Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 9

திருமணதிற்கு இரண்டு தினங்கள் முன்பே அவன் அம்மா அழைத்ததால் யுகேந்திரன் அவர்கள் வீட்டில் தான் தங்கி இருந்தான். திருமணத்திற்கு முன்தின இரவு ஆட்களை வைத்து வீட்டை மலர்களால் அலங்கரித்து இருந்தனர். அதோடு வீட்டிற்கு வெளியே வாசலிலும் பந்தல் அமைத்து, அதோடு மொத்த வீடும் சீரியல் விளக்கால் ஜொலித்தது.

காலை ஏழரை ஒன்பது முஹுர்த்தம் என்பதால்…. காலை ஆறரை மணிக்கு மணப்பெண் அலங்காரத்தில் நக்ஷத்ராவும், உடன் அவளின் பெற்றோர் மற்றும் சொந்தபந்தகளும் வந்து சேர்ந்தனர்.

நக்ஷத்ராவின் நிறத்திற்கும் மெலிவான உடல்வாகிற்கும் அணிந்திருந்த சிவப்பு புடவையும், செய்திருந்த மணப்பெண் அலங்காரமும் அவளுக்கு மிகவும் பாந்தமாக இருந்தது. சற்றுத் தாமதமாகப் பட்டு வேஷ்ட்டி சட்டையில் தயாராகி வந்த யுகேந்திரன், வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றான்.

நக்ஷத்ரா கீழே இருந்த அறையில் இருந்ததால் அவளை அவன் பார்க்க செல்ல… அப்போது அறையில் இருந்து வெளியே வந்த நேத்ரா, “இப்போ எல்லாம் நீங்க பார்க்க முடியாது. அப்புறம்தான் உங்களுக்குக் காட்டுவோம்.” என வழி மறிக்க….

“நான் ஒன்னு மட்டும் கேட்டுட்டு போயிடுறேன்.” என்றவன், கதவை தட்டிவிட்டு உள்ளே செல்ல… கண்ணாடியின் முன்பு உட்கார்ந்திருந்த நக்ஷத்ரா அவனைப் பார்ததும்,”ஹாய் யுகி.” என்றபடி எழுந்து நின்றாள்.

“உட்காரு.” என்றவன்,

“நான் ஒகே தானே…” என்று கேட்க….

அவனைப் பார்வையால் ஆராய்ந்தபடி, “ம்ம்… நல்லா இருக்கீங்க. முகத்துக்கு எதுவும் போடலையா?” என்றதும்,

“பிரசன்னா சொன்னான். ஆனா எனக்குதான் யோசனை.” என்றான்.

அவளிடம் இருந்த கிரீமை எடுத்து, “இதைக் கொஞ்சமா போட்டுக்கோங்க.” என்றதும், அதில் இருந்து கொஞ்சமாக எடுத்து போட்டுக் கொண்டவன், மீண்டும் தலைவாரி கொண்டு, “சரி நான் போகட்டுமா?” என்றதும்,

“நான் எப்படி இருக்கேன்.” என்றாள்.

“நீதான் காலையில ரெடி ஆனதும் எனக்குப் போட்டோ அனுப்பி வச்சியே…. டிரெஸ்ஸிங்ல உன்னை அடிச்சிக்கவே முடியாது நக்ஷத்ரா…”

“அது எனக்குத் தெரியாதா…” என்றவளை பார்த்து புன்னகைத்தவன், “செம அழகா இருக்கப் போதுமா. நேத்ரா உள்ளேயே விட மாட்டேன்னு சொன்னா… நான் கிளம்புறேன்.” என்றவன், “ஒரு நிமிஷம் எழுந்திரு.” என்றதும், எதற்கு எனப் புரியாமல் நக்ஷத்ரா எழுந்து நிற்க….

அவளை அவன் லேசாக அனைத்து விடுவிக்க, நக்ஷத்ரா திகைத்து போய் நிற்கும் போதே… வெளியே சென்றும் விட்டான். அவன் சென்றதும் உள்ளே வந்த ஜனனியும் நேத்ராவும் நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்துவிட்டு, “என்ன அச்சு?” என்றதும்,

“ஒன்னும் இல்லையே…” எனச் சமாளித்தாலும் நக்ஷத்ராவின் முகத்தில் வெட்கம் வெளிப்படையாகத் தெரிய…

“என்னவோ நடந்திருக்கு.” என்றாள் நேத்ரா.

“அதுக்கு எல்லாம் வாய்ப்பு இல்லை. எனக்குத் தெரியாதா எங்க பாஸ்ஸ.” என ஜனனி சொல்ல…

“அவர் ஆபீஸ்ல தான் பாஸ். அதுக்காக எப்பவும் அப்படியே இருப்பாரா…. உங்க பாஸ் ரகசியம் அடுத்த மாசம் தெரியத்தான் போகுது.” என்ற நேத்ரா, “என்ன நக்ஷத்ரா நான் சொல்றது சரிதானே….” என்றதும், உடுத்தி இருந்த புடவைக்குப் போட்டியாக நக்ஷத்ராவின் முகமும் சிவந்தது.

சிறிது நேரத்தில் மணப்பெண்ணை மணவறைக்கு அழைக்க…. ஒரு பக்கம் நேத்ராவையும், மறுப்பக்கம் ஜனனியையும் பிடித்துக் கொண்டு நக்ஷத்ரா நடந்து வர… அவளைப் பார்த்ததும் யுகேந்திரன் மனையில் உட்கார அவளுக்குக் கைகொடுத்து உதவினான். வீண் ஆடம்பரம் இல்லாமல்… அதே சமயம் நிறைவாக யுகேந்திரன் நக்ஷத்ரா திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்து இருவரையும் எழுந்துகொள்ளச் சொன்ன போதும், யுகேந்திரன் எழுந்து நின்று நக்ஷத்ரா எழுந்துகொள்ளக் கைகொடுத்தான். எங்கும் தன் மனைவியை அவன் விட்டுக் கொடுக்கவில்லை. அவளுடையதை குறை போல அவன் கருதவே இல்லை என்பதை மற்றவர்களுக்கும் காட்டினான்.

திருமணம் முடிந்து பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு தம்பதிகள் வர…. அவர்கள் இருவரையும் அங்கிருந்த ஊஞ்சலில் உட்கார வைத்து, நேத்ரா பாலும் பழமும் கொடுத்தாள்.

முதலில் மணமக்கள் இருவரையும் வைத்து நிறையப் படங்கள் எடுத்தனர். பிறகு குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்டனர். சொந்தபந்தங்கள், அக்கம் பக்கம் இருப்பவர்கள் அதோடு பிரசன்னா, பிரதீப், ஜனனி எல்லாம் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

திருமணதிற்கு வந்தவர்களுக்கு மாடியில் விருந்து தயாராக இருக்க… அவர்களைக் கவனிக்கும் பணியை நிர்மல் பார்த்துக் கொண்டான்.

விருந்தினர்கள் எல்லாம் மாடியில் உணவருந்த, யுகேந்திரனுக்கும் நக்ஷத்ராவுக்கும் மட்டும் கீழே இருந்த அறையிலேயே நேத்ரா உணவு பரிமாறினாள்.

உணவருந்திவிட்டு நக்ஷத்ராவின் வீட்டினர் மாலை வரவேற்பில் பார்க்கலாம் எனச் சொல்லிக்கொண்டு சென்றனர்.

கீழே ஹாலில் உட்கார்ந்து தான் எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தனர். பெரியவர்கள் ஓய்வெடுக்க … இளையவர்கள் மட்டும் இருந்தனர்.

“யுகி உனக்குக் கல்யாணம் ஆனதை நினைச்சு சந்தோஷப்படுறதா… இல்ல இவளோட ஆனதுக்கு வருத்தபடுறதான்னு தெரியலை.” எனப் பிரசன்னா வருத்தமாகச் சொல்ல….

“ஏன் டா இப்படி?” யுகேந்திரன் சிரிக்க…

“இப்ப நான் பாஸ் பொண்டாட்டி. அந்த மரியாதையோட பேசு.” நக்ஷத்ரா சொன்னதும்,

“உனக்கு மரியாதை தரணுமா…. ஒழுங்கா இனிமே யுகிக்கு பொண்டாட்டியா வீட்ல இரு. ஆபீஸ்க்கு வந்து எங்க உயிரை எடுக்காத.” பிரதீப் சலிப்பாகச் சொல்ல…

“டபுள் பவரோட வருவேன்.” என்ற நக்ஷத்ரா யுகேந்திரனை பார்க்க….

“எனக்கு எந்தப் பவரும் வேண்டாம். எல்லாம் நீயே வச்சுக்கோ.” என்றான்.

“இவரு பெரிய வள்ளலலு அப்படியே வாரி வழங்குறார். உண்மையில கல்யாணத்துக்கு அப்புறம் ஆம்பிளைங்களுக்கு எந்தப் பவரும் இருக்காது. இவ நீ சொல்றதை ஆபீஸ்லையே கேட்க மாட்டா…. வீட்ல மட்டும் கேட்பாளா என்ன?” பிரசன்னா சொல்ல…

“உங்க வீட்ல வேணா அப்படி இருக்கும். நான் யுகி சொன்னா கேட்பேனே …இப்போ கூட உன்னோட யுகி பேச வேண்டாம்னு சொன்னா… நான் பேச மாட்டேனே…” நக்ஷத்ரா சொல்ல… யுகேந்திரன் அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க…

“புருஷனும் பொண்டாட்டியும் நக்கல் பண்றீங்களா? டேய் யுகி இவகிட்ட இனிமே என்னோட பேச வேண்டாம்னு சொல்லு. நான் இனிமேயாவது நிம்மதியா இருக்கேன்.” என்றான் பிரசன்னா.

“யாரு நீங்க ரெண்டு பேரும் பேசாம இருக்கிறவங்க.” என்றவன், “வேற வேலை இருந்தா பாரு.” என்றான் சிரிப்புடன்.

மதிய உணவு முடிந்ததும், நண்பர்கள் வீட்டிற்குச் சென்று வரவேற்புக்கு கிளம்பி வருவதற்காகச் சென்றனர். சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொல்லி கிரிஜா யுகேந்திரனையும் நக்ஷத்ராவை பார்த்து சொன்னார்.

ஏற்கனவே நேத்ரா உதவி செய்ய நக்ஷத்ரா தலை அலங்காரம் கலைத்து உடை மாற்றி இருந்தாள்.

“சாயங்கலாம் வரவேற்பு வேற இருக்கு. கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு.” என யுகேந்திரனும் நக்ஷத்ராவை கீழே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

அறையில் அவளது ஊன்றுகோல் இருக்க… அதை எடுத்துக் கொண்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வர… யுகேந்திரன் ஏற்கனவே கட்டிலில் தள்ளி படுத்திருந்தான்.

நக்ஷத்ரா கட்டிலின் ஓரமாக உட்கார்ந்து கொள்ள…

“நான் உன்னை எதுவும் பண்ணிட மாட்டேன். பயப்படாம படு.” என்றான்.

கட்டிலில் அவன் அருகில் படுத்தபடி, “உங்களுக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா யுகி.” என்றதும்,

“இனிமே பேச்சு மட்டும் இல்லை செயல்ல இறங்கிடலாம் தான…” என்றவன், அவள் பக்கம் திரும்பி படுத்து அனைத்துக்கொள்ள…

“கதவு தாழ் போடலை… ஒழுங்கா தள்ளி படுங்க.” என்றாள்.

சற்று தள்ளி படுத்தவன், “கால் எதுவும் வலிக்குதா?” என்றதற்கு இல்லையென்றாள்.

அவன் அவளை நம்பாமல் பார்க்க… “நிஜமா வலிக்கலை… நீங்கதான் என்னை அதிகம் நிற்கவே விடலையே…”

“இன்னைக்கே வரவேற்பு வச்சிருக்க வேண்டாமோ…”

“நாம ஒன்னும் நிறையப் பேருக்கு சொல்லலையே… கொஞ்சம் பேர் தானே… விடுங்க பார்த்துக்கலாம்.”

“நீ கால் வலிச்சாலும் வலிக்கலைன்னு தான் சொல்லப் போற…” அவன் சொன்னதும்,

“ஆமா வலிக்குது பிடிச்சு விடுங்க.” என்றாள்.

Advertisement