Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 6

யுகேந்திரன் வீட்டிற்குச் சென்றதும், அவன் அம்மாவை அழைத்துத் தான் நக்ஷத்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்ல….

“நான் எத்ர்பார்தேன்.” என்றார் அவர்.

“எப்படி மா?”

“நக்ஷத்ரா இந்த நிலைமையில இருக்கும் போது…. நீ எப்படியும் அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சேன்.”

“அம்மா நான் அப்படி நினைச்சிருந்தா… எங்களுக்கு எப்பவோ கல்யாணம் ஆகி இருக்கும். அது இல்லை காரணம்.”

“அப்போ வேற என்ன டா?”

“அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு எனக்கு இப்போதான் தெரிஞ்சிது.”

“அவளுக்கு மட்டும் தான் உன்னைப் பிடிச்சிருக்கா?”

“அவளுக்கு என் மேல விருப்பம்னு தெரிஞ்சதும்தான், எனக்கு என் விருப்பம் புரிஞ்சது.”

“ஆமாம் அவங்க வீட்ல பேசியாச்சா?”

“நான் இன்னைக்குத் தான் நக்ஷத்ராவை கேட்டேன். அவ இனிதான் வீட்ல பேசுவா. உங்களுக்கு ஓகே தானே மா…”

“நீ என்கிட்டே பெர்மிஷன் கேட்கலை… அதோட படிப்பு, வேலை எல்லாம் உன் இஷ்ட்ட்படி தான் பண்ண… கல்யாணத்தை மட்டும் என் இஷ்ட்டத்துக்குப் பண்ணுவேன்னு எதிர்பார்க்கிற அளவு நான் முட்டாள் இல்லை.”

“நக்ஷத்ராவோட குறை உனக்கே பெரிசா தெரியலைனா… எனக்கு ஒன்னும் இல்லை. ஆனா அவங்க நம்ம ஆளுங்க இல்லை. அதனால நம்ம சொந்தகாரங்க கொஞ்சம் பேசுவாங்க. உன் தம்பி பெண்டாட்டி வீட்ல என்ன சொல்வாங்களோ.”

அவர் சொன்னதற்கு யுகேந்திரன் ஒன்றும் சொல்லவில்லை.

“என்ன டா?”

“அம்மா எல்லோருக்கும் புரிய வைக்கனும்னு அவசியம் இல்லை. நாங்க நல்லா வாழ்ந்து காட்டிக்கிறோம்.” என்றான்.

“ஆமாம் டா நல்லா வாழ்ந்து காட்டு போதும்.” என்றார் கிரிஜாவும்.

பிள்ளைகள் திருமண வயதில் இருக்கும் போது எல்லாப் பெற்றோருக்குமே அவர்கள் திருமணத்தைக் குறித்துக் கனவுகள் இருக்கும். ஆனால் பிள்ளைகள் திருமண வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருக்கும் போது… திருமணம் செய்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். அந்த நிலையில் தான் கிரிஜாவும் இருந்தார்.

“நீ எங்க கல்யாணம் பண்ணாமலே இருந்திடுவியோன்னு நினைச்சேன். நக்ஷத்ரவுக்கு உன்னை நல்லா தெரியும். உனக்கும் அவளைத் தெரியும். அதோட ரெண்டு பேரும் ஒரே வேலையில இருக்கீங்க. ரெண்டு பேரும் ஒத்து வாழ்ந்தா சரிதான்.”

அவன் அம்மாவிடம் பேசிவிட்டு வைத்ததும், யுகேந்திரன் குளித்து இரவு உணவு உண்டுவிட்டு அறைக்கு வந்தவன், நக்ஷத்ராவை அழைத்தான்.

“வீட்ல பேசிட்டியா?” என்றதும்,

“ம்ம்…. நான் சொன்னதும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நம்பவே முடியலை. ரொம்பச் சந்தோஷபட்டாங்க. உங்க வீட்ல ஆண்டி என்ன சொன்னாங்க?”

“அம்மா ஒன்னும் சொல்லலை…. கல்யாணம் பண்ணி நல்லா இருந்தா சரின்னு சொல்லிட்டாங்க.”

“நிஜமாவே இதெல்லாம் நடக்குதா….” என நக்ஷத்ரா வியக்க….

“எனக்கும் அதே ஆச்சர்யம் தான்.” என்றவன், வேறு ஒரு அழைப்பு வந்ததால் பிறகு அழைக்கிறேன் என வைத்துவிட்டான்.

நக்ஷத்ரா சந்தோஷத்தில் உறக்கம் வராமல் யுகேந்திரனை நினைத்துக் கொண்டு இருக்க…. யுகேந்திரனுக்கு அதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாமல்… வழக்குச் சம்பந்தமாக யாரோ அழைத்திருக்க… பேசிவிட்டு படுக்க அவனுக்கு வெகு நேரம் ஆகிவிட்டது.

மறுநாள் காலை நக்ஷத்ரா கோர்ட் சென்றுவிட்டு மதியத்திற்கு மேல் தான் பிரதீப்புடன் அலுவலகம் வந்தாள். யுகேந்திரன் கேஸ் சம்பந்தமாக வந்தவர்களிடம் அலுவலக அறையில் பேசிக் கொண்டு இருந்தான்.

அன்று எல்லோருக்குமே வேலை சரியாக இருக்க… யாரும் இன்னும் மதிய உணவு அருந்தி இருக்கவில்லை.

வழக்குக்காக வந்தவர்கள் சென்றதும், யுகேந்திரன் வெளியே வர… அதன் பிறகே எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தனர்.

அன்று நக்ஷத்ரா வீட்டில் இருந்து ஒரு மினி விருந்தே செய்து அனுப்பி இருந்தனர்.

நக்ஷத்ரா எப்போதும் போல் யுகேந்திரனுக்குப் பரிமாறிவிட்டு மற்றவர்களுக்கும் கொடுக்க…

“என்ன இன்னைக்குச் சாப்பாடு தடபுடலா வந்திருக்கு.” என்றதும், நக்ஷத்ரா யுகேந்திரனை பார்க்க… அவனும் அப்போது அவளைப் பார்த்தான். பிறகு இருவரும் எதுவும் பேசாமல் உண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், யுகேந்திரன் வெளியே வேலையாகக் கிளம்பியவன், நக்ஷத்ராவிடம் “நீ நேரத்துக்குக் கிளம்பிடு. நான் வர லேட் ஆகிடும். நான் அப்படியே நேரா வீட்டுக்கு போயிடுவேன். வேணா நைட் உன்கிட்டே பேசுறேன்.” எனச் சொல்லிக் கொண்டிருக்க….

“என்ன டா இவன் புதுசா வெளிய போறதை எல்லாம் சொல்லிட்டு போறான்.” என பிரதீப் சொல்ல….

“அது தான… எதோ பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு போற மாதிரி சொல்றான்.” என பிரசன்னா சத்தமாகவே சொல்ல… காதில் விழுந்தாலும் யுகேந்திரன் கண்டுகொள்ளாமல் இருக்க… நக்ஷத்ராவும் மறுப்பாக எதுவும் சொல்லவில்லை.

யுகேந்திரன் சென்றதும், “ஹே…. என்ன நடக்குது?” என ஜனனி தனது தோழியிடம் கேட்க….நக்ஷத்ரா முகம் சிவக்க…

“என்ன டா இவ புதுசா வெட்கம் எல்லாம் படுறா….” என்ற பிரசன்னா….

“அவன்கிட்ட லவ் பண்றதை சொல்லிட்டியா?” என்றதும்,

“நான் சொல்லலை… யுகி தான் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டாங்க.” என அவள் சொல்லியே விட….

“ஹே….” எனப் பிரசன்னா, பிரதீப் மற்று ஜனனி கத்தியே இருந்தனர்.

அந்த நேரம் எதோ எடுப்பதற்காக மீண்டும் வந்த யுகேந்திரன் காதிலும் இவர்கள் கூச்சல் கேட்க….

“என்ன?” என்றான் புரியாமல்.

“நீ எங்ககிட்ட எல்லாம் சொல்றியா என்ன? நாங்களும் சொல்ல மாட்டோம்.” என பிரதீப் சொல்ல…. யுகேந்தினுக்குப் புரிந்துவிட… சிரித்தபடி அவன் எடுக்க வந்ததை எடுத்துக் கொண்டு சென்றான்.

அதன் பிறகு நக்ஷத்ரா தான் அவர்களிடம் மாட்டிக் கொண்டாள். அவளைக் கேலி கிண்டல் செய்து மூவரும் ஒட்டினர்.

மறுநாள் யுகேந்திரன் கோர்ட் சென்றுவிட்டு மதியம் வந்தவன், அதன் பிறகும் வேலை சரியாக இருக்க… அவன் வேலையில் கவனமாக இருக்க… மற்றவர்களும் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

மாலையில் நக்ஷத்ரா யுகேந்திரனிடம் சொல்லிக்கொள்ளச் சென்றவள், “நேத்து நைட் கூப்பிடுறேன்னு சொன்னீங்க கூப்பிடவே இல்லை.” என்றதும்,

“நான் வர ரொம்ப லேட் ஆகிடுச்சு. அதுதான் கூப்பிடலை.” என்றான்.

“இன்னைக்குக் கண்டிப்பா கூப்பிடனும்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

அவளும் ஜனனியும் சென்றதும், யுகேந்திரன் இருந்த அறைக்குச் சென்ற பிரசன்னாவும் பிரதீப்பும், “அப்புறம் எப்போ கல்யாணம்?” என்றனர் கோரசாக.

“இப்போ என்ன டா கல்யாணத்துக்கு அவசரம்? கொஞ்ச நாள் போகட்டும்.” என்றான் யுகேந்திரன்.

“உனக்கு என்ன நக்ஷத்ராவை முன்ன பின் தெரியாதா….”

“அப்படி இல்ல… இதுவரை ப்ரண்ட்டா பார்த்த பொண்ணு…. எனக்குக் கொஞ்ச டைம் வேண்டும் டா.” என்றதும்,

“ஆனா அதுக்காக ரொம்ப இழுத்துடாத…..” எனச் சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.

அன்று இரவு யுகேந்திரன் அழைப்பதற்குள் நக்ஷத்ராவே அழைத்து விட்டாள்.

“அப்பா உங்களோட பேசணும்னு சொன்னாங்க யுகி. நீங்க இப்போ ப்ரீயா?”

“சரி கொடு.” என்றான்.

யோகேஸ்வரன் அவனிடம் நலம் விசாரித்துவிட்டு, “நக்ஷத்ரா சொன்னா… எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். நக்ஷத்ராவை பத்தி எங்களுக்கு ரொம்பக் கவலை இருந்தது. எப்படிப்பட்ட இடம் அமையுமோ… இவளிடம் இருக்கக் குறையப் பெரிசா நினைக்காதவங்களாவும் இருக்கணும். அதோட இவளும் அங்க போய்ப் பொருந்தி இருக்கனுமேன்னு ரொம்ப யோசனையா இருந்தது. இப்போ யுகி உண்மையிலேயே நீ எங்களுக்குப் பெரிய நிம்மதியை கொடுத்திருக்க…. ரொம்பத் தேங்க்ஸ் பா….” என்றார்.

“ஏன் சார் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க. உண்மையிலேயே எனக்குத்தான் நக்ஷத்ராவுக்கு நான் பொருத்தம் இல்லையோன்னு ஒரு எண்ணம். ஆனா இனி எப்படி இருந்தாலும், அவ என்னைப் பொறுத்திட்டு தான் போகணும்.” என யுகேந்திரன் புன்னகையுடன் சொல்ல….

நக்ஷத்ரா கைபேசியை ஸ்பிகரில் போட்டு தான் கொடுத்திருந்தாள். அதனால் அவன் பேசுவதை அவளும் அவள் அம்மாவும் கேட்டிருக்க… “அவளோட வாய்க்கு எங்கையும் போய் எல்லாம் குப்பை கொட்டிக்க மாட்டாப்பா….எதோ நல்ல நேரம் நீ கல்யாணத்துக்குக் கேட்டிருக்க.” என அவளின் அம்மா சொல்ல…

“போதும் ரெண்டு பேரும் என்னை டேமேஜ் பண்ணது. இப்படியா பேசுவாங்க. என் பெண்ணை அமெரிக்காவுல கேட்டாங்க, அன்டார்ட்டிகாவுல கேட்டாங்கன்னு சும்மாவாவது சொல்லணும்.” என்றவள், நீங்க பேசினது போதும் என அவள் தந்தையிடம் இருந்த கைபேசியை வாங்கிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டாள்.

யுகேந்திரனுக்கு அந்தப் பக்கம் ஒரே சிரிப்பு.

அவன் சிரிப்பதை கேட்டு கடுப்பானவள், “என்னை டேமேஜ் பண்ணா உங்களுக்குச் சந்தோஷமா இருக்குமே…” என்றாள் எரிச்சலாக.

“ஆமாம் அவங்க எங்க உன்னை டேமேஜ் பண்ணாங்க. இல்லைனாலும் உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?” என்றான்.

“போதும்.”

“நாளைக்கு உனக்குக் கேஸ் இருக்கு இல்ல….” என்றதும் கடுப்பானவள், “ஆபீஸ் விஷயம் ஆபீஸ்ல பேசுங்க. இப்போ வேற பேசுங்க.” என்றாள்.

“என்ன பேசுறது? நீயே பேசு.” என்றவன், “ஆனா சீக்கிரம் பேசி முடி.” என்றதும்,

“நீங்க சரிப்பட மாட்டீங்க பாஸ். வச்சிட்டு போய் வேலையைப் பாருங்க.” என்றாள்.

“இல்லையில்லை போன் பண்ணதுக்குப் பேசு.” என்றான்.

“சாப்டீங்களா?”

“ம்ம்… இன்னைக்கு டைம் இருந்தது, ஜாகிங் போனேன். வந்து குளிச்சிட்டு இப்போதான் சாப்பிட்டு முடிச்சேன்.”

“எப்போ நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.” என அவள் கேட்டதும், யுகேந்திரன் அதை எதிர்ப்பார்க்காததால் சற்று நேரம் யோசித்தவன், “ஒரு நாலு மாசமாவது போகட்டுமே.” என்றான்.

என்னது இன்னும் நாலு மாசமா என்று இருந்தாலும், “ஓகே யுகி.” என்றவள், சரி வச்சிடட்டுமா என்றதும்,

“நாளைக்கு எனக்கும் கோர்ட்டுக்கு போகணும். நான் காலையில உன் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போறேன்.” என்றான்.

உடனே சந்தோஷமானவள், “காலையில இங்க வந்து சாப்பிடுங்க.” என்றதும், “அதுக்கு எல்லாம் டைம் இருக்காது. நான் உங்க வீட்டுக்கு கீழ வந்திட்டு கூப்பிடுறேன். நீ வந்திடு.” என்றான்.

Advertisement