Advertisement

வேகமாக எழுந்து உட்கார்ந்தவன், “அவளின் இடது காலை மெதுவாகப் பிடித்துவிட….”

“இப்போ மட்டும் யாராவது கதவை திறந்து பார்க்கணும், கல்யாணமான முதல் நாளே இப்படிக் கால் அமுக்க வச்சிட்டாளேன்னு நினைப்பாங்க.” நக்ஷத்ரா சிரித்தபடி சொல்ல…

“அப்படி யாரும் நினைக்க மாட்டாங்க. அப்படி நினைச்சாலும் எனக்குக் கவலை இல்லை.” என்றான்.

“போதும் படுங்க, சும்மா தெரிஞ்ச மாதிரி பேசினா… அதுதான் அப்படிச் சொன்னேன்.” என்றாள். ஆனாலும் யுகேந்திரன் கேட்கவில்லை. அவளின் இரண்டு கால்களையும் சிறிது நேரம் பிடித்துவிட்டே படுத்தான்.

இருவரும் உறங்காமல் பேசிக் கொண்டே இருந்தனர்.

நான்கு மணி போல ஒப்பனை செய்யப் பார்லரில் இருந்து வந்துவிட… அவர்களோடு நேத்ராவும் வர… யுகேந்திரன் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

முகத்திற்கு ஒப்பனை செய்து தலை அலங்காரம் முடித்ததும், நீல நிறத்தில் அழகாக வேலைப்பாடு செய்யபட்டிருந்த காக்ரா ஜோலியை நக்ஷத்ரா அணிந்துகொண்டாள். நேத்ராவும் அது மாதிரி உடைதான். இருவரும் கிளம்பியதும் பார்லர் பெண்ணும் சென்றுவிட… நேத்ரா வெளியே சென்றதும் யுகேந்திரன் உள்ளே வந்தான்.

உடை மட்டும் மாற்றி இருந்தான். அவனுக்கும் நீல நிறத்தில் சூட். காலையில் போலக் கொஞ்ச கிரீம் மட்டும் எடுத்து அவன் முகத்தில் போட்டுக் கொள்ள….அவனை உட்கார வைத்து நக்ஷத்ராவே தலையில் ஜெல் வைத்து வாரிவிட்டாள்.

இருவரும் தயாரானதும் வரவேற்பு நடக்கவிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர்.

வரவேற்ப்பு சிறப்பாக நடக்க… இருபக்க உறவினர்களே நிறையப் பேர் இருந்தனர். அதோடு இவர்களுக்குப் பழக்கமான வக்கீல்கள், காவல் துறையினர் எனச் சிலரை மட்டும் அழைத்திருந்தனர்.

யுகேந்திரனின் கல்லூரி கால நண்பர்கள் வந்திருந்தனர். யுகேந்திரன் அவர்களை நக்ஷத்ராவுக்கு அறிமுகம் செய்தான்.

“நீங்க எல்லாம் ஏன் எங்க ஆபீஸ்க்கு வர்றது இல்லை.”

“நாங்க எல்லாம் வெளியூர்ல இருக்கோம். எப்பவாவது தான் சென்னை வர்றது. அப்போ வெளியே பார்த்துப்போம்.” என்றனர்.

யுகேந்திரன் கல்யாணமே பண்ணாம இருந்திடுவானோன்னு நினைச்சோம். பரவாயில்லை உங்களுக்குத்தான் காத்திருந்தான் போல..”. என அவன் நண்பன் சொல்ல…அதை கேட்டு நக்ஷத்ராவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கடைசியில் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து மேடைக்குப் பெரிய கேக் எடுத்து வந்து இருவரையும் வெட்ட செய்து, நடனம் ஆடி என வரவேற்ப்பு சிறப்பாக நடத்து முடிந்தது.

விருந்தினர் உண்டு முடித்துக் கிளம்ப… இவர்களும் உண்டுவிட்டு நக்ஷத்ராவின் வீட்டிற்கு வந்து சேர இரவு பதினோரு மணிக்கு மேல் ஆகி இருந்தது.

இவர்கள் அறையில் யுகேந்திரனின் தேவைகளைக் கவனித்துவிட்டு, நக்ஷத்ரா இன்னொரு அறையில் ஒப்பனை கலைத்து, உடைமாற்றிக் கொண்டு யுகேந்திரன் இருந்த அறைக்குச் செல்ல… அவன் ஷார்ட்ஸ் டி ஷர்ட் அணிந்து சுகமாக உறங்கிக் கொண்டிருந்தான். மதியமும் உறங்கவில்லை… உறங்கட்டும் என்று நினைத்தவள், குளியல் அறைக்குச் சென்று, அவளின் கால்களைச் சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருந்துவிட்டு வந்து, காலுக்குத் தைலம் தேய்த்துக் கொண்டு, அவளும் அவன் பக்கத்தில் கட்டிலில் படுத்து உறங்கிப் போனாள்.

காலையில் கூட முதலில் நக்ஷத்ரா தான் எழுந்தாள். யுகேந்திரன் இன்னும் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.

ஓய்வறைக்குச் சென்று பல் துலக்கி முகம் கழுவிக்கொண்டு வந்தவள், போதும் இவ்வளவு நேரம் தூங்கியது என்று நினைத்தவள், கணவனைத் தொட்டு எழுப்ப….

“ஹே ரொம்ப நேரம் தூங்கிட்டேனா.” என்றான்.

“இல்லையில்லை எனக்குதான் போர் அடிச்சது.” என்றதும்,

“சாரி நைட் நீ வர்றதுக்குள்ள தூங்கிட்டேன் போல…” என்றவன் எழுந்து ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வர…

“நான் உங்களுக்குக் காபி கொண்டு வரட்டுமா?” என நக்ஷத்ரா கேட்க… வேண்டாம் என்றவன் மீண்டும் சென்று கட்டிலில் படுத்துவிட…

“என்ன திரும்பப் படுத்துட்டீங்க?” என்றாள்.

“மணி ஏழு தானே ஆகுது.”

நக்ஷத்ராவும் சென்று அவன் அருகில் படுத்துக் கொண்டாள். அவன் மீண்டும் உறங்க போகிறான் என்று நினைத்து, அவள் மறுப்பக்கம் திரும்பி படுத்திருக்க… அவளின் அருகே நெருங்கி படுத்தவன், அவளைப் பின்னால் இருந்து அனைத்துக் கொண்டான்.

“மெத்து மெத்துன்னு இருக்க நக்ஷத்ரா.” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக.

“ஒழுங்கா கையை எடுங்க.” என்றாள்.

“நான் ஏன் எடுக்கணும். அதெல்லாம் முடியாது.” என்றான்.

அவள் அவன் பக்கம் திரும்பி படுக்க… அது இன்னும் வசதியாக இருக்க… அவளை அனைத்து முத்தமிட்டான்.

அவனின் முதல் முத்தம் நஷத்ராவுக்கு எதோ செய்ய… கண் மூடி கிறக்கத்தில் இருந்தாள்.

அவளின் கன்னத்தை மிருதுவாகத் தடவியவன், தூங்கும் போதும் மேக்அப்ல இருப்பியா என்றதும், கண் திறந்து அவனைப் பார்த்து முறைத்தாள்.

“நைட் நான் முகத்துக்கு எந்தக் கிரீமும் போட மாட்டேன்.”

“அப்புறம் எப்படிப் பளிச்சுன்னு இருக்க…”

“ம்ம்… அதுக்கு ஹெல்தியா சாப்பிடனும். டீ காபி குடிக்கக் கூடாது.”

“உன்கிட்ட நிறையக் கத்துக்கணும் நக்ஷத்ரா.” என்றவன், பட்டு போல இருந்த அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

“அப்போ நீங்க எனக்கு எதுவும் கத்து தரப் போறது இல்லை…” நக்ஷத்ரா கேட்டுவிட்டு நாக்கை கடிக்க….

“நான் உனக்கு எதுவும் சொல்லிக் கொடுத்தது இல்லையா?” யுகேந்திரன் புன்னகையுடன் கேட்க….

“வேலையில நிறையக் கத்து கொடுத்திருக்கீங்க தான். ஆனா…” என அவள் இழுக்க…

“அப்போ ஆரம்பிக்கலாமுன்னு சொல்றியா…” என்றவன், அவளை இன்னும் அருகே இழுக்க…

“நைட் தூங்கிட்டு இப்போ ஆரம்பிக்கிறாராம்.” என்றவள், அவனின் வழவழப்பான கன்னத்தில் முத்தமிட்டு, “வீட்ல எல்லோரும் எழுந்திருப்பாங்க. வெளியப் போகலாமா?” என்றதும், சரி என்றான்.

முதலில் நக்ஷத்ரா சென்று குளித்துவிட்டு வர… அடுத்து யுகேந்திரன் சென்றான்.

நக்ஷத்ராவின் பெரியம்மா குடும்பம் மட்டும் தான் இருந்தனர். காலை உணவு முடித்ததும், சிறிது நேரம் யோகேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்த யுகேந்திரன், பிறகு அறையில் அவன் எடுத்து வந்திருந்த புத்தகத்தைப் படித்துப் பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். நக்ஷத்ரா அவளது பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“இங்க பக்கத்துல தான் இருக்கப் போறோம். அப்புறம் கூட எடுத்துக்கலாம். இன்னைக்கு ரெஸ்ட் எடு.” என்ற யுகேந்திரன் புத்தகத்தை வைத்துவிட்டு படுத்துக் கண் மூடிக்கொள்ள… நஷத்ராவும் ஓய்வு எடுத்தாள்.

மதிய உணவிற்கு மேல் இருவரும் யுகேந்திரனின் அம்மா வீட்டிற்குச் சென்றனர். அங்கே சென்றதில் இருந்து நக்ஷத்ராவும் நேத்ராவும் ஒரே அரட்டை. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு யுகேந்திரனின் குடியிருப்புக்கு இருவரும் வந்தனர்.

திருமணம் என்றாள் முன்பும் பின்பும் பெரிய ஆர்பாட்டம் இருக்கும். நிறையச் சடங்கு சம்பரதாயங்கள் இருக்கும். இங்கே அப்படியெல்லாம் இல்லை. யுகேந்திரனுக்கு எளிமையாகத் திருமணம் செய்யத்தான் விருப்பம். வீட்டில் பெரியவர்கள் ஆசைபப்டுவார்கள் என்று தான் வரவேற்பு வைக்கவே ஒத்துக் கொண்டான். இருவரும் பக்குவப்பட்டவர்கள், அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துகொள்வார்கள் எனப் பெரியவர்களுக்கும் நம்பிக்கை இருந்தது.

இவர்கள் வந்ததும் பிரசன்னாவும் அவன் மனைவியும் வந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றனர்.

திருமணத்திற்கு முன்பே, “உன் வசதிக்கு வீட்டை என்ன வேணா செஞ்சுக்கோ.” என யுகேந்திரன் சொல்லி இருக்க…நக்ஷத்ராவும் சில மாற்றங்கள் செய்திருந்தாள். அவள் சொன்னபடி அறைக்கு வர்ணங்களும் தீட்டபட்டிருந்தது.

அவளின் பேட்டரி சக்கர நாற்காலியும் இருக்க… அதில் உட்கார்ந்து வீட்டை வளைய வந்து கொண்டிருந்தாள். யுகேந்திரன் உடைமாற்றி விட்டு வந்து பார்க்க… சமையல் அறையில் எதோ செய்து கொண்டிருந்தாள்.

“எதுனாலும் நாளைக்குப் பார்க்கலாம். இப்போ வா…” என யுகேந்திரன் அழைக்க…

“நீங்க போங்க வரேன்.” என்றவள், அவனுக்குப் பால் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறை சென்றாள். அவளுக்கு வசதியாக உட்கார்ந்து கொண்டு குளிக்கப் பிளாஸ்டிக் ஸ்டூல் இருக்க… அவள் குளித்து உடைமாற்றி வர… அதுவரையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த யுகேந்திரன் அதை வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

“உங்க வீட்ல இருக்கும் போதெல்லாம் குட்டியா டிரஸ் போட்டுட்டு இருப்ப. இப்போ மட்டும் என்ன?” என அவள் அணிந்திருந்த சுடிதாரை காட்டி சொன்னவன், எழுந்து சென்று அவள் உடை இருந்த அலமாரியை ஆராய்ந்து, முன்பு அவள் அணிந்திருந்தது போல உடையைக் கொண்டு வந்து கொடுக்க….அவனைப் பார்த்து முறைத்தாலும் நக்ஷத்ரா அதை வாங்கிக் கொண்டு திரும்ப…

“என்னவோ சொல்லித் தர சொன்ன… இப்போ இருந்து ஆரம்பிக்கட்டுமா?” என்றதும், சற்று பயந்து தான் போனாள்.

“இதுக்கே இந்த முழி முழிக்கிற…. நேத்து நீ அப்படியே எல்லாத்துக்கும் ஒத்திட்டு இருந்திருப்ப… வாய் மட்டும் தான் உனக்கு.” என்றதும், நக்ஷத்ராவுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

“நீ இங்கேயே மாத்து, நான் வெளியே போறேன்.” என்றவன் வெளியே செல்ல… நக்ஷத்ரா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு உடை மாற்றினாள்.

“வரலாம் வாங்க.” என அவள் குரல் கொடுத்தும் உள்ளே வந்தான்.

முன்பு அணிந்திருந்த உடைகளை வைக்க நக்ஷத்ரா எழுந்துகொள்ள…

“என்கிட்டே கொடுத்தா நான் வைக்க மாட்டேனா?” என்றவன், அவளிடம் இருந்த உடைகளை வாங்கிச் சென்று அங்கிருந்த ஹாங்கரில் போட்டுவிட்டு வந்தவன், அவள் மடியில் தலைவைத்து பட்டும் படாமல் படுக்க… அவன் தலையைப் பிடித்து ஒழுங்காக வைத்துக் கொண்டவள், அவன் கேசத்தைக் கோதி விட்டாள்.

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணுவோம்னு நான் நினைச்சதே இல்லை. ஆனா எனக்கு வேற யார் கூடவும் இப்படி யதார்த்தமா இருக்க முடியுமா தெரியலை…… நல்லவேளை நாமே கல்யாணம் பண்ணிகிட்டோம்.”

“உங்க வாயில இருந்து இப்படிக் கேட்க சந்தோஷமா இருக்கு. எனக்கு உங்களை எப்பவோ பிடிக்கும். ஆனா உங்களுக்கு இப்போதானே… நமக்குள்ள எப்படி இருக்குமோன்னு நினைச்சேன்.”

“உன்னை எனக்குப் பிடிக்காம இல்லை. ஆனா இது போல யோசிச்சது இல்ல….”

“நீங்க உங்க வேலையைத் தவிர வேற என்ன யோசிச்சிருக்கீங்க.”

“அதைச் சொல்லு… ஆனா நான் கடைசியில நல்ல முடிவு தான் எடுத்திருக்கேன்.” என்றவன், கட்டிலில் தள்ளி படுத்து நக்ஷத்ராவையும் தன்னோடு சேர்த்து இழுக்க…அவளும் அவன் அருகில் நெருங்கி படுத்தாள்.

“நக்ஷத்ரா நாம முதல்ல கொஞ்ச நாள் நம்ம வாழ்க்கையை வாழ்ந்திட்டு, அப்புறம் குழந்தையைப் பத்தி யோசிக்கலாமா?”

“நம்ம ரெண்டு பேருக்கும் வயசு அதிகம் தான். இன்னும் என்ன தள்ளி போடுறது?”

“நாம ஆபீஸ்ல பேசி பழகினது வேற… இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கிறது வேற… முதல்ல நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிப்போம்.”

கணவன் சொன்னதை நம்பி, “சரி ஒரு ஆறு மாசம் தான்.” என்றாள்.

“ஓகே…” என்றவன் கட்டிலில் இருந்து எழுந்து சென்று விளக்கணைத்து விட்டு வந்த கையோடு மனைவியையும் அணைத்தான்.

 

Advertisement