Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 7

மறுநாள் காலை யுகேந்திரன் அவன் அம்மாவை பார்க்க வீட்டிற்குச் சென்றிருந்தான். நேத்ரா வீட்டில் இருந்து தான் வேலை பார்க்கிறாள். அதனால் நிர்மல் மட்டும் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க…. யுகேந்திரன் மீனு குட்டியுடன் பேசிக் கொண்டிருக்க…. கிரிஜா அவனைச் சாப்பிட அழைத்தார்.

கிரிஜா இரண்டு மகன்களுக்கும் சுட சுட தோசை ஊற்றிக் கொண்டு வர… அண்ணனும் தம்பியும் உட்கார்ந்து உண்ண…நேத்ராவும் உட்கார்ந்து மகளுக்கு ஊட்டிக் விட்டுக் கொண்டிருந்தாள்.

கூப்பிட்டா கூட வரமாட்ட… இன்னைக்கு என்ன காலையிலேயே வந்திருக்க….” என நிர்மல் கேட்க…. யுகேந்திரன் பதில் சொல்லாமல் இருக்க….

அவன் முகத்தைப் பாரதத் நேத்ரா, “இனிமே ரெண்டு வீட்லையும் பேசி கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாம் இல்லையா…இவங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறதுன்னு முடிவாகிடுச்சு தானே…” என அவள் சொல்ல…

தானும் அதைத் தான் சொல்ல வந்தேன் என்று சொல்லாமல்… யுகேந்திரன் நேத்ராவை பார்த்து புன்னகைக்க….

ஆமாம் டா…. எதுக்கு வீணா நாளை கடத்தணும்.” என கிரிஜாவும் சொல்ல…

சரி மா உங்க இஷ்ட்டம்.” என்றான் யுகேந்திரன்.

நீ இவ்வளவு நல்லவனா டா…” என்பது போல நிர்மல் அண்ணனை பார்க்க…. யுகேந்திரன் தம்பியை பார்த்துவிட்டு, தம்பி மனைவியைப் பார்க்க….நேத்ரா இருவரையும் பார்த்து சிரித்து விட்டாள்.

சுபஸ்ய சீக்கிரம்னு சொல்வாங்க. இந்த வாரம் அவங்க வீட்ல பேசிடலாமா? அடுத்த வாரம் நம்ம வீட்ல நிச்சயம் வச்சுக்கலாம்.” என கிரிஜா திட்டமிட…. மறுக்க எதுவும் இல்லாததால் யுகேந்திரன் சரி என்றான்.

அம்மா சொல்றது எல்லாம் கேட்கிற நல்ல பிள்ளை மாதிரி சீன் போடுற. நீ பேச வந்ததை அம்மாவை வச்சே பேச வைக்கிற.” என நிர்மல் அண்ணனை சீண்ட….

ஐ ஐ டிக்குப் படிக்கப் போன இடத்தில லவ் பண்ணி, இருபத்தஞ்சு வயசுல கல்யாணம் பண்ண உன் அளவுக்கு எனக்குத் திறமை இல்லை… எதோ என்னால முடிஞ்சது.” என யுகேந்திரன் தம்பிக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்ல….

சரி சரி விடு….வக்கீல் கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா…” என்ற நிர்மல், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அலுவலகம் சென்றான். ஞாயிற்றுக்கிழமை மாலை நக்ஷத்ரா வீட்டுக்கு செல்வதை உறுதி செய்து கொண்டு யுகேந்திரனும் கிளம்ப… அப்போது நேத்ராவின் தந்தை மூர்த்தி வந்தார். அவரிடம் மரியாதைக்காகச் சிறிது நேரம் பேசிவிட்டே யுகேந்திரன் கிளம்பினான்.

அப்பாவும் மகளும் பேசட்டும் என்று கிரிஜா உள்ளே சென்றுவிட…“என்ன உன் வீட்டுக்காரரோட அண்ணா காலையிலேயே வந்திட்டு போறார்.” என மூர்த்திக் கேட்க….

வர்ற ஞாயிற்றுக்கிழமை பொண்ணு பார்க்க போறோம். அதைப் பத்தி பேச வந்திருந்தார்.”

இவருக்கு என்ன குறை? ஏன் இப்படிக் கல்யாணம் பண்ணனும்? நம்ம சொந்தகாரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. நீ இதுல எல்லாம் தலையைக் கொடுக்காத சொல்லிட்டேன். உன் வீட்டுக்காரர்கிட்டயும் சொல்லு.” என்றவரை, ஒரு பார்வை பார்த்த நேத்ரா, “அப்பா இவரோட அண்ணா அவர். நிர்மல் அவங்க அண்ணாவை எப்பவும் விட்டுக் கொடுக்க மாட்டார். அதோட யுகி அண்ணா எங்க விஷயத்துல இதுவரை தேவையில்லாம தலையிட்டு எந்த ஆலோசனையும் சொன்னது இல்ல….

உன் வீட்டுக்காரர் அந்த அளவுக்கு வச்சுக்கலையே மா….”

அவர் நினைச்சிருந்தா தலையிட்டிருக்க முடியும் பா…. அவர் கல்யாணம் பண்ணாம இருக்கும் போது…. தம்பி முதல்ல கல்யாணம் பண்ணதுக்குக் கூட அவர் எதுவும் சொல்லலையே…. நான் செட்டில்லாக நாள் ஆகும். அவனுக்குப் பண்ணி வைங்கன்னு தான் சொன்னார்.”

கல்யாணம் எல்லாம அவங்கவங்க சொந்த விஷயம். அவருக்கு நக்ஷத்ராவை பிடிச்சிருக்குக் கல்யாணம் பண்றார். இதுல நாங்க கோவிக்க என்ன இருக்கு?”

ஆமாம் அதோட அவங்க உங்களோடவும் இருக்கப் போறது இல்ல… என்னவோ பண்ணிட்டு போகட்டும்.” என்ற மூர்த்தி, “ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தேன். மீனு குட்டியை கூட அனுப்புச் சாயங்கலாம் வந்து விடுறேன்.” என்றதும், மகளைத் தந்தையுடன் அனுப்பிவிட்டு வந்த நேத்ராவுக்கு, இந்தத் திருமணம் முடிவதற்குள் எவ்வளவு பேரை சமாளிக்கக் வேண்டுமோ என்று இருந்தது.

கிரிஜா சமையல் அறையில் இருந்து எல்லாம் கேட்டு தான் இருந்தார். ஆனால் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிர்மல் அவனின் காரில் அம்மா, மனைவி, குழந்தையுடன் நேராக நக்ஷத்ரா வீட்டிற்கு வந்துவிட…. யுகேந்திரன் அதே நேரம் அங்கே இருப்பது போல வந்து விட்டான். நக்ஷத்ரா அழைத்ததால் ஜனனியும் வந்திருந்தாள்.

பெண் பார்க்கும் வைபவம் போல இல்லாமல்… இவர்கள் சென்ற போது நக்ஷத்ராவும் அவள் பெற்றோருடன் ஹாலில் தான் இருந்தாள். இவர்களை வரவேற்று காபி டிபன் கொடுத்து உபசரித்துவிட்டு எல்லோருமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

மறுவாரம் அவர்கள் வீட்டில் திருமண நிச்சயம் வைத்துகொள்ளலாம் என்ற கிரிஜா, திருமணத்தை ஒரு மூன்று மாதங்கள் சென்று வைக்கலாம் என்றார்.

அம்மா, எங்க கல்யாணம் எளிமையா நடந்தா போதும். அதுக்கு எதுக்கு மூன்னு மாசம்.” என்றான் யுகேந்திரன்.

நீ சொல்ற டா.. ஆனா நக்ஷத்ராவுக்குக் கிராண்டா பண்ணனும்னு ஆசை இருந்தா…”

இல்லை மாமி. யுகி எப்படிச் சொல்றாங்களோ அப்படியே நடக்கட்டும்.” என்றாள் நக்ஷத்ரா.

கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணிட்டு. ஒரு ஹோட்டல்ல ரொம்பத் தெரிஞ்சவங்களுக்கு மட்டும் விருந்து கொடுத்திடலாம்.”

யுகேந்திரன் சொன்னதற்கு மற்றவர்களும் சம்மதமாகத் தலையசைக்க… கிரிஜா தான் பிறகு நல்ல நாள் பார்த்துச் சொல்வதாகச் சொன்னார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, யுகேந்திரனின் வீட்டினர் கிளம்ப….. யுகேந்திரனும் நக்ஷத்ராவும் அவர்களுடன் கீழே வரை சென்றனர்.

இனி கல்யாணம் வரை நாம ஷாப்பிங் தான் பண்றோம்.” என நேத்ரா நக்ஷத்ராவிடம் சொல்ல… நக்ஷத்ராவும் குஷியாகச் சரி என்றாள்.

யுகேந்திரனின் வீட்டினர் கிளம்பியதும், “ஆமாம் நீங்க கல்யாணம் ரெஜிஸ்டர் பண்றது சொன்னீங்க. அப்புறம் ரிஷப்ஷன் எப்போ வைக்கலாம் சொன்னீங்க. ஆனா எப்போ தாலி கட்டுவீங்க.” என நக்ஷத்ரா அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்க….

நாம ரெண்டு பேருமே வக்கீல் தான…. நம்ம கல்யாணம் சட்டபடி நடத்தா போதாதா…” என்றான்.

தாலி கட்டமா நீங்க என் பக்கத்துல வந்தா…. அதையெல்லாம் என்னால ஏத்துக்க முடியாது யுகி. சில விஷயங்கள் நமக்குள்ள ஊறிப் போயிருக்கும், அதை எல்லாம் மாத்திக்க முடியாது.”

அப்போ பார்லர் போகும் போது, இன்னும் மத்த நேரத்துல நீ தாலியை கழட்டி வைக்கவே மாட்ட….”

ம்ம்… அதெல்லாம் உறுதியா இப்போ சொல்ல முடியாது. அது என் வசதியை பொறுத்தது.”

ஒன்னு இப்படி இரு…. இல்லைனா அப்படி இரு…. இது என்ன ரெண்டும் இல்லாம….”

அது அப்படித்தான், சில விஷயங்கள் அறிவை கேட்டு செஞ்சாலும், சில விஷயங்கள் மனசு சொல்றபடி தான்.” என்றவள், “எப்போ தாலி கட்டுவீங்க சொல்லுங்க.” என்றாள்.

ஹே… நான் தாலி கட்டலைன்னு உன்கிட்ட சொன்னேனா….. நீயா எதோ நினைச்சு பேசின….”

அப்போ இவ்வளவு நேரம் போட்டு வாங்கினீங்களா பாஸ்.” என நக்ஷத்ரா கேட்க யுகேந்திரன் சிரித்து விட்டான்.

அவளிடம் மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு, அவளை வீட்டில் சென்று விட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றான்.

அடுத்த நாளே கிரிஜா திருமணதிற்கு நாள் பார்த்து விட்டார். மண்டபத்திலேயே வைக்கலாமே என்றதற்கு, “மண்டபமே பெரிய செலவு தான். அதுல வச்சா அதுக்கு எத்த மாதிரி ஆளுங்களைக் கூப்பிடனும், சாப்பாடு போடணும். செலவு இழுத்திட்டே போகும். நம்ம வீடே பெரிசா தான் இருக்கு. வீட்டு ஆளுங்க வரை கல்யாணத்துக்குப் போதும், நம்ம வீட்லயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்றான்.

முன்னாடி காலத்துல எல்லாம் வீட்ல தான் கல்யாணம் நடக்கும். நீ திரும்ப அதைக் கொண்டு வர….”

அம்மா நான் திரும்பச் சொல்றேன், நீங்க சாஸ்த்திரம் சடங்குன்னு ரொம்ப இழுத்துடாதீங்க. அரை மணி நேரத்துல கல்யாணம் முடிக்கிற மாதிரி பார்த்துக்கோங்க.” என்றான்.

சரி டா உன்னைப் பத்தி தெரியாதா…” என்றவர்,

வெறும் நம்ம வீட்டு ஆளுங்க அப்புறம் அவங்க வீட்டு ஆளுங்கன்னாலும் கிட்டத்தட்ட அம்பது அறுபது பேர் தாராளமா வந்திடும். நம்ம வீட்டு முன்னாடியே ஆள் வச்சு சமச்சுக்கலாம்.”

சமையலுக்குச் சொல்லணும், அவங்களையே பாத்திரம் எல்லாம் கொண்டு வர சொல்லிடனும். கீழே கல்யாணத்தை வச்சிட்டு, மாடியில பந்தி பரிமாறிக்கலாம்.” என கிரிஜா ஒவ்வொன்றையும் திட்டமிட… யுகேந்திரன் எல்லாவற்றையும் ஒரு தாளில் குறித்துக் கொண்டான்.

Advertisement