Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 12

இருவரும் மீண்டும் சேர்ந்ததில் அவர்களின் பெற்றோருக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி. குழந்தையைப் பற்றி என்ன முடிவு செய்தார்கள் என எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

மறுநாள் இருவரும் அலுவலகத்திற்குச் சேர்ந்து செல்ல… “எனக்கு ஒரு டைவர்ஸ் கேஸ் வரும்னு நினைச்சேன். இப்படிப் பொசுக்குன்னு சேர்ந்துடீங்க.” என பிரதீப் சிரித்துக் கொண்டு சொல்ல….

“உனக்கு ரொம்ப ஆசை தான். அதெல்லாம் கனவுல கூட நடக்காது.” என்றாள் நக்ஷத்ரா. அதைக் கேட்டு மற்றவர்களும் சிரித்தனர்.

ஜனனியின் திருமணம் வெகு அருகில் இருக்க…. அவளுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தாள் நக்ஷத்ரா. ஜனனியின் குடும்பம் அவ்வளவு வசதி கிடையாது. அதனால் என்ன தேவையோ பார்த்துச் செய்யச் சொல்லி யுகேந்திரன் மனைவியிடம் சொல்லி இருந்தான்.

ஜனனியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிய…. இவர்களின் அலுவலகத்தையும் இன்னும் பெரிய இடத்திற்கு மாற்றி, இன்னும் சிலரை இவர்களுக்கு ஜூனியர்களாகச் சேர்த்து என நிறைய மாற்றம் கொண்டு வந்தனர்.

மூன்று வாரங்கள் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் சனிக்கிழமை காலையில் தான் யுகேந்திரன் மருத்துவரை பார்க்க போகலாமா என்று நக்ஷத்ராவிடம் கேட்க… சரி என்றாலும் மருத்துவர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அவள் முகம் மாறவே செய்தது.

காரில் செல்லும் வழியில், ரத்த பசை இல்லாமல் வெளுத்திருந்த மனைவியின் முகத்தைப் பார்த்த யுகேந்திரன், அவள் மனதை திசைதிருப்ப அவன்தான் பேசிக்கொண்டு வந்தான்.

முன்தினமே யுகேந்திரன் முன்பதிவு செய்திருந்தான். ஆனால் நக்ஷத்ராவிடம் எதுவும் சொல்லவில்லை.

இவர்கள் சென்று மருத்துவரை சந்திக்க…. அவர் முடியும் முடியாதென்று எதுவும் சொல்லவில்லை. எல்லாப் பரிசோதனைகளும் செய்து வரட்டும் என்றார்.

நர்ஸ் ஒருவர் வந்து அவளை அழைத்துச் சென்றார். முழு உடற் பரிசோதனை செய்தனர். நக்ஷத்ராவுக்கு எதிலுமே கவனம் இல்லை. அவளுக்கு மருத்துவர் என்ன சொல்வாரோ என்று அதே மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

ரத்த மாதிரி எல்லாம் எடுத்த பிறகு தான். காலுக்கான பரிசோதனை தொடங்கியது.

எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்த பிறகு யுகேந்திரனும் நக்ஷத்ராவும் மருத்துவரை பார்க்க சென்றனர்.

அவர் முதலில் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவர், “குழந்தை உண்டானா ஒரு பத்து கிலோவாவது வெயிட் போடுவீங்க. அதையே ஒரு பதினஞ்சுன்னு வச்சுகிட்டாலும், ஓகே தான். இவங்க இப்ப மெலிவா தான் இருக்காங்க, அதனால பரவாயில்லை. ஆனா நீங்க அஞ்சு மாசத்துல இருந்து ரொம்ப நடக்காம இருந்தா உங்க காலுக்கு நல்லது.”

“பெட் ரெஸ்ட்டா இருக்கனுமா டாக்டர்?” யுகேந்திரன் கேட்க…. ஆமாம் என்றார்.

அதைக் கேட்டு யுகேந்திரனின் முகம் மாறவே செய்தது. “நீங்க இவங்களுக்கு மட்டும் இப்படியான்னு நினைக்காதீங்க. சில பெண்கள் குழந்தை பிரசவிக்கிற வரை படுக்கையிலேயே தான் இருப்பாங்க. குழந்தை வேணும்னு நினைச்சா… கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்.” என்றதும்,

“அது ஓகே… ஆனா நக்ஷத்ரா காலுக்கு ஒன்னும் பிரச்சனை ஆகாது தான…”

“கவனமா இருந்தா ஒன்னும் ஆகாது. ரொம்ப வெயிட்டோட நடந்தா அவங்க காலுக்கும் நல்லது இல்ல தான். அதோட அவங்க தடுமாறி விழுந்து வச்சா குழந்தைக்கும் நல்லது இல்ல… ரொம்பக் கவனமா இருக்கணும். எப்பவும் கூடவே ஒருத்தர் இருக்கணும்.” என்றார்.

“அது பார்த்துக்கலாம்.” என யுகேந்திரன் மனைவியைப் பார்க்க…. அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அவனுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

மற்ற பரிசோதனை முடிவுகளை எடுத்து பார்த்த மருத்துவர், “ஆனா இந்தக் கேள்வியே இப்போ அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்.” என்றதும் இருவரும் மருத்துவரை புரியாமல் பார்க்க…

“நக்ஷத்ரா ஏற்கனவே கர்ப்பமாதான் இருக்காங்க.” என்றதும், இருவருக்கும் நம்ப முடியாத ஆச்சர்யம்.

“ஒரு வாரம் தான் ஆகி இருக்கு. அதுதான் கவனிச்சிருக்க மாட்டீங்க.”

மருத்துவர் முதலில் இதைச் சொல்லி இருந்தால்…. யுகேந்திரனுக்கு மனைவியின் உடல்நிலை குறித்துக் கவலை இருந்திருக்கும். ஆனால் மருத்துவர் முதலில் குழந்தை பெற்றுகொள்வதால் பிரச்சனை இல்லை என்று சொல்லி இருந்ததால்…. அவனுக்கு இரட்டிப்புச் சந்தோஷம் தான்.

இருவரும் மேலும் கேட்க வேண்டியவைகளைக் கேட்டுவிட்டு வெளியே வந்தனர். செவிலியர் அவளிடம் ரத்த பரிசோதனை செய்யும் போது, கடைசியாக எப்போது பீரியட்ஸ் வந்தது என்று கேட்டது இப்போதுதான் அவள் மண்டையில் உரைத்தது. அவள் சொன்ன பிறகு தான் மற்ற பரிசோதனைகளும் செய்து பார்த்திருக்கின்றனர்.

“என் மானமே போச்சு….லேட் டைமிங், டாக்டர் என்ன நினைச்சிருப்பார்?” என யுகேந்திரன் சொல்ல… அதைக் கேட்டு நக்ஷத்ராவுக்குச் சிரிப்புதான்.

“சிரிக்காத கொன்னுடுவேன். அன்னைக்கு நான் கேட்டதுக்கு, இப்போ கர்ப்பமாக வாய்ப்பு இல்லைன்னு நீ சொல்லலை. நீ என்னை ஏமாத்தினியா?”

“ஐயோ யுகி, நான் பொய் எல்லாம் சொல்லலை. நானும் ஆகாதுன்னு நினைச்சு தான் சொன்னேன்.”

“என்னவோ நீ சொல்ற நான் நம்புறேன்.” என்றவனைப் பார்த்து சிரித்தவள், “நான் என்ன டாக்டரா? வக்கீல் தானே…” என்றதும் யுகேந்திரனும் சிரித்தான்.

மருத்துவர் குழந்தை பெற்றுகொள்ளலாம் என்று சொன்ன பிறகு முயன்று இருந்தால் கூட, எப்போது குழந்தை வந்திருக்குமோ தெரியாது. இப்போது இரண்டு சந்தோஷமான விஷயங்களைக் கேட்டதில் இன்னும் நம்ப முடியாத ஆச்சர்யம் தான்.

வீட்டிற்கு வரும் வழிலேயே காரில் இருந்து யுகேந்திரன் அவன் அம்மாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல… அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நக்ஷத்ராவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே….” என்று கேட்க…. இல்ல டாக்டர் குழந்தை பெத்துக்கலாம். ஆனா அஞ்சாவது மாசத்துல இருந்து அதிகம் நடக்காம இருந்துக்கச் சொல்லி இருக்கார்.” என்றதும், சரி அது நாம பார்த்துக்கலாம் எனச் சொல்லிவிட்டு வைத்தார். அதே போல நக்ஷத்ராவும் அவள் அம்மாவை அழைத்துச் சொன்னாள்.

மதிய உணவு நேரம் ஆகி இருக்க, இருவரும் மதிய உணவை வெளியவே முடித்துக் கொண்டனர். வீடு வந்த போது நக்ஷத்ரா மிகவும் களைத்திருக்க… அவள் உடை மாற்றி வந்ததும் யுகேந்திரன் அவளை அனைத்துக் கொண்டான்.

“இப்போ உனக்குச் சந்தோஷமா?”

“ம்ம்….”

“நான்தான் உன்னை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன் தான….”

“இல்லை நான்தான் உங்களைப் படுத்துறேன், இன்னுமே படுத்தி வைப்பேன். டாக்டர் வேற பெட் ரெஸ்ட்டா இருக்கணும்னு சொல்றார்.”

“உன் நல்லதுக்குத்தான் சொல்றார். நீ மட்டும் ஒழுங்கா இல்லைனா நான் டென்ஷன் ஆகிடுவேன் சொல்லிட்டேன்.”

“நீ வேணா உங்க அம்மா வீட்ல இருந்துக்கோ…. அங்க இருந்தா தான் நீ ஒழுங்கா இருப்ப.”

“இப்பவே வேண்டாம். அஞ்சு மாசம் ஆகட்டும். நான் கவனமா இருப்பேன் யுகி.”

“நான் உன்னைக் கவனிச்சிட்டே தான் இருப்பேன். இதுக்கு அப்புறம் இன்னொரு குழந்தைன்னு எல்லாம் தயவு செஞ்சு ஆரம்பிச்சிடாத.”

“இப்பவும் யாரால வந்தது?” என நக்ஷத்ரா சிரிக்க…..

“ஆமாம் நான்தான் கவனமா இருக்கணும்.” என்றான்.

“யுகி எனக்கு ரெண்டு குழந்தையாவது வேணும். நீங்க சொன்னது போல இன்னொரு குழந்தை தத்து எடுத்துக்கலாமா?”

“இப்போ நீ சந்தோஷமா இருக்க…. அதுல இதெல்லாம் பேசுற…. இது, இப்போ ,இப்படி முடிவு எடுக்கிற விஷயம் இல்ல…. உனக்குக் குழந்தை பிறந்த பிறகு உன் மனநிலை எப்படி இருக்குமோ…”

“நாம ஒரு குழந்தை தத்து எடுத்தா …அதை முழு மனசோட செய்யணும். இல்லைனா அது அந்தக் குழந்தைக்கு நாம செய்யுற நியாயம் இல்லை.”

“இப்போ இருக்கிற மனநிலையில எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குழந்தை பிறந்து கொஞ்ச வருஷம் போகட்டும். அப்பவும் உனக்கு இப்படித் தோணினா சொல்லு யோசிக்கலாம்.” என யுகேந்திரன் முடித்துக் கொண்டான்.

நக்ஷத்ராவுக்குக் கணவனைப் பற்றித் தெரியும். அவன் எதையும் உணர்ச்சிவசப்பட்டுச் செய்பவன் இல்லை. அவன் சொல்வதும் உண்மைதான் என்பதால்…. மேலும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை.

நக்ஷத்ரா படுத்து உறங்கிவிட…. யுகேந்திரன் அலுவலக அறையில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை இரு வீட்டினரும் வந்துவிட்டனர்.

வருகிறோம் எனச் சொல்லிவிட்டு வந்தால்…. நக்ஷத்ரா எதாவது வேலையை இழுத்து வைத்துக்கொள்வாள் என்று சொல்லாமல் தான் வந்தனர். அவர்களே வரும் போது உண்ண கொறிக்க எல்லாம் கொண்டு வந்ததால்…. நக்ஷத்ராவுக்கும் வேலை இல்லை.

விருந்தோம்பல் எல்லாம் முடிந்து சாவகாசமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது…. மீனாவுக்கும் பள்ளி விடுமுறை என்பதால்… தான் இரண்டு நாட்கள் மீனாவுடன் இங்கே தங்கிவிட்டுச் செல்வதாகக் கிரிஜா சொல்ல… அது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

மாமியார் தங்கப்போகும் அறையில் போர்வை எல்லாம் நக்ஷத்ரா மாற்றி வைத்தாள். இரவு மீனா இவர்களுடன் படுத்துக் கொண்டாள்.

மீனா எதோ கேட்டுக் கொண்டிருக்க நக்ஷத்ரா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். “மீனு குட்டி நீ இருக்கிறதுனால யுகி அப்பா தப்பிச்சேன்…. இல்லைனா இவ இப்படித்தான் என்னைக் கேள்வியா கேட்டுட்டு இருப்பா.” என்ற கணவனை நக்ஷத்ரா முறைத்தாள்.

மாமியார் இருப்பதால் காலை எழுந்ததும் குளித்துவிட்டு தான் நக்ஷத்ரா சமையல் அறைக்கு வந்தாள். கிரிஜாவும் குளித்துவிட்டு வந்தவர், “என்ன டிபன் சொல்லு நான் பண்றேன்.” என்றார்.

“மாவு இனிதான் அரைக்கணும். பூரி போடலாம்.” என்றவள், பூரிக்கு மாவை எடுத்து அவரிடம் கொடுத்து விட்டு, அவருக்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு, அவள்தான் குருமா செய்தாள்.

யுகேந்திரன் தாமதமாகத்தான் எழுந்து வந்தான்.

மீனா எழுந்ததும் அவளுக்குக் குடிக்கப் பால் கொடுத்துவிட்டு கிரிஜா அவளைக் குளிக்க வைக்க அழைத்துச் சென்றதால்…. நக்ஷத்ரா தேய்த்துக் கொடுக்க… அவன் தான் பூரி போட்டு எடுத்தான்.

மகன் வேலை செய்வதைப் பார்த்து கிரிஜாவுக்கு ஆச்சர்யம் தான்.

“டேய் இதெல்லாம் பண்ற?” என அவர் ஆச்சர்யபட்டு கேட்க….

“வேலையே செய்யலைனாலும் அம்மா சோறு போடுவாங்க. பெண்டாட்டி போடுவாளா?” அவன் சிரிப்புடன் சொல்ல….

“நான் உங்களைச் செய்யச் சொன்னேனா?” என நக்ஷத்ரா கேட்க…

“நீ சொல்லலை தான். ஆனா இனிமே காலம் அப்படித்தான். சமையல்கட்டுப் பெண்களுக்கு மட்டும் இல்ல….” என்றவன், “அம்மா நீங்க முதல்ல சாப்பிடுங்க.” என்றான்.

கிரிஜா அவருக்கும் மீனுவுக்கும் பூரியும் குருமாவும் எடுத்து செல்ல… எல்லாப் பூரிகளையும் சுட்டு முடித்து விட்டு, நக்ஷத்ராவும் யுகேந்திரனும் சாப்பிட உட்கார்ந்தனர்.

மூன்று பூரிகளை நக்ஷத்ரா மெதுவாக உண்டுமுடிக்க… மேலும் ஒரு பூரியை வைத்த கிரிஜா… இப்போ குழந்தை உண்டாகி இருக்க… இன்னும் கொஞ்சம் அதிகம் சாப்பிடு என்றார்.

“மதிய சமையல் நான் பண்றேன். நீ ரெஸ்ட் எடு.” என்றார்.

கிரிஜா டிவி பார்த்துக் கொண்டிருக்க.. நக்ஷத்திரா காய்கறிகளை மட்டும் நறுக்கி வைத்து விட்டாள்.

அவர்கள் அறையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த யுகேந்திரன், “அம்மா வந்திருக்கிறதுனால இன்னைக்குப் பூரி செஞ்ச…. நாம மட்டும் இருக்கும் போது எப்பவும் நீ செய்யுறது போலவே சத்தா, சிம்பில்லா செஞ்சா போதும்.” என்றான்.

அவனுக்கு மனைவி அதிகம் எடை கூடி விடுவாளோ என்று கவலை.

அவன் அவளின் நலனுக்காகத் தான் சொல்கிறான் என்று நக்ஷத்ராவுக்கும் புரிய… “நான் பார்த்துக்கிறேன் யுகி. நீங்க அத்தை முன்னாடி எதுவும் சொல்லிடாதீங்க. அவங்களே இப்போத்தான் நம்ம வீட்ல வந்து தங்கி இருக்காங்க.” என்றாள்.

“அதனாலதான் உன்கிட்ட தனியா சொல்றேன்.”

யுகேந்திரன் தாமதமாகத்தான் அலுவலகம் கிளம்பி சென்றான். கிரிஜா அதற்குள் சமையல் முடித்து மகனுக்கும் உணவை கட்டி கொடுத்துவிட… அவன் சென்றதும் நக்ஷத்ரா அவளும் பழங்களை உண்டு மீனுவுக்கும் கொடுத்தாள்.

“நான் அவளைப் பார்த்துக்கிறேன். நீ கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்கோ… இப்போ ரெஸ்ட் எடுத்தா தான் உண்டு. குழந்தை பிறந்த பிறகு எங்க ரெஸ்ட் எடுக்கிறது.” என்ற மாமியாரை பார்த்து புன்னகைத்தவள், ஹாலில் இருந்த திவானிலேயே படுத்துக் கொண்டாள். மீனு அவள் அருகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது.

இரண்டு நாள் என்றது ஒரு வாரம் வரையில் இருந்துவிட்டுக் கிரிஜா கிளம்பி சென்றார். நக்ஷத்ரா தேவைக்கு மட்டுமே அலுவலகம் சென்றாள். அதே போல முக்கியமான வழக்கு ஒன்றிருக்கு மட்டும் கோர்ட்டுக்கும் சென்று வந்தாள்.

மதிய உணவும் இரவு உணவுக்கும் அவள் வீட்டில் இருந்து சமைத்து வருவதால்… காலை உணவு மட்டும் நக்ஷத்ராவும் யுகேந்திரனுமே செய்து விடுவார்கள். காலை சமையல் அதிகமும் இல்லை.

நக்ஷத்ராவின் பெற்றோர் இவர்களுடன் வந்து இருப்பதற்குக் கூடத் தயாராகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் வீடு என்றால் அவர்களுக்கு வசதி. அதோடு யோகேஸ்வரனுக்கு அங்கே நண்பர்களும் அதிகம். பகல் பொழுதை அவர்களுடன் தான் கழிப்பார்.

யுகேந்திரன் நக்ஷத்ராவை அங்கே செல்ல சொல்ல… அவள் ஐந்து மாதங்கள் ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள்.

யுகேந்திரனின் பகல் பொழுதுகள் அவனின் வேலையில் தான் செல்லும். இரவு வீடு வரவும் ஒன்பது மணி ஆகி விடும். அதனால் காலையில் மனைவியுடன் நேரம் செலவு செய்துவிட்டுத் தாமதமாகத்தான் அலுவலகம் செல்வான்.

மாதாந்திர பரிசோதனைக்கும் அவனே மனைவியை அழைத்துச் சென்று வருவான். ஐந்தாம் மாதத்தில் இருந்து அவள் அம்மா வீட்டில் தான் இருந்தாள். முதல் ஆறு மாதங்கள் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. ஏழாம் மாதத்தில் நக்ஷத்ரா சற்று எடை கூடித்தான் விட்டாள். ஆறாம் மாதத்தில் இருந்து குளிப்பதற்கு, பாத்ரூம் சென்று வர மட்டுமே நடப்பாள். அதுவும் மிகவும் ஜாக்கிரக்தையாகத்தான்.

ஜனனி, நேத்ரா, கிரிஜா என யாராவது ஆள் மாற்றி ஆள் வந்து நக்ஷத்ராவுடன் சிறிது நேரமாவது இருந்துவிட்டுச் செல்வார்கள்.

யுகேந்திரனின் வேலைக்கு அவனாலும் அவளோடு பகல் வேளைகளில் இருக்க முடியாது. படுத்தே இருப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை. உணவு கூடப் படுக்கைக்குத் தான் வரும். அவள் வீட்டில் சமையலில் உதவவும் ஆள் உண்டு. அதனால் அவள் அம்மாவால் சமாளிக்க முடிந்தது. சனி ஞாயிறு யுகேந்திரன் அவளை அழைத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்று விடுவான். அந்த இரண்டு நாட்கள் மனைவிக்கு மட்டும் தான். அவர்கள் இருவருமே சமைத்துக் கொள்வார்கள்.

ஒன்பது மாதத்தில் எல்லாம் நக்ஷத்ரா அவளும் எடை கூடி, வயிறும் பெரிதாக இருந்தது. “எனக்குக் கொஞ்ச நேரமாவது நிற்கணும் யுகி. என்னைக் கொஞ்ச நேரம் நிற்க வைங்க.” என்பாள். யுகேந்திரன் அவளைச் சிறிது நேரம் நேரம் தன் மேல் சாய்த்துக் கொண்டு நிற்க வைப்பான்.

நடக்காமலே இருப்பதால் காலும் மரத்துப் போனது போல இருக்கும். உட்கார்ந்து கொண்டே காலுக்கு எதாவது பயிற்சி செய்வாள். சுடுநீரில் காலை சிறிது நேரம் வைத்திருப்பாள்.

குழந்தைக்காக ஆசைப்பட்டது நக்ஷத்ரா தான். ஆனால் இப்படி அறைக்குள்ளேயே படுக்கையில் படுத்து இருப்பது. மிகவும் கடினமாக இருக்க… சில நேரம் அழுகையாகக் கூட வரும். அவளே இதை ஒழுங்காகப் பெற்று எடுத்தாள் போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.

ஒன்பது மாதங்கள் ஆன பிறகு யுகேந்திரனும் இங்கேயே அவர்கள் வீட்டில் வந்து தங்கிக் கொண்டான். இதுவரை மாலையில் வந்துவிட்டு இரவு அவன் வீடு சென்று விடுவான். வழக்குகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, சிலதை வேற யாரையாவது பார்த்துகொள்ளச் சொல்லிவிட்டு, மனைவியுடன் தான் அதிக நேரம் இருந்தான்.அவன் இருந்ததால்… நக்ஷத்ராவின் அம்மாவுக்கும் வேலை குறைந்தது. 

இவர்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை. மருத்துவர் சொன்ன தேதிக்கு ஒரு வாரம் இருக்கும் போதே…. நள்ளிரவில் நக்ஷத்ராவுக்கு லேசான வலி தொடங்க… அப்போதே மருத்துவமனை சென்று விட்டனர்.

எவ்வளவு சோதனைகளைச் சந்த்திருந்த போதும், அவளுடைய மகன் அவளுக்கு அதிக வேதனை தராமல்…. அதிகாலையே பிறந்து விட்டான்.

படுக்கையிலேயே இருந்ததால்…. அறுவை சிகிச்சை செய்யும்படி ஆகிவிடுமோ எனப் பயந்து கொண்டு இருந்தனர். நல்லவேளை சுகப்பரசவமே ஆனது.

குழந்தை முதலில் அறைக்கு வந்திருக்க…மனைவி அறைக்கு வந்த போது யுகேந்திரன் மட்டுமே அறையில் இருந்தான்.

நக்ஷத்ரா கட்டிலில் வந்து படுத்ததும், அவள் மீது குழந்தையை வைத்தவன், “நீ கேட்டது போல இந்தப் பிறந்த நாளுக்கு உன் மகன் வந்திட்டான். சந்தோஷமா?” என்று கேட்க….

ஹப்பா அதற்குள் எவ்வளவு பாடு என்று நினைத்தாலும், நக்ஷத்ராவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

Advertisement