Advertisement

சொன்னது போல மறுநாள் காலை அவளின் வீட்டின் அருகே வந்ததும், அவன் அழைக்க…. நக்ஷத்ரா அவள் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு சென்றாள்.

அவளைப் பார்த்ததும் யுகேந்திரன் காரை விட்டு இறங்க பார்க்க…

“என்னைப் பேம்பர் பண்ணாதீங்க. எனக்கே என் வேலையைப் பண்ணிக்கத் தெரியும்.” என்றவள், பின் பக்க கதவை திறந்து அவளின் ஸ்டிக்கையும், பையையும் வைத்துவிட்டு, முன்பக்கம் அவனின் அருகே ஏறி உட்கார்ந்தாள்.

“நானா உன்னைப் பேம்பர் பண்றேன். நீதான் என்னைப் பேம்பர் பண்ணுவ…. எனக்கே போட்டுச் சாப்பிட்டுக்கத் தெரியாதா?”

“நீங்களா போட்டுக்கிட்டா ஒழுங்கா போட்டுக்க மாட்டீங்க அதுதான்.”

“விட்டா ஊட்டி விடுவ போலையே…” என்றதும்,

“நீங்கதான் அதுக்கு இன்னும் நாலு மாசம் போகட்டும்னு சொல்லிடீங்களே…” என்றாள் சோகமாக. யுகேந்திரன் சிரித்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

இன்று நடக்கும் வழக்கை பற்றிப் பேசியவன், “இந்த நாலு பாயிண்ட் மட்டும் எடுத்து வை போதும். “நீ தேவையில்லாம வழவழன்னு பேசாத… ஏற்கனவே எதிர்த்தரப்புக்கு தோத்துப் போகப் போறோம்னு தெரியும். தேவையில்லாம இழுத்திட்டு இருக்காங்க.இதுல நீ வேற வாய்ப்பு கொடுக்காத, புரியுதா?”

“புரியுது பாஸ்.”

நக்ஷ்த்ராவுக்கு வசதியாக அவளை நீதிமன்றத்தின் உள்ளே வரை சென்று விட்டவன், “பார்த்து போ…. என் வேலை முடிஞ்சதும் உன்னைப் பார்க்க வரேன்.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

நக்ஷத்ரா நீதிமன்றம் சென்றாள்… அன்றும் எதிர்தரப்பு வாயுதா கோர…. அவளுக்குக் கடுப்பாகிவிட்டது

வேண்டுமென்றே எதிர்தரப்பு இழுத்தடிப்பதாக அவள் நீதிபதியிடம் முறையிட….

“காரணம் என்ன?” என்று நீதிபதி கேட்க…

அடுத்த வாரம் தகுந்த அதாரம் கொடுப்பதாக அவர்கள் சொல்ல… வழக்கு மறுவாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இதே கேசை இன்னும் எத்தனை நாள் வாதாடுவது என்று நினைத்தவள், கோர்ட் அறையில் இருந்து வெளியே வந்து, அங்கிருந்த தோட்டத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்து யுகேந்திரனுக்காகக் காத்திருந்தாள். அன்று அவளுக்கு வேறு எதுவும் வழக்கு இல்லை.

யுகேந்திரன் வர மிகவும் தாமதமாகிவிட்டது. இவளைப் பார்த்ததும் அவன் இவளை நோக்கி வர… வழியில் மற்றொரு பெண் வக்கீல் அவனைப் பிடித்துக் கொண்டு நலம் விசாரித்தவர், அவனிடம் மேலும் பேச்சுக் கொடுக்க… யுகேந்திரன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரையும் பார்க்க பார்க்க நக்ஷத்ராவுக்குக் கடுப்பாக இருக்க… அவள் இருவரையும் முறைத்து பார்த்தவள், வாயிக்குள் எதோ முனங்கிக் கொண்டும் இருந்தாள்.

யுகேந்திரன் அவளை எதேத்சையாகப் பார்க்க… அவனைப் பார்த்து போதும் வாங்க என்றாள்.

அவளைப் பார்த்து லேசாகத் தலையசைத்தவன், அவனிடம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் பார்வை எல்லாம் நக்ஷத்ரா மீது தான்.

அவளுக்கு அவர்கள் இருவரும் பேசுவது பிடிக்கவே இல்லை என்று பார்த்ததும் புரிந்தது. சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன், எதிரில் இருந்த பெண்மணி கேட்டதற்குப் பதில் சொல்லிவிட்டே அவரிடம் விடைபெற்று நக்ஷத்ராவிடம் வந்தான்.

“எவ்வளவு நேரம் வெயிட் பண்றது. கால் எல்லாம் வலிக்குது .”என்றாள்.

“உட்கார்ந்திட்டு தான மேடம் இருந்தீங்க.” என்றவன்,

“என்ன கோபம்?” என்றதும்,

“அவ சும்மா உங்ககிட்ட வழியுறதுக்காகவே பேசுறா… அவகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?” என்றாள்.

“மரியாதையா பேசு… அவங்க கேட்டதுக்குப் பதில் சொல்லணும் தான.” என்றவன்,

“நீ இங்கயே இரு கார் எடுத்திட்டு வரேன்.” என்றான்.

“வேண்டாம் நான் நடந்து வரேன்.”

கார் ரொம்பத் தள்ளி நிறுத்தி இருக்கேன். நீ இங்கயே இரு.” என்றவன், அவளுக்கு மேலே பேச இடம் கொடுக்காமல் சென்றிருந்தான்.

அவன் கார் எடுத்துக் கொண்டு வந்ததும், காரில் ஏறியவள், வசதியாக உட்கார்ந்து கொண்டு, அவனைப் பார்க்க… அவன் காரை எடுத்தான்.

சிறிது தூரம் சென்றதும், “நீங்க இனிமே காலம் எல்லாம் எனக்காக இப்படி யோசிக்கணும்… நான் அவசரப்பட்டு என் மனசை காட்டிக் கொடுத்திட்டேன் தான….உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு கூட இல்லை. எனக்குத் தெரியும்.” என்றாள்.

திரும்பி அவளைப் பார்த்தவன், “ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற. இனிமே இப்படியெல்லாம் பேசாத. நீ இப்படியெல்லாம் பேசுறது கேட்க நல்லாவே இல்லை.” என்றவன், “நீ பசியில இருக்கேன்னு நினைக்கிறேன். வழியில சாப்பிட்டு போவோம்.” என்றான்.

நக்ஷத்ரா வீட்டுக்கு அழைத்து உணவு அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

ஒரு உணவகத்தில் யுகேந்திரன் காரை நிறுத்த இருவரும், காரில் இருந்து இறங்க, நக்ஷத்ரா பின் இருக்கையில் இருந்த ஸ்டிக்கை எடுக்க… அதை வாங்கி மீண்டும் காரில் வைத்தவன், அவள் பிடித்துகொள்ள வசதியாகத் தன் கையைக் கொடுத்தான்.

இருவரும் உள்ளே சென்றதும் அவரவருக்குத் தேவையானது சொல்ல… அடுத்தப் பத்து நிமிடத்தில் உணவு வந்துவிட…. சர்வர் உணவை வைத்துவிட்டுச் சென்றதும்,

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு புரிஞ்சது. ஆனா அதுக்காக எனக்குப் பிடிக்காம உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டிருப்பேனா…. தேவையில்லாதது எல்லாம் யோசிக்காம சாப்பிடு.” என்றான்.

நக்ஷத்ராவிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் இல்லை. அமைதியாக உண்டவள், அப்போதும் அவள் உண்ணும் அளவு மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை யுகிக்கு கொடுக்க….

“ஒழுங்கா சாப்பிடு.” என்றான்.

“ஹான் நான் வெயிட் போட்டுடுவேன்.” என அவள் அலற…

“அப்போ நான் வெயிட் போட்டா பரவாயில்லையா?” என அவன் கேட்க… நக்ஷத்ரா சிரித்து விட்டாள். அதன் பிறகு அவனிடம் ஒழுங்காகப் பேசிக் கொண்டு இருந்தாள்.

அவளுக்கு இன்னும் கொஞ்சம் உணவு வைத்துவிட்டு, பிறகு அவனுக்கும் வைத்துக் கொண்டான்.இருவரும் மதியத்திற்கு மேல் அலுவலகம் சென்றனர்.

இரண்டு மாதங்கள் சென்றிருக்கும், யுகேந்திரன் அலுவலகத்தில் மற்றவர்கள் முன்பு எதையும் காட்டிக்கொள்ளவது இல்லை. எப்போதும் போலவே இருந்தான். அவர்கள் இருவர் மட்டுமே இருக்கும் போதுதான் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது. ஆனால் நக்ஷத்ரா அப்படிக் கிடையாது. யுகேந்திரன் தன்னுடையவன் என்ற உரிமையை அவள் காட்ட தயங்குவதே இல்லை.

“என் ஆளுன்னு சொல்லிட்டு இப்போ நீ உஷார் பண்ணிட்ட இல்ல…” என்றாள் ஜனனி விளையாட்டாக.

“ஹே… சாரி ஜனனி. எனக்கே இப்போ அதை நினைச்சா கஷ்ட்டமா தான் இருக்கு. ஒருவேளை என் மனசுல யுகிக்கு எல்லாம் என்னைப் பிடிக்காதுன்னோ நினைச்சிட்டு இருந்தேனோ என்னவோ… நான் ஏன் அப்படிப் பண்ணேன்னு எனக்கே புரியலை.”

“ஹே… லூசு நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். நீ என்னை வச்சு ஓட்டிட்டு இருந்த… ஆனா எனக்கு உங்களைப் பார்க்கும் போது, அப்போவே எதோ சம்திங்க் இருக்க மாதிரி தான் இருந்துச்சு.”

“ம்ம்… எங்களுக்கே புரியாதது உனக்குப் புரிஞ்சுதா.” என்றாள் நட்சத்ராவும் விளையாட்டாக.

மாலை வழக்கிற்காக வந்த ஒருவர், வழக்குச் சம்பந்தமாக எல்லாம் பேசிவிட்டுக் கட்டணம் எவ்வளவு என்று கேட்க… யுகேந்திரன் சொல்வதற்கு முன் நக்ஷத்ரா முந்திக் கொண்டு தொகையைச் சொல்ல…

“இவ்வளவா… இவர் கம்மியா தான் வாங்குவாருன்னு சொன்னாங்க.” என வந்தவர் சொல்ல…

“இல்லை சார் அதெல்லாம் ரொம்ப முன்னாடி இப்போ இதுதான். முடியாதுனா வேற வக்கீல் பார்த்துக்கோங்க.” என நக்ஷத்ரா சொல்லிவிட….

“இல்லையில்லை…. நான் இவரை நம்பித்தான் வந்திருக்கேன்.” என்றார்.

அவர் செல்லும் வரை யுகேந்திரன் எதுவும் பேசவில்லை.

“நீ எனக்கு வாயா? எனக்குப் பேச தெரியாதா?” என்றான். 

“யுகி… இல்லாதவங்ககிட்ட பீஸ் வாங்காம கூட வாதாடுங்க. ஆனா சும்மா எல்லார்கிட்டயும் குறைச்சு வாங்கினா என்ன அர்த்தம்?”

“அது ஓகே…. ஆனா…” என்றவன், மேலே பேசாமல் தோளை மட்டும் குலுக்க….

“நீ யாரு இதைச் சொல்லன்னு தான சொல்ல வந்தீங்க. பரவாயில்லை சொல்லுங்க. நான் உங்களுக்காக எதுவும் பண்ணக் கூடாதா? அதுவும் சொல்லிடுங்க.” என்றதும்,

“நான் அப்படி எல்லாம் சொல்லலை.” என்றான்.

“நீங்க அதுதான் சொல்ல வந்தீங்க.” என்ற நக்ஷத்ரா ,அவன் அறையில் இருந்து கோபமாக வெளியே சென்றுவிட்டாள்.

அதன் பிறகு யுகேந்திரன் அறையில் இருந்து வெளியே வந்த போதும், அவள் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. மாலை அவனிடம் சொல்லாமலே வீட்டுக்கு சென்று விட்டாள்.

இந்தச் சண்டை அறையில் நடந்ததால் வேறு யாருக்கும் தெரியாது.

அவள் சென்றதும் யுகேந்திரன் யோசனையிலேயே இருந்தான். நக்ஷத்ரா மட்டும் இல்லை…. மற்றவர்களும் அவன் குறைந்த கட்டணம் வாங்குகிறான் என்று சொல்வது தான். இன்று நக்ஷத்ரா அவனைக் கேட்காமல் சொல்லிவிடவும், அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. உண்மையில் அவன் செய்ய வேண்டியதை தான் அவள் செய்திருந்தாள். எதற்கு அவள் மீது கோபப்பட்டோம் என்று இப்போது இருந்தது.

அலுவலகத்தில் இருந்து நேராக அவள் வீட்டிற்கே சென்றான்.

இவன் சென்ற போது எட்டு மணி ஆகி இருக்க… அப்போது தான் அவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்து இருந்தனர்.

அவனைப் பார்த்ததும் வரவேற்ற நக்ஷத்ராவின் பெற்றோர் அவனைச் சாப்பிட சொல்ல….

“இல்லை எனக்கு லேட் ஆகும்.” என்றான்.

நக்ஷத்ரா அன்று ரெசார்ட்டில் அணிந்தது போல மேக்சி அணிந்திருந்தாள். அவனுக்கு இனிப்பும் காரமும் ஒரு தட்டில் எடுத்து வந்து கொடுத்தாள். ஆனால் அப்போதும் கோபமாகத்தான் இருக்கிறாள் என முகமே காட்டிக் கொடுத்தது.

யுகேந்திரன் திருமணதிற்கு அவகாசம் கேட்டிருந்ததால்…. அதைப் பற்றிப் பேசாமல் மற்ற விஷயங்களைப் பேசியவர்கள், “டாக்டர் என்னைச் சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் நடத்திட்டுப் படுக்கச் சொல்லி இருக்கார். நாங்க நடந்திட்டு வரோம். நீங்க பேசிட்டு இருங்க.” எனச் சொல்லிவிட்டு நக்ஷத்ராவின் பெற்றோர் சென்றனர்.

அவர்கள் கதவை சாற்றிக் கொண்டு சென்றதும், யுகேந்திரன் நக்ஷத்ராவை பார்க்க…

“இப்போ எதுக்கு வந்தீங்க? பேசுறது எல்லாம் பேசிட்டு அப்புறம் என்ன?” என்றாள் குறையாத கோபத்துடன்.

“நான் எங்க பேசினேன், நீதான் பேசின…”

“ஆமாம் நான்தான் பேசினேன். நான் உரிமை எடுத்துகிட்டது என்னோட தப்பு தான்.”

“அப்படி இல்லை… நான் யோசிச்சிட்டு தான் இருந்தேன். நீ என்னைக் கேட்காம சொன்னதும் ஒருமாதிரி ஆகிடுச்சு.”

“உங்களைக் கேட்காம சொன்னாலும், நீங்க சொல்ல வேண்டியதை தான சொன்னேன். உங்க திறமைக்கும் உங்களுக்கு இருக்கப் பேருக்கும், நீங்க எப்படிச் சம்பாதிக்கலாம் தெரியுமா….”

“நான் அப்படிக் கம்மியா எல்லாம் வாங்கலை. அதோட முதல்ல இந்தத் துறையில பேர் சம்பாதிக்கிறது தான் முக்கியமா தோனுச்சு. இப்போ நிறையப் பேர் நம்மைத் தேடித்தானே வர்றாங்க.”

“இல்லைன்னு யார் சொன்னா…. ஆனா நீங்க இன்னும் யோசிச்சிட்டே இருப்பீங்கன்னு தான் நான் பேசினேன்.” என்றவள், அவன் பக்கத்தில் இருந்து எழுந்துகொள்ள….

“எங்க போற?” என்றவன் அவள் கைப்பற்றி இழுக்க… அதை எதிர்பாராததால் அவன் மீதே விழுந்து வைத்தாள்.

மடியில் விழுந்தவளை எழுந்துகொள்ள முடியாமல் அவளைத் தன் மடியின் மீது உட்கார வைத்தவன், முட்டிக்கு சற்று கீழே வரை மட்டுமே இருந்த உடையை இன்னும் இழுத்து விட… எதோ சின்னக் குழந்தைக்கு அவன் செய்வது போலவே இருக்க…. நக்ஷத்ரா அதைப் பார்த்து சிரித்து விட்டாள்.

அவளின் இடது காலை அவன் வருடிக் கொடுக்க… அந்தக் காலில் தான் பல அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார்கள்.

“பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செஞ்சு, கால் பளபளன்னு இருந்தாலும், உள்ள இருக்கிறது எல்லாம் ராடு, நட்டு, போல்டு தான்.” என அவள் சிரிக்க…

“பழைய இரும்புக்குப் பேரிச்சம்பழம் சாப்பிடனும்னா…. உன்னைக் கொண்டு போய்க் கடையில போட்டுடலாம்.” என்றான் யுகேந்திரன் கிண்டலாக.

“ஏன் யுகி இப்படி?”

ஒரு கை அவளின் காலை வருடினாலும், மற்றொரு கை அவளைப் பிடித்திருந்த தோளை வருட…. “செம சாப்ட் நீ.” என்றான்.

எவ்வளவு நேரம் நக்ஷத்ரா அவளைக் கட்டுபடுத்திக் கொண்டு இருப்பாள். அவள் அவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.

“நான் நம்ம ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரியே இருக்காதுன்னு நினைச்சேன். ஆனா இப்போ வேற மாதிரி இருக்கே…” என்றவனின் இதழ் அவள் கன்னத்தை உரச…..நக்ஷத்ரா அந்த உலகத்திலேயே இல்லை. 

“நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” அவன் காதலாக கேட்க…. 

“நாம இப்படி இருக்கிறதை என் அப்பா அம்மா பார்த்தா… அவங்களே பண்ணி வச்சிடுவாங்க.” என்றவள் அவனை விட்டு விலகி, அவன் பக்கத்தில் உட்கார்ந்தவள், “இன்னைக்கு என்ன ஆச்சுப் பாஸ் உங்களுக்கு?” என்றதும்,

“தெரியலையே…” என அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

இருவரும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க… நக்ஷத்ராவின் பெற்றோர் வந்துவிட்டனர்.

“நான் அம்மாவோட இந்த வாரம் வரேன்.” என்றவன், விடைபெற்று செல்ல….

“இதெல்லாம் நிஜமாகவே தான் நடந்ததா…” என நக்ஷத்ராவுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.

Advertisement