Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 11

பொருளாக எதுவும் கேட்கமாட்டாள் என யுகேந்திரனுக்கும் தெரியும். ஆனால் எங்காவது அழைத்துச் செல்ல சொல்லுவாள் .இரண்டாவது தேன்நிலவு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என நினைத்திருந்தான்.

“இந்தப் பிறந்த நாளுக்கு, நீங்களே எனக்குப் பெரிய பரிசு தான் யுகி. ஆனா என்னோட அடுத்தப் பிறந்த நாளுக்குள்ள நம்ம பாப்பா நம்ம கையில இருக்க மாதிரி பார்த்துகிட்டா போதும். எனக்கு அது மட்டும் தான் வேணும்.” என அவள் அழுத்தம் திருத்தமாகக் கேட்க…. இதை எதிர்பார்காததால் யுகேந்திரன் திகைத்து தான் போனான்.

“ஹே இப்போ என்ன எப்ப பாரு குழந்தை குழந்தைன்னு நச்சரிக்க ஆரம்பிச்சிட்ட.” என அவன் சமாளிக்கவே முயன்றான்.

“எனக்கு என்ன வேணும்னு கேட்டீங்க. நான் சொல்லிட்டேன்.” என்றாள்.

“சரி அது அப்புறம் பார்த்துக்கலாம். நாம இப்போ இந்தப் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுறதுன்னு பார்க்கலாம்.” என்றவன், நக்ஷத்ராவுடன் மாலத்தீவு சென்று அங்கு அவளது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடிவிட்டு வந்தனர்.

ஜனனிக்குத் திருமணம் நிச்சயம் ஆகி இருக்க… மாப்பிள்ளையும் சென்னை தான் என்பதால்…. ஜனனி வேலைக்கு வருவதைத் தொடர்வதாக இருந்தாள்.

நக்ஷத்ரா மீண்டும் குழந்தையைப் பற்றிப் பேச்சை எடுக்க…. அவளிடம் யுகேந்திரன் தெளிவாகப் பேசிவிட நினைத்தான்.

“உன் கால் இப்படி இருக்கும் போது, என்னால அதுல ஒரு பாரத்தை எத்த முடியாது. உடம்புல எடை கூடிட கூடாதுன்னு சாப்பாடு கூடக் கொறிக்கத்தான் செய்யுற… இதுல குழந்தயை எப்படிச் சுமப்ப?”

“அது என்பாடு என்னால முடியும்.”

“அப்படியெல்லாம் விட முடியாது. நீயே பெத்து எடுத்தா தான் குழந்தையா என்ன?”

“தத்து எடுக்கலாம், இல்லைனா வாடகை தாய் மூலமா முயற்சி பண்ணலாம். எப்படின்னு நீயே முடிவு பண்ணு.”

“யுகி என்னால முடியாதுன்னு நீங்களா எப்படி நினைக்கிறீங்க?

“நானா நினைக்கலை புரியுதா… அன்னைக்கு ஹாஸ்பிடல் போயிருந்தோமே ,அப்போ டாக்டர் தான் சொன்னார். நீ குழந்தைன்னு உண்டானா உன்னால நடக்க முடியாம கூடப் போகலாம்னு.”

அதைக் கேட்டதும் அதிர்ச்சியானவள், “இது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் உங்களைக் கல்யாணம் பண்ண நினைச்சிருக்கவே மாட்டேன்.” என்றவள் அழுது கரைய….

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த விஷயம் தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணேன். இதுக்கு எதுக்கு நீ இப்போ அழற. இப்பவும் சொல்றேன் குழந்தைக்கு நிறைய வழி இருக்கு.”

“உங்களை மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது.”

“நக்ஷத்ரா கொஞ்சம் அறிவோட பேசு…. கல்யாணம் பண்ண எல்லோருக்கும் குழந்தை பிறக்குதா…. அப்படி இருந்தா என்ன பண்ணி இருப்ப? இப்பவும் நமக்கு அப்படி இருக்காதுன்னு என்ன நிச்சயம்? சும்மா நீயா எதையாவது பேசக்கூடாது.”

“அது வேற இது வேற யுகி. உண்மையிலேயே பிரச்சனை இருந்தா அது வேற… மனசு அதை ஏத்துக்கும். ஆனா இங்க நான் தானே பிரச்சனையே. எனக்கு இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா…. நான் முல்லையைப் போகவே விட்டிருக்க மாட்டேன்.” என நக்ஷத்ரா எதையெதையோ பேச… யுகேந்திரனுக்குக் கோபம் வந்துவிட்டது.

“முல்லையைப் போக விடாம என்ன பண்ணி இருப்ப? நீ சொல்றதை எல்லாம் கேட்டுட்டு ஆடுவேன்னு என்னை நினைச்சிட்டு இருக்கியா?”

“இல்ல பிரச்சனைன்னு வந்தா விட்டுட்டு போற ஆளா நான்.”

“உனக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது?”

“நாம படிச்சிருக்கோம், சமுதாயத்துல ஒரு முன்னோடியா இருக்கணும். நாமே பிற்போக்குத் தனமா சிந்திக்கக் கூடாது.”

“ஆமாம் எனக்கு அறிவு இல்லை… உங்களுக்குதான் இருக்கு. டாக்டர் சொன்னதை நீங்க என்கிட்டே சொல்லி இருக்கனுமா வேண்டாமா?”

“எனக்குத் தெரிஞ்ச நக்ஷத்ரா ரொம்பத் தைரியமான பொண்ணு. நீ இதுக்கு இவ்வளவு எமொஷினால் ஆவேன்னு நான் நினைக்கலை.”

“குழந்தை என்ன கடையில விற்கிற பொருளா? அதை எப்படியும் கொண்டு வர…”

“நக்ஷத்ரா இதை நீ பேசக் கூடாது. குழந்தை இல்லாத பெண்கள் இன்னும் இந்தச் சமுதாயத்துல எப்படிக் கஷ்ட்டபடுத்தபடுறாங்கன்னு நமக்கு நல்லா தெரியும்.”

“எந்த முறையில குழந்தை பெத்துக்கிட்டாலும், அது அவங்க குழந்தை தான். குழந்தை எல்லாம் தம்பதிகளோட தனிப்பட்ட முடிவு… அதுல தலையிட யாருக்குமே உரிமை இல்லை.”

“நான் பேசினது தப்பு தான் யுகி. ஆனா என்னால முடியும். அதுதான் சொல்ல வரேன்.”

“எனக்கு நமக்குக் குழந்தையே இல்லைனாலும் ஓகே தான். இந்தப் பேச்சை இதோட விட்டுடு நக்ஷத்ரா.” எனக் கணவன் சொன்னதும் நக்ஷத்ராவுக்கு அப்படி ஒரு கோபம், ஹால் சுவற்றில் இருந்த கைப்பிடியை பற்றியபடி எழுந்து நடந்து அவர்கள் அறைக்குள் சென்று விட்டாள்.

வீடு முழுக்கவே நக்ஷத்ரா பிடித்துக் கொண்டு நடக்க வசதியாக, சுவற்றில் வரிசையாக உருளை கம்பி போலக் கைப்பிடி அமைத்திருந்தனர். நக்ஷத்ரா வீட்டில் கூடக் குளியல் அறையில் மட்டும் தான் இருக்கும். ஆனால் இங்கே மனைவிக்காக யுகேந்திரன் வீடு முழுக்கவே செய்திருந்தான். மற்றவர்களுக்கு அதுவும் ஒரு டிஸைன் போலத்தான் இருக்கும்.

அதன் பிறகு அலுவலகம் சென்றாலும் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர். வீட்டில் இருந்த நேரம் மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் தான்.

“ஒரு குழந்தைக்காக என்னைக் கெஞ்ச வைக்கிறீங்க இல்ல….” என நக்ஷத்ரா அழுகையை அடக்கிக் கொண்டு கேட்க…. யுகேந்திரனுக்கு மிகவும் கஷ்ட்டமாகப் போய்விட்டது.

“உன் நல்லத்துக்குத்தான் சொல்றேன்.” என்றான் மிகுந்த வலியோடு.

“டாகடர் என்னால நடக்கக் கூட முடியாதுன்னு தான் சொன்னார். நான் நடக்கலை.”

“எதோ உங்களுக்கு மட்டும் தான் என் மேல அக்கறை இருக்க மாதிரி. எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியாதா?” என நக்ஷத்ரா கோபத்தில் பேச….

அவள் முன்னால் தான் இருந்தால்… அவள் இன்னும் டென்ஷன்தான் ஆவாள் என நினைத்து யுகேந்திரன் கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

தன்னோடு பேச பிடிக்காமல் சென்றான் என்ற கோபத்தில், அவன் வருவதற்குள் நக்ஷத்ரா கிளம்பி அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

யுகேந்திரன் இரவு தாமதமாகத்தான் வீடு திரும்பினான். அவன் வந்து பார்த்த போது நக்ஷத்ரா வீட்டில் இல்லை. அவள் கைபேசிக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை. பிரசன்னாவின் வீட்டில் இருக்கிறாளோ என்று அங்குச் சென்று பார்க்க… அவள் அங்கேயும் இல்லை.

இவனோடு வீடு வரை வந்த பிரசன்னா, “உன்கிட்ட சொல்லாம அப்படி எங்க போவா? எதாவது சண்டையா?” என்று கேட்க யுகேந்திரன் பதில் சொல்லாமல் இருக்க…. கணவன் மனைவிக்குள் செல்வது நாகரிகமும் இல்லையே… அதனால் பிரசன்னா மேலும் கேட்கவில்லை.

பிரசன்னா அவன் வீட்டிற்கு வந்த பிறகு நக்ஷத்ராவை அழைக்க…. அவள் எடுத்ததும்,

“எருமை எங்க இருக்க?” எனக் கேட்க…

“நான் எங்க வீட்ல இருக்கேன்.” என்றாள். “அதைச் சொல்லிட்டு போக மாட்டியா யுகி இங்க வந்து பார்த்திட்டு போறான்.” என்றவன்,

“என்ன சண்டைன்னு எனக்குத் தெரிய வேண்டாம். ஆனா இப்படி அவன்கிட்ட சொல்லாம போனது தப்பு தான்.”

“அவன் முகமே சரியில்லை.”

“எப்பவும் உன் ப்ரண்ட் இஷ்ட்டதுக்கே ஆட முடியாது.” எனச் சொல்லிவிட்டு நக்ஷத்ரா வைத்துவிட்டாள்.

“என்னது அவன் இஷ்ட்டத்துக்கு இவ ஆடுறாளா…. வேலை விஷயத்தைத் தவிர மத்த நேரம் எல்லாம் இவ சொல்றதை தான் அவன் கேட்கிறான். என்ன கொடுமை டா இது.” எனப் பிரசன்னா மனைவியிடம் புலம்பினான்.

“உங்க ப்ரண்டை பார்த்து கத்துக்கோங்க.” என அவள் பிடித்துக் கொண்டாள்.

இந்த நேரத்தில் யோகேஸ்வரனை தொந்தரவு செய்ய வேண்டுமா என யுகேந்திரன் யோசிக்க….

தான் பிறந்த வீட்டில் இருப்பதாக நக்ஷத்ரவிடம் இருந்து கைபேசிக்கு தகவல் வர…. யுகேந்திரன் அவளை மீண்டும் அழைத்தான். இப்போ நக்ஷத்ராவும் எடுத்தாள்.

அவள் எடுத்ததும், “நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு உனக்குப் புரியுதா?” என்றதற்கு,

“என் பேச்சுக்கு, என் விருப்பத்துக்கு, என் ஆசைக்கு மதிப்பில்லாத இடத்தில நான் எதுக்கு இருக்கணும்?”என அவள் கேட்க…

“நீ என்னை அவ்வளவு தான் புரிஞ்சு வச்சிருக்கேனா….நான் என்ன சொல்றது. நீயா தான் போன… நீயே தான் திரும்பி வரணும்.” எனச் சொல்லிவிட்டு யுகேந்திரனும் வைத்து விட்டான்.

இன்னும் அவன் சொன்னதில் இருந்து இறங்கி வருவதாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டவள், நானும் வரமாட்டேன் என நினைத்துக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள். மூன்றாம் நாள் அவள் அம்மா மெதுவாகக் கேட்டுப் பார்த்தார்.

“மாப்பிள்ளை சாப்பாடுக்கு என்ன பண்ணுவார்? இங்கேயும் வரலை.” என்றதும்,

“உங்க மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடி சாப்பிடாம இருந்தாரா?” என் இவள் பதில் கேள்வி கேட்க…

“உனக்கு ரொம்பத் திமிர். நீ இருக்கும் போது அவர் ஏன் டி வெளியே சாப்பிடனும்?”

அவள் அம்மா கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நக்ஷத்ரா முறைத்துக் கொண்டு இருந்தாள்.

மறுநாள் அவள் அலுவலகம் செல்ல… யுகேந்திரன் சற்றுத் தாமதமாகத்தான் வந்தான். மனைவி இருப்பதைப் பார்த்ததும் அவன் முகம் மலரவே செய்தது. அதைக் கவனித்த பிரசன்னா, “என்ன டா உன் விடுதலை முடிவுக்கு வந்திடுச்சு போல…” என்றதும், புரிந்து கொண்டவன், “ஆமாம் ரெண்டு நாள் திரும்பப் பாச்சிலர் வாழ்க்கைக்குப் போன மாதிரி தான் இருந்தது. நினைச்சது சாப்பிட்டேன், நினைச்சது செஞ்சேன்.” என்றான் மவனியை வெறுப்பேற்றுவது போல…

“உண்மையிலேயே நீ பாவம் தான் யுகி. எங்களுக்காவது வீட்ல மட்டும் தான். உனக்கு வேலைக்கு வந்த இடத்திலேயும் சுதந்திரம் இல்லை.”

அதுவரை அவர்கள் பேசியது காதில் விழாதது போல இருந்த நக்ஷத்ரா திரும்பி யுகேந்திரனை முறைத்தவள், “உங்க பேச்சிலர் வாழ்க்கை இன்னும் முடிவுக்கு வரலை… நீங்க என்ஜாய் பண்ணுங்க.” என்றதும், யுகேந்திரன் சிரிக்கவே செய்தான்.

Advertisement