Advertisement

பிரசன்னா குளித்துத் தயாராகி இரவு உணவு உண்ண செல்ல யுகேந்திரனை அழைக்க… “நீங்க போயிட்டு வாங்க டா… நான் ரூமுக்கு வர வச்சு சாப்பிட்டுக்கிறேன்.” என்றான்.

இதற்கு மேல் அழைத்தாலும் வரமாட்டான் என்று தெரியும், அதனால் அவனைத் தவிர மற்றவர்கள் கிளம்ப… “நீங்க எல்லாம் போங்க. நான் போய் யுகியை பார்த்திட்டு வரேன்.” என நக்ஷத்ரா அவன் அறைக்குச் சென்றவள், அழைப்பு மணியை அடிக்காமல் பால்கனி பக்கமாகச் சென்று பார்க்க… யுகேந்திரன் அவள் எதிர்பார்த்தது போலப் பால்கனி கதவை திறந்து தான் வைத்திருந்தான்.

தரை தளத்தில் உயரமில்லாத குட்டி க்ரில் கம்பிகள் இருக்க… அதோடு நக்ஷத்ராவுக்குக் கணுக்காலில் தான் பாதிப்பு என்பதால்…. அதில் உட்கார்ந்து எளிதாகக் காலை தூக்கி அந்தப்பக்கம் போட்டு இறங்கியவள், பால்கனி கதவை தட்ட….

கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் எழுந்து வெளியே வந்தான்.

“உனக்கு நேர்வழியே தெரியாதா” என அவன் கேட்க…

“நீங்க கதவு திறப்பீங்களான்னு தெரியலையே பாஸ்.” என்றவள், பால்கனியில் இருந்த இருக்கையில் உட்கார….

“உன்னோட எந்தக் கதையும் கேட்க நான் இப்போ தயாரா இல்லை. நீ கிளம்பு.” என்றான்.

“சும்மா விளையாட்டுக்கு பண்ணதை எல்லாம் பெரிசா எடுத்துக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்து வந்திட்டு நீங்க மட்டும் சாப்பிட வரலைனா நல்லா இருக்காது பாஸ். என் மேல தானே கோபம் வேணா என்னை நல்லா திட்டிடுங்க.”என்றாள்.

“அதுல எதாவது பிரோஜனம் இருக்கப் போகுதா? நீ செய்யுறதை தான் செய்யப் போற.” என்றான் யுகேந்திரன்.

“ஓ… அதனால தான் அப்போ திட்டலையா.” என்றவள், “நீங்கதான் பாஸ் என்னை நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்க.” என்றாள்.

“நாம அப்புறம் சண்டை போட்டுக்கலாம். நாம மட்டும் இல்லை. பிரதீப் வீட்லயும் பிரசன்னா வீட்லயும் வந்திருக்க நேரத்தில… நாம இப்படிச் சண்டை போட்டுக்கிறது நல்லா இல்லை. வாங்க நாமளும் போய்ச் சாப்பிட்டு வந்திடலாம்.” என்றதும், யுகேந்திரன் தன்னுடைய உடை மற்றும் கேசத்தைச் சீர்படுத்திக் கொண்டு வர…. “ஸ்டிக் இங்கயே வச்சிடுறேன் பாஸ்.” என்றவள், அவனின் கைப்பற்றி நடக்க ஆரம்பித்தாள். இருவரும் உணவகத்தை நோக்கி சென்றனர்.

அவர்கள் இருவரும் வருவதைத் தூரத்தில் இருந்த மற்றவர்கள் கவனித்து இருந்தனர்.

“எதோ பேசி அவனைச் சரி கட்டிடுறா.” என்றான் பிரசன்னா.

“ரொம்பத் தூரம் இருக்கும் போல… உனக்குக் கால் வலிக்கப் போகுது.”

“இந்தத் தூரம் ஓகே தான்.”

மற்றவர்கள் இருக்கும் இடம் வந்ததும், “நாங்க கூப்பிட்டோம் வந்தியா? அவ கூப்பிட்டதும் வர…” எனப் பிரசன்னா சொல்ல…

“விடுங்க வந்திட்டாங்க இல்ல… வேற பேசுங்க.” என்றாள் அவனின் மனைவி ப்ரியா.

எல்லோரும் அவரவருக்குத் தேவையானது ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிக்க வெகு நேரம் ஆகிவிட்டது.

எல்லோரும் மீண்டும் கடற்கரைக்குச் சென்று… அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். கிளம்பும் நேரம் ரெசார்ட்டில் இருந்த சைக்கிளை எடுத்து ஒரு வட்டம் அடித்த யுகேந்திரன், நக்ஷத்ராவை பார்த்து வர்றியா என்று கேட்க… அவளுக்குக் கால் வலிக்கும் என்றுதான் அழைக்கிறான் என்று மற்றவர்களுக்குப் புரிய… அவளை அவனுடன் செல்ல சொன்னார்கள்.

“உங்களுக்கு நல்லா சைக்கிள் ஓட்ட தெரியும் தான பாஸ்…. என்னைக் கீழ போட்டுட மாட்டீங்களே.” என்றபடி அவள் முன்புறம் இருந்த கம்பியில் உட்கார…

“அப்படியெல்லாம் கேரண்டி கொடுக்க முடியாது. என்ன வேணா நடக்கலாம்.” என்றான் யுகேந்திரன்.

“பரவாயில்லை இருக்கட்டும், உங்க கையாள தான் சாகனும்னு விதி இருந்தா மாத்த முடியுமா என்ன?” என நக்ஷத்ரா வசனம் பேச…

“சைக்கிள்ல இருந்து கீழ விழுந்ததுக்கு எல்லாம் செத்துடுவியா நீ.” என்றான் யுகேந்திரன்.

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு மற்றவர்களுக்குச் சிரிப்பு தான்.

யுகேந்திரன் சென்று அவளை அறை வாயிலில் இறக்கி விட… இன்னும் ஒரு ரவுண்டு பாஸ் என்றாள். மற்றவர்கள் வரும் வரை இருவரும் அங்கிருந்த காட்டேஜ்களைச் சைக்கிளில் சுற்றி வந்தனர். அவர்கள் வந்ததும் யுகேந்திரன் சென்று சைக்கிளை விட்டுவிட்டு வந்தான்.

பிறகும் வெகு நேரம் வெளியில் நின்று பேசிவிட்டே அவரவர் அறைக்குச் சென்றனர்.

மறுநாள் காலை நக்ஷத்ராவுக்குச் சீக்கிரமே விழிப்பு வந்துவிட… பீச் செல்லலாம் என அவள் ஜனனியை எழுப்பிப் பார்க்க, அவள் எழுந்துகொள்ளவில்லை.

பல் துலக்கி, முகம் கழுவி, தலையை வாரிக் கொண்டு அவள் பால்கனியில் வந்து நிற்க… பக்கத்துப் பால்கனியில் யுகேந்திரன் எதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் நேற்று போல இன்றும் அவள் பால்கனி வழியாகவே செல்ல…

“வந்திட்டியா?” என்றவன், “இது என்ன டிரஸ்.” என்றான்.

கையில்லாத முட்டி வரை மட்டுமே இருந்த மேக்ஸியை அணிந்திருந்தவள், “இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல்?” என்று கேட்க…

“டிரஸ் தான் குறைச்சலா இருக்கு.” என்றான் சிரிப்புடன்.

“கெட்ட பையன் ஆகிடீங்க பாஸ்.” என அவள் சொல்ல… ஒரு நொடி திடுக்கிட்டு போனவன், “ஹே… நான் தப்பா எல்லாம் சொல்லலை.” என்றான் வேகமாக.

“பயப்படாதீங்க, நீங்க என்னைச் சைட் அடிச்சதை, நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.” என அவள் மேலும் அவளை டென்ஷன் ஆக்க….

“இப்போ நீதான் ஒருமாதிரி பேசுற. நான் இந்த ஆட்டத்துக்கு வரலை.” என்றான். அவனின் பதட்டமான முகத்தைப் பார்த்து நக்ஷத்ரா சிரித்துக் கொண்டாள்.

அவள் வந்து இருக்கையில் உட்கார்ந்ததும், “நான் ஒரு காப்பிக்கு தான் சொன்னேன். நீ வேற பங்குக்கு வந்திட்டியா?” என்றான்.

“சரியான காபி பைத்தியம். எனக்கு வேணாம் நீங்களே குடிங்க.” என்றாள். ஒரு காபி நூற்றியிம்பது ரூபாய், அதனால் நிறையக் காபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணியால் செல்ல…. இருவரும் ஆளுக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதோடு இருந்த பிஸ்கட்டையும் எடுத்து உண்டனர்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஏன் யுகி அப்படி டென்ஷன் ஆனீங்க? நான் எல்லாம் உங்களைச் சைட் அடிச்சிருக்கேன்ப்பா…” என அவள் உண்மையைச் சொல்ல…

“என்னய்யா? நான் எல்லாம் உன் லிஸ்ட்ல இருக்கேனா என்ன? உனக்கு ஜாலியா இருக்கிறவங்களைத் தானே பிடிக்கும்.”

“நீங்களும் ஜாலியான ஆள் தான். நாம பிரசன்னா கல்யாணத்துக்குப் போன போது… வழியெல்லாம் எங்களை வம்பிழுத்திட்டே வரலை. நீங்க அடிக்கடி சிரிக்கிறது இல்லை தான். ஆனா எப்பவோ ஒரு தடவை சிரிச்சா கூட… அதைப் பார்த்திட்டே இருக்கலாம் போல இருக்கும். அதுவும் நல்லா டிரஸ் பண்ண அன்னைக்கு, லேசான தாடியோட ஆள் பார்க்கவே செம்மையா இருப்பீங்க. மொத்ததுல நீங்க ரக்குடு பாய் லுக்ல இருக்க…. சாக்கலேட் பாய் பாஸ்.” என்று அவளையும் மீறி நக்ஷத்ரா சொல்லி இருக்க… யுகேந்திரன் லேசாகப் புன்னகைத்தானே தவிர… வேறு எதுவும் சொல்லவில்லை.

அவள் பீச் செல்ல வேண்டும் என்றதும், அவளை அழைத்துக் கொண்டு பீச் சென்றான். அவள் அசை தீர கடலில் ஆடிவிட்டு வர…. இருவரும் அறைக்குத் திரும்பி குளித்துக் கிளம்ப… மற்றவர்களும் எழுந்து கிளம்பி வரவே தாமதமாகி இருக்க…. பிறகு காலை உணவு உண்டு… அப்போதே அங்கருந்து கிளம்பிவிட்டனர்.

பாண்டிச்சேரியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களைப் பார்த்துவிட்டு, மதிய உணவை மூன்று மணி போல அருந்தியவர்கள், மதிய உணவுக்குப் பிறகு அங்கிருந்து கிளம்பியும் விட்டனர். அன்று யுகேந்திரன் நக்ஷத்ராவோடே இருந்தான். அதைப் பிரதீப்பும் பிரசன்னாவும் கவனிக்கவே செய்தனர்.

பாண்டிச்சேரி சென்று வந்த பிறகும், ஒரு பத்து நாட்கள் நன்றாக யோசித்துவிட்டே, யுகேந்திரன் நக்ஷத்ராவிடம் திருமணத்திற்குக் கேட்டான். அதுவும் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வழியில் காரில் வைத்து தான் கேட்டான்.

“என்ன திடிர்ன்னு இப்படிக் கேட்கிறீங்க? யாராவது எதாவது சொன்னாங்களா?” என அவள் சந்தேகமாகக் கேட்க…

“நீ சொல்லு, நான் அப்படி யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்கிற ஆளா?” என அவன் திருப்பிக் கேட்க…

அப்படி யார் பேச்சையும் கேட்டு, அவன் முடிவேடுப்பவன் இல்லை தான்.

இருந்தாலும் அவன் திடிரென்று கேட்டதும், அவளுக்குப் புரியவில்லை. “எனக்காகவா?” என்றாள்.

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்குத் தான் சாதகம் அதிகம். நம்ம ரெண்டு பேரும் ஒரே பீல்ட்ல இருக்கோம். ஆபீஸ் கேஸ் எல்லாம் பொறுப்பா நீ பார்த்துகிட்டா… நான் இன்னும் என்னோட மத்த வேலையில கவனம் செலுத்தலாம். எனக்கு நிறைய ப்ளஸ் தான். என்னோட உன் லைப் அவ்வளவு ஈஸி இல்லை. அதனால நான் உனக்கு ஓகேவான்னு நீ யோசிச்சுக்கோ.” என்றான்.

அப்போதும் அவள் முன்பே அவனை விரும்புகிறாள் என்று எதுவும் சொல்லாமல்…. “எனக்கு ஒகே தான் பாஸ்.” என்று அவள் சொல்ல….

“இப்பவும் பாஸ் தானா….” என அவன் சிரிக்க…

“எனக்கு ஓகே யுகி. ஆனா உங்க அம்மா, அவங்க என்னை ஒத்துப்பாங்களா?”

“அவங்க தான் நான் யாரை கல்யாணம் பண்ணாலும் சரின்னு தானே சொன்னாங்க. அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என்றான்.

“நீ உங்க வீட்ல பேசிடு. நான் எங்க வீட்ல பேசிடுறேன்.” என்றவன், அவளுக்கு வசதியாக அபார்ட்மெண்ட் மின் தூக்கியின் அருகே காரை நிறுத்த…

“யுகி, இப்போ நீங்க கேட்டது உறுதியான முடிவு தானே…” என நக்ஷத்ரா அவனைத் தவிப்புடன் பார்க்க…

“நான் இதுவரை உன்கிட்ட எதுவும் மறைச்சது இல்லை. ஆனா நீதான் என்கிட்டே நிறைய மறைச்சிருக்கேன்னு எனக்கு இப்ப தோணுது. நீயா எப்ப என்கிட்டே சொல்றியோ சொல்லு.” என்றவன், இறங்கி சென்று அவளின் பக்க கதவை திறந்துவிட….

“நாளைக்குப் பார்க்கலாம்.” எனச் சொல்லிவிட்டு நக்ஷத்ரா சென்றாள்.

Advertisement