமா காத்திருக்கோம், அதெல்லாம் அப்படி விட முடியாது என யுகேந்திரனை பற்றிக் கேள்விபட்டு அவனிடம் வந்திருந்தனர்.

அப்போது தான் அவனை இந்த வழக்கில் இருந்து விலகச் சொல்லி எச்சரித்துப் பார்த்தனர். நாங்க எங்களுக்குள்ள பேசி சரி பண்ணிக்கிறோம் என்றனர். ஆனால் யுகேந்திரன் அதையெல்லாம் மதிக்கவே இல்லை.

அப்படியிருக்க ஒருநாள் நள்ளிரவில் அவன் அலுவலகத்திற்குச் சென்று, கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் சிலர் இழுத்து போட…. அலுவலகத்திலும் பாதுகாப்புக் கருவி பொறுத்தபட்டிருந்ததால்…. யுகேந்திரனின் கைபேசிக்கு தகவல் வர…. அவனும் பிரசன்னாவும் உடனே சென்றனர்.

கணவனை அனுப்பிவிட்டு நக்ஷத்ரா பயந்து கொண்டே இருந்தாள். ஆனால் யுகேந்திரன் அங்கே சென்ற போது அங்கே யாரும் இல்லை. அங்கிருந்த ஒளிப்பதிவு சாதனங்களையும் அடித்து நொறுக்கி இருந்தனர்.

காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிட்டு யுகேந்திரனும் பிரசன்னாவும் அங்கேயே இருந்தனர்.

 

Advertisement