Advertisement

மதிய உணவு வழக்கம் போல நக்ஷத்ராவின் வீட்டில் இருந்து வர…. எல்லோரும் சாப்பிட வந்துவிட்டனர். யுகேந்திரன் மட்டும் வரவில்லை. நக்ஷத்ரா அவனுக்குத்தான் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.

“அவங்களையும் சாப்பிட கூப்பிடு.” என அவள் பிரசன்னாவை பார்த்து சொல்ல…

“ஏன் உனக்கு வாய் இல்லையா?” என்றவன், யுகேந்திரன் வெளியே கிளம்புவதைப் பார்த்துவிட்டு, “சாப்பிட்டு போ டா…”என்றதற்கு,

“இல்ல மதியம் கோர்ட்டுக்கு போற வேலை இருக்கு. வழியில சாப்பிட்டுக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

நக்ஷத்ரவுக்கு அழுகை முட்டிக்கொண்டு தான் வந்தது. மற்றவர்கள் இருந்ததால் அடக்கிக் கொண்டு இருந்தாள்.

“பாரு உன் பிரண்டு நான் இல்லைனாலும் நல்லா இருக்கேன்னு காட்டிக்கிறாராம்.”

“அவன் ரெண்டு நாளா யார்கிட்டயும் பேசவே இல்லை. இன்னைக்கு உன்னைப் பார்த்ததும் தான் எங்ககிட்டயே பேசி இருக்கான்.” பிரசன்னா சொல்ல…

“ஆமாம் பாஸ் ரெண்டு நாளா சரியே இல்லைன்னு நானும் நினைச்சேன். உங்களுக்குள்ள சண்டையா?” ஜனனி கேட்க…. நக்ஷத்ரா எதுவும் சொல்லவில்லை.

வேறு வழியில்லாமல் யுகேந்திரனுக்கு எடுத்து வைத்ததை அவள் உண்டாள்.

ஒருவாரம் சென்ற பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. இருவரின் பெற்றோருக்கும் எதோ பிரச்சனை எனப் புரிய… இருவரையும் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

“ஏன் அவ அம்மா வீட்லயே இருக்கா” எனக் கிரிஜா கேட்க…

“உங்க மருமகள்கிட்டயே கேளுங்க.” என யுகேந்திரன் முடித்துக் கொண்டான்.

நக்ஷத்ரா ஒருவழியாக அவள் அம்மாவிடம் வாயை திறக்க… அவர் சொல்லித்தான் கிரிஜாவுக்குக் காரணம் தெரியும்.

அவர் நக்ஷத்ராவிடம் பேச…”நீங்க அவங்ககிட்ட சொல்லுங்க அத்தை.” என்றாள்.

“நான் சொல்லி கேட்கிற இடத்தில எல்லாம் அவன் எப்பவுமே இல்லை. அதோட இது உனக்காகத்தானே சொல்றான். நீ அவனை விட்டு பிரிஞ்சு இருக்கிறது தப்பு. நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணுங்க.” என்றார் கிரிஜா.

யுகேந்திரனுக்கு மனைவி இல்லாமல் வீட்டில் இருப்பது அவ்வளவு கடினமாக இருக்க… சாப்பிட கூடத் தோன்றாமல் சோபாவில் படுத்துக்கிடந்தான். அந்த நேரம் அவனின் கல்லூரி தோழன் அழைத்து, “டேய் நம்ம ப்ரண்ட்ஸ் எல்லாம் மூன்னு நாள் இங்க குற்றாலம் வர்றாங்க. நீயும் வரியா? குற்றாலத்துல தான் ரூம் போடுறோம்.” என்றதும், இப்போது மனம் இருக்கும் நிலையில் எங்காவது சென்றால் பரவாயில்லை என இருக்க… அதோடு அவன் உடன்பயின்ற மற்ற நண்பர்களையும் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வருவதாக ஒத்துக் கொண்டான். இந்த வாரம் கோர்ட்டும் விடுமுறை தான்.

வெள்ளிக்கிழமை மாலை நக்ஷத்ராவை பார்க்க நேத்ரா மட்டும் வந்திருந்தாள். விருந்தோம்பல் முடிந்து ஒரே வீட்டில் வாக்கப்பட்டிருந்த இரு பெண்களும் மட்டும் பால்கனியில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.

“நம்ம மாமியார் ஒரு ரெண்டு தடவை உங்க வீட்ல வந்து இருந்திருப்பாங்களா… நக்ஷத்ரா தன் குறையைப் பொருட்படுத்தாம யுகியை அப்படிப் பார்த்துப்பான்னு அத்தனை தடவை சொல்லி இருக்காங்க. ஆனா அவரை விட்டுட்டு வர உனக்கு எப்படி மனசு வந்தது நக்ஷத்ரா?”

“நான் அவர் மேல உயிரையே வச்சிருக்கேன் அது உண்மைதான். யுகியோட எனக்கு எதுவும் முக்கியம் இல்லை. அவரோட அன்பும் என்னோட அன்புக்கு கொஞ்சமும் குறைஞ்சது இல்லை. இத்தனைக்கும் அவர் என்னை முன்னாடி விரும்பினது கூட இல்லை. ஆனா நான் அவரை விரும்பினேன்னு தெரிஞ்சதுல இருந்து, அவர் அன்பை என் மேல பல மடாங்கா கொட்டி இருக்கார்.”

“அவருக்குக் கல்யாணத்துக்கு முன்னாடியே நான் குழந்தை பெத்துக்கிறது கஷ்ட்டம்னு தெரிஞ்சிருந்தும், அதைப் பத்தி பொருட்படுத்தாம எனக்காக என்னைக் கல்யாணமும் செஞ்சிருக்கார்.”

“இப்படி ஒரு கணவர் எல்லோருக்கும் கிடைச்சிட மாட்டாங்க. அது எனக்கும் தெரியும்.”

“யுகியை பேசி எல்லாம் என்னால ஜெயிக்க முடியாது.”

“என் பிரிவு கொஞ்சமாவது அவரை அசைக்காதான்னு ஆசை தான்.” நக்ஷத்ரா சொல்லி முடிக்க…

“இதுல நாங்க யாரும் உனக்குச் சப்போர்ட் பண்ண முடியாது. நாளைக்கு உன்னால நடக்க முடியாம போனா… அதுக்கு நாங்களும் காரணம் ஆவோம்.”

“எனக்குப் புரியுது. ஆனா இதுல என்னோட தப்பு என்ன நேத்ரா. யாரோ என் காலை முடமாக்கினதுக்கு, நான் என் தாய்மையை ஏன் இழக்கணும்? எனக்கு யுகியோட குழந்தையை நானே பெத்து எடுக்கனும்னு ஆசை இருக்காதா?” நக்ஷத்ரா கண்ணீருடன் கேட்க….

அவளை அனைத்துக் கொண்ட நேத்ரா, “உன் பக்கம் நியாயம் புரியாம இல்லை டா…. எங்க எல்லோருக்கும் நீ ரொம்ப முக்கியம். அதையும் புரிஞ்சிக்கோ.” என்றாள்.

“ம்ம்…இந்த வாரம் யுகி அங்க வீட்டுக்கு வருவாரா… நானும் வரேன்.” நக்ஷத்ரா சொல்ல… அவளை அதிசயமாகப் பார்த்த நேத்ரா, “யுகி அண்ணா ஊர்ல இல்லையே…. குற்றாலம் போயிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க.” என்றாள். நக்ஷத்ராவின் முகம் நொடியில் மாறிப் போய்விட்டது.

தன்னிடம் சொல்லிக் கொண்டு கூடச் செல்லவில்லை என நினைத்தவள் நேத்ரா கிளம்பியதும், அழைத்தது கணவனைத்தான்.

”என்கிட்டே சொல்லாம நீங்க எப்படி வெளியூர் போவீங்க?” என அவள் சண்டை பிடிக்க…

“என்னை விட்டு போனவகிட்ட எதுக்குச் சொல்லணும்? என்னைப் பார்த்து பார்த்து கவனிச்சிட்டு, உனக்கு ஒத்துவரலைனதும் விட்டுட்டு போயிட்டட இல்ல….இதுக்குதான் என்னை விரும்பி கல்யாணம் பண்ணியா?”

“இப்போ என்ன ஆச்சு யுகி?”

“நான் பைத்தியம் ஆகலை அதுதான் குறை. இங்க கிளம்பி வந்துட்டேன். ஆனா என்னால என் ப்ரண்ட்ஸ் கூடச் சகஜமா இருக்க முடியலை… ரூம்ல தனியா படுத்திருக்கேன்.” என்றான் வலி நிறைந்த குரலில்…

கணவனின் பேச்சும் குரலும் நக்ஷத்ராவை பாதிக்க…. அவளும் இறங்கி வந்தாள்.

“சரி சாரி… நீங்க எதையும் யோசிக்காதீங்க. நீங்க இந்த வந்ததும் நான் நம்ம வீட்டுக்கு வந்திடுறேன். இப்போ உங்க ப்ரண்ட்ஸ் கூட ஜாலியா இருங்க.”

“நிஜமா வர முடிவுல இருக்கியா? இல்ல பொய் சொல்றியா? உண்மையான வக்கீல் நீ தான்டி.”

“எனக்கு மட்டும் உங்களை விட்டுட்டு இருக்கக் கஷ்ட்டமா இல்லையா?”

“அது எனக்குத் தெரியாது. உன்னைப் பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரிதான் இருக்கு.”

“அது ஜனனி கல்யாணம். அதனால அவளோட சுத்திட்டு இருந்தேன்.”

“ஆனா நீ இன்னொரு தடவை வீட்டை விட்டுப் போய்ப் பாரு தெரியும்.”

“இல்லை யுகி போக மாட்டேன். நாம ரெண்டு பேசி முடிவு பண்ணலாம்.”

“அப்போ நீ இன்னும் நான் சொல்றதை கேட்கிறதா இல்லை.”

“அப்படி இல்லை…”

“சரி நான் உன் வழிக்கே வரேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய் டாக்டரை பார்ப்போம். அவர் சொல்லட்டும் நீ குழந்தை பெத்துக்கலாமா இல்லையான்னு….”

“சரி நம்ம டாக்டர் தானே நான் முன்பதிவு பண்ணி வச்சிடுறேன்.” என நக்ஷத்ரா ஆர்வமாகச் சொல்ல…

“வேண்டாம், நீ அவரை எப்படிப் பேசியே ஏமாத்துவேன்னு எனக்குத் தெரியும். வேற டாக்டரை பார்ப்போம்.” என்றான்.

எப்படித்தான் நம்ம திட்டத்தை எல்லாம் கண்டுபிடிக்கிறானோ என நினைத்தவள், சரி நீங்களே பாருங்க என்றாள். இந்த அளவுக்காவது கணவன் இறங்கி வந்ததில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்.

மனைவியிடம் மனம்விட்டு பேசிய பிறகு தான். யுகேந்திரன் நல்ல மனநிலைக்கு வந்தான். அவன் அறையில் முகம் கழுவிக்கொண்டு நண்பர்கள் இருந்த அறைக்குச் சென்றவன், இரவு வரையில் அவர்களுடன் தான் இருந்தான். காலையில் ஒரு சில அருவிகளுக்குச் சென்று வந்திருந்தனர்.

பிறகு அவனே தனக்குச் சென்னையில் முக்கியமான வேலை இருப்பதால்…. இன்று இரவே கிளம்புவதாகச் சொல்ல…

அவன் இவ்வளவு தூரம் வந்ததே பெரிது என்பதால்… நண்பர்களும் புரிந்து கொண்டு சரி என்றார்.

அன்று இரவே சென்னை செல்லும் பேருந்தில் கிளம்பி விட்டான். சனி ஞாயிறு விடுமுறையை மனைவியுடன் கழிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் உடனே கிளம்பி இருந்தான்.

இரவு தாமதமாகக் கிளம்பியதால்… அவன் காலையில் வந்து சேர தாமதமாகிவிட்டது. வீட்டுக்கு சென்று குளித்துக் கிளம்பி பிறகு மனைவியை அழைக்கலாம் என நினைத்து சென்றால்… வீட்டின் கதவு திறந்தே இருந்தது.

கணவன் வருவதற்குள் வேலை செய்யும் பெண்ணை வைத்து வீட்டை சுத்தம் செய்து வைத்து விடலாம் என நேத்ரா காலையிலேயே வந்திருந்தாள்.

“நீ இல்லாம சார் எதுவும் வாங்கிச் சாப்பிட்டதாவே தெரியலை மா… காபி கப்பு மட்டும் தன் கழுவுறதுக்கு இருக்கும். நான் வீட்டை மட்டும் சுத்தம் செஞ்சிட்டு கிளம்பிடுவேன்.” எனச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

“என்னைக் கூட விடுவான். ஆனா இந்தக் காபியை விடமாட்டான்.” என நினைத்தவள் தனக்குள் சிரித்துகொள்ள… அவள் எதிரில் திடிரென்று வந்து நின்ற கணவனைப் பார்த்ததும், அவளுக்கு ஆனந்த அதிர்ச்சி தான்.

ஆச்சர்யம் தாங்காமல், “ என்ன அதுக்குள்ள வந்துடீங்க?” என அவள் கேட்க…

“வரணும்னு தோனுச்சு வந்துட்டேன்.” என்றான்.

வீட்டில் வேலை செய்யும் பெண் இருந்ததால்…. இருவரும் அடக்கியே வாசித்தனர்.

“நான் குளிச்சிட்டு வரேன்.” என அவன் அறைக்குள் செல்ல… பணிப்பெண் எப்போது செல்வாள் என்று நக்ஷத்ராவுக்கு இருந்தது.

வேலை செய்யும் பெண் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பியதும், அவள் அவர்கள் அறைக்குச் செல்ல… யுகேந்திரன் அப்போதுதான் குளித்துவிட்டு வந்து துண்டை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி பார்த்து தலைவாரிக் கொண்டு இருந்தான்.

அப்படியே சென்று கணவனைப் பின்னால் இருந்து அவள் இறுக அணைத்துக்கொள்ள… அவன் உடலின் குளிர்ச்சி அவள் தேகத்தையும் குளிர செய்ய…. யுகேந்திரனும் திரும்பி மனைவியை அனைத்துக் கொண்டான்.

கணவன் மேலும் முன்னேறாமல் இருப்பதைப் பார்த்து நக்ஷத்ரா நிமிர்ந்து அவனைப் பார்க்க…

“சுத்தமா தெம்பு இல்லை… பசிக்குது.” என்றான்.

இவள் இருக்கும் போது வாங்கிப் போட்ட மளிகை சாமான்கள், காய்கறிகள் சிலதும் இருந்தது. பால் தான் இல்லை. பிரசன்னா வீட்டிற்கு அழைத்துக் கேட்க… ப்ரியா கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றாள்.

முதலில் கணவனுக்குக் காபி கலந்து கொடுத்தவள், பிறகு இருப்பதை வைத்து உப்புமா கிளறினாள்.

கணவன் உண்ணும்போது, “இன்னைக்கே ஹாஸ்பிடல் போகனுமா?” அவள் பதைபதைப்புடன் கேட்க….

“இப்போ உடனே எல்லாம் போக வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். ஜனனி கல்யாணம் வேற வருதே… அதெல்லாம் முடியட்டும்.” என்றான்.

நக்ஷத்ராவுக்கும் சரி என்றே தோன்றியது.

அந்த இரண்டு நாளும் கணவனும் மனைவியும் வீட்டில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை. நடுவில் பிரிந்திருந்த இரண்டு வாரங்களை ஈடு செய்ய முயன்று கொண்டிருந்தனர்.

Advertisement