Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 13

சுகப்பரசவம் என்பதால் மூன்றாம் நாள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். நக்ஷத்ராவின் அம்மா வீட்டில் தான் இருந்தனர். அவர்கள் அறையில், “ஹப்பா நடந்து எவ்வளவு நாள் ஆச்சு. எல்லாம் உங்க பையனால தான்.” என்றவள் எழுந்து நடக்க….

“ஹே… என் பையன் உன் வயித்துக்குள்ள மூன்னு கிலோ தான் இருந்தான். ஆனா நீ அதுக்கு மேல எட்டு கிலோ வெயிட் போட்டிருக்க…. வெயிட் குறைக்கிற வரை ரொம்ப நடந்து காலை டேமேஜ் பண்ணிடாத.” எனச் சிரித்த கணவனைப் பார்த்தவள், “அப்போ என்னைக் குண்டுன்னு சொல்றீங்களா… எனச் சண்டைக்குச் செல்ல…

“உனக்காகப் பொய் எல்லாம் சொல்ல முடியாது. நீ இப்போ குண்டா தான் இருக்க.” என்றான்.

“உங்க பையனுக்காகச் சாப்பிட்டு தான் இப்படி ஆகிட்டேன்.”

“ஹே…. நான் உன்னைக் கிண்டல் பண்ண சொல்லலை…. நீ பார்த்து இருந்துக்கச் சொல்றேன்.”

“நான் தான் உண்டாகி இருந்தேன் அதனால குண்டானேன். ஆனா நீங்க மட்டும் என்னவாம்?”

“அங்க நம்ம வீட்ல இருந்தா அளவா சாப்பிட்டு, ஜாகிங் போவேன். இங்க உங்க வீட்ல உங்க அம்மா சொன்னாலும் கேட்காம அதிகம் வச்சிடுறாங்க. அப்புறம் நான் என்ன பண்றது? வெளிய எங்கையும் போகாம உன்னைப் பார்த்திட்டு இருந்ததுக்கு நீ சொல்லமாட்ட…”

“சரி விடுங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து வெயிட் குறைச்சிடலாம்.”

“ஆளை விடுமா தாயே…. தலைக்கு மேல வேலை இருக்கு. இதுக்கு மேல இங்க உட்கார்ந்திட்டு இருக்க முடியாது. உன்னால உன்னைப் பார்த்துக்க முடியும். உன் பாட்டி வேற வந்திருக்காங்க. அவங்க குழந்தையைப் பார்த்துப்பாங்க. நான் இன்னைக்குக் கிளம்புறேன்.”

“அதுக்குள்ள போகணுமா யுகி.”

“உன் அம்மாவுக்கு ஏற்கனவே நிறைய வேலை… இதுல நான் வேற இங்க இருந்தா…. அவங்களுக்கு இன்னும் வேலை தான்.”

“எனக்கும் வேலை நிறைய இருக்கு. கோர்ட்டுக்கும் நிறைய நாள் போக வேண்டி இருக்கும். அதெல்லாம் எனக்கு அங்க இருந்தா தான் வசதி.”

“உடம்பை குறைக்கிறேன்னு ஒழுங்கா சாப்பிடாம இருந்திடாதீங்க.”

“என்னைப் பத்தி கவலைப்படாதே… நான் என்னைப் பார்த்துப்பேன்.” என்றவன், அவன் உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.

“வேலையில எங்களை மறந்துடாதீங்க.” என்ற மனைவியிடம் சென்றவன், அவளை அனைத்து,“அதெப்படி மறப்பாங்க. ரெண்டு நாளுக்கு ஒரு தடவை நைட் கண்டிப்பா வரேன்.” என்றவன், கட்டிலில் இருந்த மகனையும் தூக்கி கொஞ்சினான்.

“குழந்தையைத் தூக்கிட்டு நடக்காத. பார்த்து இரு.” என மனைவிக்குப் பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு, இரவு உணவையும் அவர்கள் வீட்டில் முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

சொன்னது போல இரண்டு நாளுக்கு ஒருமுறை மாலை ஏழு மணிக்கு மேல் வந்துவிட்டு, இரவு தாமதமாகத்தான் கிளம்பி செல்வான்.

இரண்டு வாரங்கள் சென்றிருக்கும்,

களைப்பாக இருந்த மனைவியைப் பார்த்த யுகேந்திரன், “என்ன ரொம்பப் படுத்தி வைக்கிறானா.” என்றான்.

நக்ஷத்ராவை முந்திக்கொண்டு அவள் அம்மா ரேகா பதில் சொன்னார். “அப்படி எல்லாம் இல்லை மாப்பிள்ளை. இவன் உங்களை மாதிரி போல… நைட் தூங்க நேரம் ஆனாலும், அழுகிறது எல்லாம் இல்லை. சும்மா முழிச்சிட்டு படுத்திட்டு தான் இருப்பான். இவ எல்லாம் சின்ன வயசுல கத்தி தள்ளிடுவா…” என மாமியார் சொன்னதைக் கேட்டு யுகேந்திரனுக்குச் சிரிப்பு வர… மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டு அடக்கினான்.

கைகால் கழுவிவிட்டு வந்து மகனை தூக்கியவன், “எங்க குட்டி ரொம்பச் சமத்தா…” எனக் கொஞ்ச…

“உங்க பையன் ரொம்பச் சமத்து தான்.” என்றவள்,

“இவன் ஒன்னும் ரொம்பத் தொந்தரவு கொடுக்கிறது இல்ல…. நான் அடுத்த மாசம் நம்ம வீட்டுக்கு வந்திடட்டுமா?” என நக்ஷத்ரா ஆர்வமாகக் கேட்க…. யுகேந்திரன் முடியவே முடியாது என்றுவிட்டான்.

“துணைக்கு ஒரு ஆள் இல்லாம உன்னால அங்க தனியா குழந்தையைப் பார்த்துக்க முடியாது. என்னாலையும் வீட்ல இருக்க முடியாது. அதனால இந்தப் பேச்சே கூடாது.” என்றுவிட்டான்.

கிரிஜா வந்திருந்தால் முடியும். வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் வைத்துகொள்ளலாம். அவர் குழந்தையை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். ஆனால் மீனாவை அவர்தான் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் எப்படிக் கேட்பது? என நினைத்து நக்ஷத்ராவும் விட்டுவிட்டாள்.

அடுத்த வந்த நாட்களில் யுகேந்திரனுக்கு ஒரு மிகப் பெரிய வழக்கு அவனைத் தேடி வந்தது. கீழ் கோர்ட்டில் வேறு ஒரு வக்கீல் வாதாடி தோற்றிருந்த வழக்கு. இப்போது உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய… வழக்கை எடுத்து நடத்த யுகேந்திரனை கேட்டிருந்தனர். அவனும் அந்த வழக்கை எடுத்துக் கொள்வதாகச் சொல்லி இருந்தான். வழக்கு இருக்கும் நாட்களில் டெல்லிக்கும் சென்று வந்து கொண்டிருந்தான்.

“உங்க அப்பா இங்க இருக்கும் போதே ரெண்டு நாளுக்கு ஒரு தடவை தான் வருவாரு… இப்ப பறக்க வேற ஆரம்பிச்சிருக்கார். இனி எத்தனை நாளுக்கு ஒரு தடவை வருவாரோ….” என மகனிடம் சொல்வது போல…. நக்ஷத்ரா கணவனை ஜாடை பேச….

“ஹே… கேஸ் இருக்க அன்னைக்குக் காலையில ப்ளைட்ல போயிட்டு, நைட் ப்ளைட்ல திரும்பி வந்திடுறேன். நான் என்ன அங்க தங்கவா செய்யுறேன்.” என அவன் எந்த நேரத்தில் சொன்னானோ…. அதன் பிறகு அவனுக்கு இன்னும் சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வாதாட கிடைக்க…. வாரத்தில் மூன்று நாட்கள் அங்கேயே தங்கும்படி ஆனது. அங்கேயும் ஒரு சின்ன அலுவலகம் தொடங்கினான்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆகி இருக்க…. யுகேந்திரன் டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்க… இங்கே நக்ஷத்ரா கொதிப்பில் இருந்தாள்.

ஒரு வாரம் சென்று வந்த கணவனைப் பார்த்ததும், தனது மனக்குமுறலை கொட்டவும் செய்தாள்.

“குழந்தை பிறந்த பிறகு இந்த ஆம்பிளைங்களுக்கு மட்டும் எதுவும் மாறுறது இல்லை…. நீங்க உங்க வேலை எல்லாம் எப்பவும் போலப் பார்த்திட்டு இருக்கீங்க. நாங்க பொம்பளைங்க எங்க வேலை எல்லாம் விட்டுட்டு, நாங்க மட்டும் குழந்தையைப் பார்த்துக்கணும்.”

நக்ஷத்ரா பேசியதற்கு யுகேந்திரன் சிரித்துக் கொண்டு தான் இருந்தான். நக்ஷத்ராவின் அம்மா தான். “பின்ன பால் நீதானே கொடுக்க முடியும். அதுவும் நீதானே குழந்தை வேணும்னு சண்டை எல்லாம் போட்டுட்டு வந்த. இப்போ மட்டும் என்ன?” என்று கேட்க….

“அதுக்காக அவளே குழந்தையை எப்பவும் பார்த்துக்னும்னு இல்லை.” என மனைவிக்குப் பரிந்து பேசிய யுகேந்திரன், “எதாவது யோசிக்கலாம்.” என்றான்.

அவர்கள் அறையில் வைத்து, “நீ உன் வேலையையோ இல்ல உன்னோட பேஷனையோ விட்டுடம்னு நான் எப்பவும் நினைச்சது இல்ல நக்ஷத்ரா. உன் உடம்பும் தேரனும் தானே…” என யுகேந்திரன் சொல்ல…

“எனக்கும் இதெல்லாம் தெரியும் யுகி. கூட நீங்க இல்லாதது தான் எனக்கு ரொம்பக் கஷ்ட்டமா தெரியுது. அதனால தான் அப்படியெல்லாம் பேசிட்டேன் விடுங்க.” என்றாள்.

“நீ நம்ம வீட்டுக்கு வந்திடு. நாம குழந்தையைப் பார்த்துக்க வேணா ஆளை ஏற்பாடு பண்ணிடலாம். நான் டெல்லிக்கு போகும் போது, நீ உங்க அம்மா வீட்ல வந்து இருந்துக்கோ.” என யுகேந்திரன் சொல்ல… நக்ஷத்ராவும் இது சரி வருமா என யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் எப்போதும் இங்கேயே இருந்துவிட முடியாதே… அதனால் சரி என்றாள்.

குழந்தையை நம்பி யாரிடமும் கொடுக்க முடியாதே… அதற்கு நக்ஷத்ராவின் அம்மாவே ஒரு தீர்வை சொன்னார். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை அனுப்பி வைப்பதாகச் சொல்ல… பிறகே நக்ஷத்ரா நிம்மதியானாள்.

குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆனதும் பெயர் சூட்டும் விழாவை வைப்போம் என்று இதுவரை அவரவருக்குத் தோன்றிய பெயர்களை வைத்து குழந்தையைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“குழந்தைக்கு என்ன பேர் யுகி?”

“நீதான் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசைப்பட்ட… உன் விருப்பம் தான். நீயே முடிவு பண்ணு.” என்றான்.

அடுத்த வார இறுதியில் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழாவை, இங்கேயே வீட்டிலேயே நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துச் செய்தனர். நக்ஷத்ரா மகனுக்கு ஆதவன் எனப் பெயரிட்டாள்.

விழா முடிந்து நக்ஷத்ரா தன் கணவன் குழந்தையுடன் மாமியார் வீட்டுக்கு சென்று அங்கு ஒரு வாரம் தங்கி இருந்தாள். பிறகு மறுவாரம் இங்கே இவர்கள் வீட்டுக்கு வந்தனர்.

எப்போதும் போல வீட்டு வேலை செய்யும் பெண் இருக்க…நக்ஷத்ராவின் அம்மா அனுப்பிய பெண்மணியும் வந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வதோடு சமையலும் செய்து விடுவார்.

நக்ஷத்ரா காலையில் கணவன் இருக்கும் போதே குளித்து, காலை உணவு அவளே இருவருக்கும் செய்து விடுவாள். வீட்டு வேலை செய்யும் பெண்ணும் அந்த நேரத்துக்கே வந்து வீட்டை சுத்தம் செய்து மற்ற வேலைகளையும் முடித்துவிட்டு சென்று விடுவார்.

சமையல் செய்யும் பெண் பத்து மணிக்கு தான் வருவார். அவர் வந்து குழந்தையைக் குளிப்பாட்டிக் கொடுத்துவிட்டால் போதும், நக்ஷத்ரா தான் மகனை தயார் செய்வாள். குழந்தையைப் பார்த்துகொள்ள ஆள் இருந்தாலும், மகனுக்கு எல்லாம் தானே செய்ய வேண்டும் என்று நினைப்பாள்.

ஆதவன் கொழுக் மொழுக் குழந்தை தான். அதனால் இப்போது நான்கு மாதங்களான பிறகு தான் குப்புற விழவே முயன்று கொண்டிருந்தான். அவனை ஹால் தரையில் பாய் விரித்து அதற்கு மேல் மெத்தை விரித்துத் தான் படுக்க வைத்திருப்பாள். மகன் உறங்கும் நேரம் அலுவலக வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பாள்.

இவர்கள் வீட்டிற்கு வந்தும் ஒரு வாரம் ஆகியிருக்க…. ஆதவனுக்கும் இந்த இடம் பழகி இருந்தது.

Advertisement