Advertisement

“நீ பார்த்துக்கோ.” என நக்ஷத்ராவிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையில் இருந்து சென்று விட்டான்.

“என்ன விஷயமா வந்தீங்க சொல்லுங்க, முதல்ல உங்க பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க.” என நக்ஷத்ரா கேட்க….

“என் பேரு மாணிக்கம், ஊர் கன்னியாகுமரி பக்கம். இவ என் பொண்ணு பேரு ஸ்ருதி. இங்க சென்னையில் தான் வேலை பார்க்கிறா….” அதற்கு மேல் பேச முடியாமல் அந்தப் பெரியவர் தயங்க….

“எதுனாலும் சொல்லுங்க பார்த்துக்கலாம்.” என்றாள் நக்ஷத்ரா.

“எங்களுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு பிறந்தவ… எனக்கும் என் பொண்டாட்டிக்கும் வயசு அதிகம். உடம்பும் முடியறது இல்ல… அதனால பொண்ணு இங்க எப்படி இருக்கான்னு பார்க்காம விட்டுட்டுட்டோம். நம்ம பொண்ணு நல்லாத்தான் இருப்பான்னு ஒரு நம்பிக்கை. ஆனா இங்க இந்தப் பொண்ணு என்னென்னமோ செய்திட்டு இருந்திருக்குன்னு தெரியாம, நாங்க அங்க இருந்திருக்கோம்னு இப்போ தான் புரியுது.”

நக்ஷத்ரா எதுவும் குறுக்கிடாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க… “மிச்சத்த நீயே சொல்லு.” என்றார் அந்தப் பெரியவர் மகளைப் பார்த்து. அந்தப் பெண் வெகுவாகத் தயங்க….

“என்ன லிவிங் டு கெதரா?” என நக்ஷத்ரா சரியாக யூகிக்க….

ஆமாம் என்று அந்தப் பெண் தலையை அசைத்தவள், “அருணை எனக்குப் பிடிச்சிருந்தது. எப்படியும் என்னைக் கல்யாணம் செஞ்சுப்பாருன்னு நான் நம்பினேன்.” என்றாள்.

“இங்க சென்னையில ப்ரண்ட்ஸ் கூட இருக்கேன்னு தான் சொல்லி இருந்தா… எங்களுக்கும் இங்க வந்து பார்க்க முடியலை… இவ தான் எப்பவோ ஒருதடவை ஊருக்கு வருவா… கேட்கும் போதெல்லாம் வேலை வேலைன்னு சொல்லும். ஆனா இப்படின்னு எங்களுக்குத் தெரியலை…”

“லிவிங் டு கெதர்ன்னா உங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை… பிடிச்சிருக்க வரை சேர்ந்து இருக்கிறது… பிடிக்கலைனா பிரிஞ்சு போறதுன்னு பேசி வச்சு தான் சேர்ந்து வாழ ஆரம்பிச்சிருப்பாங்க. சட்டபடியான அங்கீகாரம் இல்லைனாலும், சட்டபடி தப்பும் இல்லை. அதனால அதைக் காரணமா வச்சு அந்தப் பையனை கல்யாணத்துக்கு வற்புறுத்த முடியாது.”

“இதெல்லாம் எனக்கு இப்போதான் தெரியும். ஆனா இப்போ குழந்தை வந்திடுச்சே…. அதை என்ன பண்றது?”

“அந்தப் பையனை கேட்டா… குழந்தைக்கு நான் பொறுப்பெடுக்க முடியாதுன்னு சொல்றான். கல்யாணத்துக்கும் சம்மதிக்க மாட்டேங்கிறான்.”

“குழந்தையைக் கலைச்சு வேற ஒரு பையனை பார்த்துக் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அதை ஒரு தகப்பனா என்னால செய்ய முடியாது.” என்றார் மாணிக்கம் மிகவும் வருத்தமாக. ஆனால் உண்மையில் சில பெற்றோர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.

“சட்டபடி போகணும்னா… கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்தி இருந்தா தான் போக முடியும். அதனால அவுட் ஆப் கோர்ட் பேசி பார்க்கலாம். நீங்க இன்னைக்கு நைட் ஒரு ஏழு மணிக்கு மேல அந்தப் பையனோட ஆபீஸ் வந்திடுங்க. அங்க வச்சு பேசி பார்க்கலாம்.”

நக்ஷத்ரா பேசியதை கேட்டதும் மாணிக்கத்திற்கு நம்பிக்கை வந்தது.

“பேசி பார்க்கலாம், ஆனா விருப்பம் இல்லாம கல்யாணம் செஞ்சுகிட்டாலும் பின்னாடி எப்படி இருப்பாருன்னு சொல்ல முடியாது.” என அதையும் நக்ஷத்ரா சொல்லிவிட…

“இல்ல அவங்களுக்கு என்னைப் பிடிக்கும். அவங்க வீட்டுக்குத்தான் பயப்படுறாங்க.” என்றாள் ஸ்ருதி.

“பார்த்தியா… இப்போ பாதிக்கபட்டது யாரு…. இதெல்லாம் நமக்கு, நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமான்னு யோசிக்கணும். உனக்கு அந்தப் பையன் மேல காதல், அதனால அவன் சொன்னதுக்கு எல்லாம் சரின்னு ஒத்துகிட்டு போய் இப்போ எங்க வந்து நிற்குது பாரு.”

அவளிடம் இருந்து அருணும் அவளும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இன்னும் மற்ற தேவையான விவரங்களை நக்ஷத்ரா வாங்கி வைத்துக் கொண்டாள்.

“எனக்குப் பணம் பிரச்சனையே இல்லை… ஆனா மானத்தோட வாழணும்னு நினைக்கிறேன்.” என்றவர் எவ்வளவு கட்டணம் எனக் கேட்க….

“நீங்க இன்னைக்கு ஆபீஸ் வருவீங்க இல்ல… அங்க சொல்வாங்க.” எனச் சொல்லி நக்ஷத்ரா அவர்களை அனுப்பி வைத்தாள்.

யுகேந்திரன் அலுவலகம் செல்ல கிளம்பி இருக்க…. நக்ஷத்ரா வந்ததும் இருவரும் காலை உணவை உண்டுவிட்டு, ஒன்றாகவே அலுவலகம் சென்றனர். செல்லும் வழியில் தான் நக்ஷத்ரா ஸ்ருதியை பற்றிச் சொன்னாள்.

மாலை மாணிக்கம் வந்து பணம் கட்டிவிட்டு, அவரும் ஸ்ருதியும் அருணுக்காகக் காத்திருக்க,அவன் வரவே இல்லை. இவர்கள் அழைத்தாலும் எடுக்கவில்லை. அவர்களை மறுநாள் வரசொல்லி அனுப்பி வைத்த நக்ஷத்ரா, அருனின் கைபேசிக்கு அழைத்து, தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசினாள்.

“அருண் உங்களை யாரும் நிர்பந்திக்கப் போறது இல்லை. கொஞ்ச நேரம் வந்து பேசிட்டு மட்டும் போங்க.” என்றதற்கு அருண் வர மறுக்க…

“சரி அப்போ கோர்ட்ல இருந்து நோட்டீஸ் வரும்.” என்றதும்,

“மேடம் நீங்க என்னை லீகலா ஒன்னும் பண்ண முடியாது.”

“யாரு சட்டபடி போகப் போறா… நீங்க அந்தப் பெண்ணைக் காதலிச்சு ஏமாத்தினதா தானே சொல்லப் போறோம். அதோட எங்ககிட்ட அதற்கான ஆதாரமும் இருக்கு.” என்றதும், அருண் மறுநாள் வர ஒத்துக் கொண்டான்.

மறுநாள் அருண் வந்துவிட, அவனோடு ஸ்ருதியை மட்டும் வைத்துக் கொண்டு நக்ஷத்ரா பேசினாள்.

“உங்களுக்கு ஸ்ருதி மேல காதலே இல்லையா… காதல் இல்லாமத்தான் சேர்ந்து இருக்கக் கேட்டீங்களா….”

“பிடிச்சிருந்தது உண்மை தான். ஆனா அப்போவே இதுல லவ் இல்லை…. கல்யாணம் இல்லைன்னு சொல்லித்தான் சேர்ந்து இருக்கக் கேட்டேன்.”

“ஆனா ஸ்ருதி உங்க மேல லவ் இருந்ததே… அது உங்களுக்குத் தெரியாதா…” என்றதும் அருண் தயங்க….

“நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு ஸ்ருதியும் இல்லை அவங்க குடும்பமும் இல்லை. அந்தப் பொண்ணு நீங்க எப்படியும் கல்யாணம் பண்ணிபீங்கன்னு நம்பி இருந்திருக்கா…”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

“நாளைக்கு உங்க குழந்தை தான் அப்பா பேரு தெரியாத…. சட்டபடியான அங்கீகாரம் இல்லாத குழந்தையா பிறக்க போகுது. அது உங்களுக்கு ஓகேவா…”

“எங்க வீட்ல தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகும் மேடம்.”

“அப்படிக் குடும்பத்துக்குப் பயப்படுறவர் எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? உண்மையிலேயே அதுதான் காரணமா? இல்ல ஸ்ருதியை கைகழுவ சொல்றீங்களா? உங்களுக்கு இவங்களைப் பிடிக்கலையா?”

“இல்ல மேடம், நாங்க சேர்ந்து இருந்தவரை சந்தோஷமாத்தான் இருந்தோம். இப்போ கல்யாணத்தைப் பத்தி பேசினதும் தான் பிரச்சனையே வந்தது.”

“நீங்க இப்படியே காலமெல்லாம் இருந்துடுவீங்களா… எப்படியும் கல்யாணம் செஞ்சுப்பீங்க தானே… யாரையோ செய்யுறதுக்கு, உங்களோட சேர்ந்து வாழ்ந்த ஸ்ருதி பரவாயில்லை இல்லையா…. நீங்களே சொல்றீங்க உங்களுக்குள்ள வேற எதுவும் பிரச்சனை இல்லைன்னு.”

“உங்க வீட்ல தெரிஞ்சா…. என்ன பண்ணுவாங்க, உங்களைத் திட்டுவாங்க, சண்டை போடுவாங்க. இதெல்லாம் ஒரு வாரம், பத்து நாள் இருக்குமா… அதுக்குப் பிறகு அவங்களும் உண்மையை ஏத்துப்பாங்க. ஆனா அதுக்காக ஸ்ருதியையும் உங்க குழந்தையையும் வேண்டாம்னு சொல்வீங்களா….

“ஸ்ருதியோட அப்பா இப்படி உங்களைத் தொங்கிட்டு இருக்கனுமா என்ன? அவங்களுக்கு வேற வழி இல்லையா….ஆனாலும் அவர் பெண் செஞ்ச தப்ப மறைக்க நினைக்காம திருத்த தானே நினைக்கிறார்.”

“ரெண்டு பேருமே தப்பு செஞ்சுடீங்க. அதைத் திருத்தி நல்லபடியா வாழ முயற்சிக்கலாமே…”

நக்ஷத்ரா சொன்னதற்கு அருண் சரி என்று சொல்லிவிட்டு தான் சென்றான். ஆனால் அவன் வீட்டில் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நக்ஷத்ராவே அவன் பெற்றோரை அழைத்துப் பேசினாள்.

இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி எல்லாம் சொல்லாமல்… இருவரும் காதலித்தனர், இப்போது ஸ்ருதி கர்ப்பமாக இருக்கிறாள் என்பது போலத்தான் சொன்னாள்.

முதலில் ஆத்திரத்தில் குதித்தவர்கள், நக்ஷத்ரா வக்கீல் என்றதும், இதற்கு மேல் பெண் வீட்டினர் விடமாட்டார்கள் என்பது புரிந்து பணிந்து வந்தனர். அவர்கள் மாணிக்கத்திடம் பேசி…. சீக்கிரமே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடலாம் என முடிவு செய்தனர்.

கோர்ட்டுக்கு சென்று கூட வாதாடி விடலாம் போல… இதெல்லாம் ரொம்பக் கஷ்ட்டம் என நக்ஷத்ரா புலம்ப….

“நீ என்ன மா அவுட் ஆப் கோர்ட்… ஒரு கேஸையே முடிச்சிட்ட…” என யுகேந்திரன் புன்னகைக்க…

“உங்களுக்கே தெரியும், கோர்ட் போனாலும் ஜட்ஜ் இதெல்லாம் அவுட் ஒப் கோர்ட் பார்த்துக்க முடியாதான்னு தான் கேட்பார்.”

“இருந்தாலும், இந்தக் கேஸும் அப்படிச் சுலபமானது இல்ல… நீ அதையும் நல்லபடியா முடிச்சிருக்க….”

“எதோ என் பெருமை எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சா சரிதான்.”

“அது தெரியாமலா மேடம் உங்களைக் கல்யாணம் பண்ணி இருப்பேன்.” எனக் கணவன் சொன்னதைக் கேட்டதும் நக்ஷத்ராவுக்கு மகிழ்ச்சி தான்.

அடுத்த மூன்று மாதங்கள் வேகமாகச் சென்றுவிட… ஒரு பெரிய வழக்கு ஒன்றை யுகேந்திரன் நக்ஷத்ராவிடம் கொடுக்க… அவள் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

“ஹே அன்னைக்குச் சொன்ன இல்ல… என்னை ஒரே இடத்துல முடக்கப் பார்க்கிறீங்களான்னு… அது அப்படி இல்ல…”

“உன் காலுக்கு எதுவும் ரொம்பக் கஷ்ட்டமாகிடுமோன்னு ஒரு பதட்டத்துல அப்படிச் சொல்லிட்டேன். நான் அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது.” என்றான்.

“எனக்காகத் தான் சொல்றீங்கன்னு எனக்குப் புரியாதா யுகி.”

அவர்களின் வழக்குகள் மட்டும் அல்ல வாழ்க்கையும் மிகவும் சுவாரசியமாகச் சென்றது. முன்பெல்லாம் யுகேந்திரனின் வேலை தான் அவனுக்கு எல்லாம். இப்போது தான் நக்ஷத்ரா அவனுக்கு வாழ்க்கையை எப்படி அனுபவித்து வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுத்திருந்தாள்.

நக்ஷத்ராவின் பிறந்த நாள் வர…. திருமணதிற்குப் பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதால்…மனைவியின் பிறந்த நாளுக்குச் சிறப்பாகச் செய்ய நினைத்து,

“நீ என்ன கேட்கிறியோ கொடுக்கிறேன்.” என வாக்கு கொடுத்து, யுகேந்திரன் மாட்டிக் கொண்டான்.

Advertisement