Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 10

அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம் வெள்ளை தொப்பிப் போட்டது போலப் பனியும் படர்ந்து இருக்க… பார்க்கவே ரம்மியமாக இருந்தது. நிறைய இடங்களுக்கு அலையாமல் முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்றுவிட்டு, மற்ற நேரம் அறையில் தான் இருந்தனர்.

ஊர் திரும்பும் அன்று காலை கணவனின் மடியில் படுத்திருந்த நக்ஷத்ரா, “எந்த விஷயத்திலேயும், இறங்கிறதுக்கு முன்னாடி ரொம்ப யோசிப்பீங்க, அப்படி இறங்கிட்டா… அப்புறம் முழு மூச்சா இறங்கிட வேண்டியது இல்லையா பாஸ்.” என்றபடி தலையை உயர்த்திக் கணவனின் முகம் பார்க்க…

அவள் எதைச் சொல்கிறாள் எனப் புரிந்து கொண்டவன், “பிறகு ஹனிமூன் வர்றது எதுக்கு?” எனப் புன்னகைக்க….

“ஆனாலும் உங்களை மாதிரி தீயா வேலை செய்ய முடியாது.”

“நீ மட்டும் சும்மா இருந்த.” என்றதும், வேகமாக எழுந்து உட்கார்ந்தவள் கணவனின் வாயை மூட…

அவள் கையை எடுத்துவிட்டு, “எனக்கு எப்போ சொல்லித் தருவீங்கன்னு கொக்கி போட்டது யாரு?” என்றான்.

“நீங்க எல்லாத்துக்கும் ரூம் போட்டு யோசிச்சிட்டே இருப்பீங்களே… இதுக்கும் யோசிச்சிட்டு இருக்கப் போறீங்களோன்னு நினைச்சிட்டேன். அதனால ஹனிமூன் எல்லாம் போக மாட்டோம்னு நினைச்சேன்.”

“இப்போ விட்டா நமக்கு எங்க நேரமும் இருக்கும் சொல்லு. அங்க இருந்திருந்தா இது போல ப்ரீயா இருந்திருக்க முடியாது தான….”

“அது என்னவோ உண்மை தான். ரொம்ப ஜாலியா இருந்தது.”

“ம்ம்… அதுக்குத்தான். இனிமே அடுத்து இப்படி எப்ப கிளம்புவோமோ தெரியாது. வந்ததுக்கு நல்லா என்ஜாய் பண்ணோம்.”

“ம்ம்… உண்மை தான்.”

லக்கேஜ் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தான் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அடுத்த ஒருமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி இரவில் சென்னை வந்து சேர்ந்தனர்.

மறுநாள் நக்ஷத்ரா வீட்டு வேலை ஆளோடு சேர்ந்து அவளும் வீட்டை ஒதுங்க வைத்தாள். இரண்டு பேரின் வீட்டினருக்கும் மறுநாள் மதிய விருந்து இங்கே தான். அதற்குத் தான் வீட்டை தயார் செய்து கொண்டிருந்தாள்.

வேண்டிய பொருட்களை வீட்டில் இருந்தே ஆர்டர் போட்டுக் கொண்டனர். அன்று நேரமே இருவரும் படுக்கச் சென்று விட்டனர்.

மறுநாள் காலையில் இருந்தே நக்ஷத்ரா சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து மேஜையில் வைத்து காய்கறி நறுக்கிக் கொண்டு இருந்தாள்.

யுகேந்திரன் அங்கே வந்தவன், “வெளியில கூட வாங்கிக்கலாம் நீ கஷ்ட்டபடாதே.” என்றான்.

“அது எப்படி முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வர்றாங்க. நான்தான் சமைப்பேன், என் அம்மா வந்து உதவி பண்றேன்னு தான் சொன்னாங்க. ஆனா நானே பண்ணுவேன்னு சொல்லி இருக்கேன்.”

“சரிமா நீயே பண்ணு. ஆனா வேலையை இழுத்து வச்சுக்காத…. காலையில டிபன் கூட வேண்டாம்.”

“நம்ம ரெண்டு பேருக்கும் ட்ரை ப்ருட்ஸ் ஜூஸ் போட்டு வச்சிருக்கேன். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு, பசிச்சா பழம் சாப்பிட்டுக்கோங்க.”

“எனக்கு எதுவுமே வேண்டாம் காபி மட்டும் கொடு.”

“முதல்ல இதைக் குடியுங்க. அப்புறம் போட்டு தரேன்.” என்றவள், மேஜையில் இருந்த டம்ளரை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டு அவளும் ஒன்றை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள்.

“இதைக் குடிச்சா பசிக்கவே பசிக்காது போலையே….இதுதான் நீ ஸ்லிம்மா இருக்கிறதோட ரகசியமா?”

“எவ்வளவு சத்து தெரியுமா… நீங்க வேற எதுவும் சாப்பிடலைனாலும் பரவாயில்லை.”

“எனக்கு இதே போதும். ஆனா ஒரு பதினோரு மணிக்கு காபி மட்டும் கொடுத்திடு.” என்றவனைப் பார்த்து சிரித்தாள்.

“நீயே எவ்வளவு வேலை பார்ப்ப… எனக்கும் எதாவது வேலை கொடு.” என்றதும், “காய் நறுக்குங்க.” என்றாள். அவனும் சரி என்றான். ஆனால் ஒரு வெங்காயம் நறுக்கி முடிப்பதற்குள் அவன் பட்ட பாட்டைப் பார்த்துவிட்டு, “நீங்க வச்சிடுங்க.” என்றுவிட்டாள்.

யுகேந்திரனுக்கு ஒரு அவசரத்திற்கு டீ காபி போட தெரியும். அதுவும் சுமாராகதான் இருக்கும். சமையல் செய்ய நேரமும் இல்லாததால் அதைக் கற்றுக்கொள்ளவும் இல்லை.

அவள் மட்டும் வேலை செய்கிறாளே என்று இருக்க… “வேற எதாவது வேலை கொடு.” என்றான்.

“வேலை செய்யுறவங்க வந்து மத்த வேலை எல்லாம் முடிச்சிட்டாங்க. நம்ம ரூம்குள்ள யாரையும் விட வேண்டாமுன்னு சொன்னீங்க இல்ல… அதை மட்டும் நீங்க சுத்தம் பண்ணிடுங்க.” என்றதும்,

“ஓகே….” என்றவன், அதே போல அவர்கள் அறையையும் குளியல் அறையையும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே குளித்துவிட்டு வந்தான். நக்ஷத்ரா சொல்லி இருந்தாலும், மனம் கேட்காமல் அவளின் அம்மாவும் அப்பாவும் நேரத்திற்கு வந்துவிட்டனர். அம்மாவும் மகளும் சேர்ந்து சமையல் செய்தனர்.

நக்ஷத்ராவுக்கு விபத்து நடந்ததில் இருந்து இவர்கள் வீட்டில் எல்லோரும் சைவம் தான். யுகேந்திரன் எப்போதாவது நினைத்தால்… வெளியில் மட்டும்தான் அசைவம் உண்ணுவான்.

யுகேந்திரன் யோகேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

நக்ஷத்ரா கணவன் கேட்ட காபியை மறக்காமல் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றாள்.

“காலையில ட்ரை ப்ரூட்ஸ் ஜூஸ் கொடுத்தா… நக்ஷத்ரா வயசுக்கு உடல்நலத்து மேல இவ்வளவு அக்கறை இருக்குன்னா பெரிய விஷயம்.” யுகேந்திரன் மனைவியைப் புகழ….

“அவ உடம்பு எடை கூடினா காலுக்கு நல்லது இல்லைன்னு டாக்டர் சொன்னதுனால… அதிகம் அரிசி கோதுமை எல்லாம் சாப்பிடமாட்டா… அதுக்குப் பதில் இது மாதிரி ஜூஸ், பழங்கள், காய்கறிகள் தான் நிறையச் சாப்பிடுவா.” என்றார்.

மதிய உணவு நேரத்திற்கு யுகேந்திரனின் வீட்டினரும் வந்துவிட…. மதிய விருந்து அமர்க்களமாக நடத்து முடிந்தது.

இரு வீட்டினரும் மாலை வரை இருந்துவிட்டே சென்றனர்.

மறுநாள் யுகேந்திரன் மட்டும் அலுவலகம் செல்ல… நக்ஷத்ரா மேலும் ஒருவாரம் சென்று வருவதாக இருந்தது. ஆனால் வீட்டில் இருந்து வேலை பார்த்தாள்.

இருவரும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த பிறகு இருவரையும் சேர்த்து வைத்து பிரசன்னாவும் பிரத்தீப்பும் ஓட்டவே செய்வார்கள். ஆனால் வேறு நினைக்க முடியாத அளவு வேலைகளும் இருந்தது. 

நக்ஷத்ரா நினைத்தால் அவள் பெற்றோரின் வீட்டிற்குச் சென்று விடுவாள். இரவு சென்று யுகேந்திரன் அவளை அழைத்துக் கொண்டு வருவான். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கிரிஜாவையும் சென்று பார்த்துவிட்டு வந்தனர். நக்ஷத்திர அவரையும் தங்களோடு வந்து தங்க அழைத்துக் கொண்டு இருந்தாள்.

காலை, இரவு உணவை நக்ஷத்ராவே செய்து விடுவாள். மதிய உணவு மட்டும் எப்போதும் போல் அவள் அம்மாவே செய்து அனுப்புவார். அன்றும் அலுவலகத்தில் இருந்து வந்த பிறகு, இரவு உணவுக்கு அவள் தோசை கல்லை காய வைக்க….

“நான் தோசை ஊத்துறேன்.” என யுகேந்திரன் வந்தான்.

இப்போது நக்ஷத்ராவோடு சேர்ந்த பிறகு சின்னதாகச் சமையலில் உதவவும் ஆரம்பித்திருந்தான்.

அவன் தோசை ஊற்ற நக்ஷத்ரா இரண்டு தோசை உண்டுவிட்டு, பிறகு யுகேந்திரனை சாப்பிட சொல்லிவிட்டு, அவள் தோசை ஊற்றி கொடுத்தாள்.

உண்டுவிட்டு நக்ஷத்ரா மற்ற வேலைகளைப் பார்க்க… யுகேந்திரன் மறுநாள் இருந்த வழக்கு சம்பந்தமான வேலைகளை… அலுவலக அறையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அதற்கு எதிரில் தான் அவர்களின் அறை. இரண்டு அறையின் கதவும் திறந்து தான் இருந்தது.

நக்ஷத்ரா அவள் வேலைகளை முடித்துக் கொண்டு படுக்கத் தயாராவதை பார்த்தவன், வேகமாக அவன் வேலையை முடித்துக் கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றான்.

அவன் வருவதைப் பார்த்தபடியே நக்ஷத்ரா கட்டிலில் படுத்திருந்தாள். சிறிது நேரத்தில் யுகேந்திரனும் அவள் அருகில் சென்று படுத்தான்.

மனைவியைத் தன் பக்கம் திருப்பியவன், “ரொம்ப டயர்டா இருந்தா சொல்லிடு.” என்றதற்கு, நக்ஷத்ரா பதில் சொல்லாமல் அவனின் உதடுகளில் முத்தமிட…. அதே அவளின் சம்மதத்தைச் சொல்லாமல் சொல்ல… யுகேந்திரன் அவளை அனைத்துக் கொண்டான். மனைவியுடன் ஒன்றியிருந்த அந்த நேரத்திலும், குழந்தை என்று எதுவும் வந்துவிடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருக்க… அதை உறங்குவதற்கு முன் நக்ஷத்ரா கேட்டும் இருந்தாள்.

“இப்போ எதுக்கு அதை ஆரம்பிக்கிற? நாம ரெண்டு பேரும் மட்டும் சந்தோஷமா தானே இருக்கோம்.” என்றான்.

“குழந்தை வந்தா இன்னும் சந்தோஷமா தான் இருப்போம்.”

நக்ஷத்ரா பேசிக் கொண்டு இருக்கும் போதே யுகேந்திரனின் கைபேசிக்கு அழைப்பு வர… எடுத்து பேசியவன் அந்தப் பக்கம் பேசியவரின் பேச்சை கவனமாகக் கேட்டுவிட்டு, “நாளைக்குக் காலையில எட்டு எட்டரைக்கு வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்.” எனச் சொல்லிவிட்டு வைத்தான்.

“என்ன யுகி இந்த நேரத்துக்குப் போன்? அதுவும் நீங்க யாரையும் வீட்டுக்கு வர சொல்ல மாட்டீங்களே…”

“பொண்ணு விஷயம். அவங்க அப்பா பேசுறார். ரொம்ப யோசிச்சு தயங்கி தயங்கித்தான் பேசுறார். அதுதான் வீட்டுக்கு வர சொன்னேன்.” என்றவன் உறக்கத்திற்குத் தயாராக… நக்ஷத்ராவும் அப்போதைக்குக் குழந்தையைப் பற்றிப் பேச்சை எடுக்கவில்லை.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து நக்ஷத்ரா யோகா செய்து கொண்டிருந்தாள். அதன் பிறகு எழுந்த யுகேந்திரன் பீச் வரை நடந்துவிட்டு வந்தான்.

வீட்டு வேலை செய்யும் பெண் வந்து வேலைகளைப் பார்க்க… இவர்களும் குளித்துக் கிளம்பிக் கொண்டிருக்க, நேற்று யுகேந்திரனிடம் பேசியவர் தன் மகளோடு வந்து விட்டார்.

“எனக்கு இங்க யாரையும் தெரியாது. நான் கோர்ட்ல தான் விசாரிச்சேன். அப்போ அங்க தான் உங்களைப் பத்தி சொன்னாங்க. நான் உங்களை நம்பி தான் வந்தேன்.”

“என்னைவிட இவங்க இந்தக் கேசை நல்லா பார்த்துப்பாங்க. நீங்க இவங்க சொல்றபடி கேளுங்க.” என்றான் யுகேந்திரன்.

Advertisement