Advertisement

தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துகொள்ளும் ஆள் இல்லை யுகேந்திரன். ஆனால் அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருப்பவன், சற்று எடை கூடி விட்டது போலத் தெரிந்தால்… உடனே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.

இன்று நக்ஷத்ராவும் சொல்லவும் எடை கூடி விட்டதோ என்ற எண்ணத்தில் தான் ஜாகிங் வந்திருந்தான். கடற்கரை சாலையில் நாற்பது நிமிடங்கள் மிதமான வேகத்தில் ஓடியவன், வியர்த்து வழிந்த உடலுடன் சற்று நேரம் கடற்கரையில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வீடு திரும்பினான். அவன் வீடு வந்த போது பிரசன்னா டிவி பார்த்தபடி உண்டு கொண்டிருந்தான்.

யுகேந்திரன் சென்று மெதுவாகக் குளித்துவிட்டு வந்த போது பிரசன்னா அவன் அறைக்குச் சென்றிருந்தான்.

யுகேந்திரன் டிவியில் செய்தி பார்த்தபடி சாப்பிட்டு எழுந்தவன், உண்ட பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு, அவன் அறைக்குச் சென்று சிறிது நேரம், வழக்கு சம்பந்தமான வேலைகளைப் பார்த்துவிட்டே படுக்கைக்குச் சென்றான்.

மறுநாள் காலை எழுந்த யுகேந்திரன் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தவன், பிறகு தனது தாடியை ட்ரிம் செய்து, குளித்து, நக்ஷத்ரா சொன்னது போல உடை அணிந்து சென்றான். ஆண்கள் கல்லூரியின் கலை விழாவுக்கு அவனும் ஒரு சிறப்பு விருந்தினனாக வந்திருந்தான்.

மேடையில் அவனைப் பேச அழைத்த போது, “நான் ஸ்கூல் பைனல்ல மாவட்ட அளவுல டாப்பர். எப்படியும் ஐ.ஐ.டியில் பி.டெக் சீட் கிடைச்சிருக்கும். அந்த நேரம் என் வாழ்க்கையைத் திருப்பிப் போடுற மாதிரி ஒரு விஷயம் நடந்தது. ஸ்கூல் தலைமை ஆசிரியரா இருந்த என் அப்பா ஒரு விபத்துல இறந்திட்டார்.”

“நான் ஸ்கூல் டாப்பர் தான். ஆனா லீகலா ஒரு சின்ன விஷயம் கூட எனக்குத் தெரியலை. நான் போன போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்சூரன்ஸ் கம்பனி வரை, இது கூடத் தெரியாதான்னு தான் பார்த்தாங்க. ஒவ்வொரு விஷயத்துக்கும் மத்தவங்களை எதிர்பார்த்து தான் நின்னேன். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு அப்போ தான் புரிஞ்சது.”

“படிப்பு படிப்புன்னு புத்தகத்துக்குள்ள தான் மூழ்கி இருந்தேன். வெளி உலகம் தெரியலை. நம்ம அன்றாட வாழ்க்கையில தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய நிறை விஷயங்கள் தெரியலை. வெறும் அறிவியலும் கணிதமும் மட்டும் அறிவு இல்லைன்னு அப்போதான் புரிஞ்சது. பள்ளியிலும் அறிவியலுக்கும் கணிததிற்கும், கணினிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நம்ம அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான… நாம் தெரிஞ்சு வச்சுக்க வேண்டிய சட்ட விஷயங்களுக்குக் கொடுக்கிறதே இல்லை.”

“படிச்ச, ஓரளவு வசதியான குடும்பத்துல இருந்து வந்த எனக்கு இந்த நிலைன்னா… படிக்காதவங்க என்ன செய்வாங்க? அப்போதான் சட்டம் படிக்கணும்னு முடிவு செஞ்சேன். என் படிப்பு எனக்கு மட்டும் இல்லை… என்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் உதவியா இருக்கணும்.”

“ஐ ஐ டியில படிக்கிறதை விட்டுட்டு, இப்படிச் சட்டம் படிக்கப் போறியே… பி. டெக் படிச்சா நாலாவது வருஷம் வேலைக்குக் கேரண்டி, சட்டம் படிச்சு என்ன செய்யப் போறேன்னு? கிண்டல் செஞ்சவங்க இருக்காங்க. நாம நினைச்சா எந்தத் துறையிலும் சாதிக்கலாம். அதுக்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. என் துறையில நான் பிரபலமா இருக்கிறதுனால தான் இன்னைக்கு இந்த விழாவுக்கு என்னைக் கூப்பிட்டு இருக்கீங்க.”

“என்னால மட்டும் இல்லை. உங்களாளையும் நீங்க விருப்பட்ட துறையில சாதிக்க முடியும். சுத்தி இருக்கிறவங்க ஆயிரம் சொல்லுவாங்க, நம்மோட விருப்பமும் மனநிறைவும் தான் முக்கியம்.”

“எதையும் கடமைக்காகச் செய்யாதீங்க. உங்களுக்குப் பிடிச்சு செய்யுங்க. நாம போற பாதை நேர்மையானதா இருந்தா… நாம வேற யாருக்கும் காது கொடுக்கணும்னு அவசியம் இல்லை.”

“எந்த உதவினாலும் எப்பவும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.” என்றவன், அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

அன்று நீதிமன்றம் செல்ல வேண்டியது இல்லாததால்… அதே உடையுடன் மதியம் அவர்கள் அலுவலகத்திற்குள் யுகேந்திரன் நுழைய…

“செம பாஸ், கலக்குறீங்க போங்க.” என்ற நக்ஷத்ரா, அருகில் இருந்த ஜனனியிடம், “நீ சும்மாவே அவரை நல்லா சைட் அடிப்ப… இன்னைக்கு அம்சமா வேற வந்திருக்கார்.” என்றதும், யுகேந்திரன் காதில் விழுந்தால் என்ன நினைப்பான் என்று நினைத்த ஜனனி, நக்ஷ்த்ராவின் கையில் கிள்ளி வைத்தாள்.

யுகேந்திரனுக்கு இது எதுவும் தெரியவில்லை. அவன் நக்ஷத்ரா சொன்னதற்குப் பதிலுக்கு லேசான புன்னகையுடன் தேங்க்ஸ் என்றான்.

அவன் அன்று நல்ல மனநிலையில் இருப்பதை உணர்ந்த மற்ற நண்பர்களும் அரட்டையில் இறங்கினர்.

“உன்னோட மாடலிங் ஷோவுக்கு டிரஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” என பிரதீப் கேட்க….

“நானே நாலு பேருக்கு டிஸைன் பண்ணி இருக்கேன் தெரியுமா?” என்றாள் நக்ஷத்ரா பெருமையாக.

“அப்போ நல்லாவே இருக்காது.” எனப் பிரசன்னா சொல்ல…

“அதெல்லாம் நல்லாத்தான் பண்ணி இருப்பா.” என்றான் யுகேந்திரன்.

“பார்த்தியா உனக்கு எங்க இருந்து சப்போர்ட் வருதுன்னு.” என்றான் பிரதீப் கேலியாக.

“இன்னைக்கு எதோ நல்ல மூட்ல இருக்கார் விடேன் டா…” என்றாள் நக்ஷத்ரா.

பிரசன்னா “போன தடவை ஷோவுக்கு, ஒரு செம மாடல் வந்திருந்தான் சொன்னியே…. இந்தத் தடவை அவன் வருவானா?”

“அவன் இப்போ சூப்பர் மாடல் ஆகிட்டான். நாங்க ஒரு நல்ல விஷயத்துக்காக நிதி திரட்ட தானே மாடலிங் ஷோ பண்றோம். அவனை எல்லாம் கூப்பிட்டா ரொம்பச் செலவு ஆகும்.”

“இந்த முறை வேற ஒருத்தன் வரான், அவனும் செமையா இருப்பான்.” என நக்ஷத்ரா கண்கள் மின்ன சொல்ல… அவனையாவது கரெக்ட் பண்ணி செட்டில் ஆகிற வழிய பாரு.” என்றான் பிரதீப்.

“ட்ரை பண்றேன் டா…” என்றாள் நக்ஷத்ராவும் அலட்டாமல்.

“ஆல் தி பெஸ்ட்.” என்ற யுகேந்திரன் அவன் வேலையைப் பார்க்க உட்கார்ந்தான்.

அந்த வார ஞாயிறு அன்று சொன்னது போல யுகேந்திரன் அவனின் வீட்டிற்குச் சென்றான்.

அவனைப் பார்த்ததும் யுகிப்பா என மூன்று வயது பெண் குழந்தை ஒன்று ஓடி வர… அதை வாரி எடுத்தவன், ஆசையாக அதன் கன்னத்தில் முத்தமிட்டான்.

“எங்க மீனு குட்டி எப்படி இருக்கீங்க?” என்றவன், தான் வாங்கி வந்த இனிப்பை குழந்தையிடம் கொடுத்தான்.

வீட்டில் இருந்த அவன் அம்மா, தம்பி, தம்பி மனைவி என அனைவரும் அவனை நலம் விசாரிக்க… அவனும் பதிலுக்கு எல்லோரையும் நலம் விசாரித்தான்.

எல்லோரும் சேர்ந்து தான் மதிய உணவு அருந்தினர். வடை பாயசம் என மகனுக்குப் பெரிய விருந்தே கிரிஜா சமைத்திருந்தார்.

மதிய உணவு உண்டதும் தம்பியும் தம்பி மனைவியும் அவர்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்ல… அவர்களை வழியனுப்பி விட்டு அம்மாவும் மகனும் வீட்டு ஊஞ்சலில் பேச உட்கார்ந்தனர்.

“உன் அப்பா இருந்திருந்தா… நீ இப்படி இருந்திருப்பியா?” எனக் கிரிஜா மனம் பொறுக்காமல் கேட்டு விட…

“இப்போ எனக்கு என்னமா குறை? நான் நல்லத்தான் இருக்கேன். அப்பா இருந்திருந்தா என்னைப் புரிஞ்சிட்டு இருந்திருப்பார்.”

“அது என்னவோ உண்மை தான். நீ உன் அப்பா போலத்தான். அவரும் தான் கமல்ஹாசன் மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லலை…. ஆனா கடவுள் இருந்தா நல்லா இருக்கும்னு வியாக்கியானம் பேசிட்டு இருந்தார். அவர் பிள்ளை தான நீ…. வேற எப்படி இருப்ப?”

“அம்மா கடவுள் இருக்கார் இல்லைன்னு நான் எதுவும் சொல்லை. அது எல்லாம் அவங்க அவங்க தனிப்பட்ட நம்பிக்கை. முதல்ல சக மனிதனை மதிக்கணும். எனக்கு அவ்வளவு தான்.”

“அதெல்லாம் சரி, ஏன் டா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க… இந்த ஆவணி வந்தா முப்பத்தி ஒன்னு முடிஞ்சிடும். உன் தம்பி எல்லாம் இருபத்தியஞ்சு வயசுல கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டான். நீயும் தான் இருக்கியே.”

“அம்மா நான் எனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கேன். அவன் நீங்க ஆசைபட்ட படி ஐ.ஐ.டி யில படிச்சு, நல்ல வேலைக்கும் சேர்ந்து, உங்க கண் குளிர கல்யாணமும் பண்ணிகிட்டான். எதோ என்னால உங்களுக்குக் கொடுக்க முடியாத சந்தோஷம்.”

“உனக்கு என்ன டா குறைச்சல், நீயும் பிரபலாமான வக்கீல் தான். ஆனா நீ வெளி வேலையும் இழுத்து போட்டுக்கிற.”

“உங்களுக்குத் தான் என்னைப் பத்தி தெரியுதே…”

“இது மட்டும் போதாது. நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ… அப்போதான் என் மனசு நிறையும்.”

“சரி மா பார்க்கலாம்.”

“இந்தப் பார்க்கலாம் எல்லாம் கிடையாது, கண்டிப்பா பண்ணிக்கணும். உனக்கு இங்க இருக்க இஷ்ட்டம் இல்லைனா… நான் வேணா உன்னோட வந்து இருக்கட்டுமா?”

“அம்மா, இங்க நீங்க குடும்பமா இருக்கீங்க. அதோட மீனு குட்டி இருக்கா… ஆனா என் கூட வந்து இருந்தா… நீங்க தனியா தான் இருக்கணும்.” என் வேலை அப்படி மா… நான் என் வேலையில சந்தோஷமா தான் இருக்கேன். நீங்க எதையும் யோசிக்காம நிம்மதியா இருங்க.” என்றவன், மேலும் அதிக நேரம் அவன் அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, மாலைதான் அங்கிருந்து கிளம்பினான்.

நக்ஷத்ராவிடம் வர மாட்டேன் என்று சொல்லி இருந்தாலும், இன்று அவர்கள் மாடலிங் ஷோ நடக்கும் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றான். அவனின் ஐ டி கார்டை காட்டியதும், அழைப்பிதல் கூடக் கேட்காமல் உள்ளே விட்டு விட்டனர். அதனால் நக்ஷத்ராவுக்கு அவன் வந்ததே தெரியாது.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் மாடலிங் ஷோ… முக்கிய விருந்தினர்கள் பேசி முடித்ததும் ரேம்ப் வாக் ஆரம்பிக்க… விதவிதமான உடைகளில் டிவி பிரபலங்களும், மற்ற மாடல்களும் வளம் வந்தனர். மேடையின் பக்கவாட்டில் நின்று நக்ஷத்ரா பார்த்துக் கொண்டு இருந்தாள். உடன் ஜனனியும் இருந்தாள். இருவருமே நன்றாக ஆடை அணிந்து இருந்தனர்.

விழா முடியும் தருவாயில் தான் நக்ஷத்ரா யுகேந்திரனை பார்த்தவள், அவனிடம் சென்று, “வரமாட்டேன்னு சொன்னீங்க.” என்றதும்,

“வரேன்னு சொன்னா… நீ மேடையில உட்கார வச்சிடுவ.” என்றான்.

“சரி வாங்க.” என்றவள் அவனை முன் வரிசைக்கு அழைத்துச் சென்றாள். அங்கிருந்த மற்ற விருந்தினர்களோடு யுகேந்திரன் பேசிக் கொண்டிருக்க… கடைசியாக விழா ஏற்பாடு செய்தவர்கள். மாடல்களுக்கு ஆடை ஆபரணங்கள் தயார் செய்தவர்கள் என எல்லோரும் மாடல்களோடு ரேம்ப் வாக் செய்ய.. மேடைக்குச் செல்ல…. நக்ஷத்ராவும் அவர்களோடு சென்றாள்.

ஊன்றுகோல் இல்லாமல் ஒருபக்கம் ஜனனியும் இன்னொரு பக்கம் ஆண் மாடல் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு நிமிர்வாகவே நடந்து வந்தாள்.

அதைப் பார்த்து யுகேந்திரன் எழுந்து நின்று கைதட்டினான். அவனுக்கு நக்ஷத்ராவிடம் இதுதான் பிடிக்கும். விபத்தில் ஒரு காலை கிட்டத்தட்ட இழந்து விட்ட நிலையிலும், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுந்து நின்றவள்.

இப்போது வரை எனக்கு ஏன் இப்படி ஆனது என அவள் புலம்பி அவன் கேட்டதே இல்லை.

அவள் அப்பாவை போல வக்கீலானாலும், பல்வேறு துறைகளிலும் ஆர்வமாகப் பங்கெடுக்க வேண்டும் என்று நினைப்பவள்.

என் உடல்நிலை எல்லாம் என்னை வீழ்த்திட முடியாது என்று உலகுக்குக் காட்டிய சிங்கப்பெண்.

Advertisement