Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 8

நக்ஷத்ராவின் திகைத்த தோற்றத்தை பார்த்து, “என்ன நீங்க தான தேட சொன்னீங்க.” என்றான் ஆனந்த்.

“ஆமாம். ஆனா எப்படிக் கண்டுபிடிச்ச?”

“நீங்க கொடுத்த பேர் ஊர் எல்லாம் வச்சு கண்டுபிடிக்க முடியலை. காலேஜ் போய் அங்க ஒரு ஆளை பிடிச்சு, அட்ரஸ் ஈமெயில் ஐ டி எல்லாம் வாங்கினேன். அதோட போன் நம்பரும் கிடைச்சது. அவங்க நம்பர் இப்போ இருக்கா தெரியலை…. அதனால அவங்க அப்பா நம்பரும் கேட்டு வாங்கி இருக்கேன்.”

“இவ்வளவு தான் என்னால முடிஞ்சது. இதுக்கு மேல நீங்க கண்டு பிடிச்சுக்கோங்க.” என ஆனந்த தன் கைபேசியில் இருந்த விவரங்களை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

“அவள் முல்லையின் எண்ணிற்கு முயல… அது உபயோகத்தில் இல்லை என்று வர…. அவளின் தந்தையின் எண்ணிற்கு அழைக்க…. யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

“ஹலோ முல்லை இருக்காங்களா?”

“அக்கா நேத்து தான் சென்னைக்குக் கிளம்பி போனாங்க.”

“ஒ…. முல்லை சென்னையில தான் இருக்காங்களா?”

“இல்லை…. அவங்க சென்னையில இல்லை….” என்றவள். “நீங்க யாரு?’ என்று கேட்க….

“நான் அவங்க ப்ரண்ட் தான். ஆனா ரொம்ப நாளா தொடர்புல இல்லை. இப்போதான் நம்பர் கிடைச்சது அதுதான் போன் பண்ணேன்.”

“ஒ… சரி நீங்க உங்க நம்பர் தாங்க அக்காவை பேச சொல்றேன்.”

“இல்ல…. நானே அவங்ககிட்ட பேசிக்கிறேன்.” என்றவள், அவளைப் பற்றி விவரம் சொல்ல…. அதன் பிறகே முல்லையின் தங்கை தன் அக்காவின் எண்ணை கொடுத்தாள்.

“உங்க பேர் என்ன?” என நக்ஷத்ரா கேட்க…

“ரோஜா…” என்றாள். “சரி நான் முல்லைகிட்ட பேசிக்கிறேன்.” எனச் சொல்லிவிட்டு வைத்தாள்.

“அக்கா இது எல்லாம் என் வேலை கணக்குல வராது. அதனால இதுக்காக என்னைத் தனியா கவனிக்கணும்.” என ஆனந்த் சொல்லிக் கொண்டிருக்க….

“என்ன உன்னைத் தனியா கவனிக்கணும். கோர்ட்டுக்கு போகாம இங்க என்ன பண்ற?” என யுகேந்திரன் கேட்டபடி வர… யுகேந்திரனை பார்த்ததும் பயத்தில் ஆனந்த் எல்லாவற்றையும் உளறிவிட….

“ஐயோ கத்தப் போறான்.” என நினைத்ததற்கு மாறாக…

“அது உன்பாடு உன் அக்காபாடு.” என்றவன். “இப்போ வேலை இருந்தா போய்ப் பாரு.” என ஆனந்தை அனுப்பிவிட்டு, அலுவலக அறைக்குள் சென்றவன், அங்கிருந்து நக்ஷத்ராவை அழைத்தான்.

யுகேந்திரன் எதுவும் கேட்பதற்குள் நக்ஷத்ராவே முந்திக் கொண்டு, “பாஸ், அன்னைக்கு ஒரு ஆர்வத்துல இவன்கிட்ட தேட சொன்னேன். ஆனா அதை இவன் இப்போ கொண்டு வந்தான். சரி முல்லை எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமேன்னு நினைச்சேன்.” என்றவள், அவனின் எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.

யுகேந்திரன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க…. அப்போது நக்ஷத்ராவின் கைபேசி அழைக்க…. அவள் அழைப்பை ஏற்றதும்,

“ஹலோ நக்ஷத்ராவா, நான் முல்லை.” என முல்லையே அழைத்துவிட…. நக்ஷத்ராவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

“என் தங்கச்சி உங்க நம்பர் கொடுத்தா… நீங்க வக்கீல்ன்னு சொன்னா…. ஆனா எனக்கு உங்களை முன்னாடி தெரிஞ்சதா நியபகம் இல்லை. உங்களுக்கு யுகேந்திரனை தெரியுமா? அவரும் வக்கீல் தான…. அதனால தான் கூப்பிடீங்களா? யுகி எப்படி இருக்காங்க? நல்லாத்தானே இருக்காங்க.” என முல்லை பேசிக் கொண்டே செல்ல….

“நல்லா இருக்காங்க, இங்க பக்கத்துல தான் இருக்காங்க.” என்றவள், யுகேந்திரனிடம் போன்னை கொடுத்து விட்டாள்.

“யாரு?” என அவன் கேட்க….

“முல்லை.” என்றவள், அவனிடம் கைபேசியைக் கொடுக்க…. தயங்காமல் அதை வாங்கிப் பேசினான்.

“ஹலோ முல்லை எப்படி இருக்க?” என அவன் நலம் விசாரிக்க…

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“நானும் நல்லா இருக்கேன்.”

“என் தங்கச்சி தான் இந்த நம்பர் கொடுத்தா… வக்கீல்ன்னு சொன்னதும் ஒருவேளை உங்க சம்பந்தபட்டவங்களா இருப்பாங்களோன்னு தோனுச்சு, அதுதான் நானே கூப்பிட்டேன்.”

“ஓ … ஓகே உன் தங்கச்சிங்க எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க, ஒரு தங்கச்சி டாக்டர், இன்னொருத்தி சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருக்கா….”

“ஒ… சூப்பர்.”

“நாளைக்கு நைட் எனக்கு யூ எஸ் போகப் பிளைட். போறதுக்கு முன்னாடி உங்களைப் பார்க்கணும். முடியுமா?”

“ஒ… பார்க்கலாமே…” என்றவன், அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு இன்று மாலை ஏழு மணி போல வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தான்.

“முல்லையைப் பார்க்க போகணும். நீயும் வா போயிட்டு வரலாம்.” என அவன் நக்ஷத்ராவிடம் சொல்ல…

“நான் வரலை உங்க ப்ரண்ட் நீங்க போயிட்டு வாங்க.” என்றாள்.

“இப்போ யாரு ஆரம்பிச்சா? நீதான் ஆரம்பிச்சு வச்ச…. வந்து முடிச்சும் வை.” என்றான்.

“என்னால வர முடியாது.”

“சரி வரலைனா இரு. ஆனா நான் போகாம இருக்க மாட்டேன்.” என்றவன், அதன் பிறகு அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஜனனி சொல்லி பிரசன்னாவுக்கும் பிரதீப்புக்கும் நடந்தது தெரிய வர….

“இவளே தான் இவளுக்கு எதிரி.” என பிரதீப்பும்,

“இது உனக்குத் தேவையா?” என பிரசன்னாவும் சொல்ல…. இருவர் பேசியதற்கும் நக்ஷத்ரா பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டு இருந்தாள்.

மாலை அலுவலகத்திலேயே முகம் கழுவி கிளம்பிய யுகேந்திரன், “இந்த டிரஸ் ஓகே தானே?” என நக்ஷத்ராவிடம் கேட்க… அவள் பதில் சொல்லாமல் இருக்க…

“சரி நான் போயிட்டு வரேன்.” என்றான்.

“முன்னாள் காதலியோட டேட்டிங் போக… வருங்காலப் பொண்டாட்டிகிட்டயே சொல்லிட்டுப் போறான் பார்த்தியா?” பிரசன்னா சொல்ல… அதைக் கேட்டு பிரதீப்பும் ஜனனியும் சிரித்தனர்.

வெளியே வரை சென்றுவிட்டு மீண்டும் வந்தவன், “முல்லை போன் நம்பர் கொடு.” என அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு, “வா உன்னை வீட்ல விட்டுட்டு போறேன்.” என அழைக்க…

“எனக்குப் போயிக்கத் தெரியும்.” என்றாள். அவளைக் கைபிடித்து எழுப்பியவன், “சொன்னா கேட்கணும் வா…” என அழைத்துக் கொண்டு சென்றான்.

“என்ன டா நடக்குது இங்க?” என மற்ற மூவரும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும், யோகேஸ்வரனை அழைத்து, “அங்கிள், நானும் நக்ஷத்ராவும் வெளியே சாப்பிட போறோம். நானே கொண்டு வந்து வீட்ல விடுறேன்.” எனச் சொல்லிவிட்டு வைக்க…

“உங்க ஆளை பார்க்க நீங்க போறீங்க. நான் ஏன் வரணும்?” என்றாள் கடுப்பாக.

“என் ஆள பார்க்க போறேன்.

பார்த்து சேதி பேச போறேன்.” என அந்த இரண்டு வரியையே திரும்பத் திரும்பப் பாடி அவளை வெறுப்பேற்றிக் கொண்டு வந்தான்.

முல்லையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டியது நக்ஷத்ரா தான். ஆனால் இப்போது நடப்பதை எல்லாம் பார்த்த பிறகு, தான் என்ன மாதிரி உணர்கிறோம் என அவளுக்குப் புரியவில்லை. வழியில் இருந்த கடையைப் பார்த்ததும், “வெறும் கையை வீசிட்டா போவாங்க. போய் எதாவது வாங்கிட்டு வாங்க.” என்றாள்.

யுகேந்திரன் சென்று இனிப்பும் காரமும் வாங்கி வந்தான்.

சொன்ன நேரத்திற்கு இருவரும் ஹோட்டல் சென்று சேர்ந்தனர். ஷூ அணிந்திருந்தால் ஊன்று கோல் இல்லாமல் கூட அவளால் மெதுவாக நடக்க முடியும். அதோடு யுகேந்திரன் இருந்ததால்… அவனைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தாள்.

கீழே இருந்த உணவுக் கூடத்தில் தான் முல்லை அவர்களுக்காகக் காத்திருந்தாள். வாயிலை பார்த்தபடி தான் உட்கார்ந்து இருந்தாள்.

யுகேந்திரன் மட்டும் தனியாக வருவான் என்றுதான் நினைத்திருப்பாள், ஆனால் நக்ஷ்த்ராவை உடன் பார்த்தாலும், அவள் முகம் மாறவில்லை என்பதை நக்ஷத்ரா கவனிக்கவே செய்தாள்.

இவர்கள் அருகில் வந்ததும் முல்லை எழுந்து நின்று வாங்க என வரவேற்க…. எடுத்ததுமே,“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.” என்றாள் நக்ஷத்ரா. அது சம்ரதாயதிற்காகச் சொல்லப்பட்டதும் இல்லை. உண்மையில் முல்லை அழகி தான்.

“ஹை முல்லை.” என்ற யுகேந்திரன், “இவங்க நக்ஷத்ரா.” என முல்லைக்கு அறிமுகம் செய்ய…. நான் நினைச்சேன் என்றாள்.

நக்ஷத்ராவை யுகேந்திரன் முல்லைக்கு எதிரில் இருந்த இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவன் இருவருக்கும் நடுவில் இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். முல்லைக்காக வாங்கி வந்தவைகளை அவளிடம் யுகேந்திரன் கொடுத்தான்.

நஷத்ரா யுகேந்திரனின் கைபிடித்து மெதுவாக நடந்து வந்ததை முல்லையும் கவனித்து இருந்தாள்.

“என்ன ஆச்சு? கால்ல எதுவும் அடியா?” என்றதும்,

“ம்ம்… ஒரு இடத்தில இருக்காம ஆடிட்டே இருந்தா அப்படித்தான்.” என்றான் யுகேந்திரன் சாதாரணம் போல்… நக்ஷத்ரா யுகேந்திரனை பார்த்தாலும், அவளும் எதுவும் சொல்லவில்லை.

“நிஜமா நான் உங்களைத் திரும்பப் பார்ப்பேன்னு நினைச்சதே இல்லை. இன்னைக்குப் பேசினதும் சட்டுன்னு கேட்டுட்டேன்.”

“எல்லாம் இவ பண்ண வேலை. தெரியாம உன்னைப் பத்தி இவகிட்ட சொல்லிட்டேன்.” என்றான். முல்லை நக்ஷத்ராவை பார்த்து புன்னகைத்தால். 

என்ன சாப்பிடுறீங்க?” என்றதும்,

“எனக்குக் காபி போதும்.” என்றான் யுகி.

“இந்த நேரத்துல காபியா? உங்களுக்கு அசிடிடிட்டி வரப் போகுது பாருங்க.” என்ற நக்ஷத்ரா, “லைட்டா டிபன்னே சாப்பிடுவோம்.” என்றவள், ரொட்டியும் பன்னீர் கறியும் சொல்ல… முல்லை அதோடு இன்னும் சிலதும் சொன்னாள்.

“யு எஸ்ல எந்தக் கம்பனி?” என யுகேந்திரன் முல்லையிடம் விசாரிக்க…

பிரபல கார் நிறுவனத்தில், முக்கியப் பதவியில் இருந்தாள்.

“உங்க வீட்டுக்காரர் அதே கம்பனியா இல்லை வேற கம்பனியா?”நக்ஷத்ரா கேட்டதும்,

“எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.” என்றாள். அதைக் கேட்டதும் நக்ஷத்ராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று நினைத்தவள், “நான் இதுக்கு முன்னாடி இந்த ஹோட்டல் வந்ததே இல்லை. சுத்தி பார்த்திட்டு வரேன்.” என எழுந்துகொள்ள….

“ஒன்னும் வேண்டாம் பேசாம இரு.” என்றான் யுகேந்திரன்.

“நான் போவேன்.” என்றவள், எழுந்து மெதுவாக நடக்க…. செல்லும் அவளையே தான் யுகேந்திரன் பார்த்து இருந்தான். வெளி வராண்டாவில் அவனின் கண் பார்வை படும் இடத்தில் நின்று கொண்டு அவள் சுற்றிலும் வேடிக்கை பார்க்க…. பிறகே அவன் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்து இயல்புக்குத் திரும்பினான். அதை முல்லையும் கவனித்து இருந்தாள்.

Advertisement