Advertisement

ஷாப்பிங் எல்லாம் நேத்ராவையும் நகஷத்ராவையும் பார்த்துக்கச் சொல்லலாம். ரெண்டு பேரும் அதுல ரொம்பப் பொருத்தம்.” யுகேந்திரன் சொல்ல…

கல்யாணத்துக்கு ஜவுளி எடுக்க எல்லோரும் தான் போகணும்.” என்றார் கிரிஜா.

சரி நீங்க பார்த்துக்கோங்க. எனக்கு அதுக்கு எல்லாம் நேரம் இருக்காது.”

உனக்கு யார் வாங்கிறது?”

அது நக்ஷத்ராவுக்குத் தெரியும். அவ எனக்கு நல்லா எடுப்பா.” என்றான்.

அம்மா நான் பணம் போட்டு விடுறேன். நீங்க தேவையானது பார்த்து செஞ்சிடுங்க.”

ஏன் டா மகனுக்குக் கல்யாணம் பண்ண கூட முடியாம நான் இருக்கேனா என்ன? நீ அப்போ அப்போ கொடுத்த பணம் அப்படியே தான் இருக்கு. எனக்கு மாசம் பென்ஷன் வர்றது. அதுவும் சேர்ந்திட்டே தான் இருக்கு. எனக்கு என்ன செலவு இருக்கு?”

அது இருக்கட்டும் மா…. நீங்க அப்புறம் உங்க பேரன் பேத்திக்குக் கொடுக்கலாம். நான் இப்போ போட்டு விடுறேன்.”

நீயும் சொல்றது கேட்க மாட்ட…. அவனும் கேட்க மாட்டான்.”

அம்மா நீங்க எடுத்து செய்யுறீங்க இல்ல… அதே பெரிசு. செலவு எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க அதைப் பத்தி யோசிக்காம இருங்க.” என்றவன் பிறகு பேசுவதாக வைத்து விட்டான்.

திருமணத்தன்று மாலை விருந்தை எந்த ஹோட்டலில் வைக்கலாம் என நக்ஷத்ராவிடம் யுகேந்திரன் கேட்க……

எல்லாமே நீங்களே பண்ணா நான் என்ன பண்றதுன்னு எங்க அப்பா கேட்கிறார்?”

யாரு பண்ணா என்ன?”

யுகி ப்ளீஸ், கல்யாணம் உங்க வீட்ல, விருந்து எங்க அப்பா பார்த்துகட்டும். அவர் ரொம்பப் பீல் பண்ணுவார்.”

சரி, ஆனா ரொம்பக் கிராண்டா எல்லாம் வேண்டாமுன்னு சொல்லிடு. ஒரு இருநூறு பேர் அளவுக்குப் போதும்னு சொல்லிடு.”

சரி நான் சொல்லிடுறேன்.”

நீயே இன்விடேஷன் ரெடி பண்ணிடு.” என யுகேந்திரன் அந்தப் பொறுப்பையும் நக்ஷத்ராவிடம் கொடுக்க….அவள் சரி என்றாள்.

வழக்குகளும் வரிசை கட்டி நிற்க…. யுகேந்திரன் அலைந்து கொண்டே இருந்தான்.

ஞாயிறு அன்று யுகேந்திரனின் வீட்டில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்தது. இரு வீட்டார் மற்றும் இருவரின் நண்பர்கள் தான். கிரிஜா வீட்டிலேயே விருந்து சமைத்திருந்தார். மருமகளுக்கு நகை புடவை என ஒரு குறையும் இல்லாமல் தான் செய்தார்.

நேத்ராவின் பெற்றோரை மட்டும் அழைத்திருந்தனர். அவர்கள் கொஞ்சம் ஒட்டாமல் தான் நடந்து கொண்டனர். நிர்மல் தான் அது குறித்துத் தன் மனைவியிடம் குறை பட்டான். ஆனால் யுகேந்திரன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

மதிய உணவு உண்டதும் நக்ஷத்ரா வீட்டினர் கிளம்பி விட்டனர்.

திருமணதிற்கு இன்னும் நாற்பது நாட்களே இருக்க…. அன்று யுகேந்திரன் அலுவலகம் வரும் போதே மாலை ஆகி இருக்க… சற்று நேரத்தில் எல்லோரும் கிளம்பிவிட நக்ஷத்ரா மட்டும் அவனோடு பேச வேண்டும் என்று இருந்தாள்.

யுகி பத்திரிக்கை ப்ரூப் வந்திருக்கு. நீங்க ஒரு தடவை பார்த்திடுங்க.” என்றவள், கைபேசியில் அவளுக்கு வந்திருந்ததை அவனுக்கு அனுப்பி வைக்க…. அதைப் பார்த்தவன், “ம்ம் ஓகே.” என்றான்.

நக்ஷத்ரா உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள், கவனிக்காமல் மேஜையின் காலில் அவளது காலை இடித்துக்கொள்ள….சற்று அதிக வலி என்பதால்.. மீண்டும் உட்கார்ந்து விட்டாள்.

ஹே… என்னாச்சு?” என்று பதறிய யுகேந்திரன் எழுந்து வந்து, அவள் முன்பு மண்டியிட்டு உட்கார்ந்து அவள் காலை பிடித்து விட….

விடுங்க விடுங்க வலிக்குது.” என்றாள். வலியில் அவள் கண்களும் கலங்கி விட…

நல்லா இடிச்சிட்டியா….”

ம்ம்…. ரொம்ப வலிக்குது.” என்றவள், காலை பிடித்துவிட….

நம்மகிட்ட ஐஸ் இருக்கா?” என்றவன் எழுந்து சென்று குளிர்சாதன பெட்டியை திறந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வந்து ஒத்தடம் கொடுத்தான்.

சற்று நேரம் சென்று கிளம்பலாம் என நக்ஷத்ரா சொல்ல…. யுகேந்திரன் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான்.

இன்னும் வலி விடவில்லை. அவள் நடக்கவே சிரமப்பட…. மின்தூக்கியில் கீழே வந்து காரில் ஏறியதும்,

நாம எதுக்கும் டாக்டரை பார்த்திடலாம்.” என்றான்.

வலி மாத்திரை போட்டா போதும் யுகி.” என நக்ஷத்ரா சொல்ல…

போற வழி தானே…. பார்த்திட்டு போகலாம்.” என்றான்.

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அடிபட்டிருக்க… அதனால் தான் அதிக வலி.

இவர்கள் சென்று சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவரை பார்த்து விட்டனர். அவருக்கு யுகேந்திரனை நன்றாகத் தெரியும். யோகேஸ்வரனும் இவர்கள் திருமணம் குறித்துப் பேசி இருந்தார்.

காலை சோதித்தவர், “பார்த்து நடக்கணும் நக்ஷத்ரா… காலை ரொம்ப அசைக்காம இருக்கக் கட்டு போட சொல்றேன். ரெண்டு நாள் இருக்கட்டும். வலி மாத்திரையும் போட்டுக்கோ…. ரெண்டு நாள் காலுக்கு ரொம்ப வேலைக் கொடுக்காத.” என்றவர் செவிலியரை அழைத்து அவளுக்குப் பேன்ட் சுற்ற சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

அவரைப் பார்த்ததும் யுகேந்திரன், “ஒன்னும் பயப்படுற மாதிரி இல்லை தானே…” என்று கேட்க….

இப்போ ஒன்னும் இல்லை. ஆனா இப்படியே இருக்கிறது நக்ஷத்ராகிட்ட தான் இருக்கு.”

இதுவரை அவ அதிக வெயிட் போட்டுடாம ரொம்பக் கவனமா இருந்திருக்கா… இனியும் அப்படி இருக்கணும்.”

கல்யாணத்துக்கு அப்புறம் குழந்தை உண்டானாலும் ரொம்பக் கவனமா இருக்கணும். அவ வெயிட் போட்டா காலுக்குத் தான் அதிகப் பாதிப்பு வரும். நக்ஷத்ரா நடக்க முடியாமலும் போகலாம். அதனால அதிகக் கவனம் தேவை.”

இப்பவே அவளுக்குச் சில நேரம் வலி இருக்கும். ரொம்ப வலி மாத்திரை எடுக்காம சமாளிக்கிறேன்னு சொல்லி இருக்கா… ஆனா எப்பவும் அப்படிச் சமாளிக்க முடியாது.”

மருத்துவர் சொன்னதைக் கவனமாகக் கேட்ட யுகேந்திரன், “நான் பார்த்துக்கிறேன் டாக்டர்.” என்றவன் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தான். நக்ஷத்ரா நர்சின் துணையுடன் வர… அவளை அழைத்துக் கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட்டவன்,

எத்தனை நாளுக்கு ஒரு தடவை வலி மாத்திரை போடுவ?” என்று கேட்க….

இல்லை நான் போடவே மாட்டேன். லேசான வலி இருந்தா ஐஸ் ஒத்தடம் இல்லைனா சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தாலே சரி ஆகிடும். ரொம்ப வலிச்சா மட்டும் தான் போடுவேன்.”

சரி இனியும் கவனமா இரு. நீ கொஞ்சம் அலையுறதை குறைச்சுக்கோ. ரெண்டு நாள் ரெஸ்ட்டா இரு. நான் வந்து உன்னை நாளைக்குப் பார்க்கிறேன்..” என்றவன் கிளம்ப… நக்ஷத்ராவின் பெற்றோர் அவனைச் சாப்பிடாமல் விடவே இல்லை.

அப்போதே நேரம் ஒன்பது மணிக்கு மேல் ஆகி இருந்ததால்… அங்கிருந்து சாப்பிட்டு விட்டே கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த பிறகும் சற்று நேரம் நக்ஷத்ராவை நினைத்துக் கவலையாக இருந்தவன், பிறகு அதற்கான தீர்வுகளை யோசித்துவிட்டுப் படுக்கச் சென்றான்.

மறுநாள் காலை நக்ஷத்ராவே அவனை அழைத்து விட்டாள்.

யுகி இப்போ வலி இல்லை. நான் நல்லா இருக்கேன். நீங்க வீணா அலையாதீங்க.” என்றாள். அவளுக்குத் தெரியும் அவனுக்கு அதிக வேலைகள் இருக்கும் என்று.

ம்ம்… சரி ஆனா நீ உன்னை நல்லா பார்த்துக்கோ… அப்போதான் என்னால இங்க நிம்மதியா இருக்க முடியும்.” என்றான்.

ம்ம்… கண்டிப்பா.”

வலி இல்லை ஆபீஸ் வரேன்னு சொல்லக் கூடாது. நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு வா.”

சரி….”

இரண்டு நாட்கள் சென்று அவள் அலுவலகம் வந்த போது காலில் சுற்றபட்டிருந்த பேன்ட் இல்லை.

இப்போ பரவாயில்லையா….”

எத்தனை தடவை கேட்பீங்க யுகி. நான் நல்லா இருக்கேன்.”

நீ இந்த அழகு பார்க்கிறது எல்லாம் விட்டுட்டு. காலுக்கு ஒழுங்கா ஷூ போடு. அப்போ உன் காலுக்குச் சப்போர்ட் இருக்கும். அதோட எங்கையாவது இடிச்சாலும் அடி படாது.”

உன்கிட்ட இருக்கா வாங்கனுமா?”

இருக்கு யுகி. நான் நாளையில இருந்து போடுறேன்.”

பிரசன்னா மற்றும் பிரதீப்பிடம் பேசிய யுகேந்திரன், இருக்கும் வழக்குகளை முடித்த பிறகு, நக்ஷத்ரா அலையாமல் ஒரு இடத்தில் இருந்து வேலை பார்ப்பது போல… கம்பனி வழக்குகளை அவளிடம் கொடுக்கலாம் என முடிவு செய்தான். பெரிய நிறுவனங்கள் லீகல் அட்வைசர் என ஒரு ஆளையே வேலைக்கு வைத்திருக்க… சிறு நிறுவனங்கள் தேவைப்படும் போது தான் வக்கீலை நாடுவார்கள். அதற்குக் கோர்ட் செல்லும் வேலையும் இல்லை. அதையெல்லாம் இனி நக்ஷத்ராவை பார்த்துகொள்ளச் சொல்லலாம் என யுகேந்திரன் முடிவு செய்திருந்தான்.

நீ சொல்ற டா…. ஆனா அவ ஒத்துக்கணுமே…” என பிரசன்னா சொல்ல….

நான் அவகிட்ட பேசிக்கிறேன்.” என்றான் யுகேந்திரன். அவன் நக்ஷத்ராவிடம் சொன்ன போது, அவள் ஒத்துகொள்ளவே இல்லை.

நீங்க என்னை ஒரு இடத்தில ஓரம் கட்ட பார்க்கிறீங்களா?” என்றாள்.

நக்ஷத்ரா நீ யாருன்னு ப்ரூப் பண்ணிட்ட…. எனக்கு நீதான் முக்கியம். நீ இதுலேயே இருக்க வேண்டாம். நான் உனக்கான கேஸ் வரும் போது கண்டிப்பா உனக்குத் தான் கொடுப்பேன்.” எனப் பலவாறு பேசி யுகேந்திரன் அவளை ஒத்துகொள்ள வைத்தான்.

எனக்குத் தெரியாம டாக்டர் உங்ககிட்ட எதாவது சொன்னாங்களா யுகி.”

இல்லை என்றால் மருத்துவரை சென்று கேட்பாள் என்று தெரியும்.

நீ ரொம்ப அலட்டிக்காம இருந்தா…. உனக்கு வர்ற சின்ன வலி கூட இருக்காதுன்னு சொன்னார்.” என்றான்.

ஓ … அதுக்காகவா அப்ப ஓகே.” என்றாள்.

மறுநாள் நக்ஷத்ராவும் ஜனனியும் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்தனர். அப்போது வந்த அவர்களின் ஜூனியர் ஆனந்த், “நக்ஷத்ரா மேடம் என்கிட்ட ஒருவேளை கொடுத்தீங்களே… நியாபகம் இருக்கா… அந்த வேலையை முடிச்சிட்டேன்.” என்றான்.

நீ இங்க எடுபிடி, உனக்கு ஆயிரம் வேலை கொடுக்கிறோம். அதுல என்ன வேலை.” என நக்ஷத்ரா அவனை வேண்டுமென்றே வம்பிழுக்க….

எடுபிடியா ஏன் சொல்ல மாட்டீங்க? மிஸ்ஸஸ் யுகேந்திரன் ஆகப் போறோனதும் கொஞ்சம் ஓவரா தான் போறீங்க.” என்றான்.

ஐயோ… நீ யுகிகிட்ட எதுவும் சொல்லிடாத… அப்புறம் என்னைக் காய்ச்சு எடுத்திடுவார்.” என்றவள், “சொல்லு எந்த வேலையை முடிச்ச.” என்றதும்,

முல்லைன்னு ஒருத்தவங்களைப் பத்தி கண்டு பிடிச்சு சொல்ல சொன்னீங்களே…. கண்டு பிடிச்சாச்சு.” என்றதும், நக்ஷத்ரா அதை அப்போது எதிர்பார்க்கவே இல்லை.

Advertisement