“நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி. எப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆச்சு?”என்றதும் அவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“எப்படிக் கண்டு பிடிச்ச?” என்றான்.
“உங்களை இப்படி உரிமையா யார் மிரட்ட முடியும்?”
“அது என்னவோ உண்மை தான். ஆனா இன்னும் கல்யாணம் ஆகலை…. இனிமே தான் கல்யாணம்.” என்றதும்,
“ஒ… சூப்பர்.” என்றவள், அவங்களுக்கு நான் யாருன்னு தெரியுமா?” எனக் கேட்டாள்.
“தெரியும், நான்தான் சொன்னேனே…. அவ தான் நீ இப்போ எப்படி இருக்கேன்னு தெரிஞ்சிக்கத் தேடினா.”
“உங்களோட என்னைப் பார்க்க வந்திருக்காங்கன்னா ஆச்சர்யமா இருக்கு.” முல்லை சொன்னதற்கு யுகேந்திரன் புன்னகைத்தான்.
“நீ எப்போ யூ எஸ் போன?”
“பி டெக் முடிச்சதும், கோயம்புத்தூர்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். முதல்ல பி டெக் படிக்கும் போது பணம் தட்டுப்பாடு. ஆனா நானே சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எப்படியாது எம் டெக் படிச்சிடனும்னு ஆசை. வேலை பார்த்திட்டே பார்ட் டைமா படிச்சேன். இங்க சென்னையில தான் படிச்சேன். வார கடைசியில கோயம்புத்தூர்ல இருந்து வந்திட்டு போவேன்.”
“ரொம்ப வெறியா படிச்சு முடிச்சேன். நான்தான் காலேஜ் டாப்பர் கூட… அப்புறம் தான் யூ எஸ்ல வேலை கிடைச்சது. இப்போ நாலு வருஷமா அங்க இருக்கேன். அங்க போனதும், என்னைக் கேள்வி கேட்க ஆளே இல்லை. ரொம்பச் சுதந்திரமா இருக்கேன். வேலை, வேலை விட்டா வீடுன்னு ஜாலியா இருக்கேன். வீட்ல ரொம்பக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்றாங்க. ஆனா எனக்கு இப்படித் தனியா இருக்கிறதே பழகிடுச்சு. இன்னும் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலை.” என்றவள்,
“யுகி ஆரம்பத்துல நாம பிரிஞ்சு போன பிறகு எனக்கு வேற எதையும் நினைக்கவும் அப்போ முடியலை.”
“யூ எஸ் போன பிறகு தான். நீங்க இப்போ என்னவா இருப்பீங்கன்னு நினைச்சு பார்த்து, உங்களைக் கூகிள்ல தேடினேன். உங்களைப் பத்தி தெரிஞ்சதும் அவ்வளவு சந்தோஷமா இருந்தது. நக்ஷத்ரா நிஜமாவே லக்கி தான்.”
“ஹே…. உனக்கு அவளைப் பத்தி தெரியாது. அவ என்னை எல்லாம் தூக்கி சாப்ட்டிடுவா…. ரொம்பத் திறமையான பொண்ணு. வேலையில மட்டும் இல்ல… நிறைய விஷயம் பண்ணுவா. நான் கொஞ்சம் அமைதியான ஆள் தான். ஆனா என்னை எப்படி அவளுக்குப் பிடிச்சது தெரியலை.”
“உங்களைப் போய் யாருக்காவது பிடிக்காம இருக்குமா…”
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே ஆர்டர் செய்து உணவு வகைகள் வந்துவிட…. யுகேந்திரன் சென்று நக்ஷத்ராவை அழைக்க….
“என்ன பாஸ் உங்க ஆளுக்கு வேற இன்னும் கல்யாணம் ஆகலையாம், என்னை எதுவும் கழட்டி விட்டுட மாட்டீங்களே…” அவனுடன் நடந்தபடி நக்ஷத்ரா கேட்க….
“அதைப் பத்தி இனிமே தான் யோசிக்கணும்.” என்றான் யுகேந்திரன். நின்று அவனைப் பார்த்து முறைத்தவள்,”உயிர் மேல அசை இல்லையா பாஸ்.” என்றதும்,
“ஹே என்னைக் கொலை பண்ணுவேன்னு சொல்றியா…. நீதானே அவளை ஏன் விட்டேன் விட்டேன்னு கேட்ட….”
“அது நான் அப்போ கேட்டேன். ஆனா இப்போ எல்லாம் நான் யாருக்கும் உங்களை விட்டு தர மாட்டேன். நீங்க இப்போ என்னோட யுகி மட்டும் தான்.”
“முல்லை என்னைப் பார்க்கனும்னு சொன்னது முன்னாடி இருந்த உறவை புதுபிக்க இல்ல…. அவ நல்லா இருக்கா.. நானும் நல்லா இருக்கேனான்னு தெரிஞ்சிக்க…நானும் அதுக்குதான் வந்தேன். இதே அவ நல்லா இல்லாம இருந்திருந்தா… அவ என்னைக்கும் என் முன்னால வந்திருக்க மாட்டா…அதனால கண்டதையும் யோசிக்காம… அவகிட்ட நல்லா பேசு.”
“எனக்கும் புரியுது. ஆனா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து பார்த்தா…எனக்கு என்னென்னவோ தோணுதே….”
“அது வயித்தெரிச்சல்…. மோர் வாங்கிக் குடி சரியாகிடும்.”
“கேப் கிடைச்சா நீங்க வச்சு செய்வீங்களே…..”
“நாம ரெண்டு பேரும் மட்டும் பேசிட்டு இருந்தா அவ எதாவது நினைக்கப் போறா…. வா போகலாம்.”
இந்தமுறை யுகேந்திரன் நக்ஷத்ராவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டான். முல்லை அவர்கள் இருவர் பக்கமும் உணவு வகைகளை நகர்த்தி வைக்க…
வழக்கம் போல யுகேந்திரனுக்குப் பரிமாறிவிட்டு நக்ஷத்ரா அவளுக்கும் எடுத்துக் கொண்டாள்.
“எப்ப உங்க கல்யாணம்.” என முல்லை நக்ஷத்ராவிடம் கேட்க….
“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.
“யுகி தான் சொன்னாங்க.” என முல்லை சொல்ல…. தன்னைத் திருமணம் செய்வது வரை சொல்லி இருந்தானா… நாமதான் தேவையில்லாம வாயை விட்டோமே என நினைத்துக் கொண்டவள், திருமணம் பற்றி விவரம் சொன்னாள்.
“நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க.” என மனம் கேட்காமல் நக்ஷத்ரா முல்லையைப் பார்த்து சொல்ல…. முல்லை புன்னகைக்க…
“அவங்களுக்குப் பிடிச்ச யாரையாவது பார்க்கும் போது பண்ணிப்பாங்க.” என்றான் யுகேந்திரன்.
“பார்க்க ரொம்ப லேட் பண்ணிடாதீங்க. நான் வேணா உங்களுக்குப் பார்த்து தரட்டுமா?” என நக்ஷத்ரா ஆர்வ கோளாறில் கேட்டு வைக்க…
“கல்யாணம் எல்லாம் அவங்கவங்க சொந்த விஷயம். நீ சீக்கிரம் சாப்பிடு கிளம்பலாம்.” என்றான்.
“நான் இன்னும் முல்லைகிட்ட பேசவே இல்லையே… நான் பேசிட்டு தான் வருவேன்.”
நக்ஷத்ரா முல்லையின் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க…. முல்லையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“உங்களை வெளிநாடு அனுப்ப உங்க வீட்ல இருந்து யாரும் வரலையா?”
“அப்பா அம்மாவுக்கு உடம்பு முடியலை…. இவ்வளவு தூரம் அலைய முடியாது. நீங்க பேசினது பெரிய தங்கச்சிகிட்ட… சின்னவ இங்க இருந்து தான் படிச்சிட்டு இருக்கா… அதனால அவ மட்டும் வந்திருக்கா… மேல ரூம்ல இருக்கா.” என முல்லை சொல்ல….
“நான் கூப்பிட்டதும் நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. உங்களோட நக்ஷத்ராவும் வந்தது ரொம்பச் சந்தோஷமா இருந்தது.” என்றாள் முல்லை.
“இதோட எல்லாம் உங்களை விட்டுட மாட்டோம்.” என்றாள் நக்ஷத்ரா.
“எனக்குத் தெரியும் நக்ஷத்ரா…. யார் உதவின்னு கேட்டாலும் யுகி செய்வாங்கன்னு…. இனிமே நீங்களும் இருக்கீங்க. எனக்கு என்ன கவலை?” என முல்லை புன்னகைக்க…
“வேற எந்தப் பின் பலமும் இல்லாம, படிப்பை மட்டுமே நம்பி… இந்த அளவுக்குப் படிச்சு, இவ்வளவு பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. நீ கஷ்ட்டபட்டதுக்கு இப்போ சந்தோஷமா இருக்க… எப்பவும் இருக்கணும்.” என்ற யுகேந்திரன் விடைபெற….
“அங்க போய்ட்டு போன் பண்ணுங்க.” என நக்ஷத்ராவும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
“உங்க கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்.” என வாழ்த்தி முல்லை அவர்களுக்கு விடைகொடுத்தாள்.
யுகேந்திரனுக்கு முல்லையைப் பார்தது, அதுவும் அவளைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மனம் நிறைவாக இருக்க…. நக்ஷத்ரா அமைதியாக வந்தாள்.
“எதாவது உளறாத…. அவ இப்போ எந்த உயரத்தில இருக்கா தெரியுமா? அங்க இருந்து அவ வருவாளா… இல்லை என்னால தான் அவ பின்னாடி போக முடியுமா…. நாங்க தெளிவா பேசித்தான் விலகினோம். இது எப்பவோ முடிஞ்சு போனது.”
“என்ன காரணமா இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் எங்க காதலை விட்டுக் கொடுத்திட்டோம். ஆனா நீ விட்டுக் கொடுப்பியா…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன இல்ல… நான் யாருக்கும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். நீங்க என்னோட யுகின்னு. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?”
“என்னை ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிக்குமான்னு இருந்தது.”
“நிஜமா தான யுகி. நீங்க எனக்காகச் சொல்லலை தான….”
“உனக்காகத்தான் சொல்றேன். நீ வேணும்னு தான் சொல்றேன். இனிமே முல்லையைப் பத்தி என்கிட்டே பேசாத.” என்றவன் சாலையில் கவனம் செலுத்த….. நக்ஷத்ராவும் இயல்புக்கு திரும்பினாள்.
முல்லை அறைக்குத் திரும்பியதும், அவளின் தங்கை ரோஜா கைபேசியில் அழைத்தாள்.
“அக்கா அவங்களைப் பார்த்தியா?”
“ம்ம்… பார்த்தேன்.”
“என்னக்கா சொன்னாரு.”
“எப்படி இருக்கேன்? என்ன பண்றேன்னு எல்லாம் கேட்டாரு.”
“இன்னும் கொஞ்ச வருஷம் முன்னாடியே நீ அவரைப் பார்த்திருக்கலாம்.”
“சில பேரை நாம வாழ்க்கையில இழந்தது இழந்ததுதான்.”
“உனக்குக் கஷ்ட்டமா இல்லையாக்கா….”
“நான்தானே வேண்டாம்னு முடிவு எடுத்தேன். அதனால தான் இப்போ நாம நினைச்சதை படிச்சிருக்கோம். எல்லோருக்கும் எல்லாமே கிடைக்காது.”
“அப்புறம் ஏன் அவரைப் பார்கனும்னு சொன்ன?”
“நான் ரொம்ப நல்லா வரணும்னு ஆசைப்பட்ட மனுஷன். அவருக்கு நான் நல்லா இருக்கேன்னு காட்டனும்னு நினைச்சேன். அதோட இன்னைக்கு நக்ஷத்ராவை பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமா இருந்தது. அவங்க ரெண்டு பேரும் தான் பெருத்தம்.”
“ம்ம்… சரிக்கா. அங்க போயிட்டு கூப்பிடு.”
“ரோஜா இனிமே நக்ஷத்ரா கூப்பிட்டாலும் எடுக்காத…. அவங்க வாழ்க்கையை அவங்க சந்தோஷமா வாழட்டும்.” என்ற முல்லை மறுநாள் அதிகாலையே விமானம் ஏறிவிட்டாள்.
ஒரு வாரம் சென்றிருக்கும், “ஏன் பாஸ் முல்லை போயிட்டு இன்னும் கால் பண்ணலை?” எனக் கேட்க….
“நக்ஷத்ரா நான் சொல்றதை கேளு…. நம்மகிட்ட பேசணும்னு இருந்தா… அவளே கூப்பிடுவா… இல்லைனாலும் கண்டிப்பா அவ வாழ்க்கையில அடுத்தக் கட்டத்துக்குப் போகும்போது, அவளே நம்மகிட்ட சொல்லுவா… அதுவரை அவளை அவ போக்குலேயே விடு.” என்றான்.
“நான் உங்க ரெண்டு பேரையும் திரும்பப் பார்க்க வச்சு ஹர்ட் பண்ணிட்டேனா பாஸ்.”
“அவ தானே பார்கனும்னு சொன்னா…. நல்லா இருக்கா தான…. அது போதும். அது உன் மூலமா தான் தெரிஞ்சது. நீ என்னை ஹர்ட் பண்ணலை போதுமா… ஆனா நீதான் கஷ்ட்டபட்ட எனக்குத் தெரியும்.”
“ஆமாம் எனக்கு உங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்கிறது நான் நினைச்ச மாதிரி ஈஸியா இல்ல…. எனக்கு முல்லையைப் பிடிச்சிருக்கு. ஆனா உங்களோட சேர்த்து பார்க்கும் போது கஷ்ட்டமா இருந்தது.” நக்ஷத்ரா மனதை மறைக்காமல் சொல்ல…
“இனிமே எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு நீ பேசுவ.” என யுகேந்திரன் சிரிப்புடன் கேட்க…. மாட்டேன் என்று வேகமாகத் தலையசைத்தாள்.
அதன் பிறகு அவர்களுக்கு எதையும் யோசிக்க நேரமும் இல்லை. திருமணதிற்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்க…. வேலைகளும் வரிசை கட்டி நின்றது.