Advertisement

இளங்காற்றே எங்கே போகிறாய்

அத்தியாயம் 1

அன்று காலை நேரம் சென்னை ஹைகோர்ட் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. அதன் ஒரு பகுதியில் இருந்த கோர்ட் அறையில், வழக்கு ஒன்று நடந்து கொண்டிருக்க… வழக்கு இன்று இறுதி கட்டத்தில் இருப்பதால்… தன் தரப்பு வாதத்தை நக்ஷத்ரா எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த அறைக்குள் வெள்ளை சட்டை மட்டும் கருப்புப் பேண்ட் அணிந்த இளைஞன் ஒருவன் உள்ளே நுழைய… அவனைப் பார்த்ததும் அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்கள் மரியாதையாக அவனைப் பார்க்க…. அவனும் லேசான புன்னகையுடன் உள்ளே சென்று உட்கார்ந்தான்.

வழக்கின் இறுதி கட்ட தீர்ப்பு என்பதால்… தீர்ப்பை தெரிந்துகொள்ள வந்த மற்ற வக்கீல்கள் போல அவனும் ஒருவன். ஆனால் அதுவரை மூச்சை பிடித்துப் பேசிக் கொண்டிருந்த நக்ஷத்ராவின் குரலில் இருந்த சுருதி குறைய…. சற்றுப் பொறுமையாக அவளின் இறுதி கட்ட வாதத்தை எடுத்து வைத்தாள். அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னா, அவளின் மாற்றத்தை உணர்ந்தவன் திரும்பி பார்க்க… அங்கே அவன் எதிர்பார்த்த நபர் இருக்கவும், சிரித்தபடி மீண்டும் வழக்கை கவனிக்க ஆரம்பித்தான். சொல்ல வேண்டியதை சொல்லி முடித்துவிட்டு, தட்ஸ் ஆல் மை லார்ட் என்றவள், அவளின் இருக்கைக்குச் சென்று அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்தாள்.

வழக்கின் தீர்ப்பு மதியத்துக்கு ஒத்தி வைக்கப்பட… எல்லோரும் நக்ஷ்த்ராவின் வாதம் சிறப்பாக இருந்ததாகச் சொல்ல…. ஆனால் சொல்ல வேண்டியவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

மற்றவர்கள் அங்கருந்து சென்றதும் நக்ஷத்ரா, “என்ன பாஸ் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க. எப்படி இருந்தது என்னோட வாதம்?” என அவளே கேட்க….

அதுவரையில் அமைதியாக இருந்த யுகேந்திரன், “இப்படியே மூச்சை பிடிச்சு கத்திட்டு இருந்தினா… இன்னும் நாலு கேஸ்ல ஹார்ட்அட்டாக் வந்து செத்து போயிடுவ.” என்றதும், பக்கத்தில் இருந்த பிரசன்னா சிரித்துவிட… நக்ஷத்ரா யுகேந்திரனை பார்த்து முறைத்தாள்.

“என்ன பார்க்கிற? கத்தி பேசினா மட்டும் தீர்ப்பு உனக்குச் சாதகமா வந்திடாது. நாம எடுத்து வைக்கிற பாயிண்ட் தான் முக்கியம்.”

“நான் உனக்கு இதை நிறையத் தடவை சொல்லிட்டேன். நீ உணர்ச்சிவசப்பட்டா… உன் வார்த்தை உன் கட்டுபாட்டுல இருக்காது. அது எதிர்தரப்புக்கு சாதகமா அமைஞ்சிடக் கூடாது.”

“சரி விடுங்க பாஸ். அடுத்தக் கேஸ்ல பாருங்க.” என்றவள், தன் முன்பிருந்த கேஸ் கட்டுகளை எடுக்க… அவளிடம் இருந்து அதை வாங்கிக் கொண்ட யுகேந்திரன், நக்ஷ்த்ராவின் இருக்கைக்கு அருகில் இருந்த ஊன்றுகோலை எடுத்து கொடுக்க… அதைப் பிடித்தபடி மெதுவாக நக்ஷத்ரா நடந்து வர… உடன் யுகேந்திரனும் பிரசன்னாவும் சென்றனர்.

மதியத்திற்கு டீ மட்டும் அருந்திவிட்டு மூவரும் மீண்டும் கோர்ட் அறைக்கு வர… சற்று நேரத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டு, நக்ஷத்ராவின் தரப்புப் பக்கம் தீர்ப்பும் வந்தது.

மூவரும் அங்கிருந்து கிளம்பி அவர்கள் அலுவலகம் செல்லும் வழியில், ஒரு உணவகத்திற்கு மதிய உணவு அருந்த சென்றனர். யுகேந்திரன் மட்டன் பிரியாணியை ஒரு பிடி பிடிக்க… “பாஸ், சைவ குடும்பத்துல பிறந்திட்டு இப்படிப் பிரியாணியைக் கட்டு காட்டுறீங்களே…” என நக்ஷத்ரா கேட்க….

“என் சாப்பாடு என் உரிமை. கொஞ்சம் பேசாம சாப்பிடு.” என்றவன், மீண்டும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினான்.

நக்ஷத்ராவின் வாய் மூடி விடுமா என்ன? அவள் பிரசன்னாவுடன் பேசியபடி சாப்பிட்டாள்.

“அப்புறம் இந்த வாரம் சண்டே என்ன பிளான்?” என நக்ஷத்ரா இருவரையும் பார்த்து பொதுவாகக் கேட்க…

“நான் என் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போறேன்.” என்ற பிரசன்னா யுகேந்திரனை பார்க்க…

“பெரிசா ஒன்னும் வேலை இல்லை.” என யுகேந்திரன் சொல்ல…

“அப்போ என்னோட மாடலிங் ஷோவுக்கு வர்றீங்களா பாஸ்.”

“முடியாது.” என்றதும், நக்ஷத்ராவின் முகம் வாட… “வரலைனா போங்க.” என்றாள்.

அப்போது யுகேந்திரனின் கைபேசி அழைக்க…. எடுத்து பார்த்தவன் அழைப்பது அவன் அம்மா என்றதும், உடனே எடுத்தான்.

“சொல்லுங்கம்மா.”

“சாப்பிட்டியா டா.” என்றதும், இப்போ தான் சாப்பிடுறேன் என்றான்.

“இந்த வாரமாவது வீட்டுக்கு வர்றியா… இதே சென்னைக்குள்ள இருந்திட்டு எதோ வெளியூர்ல இருக்க மாதிரி உன்னைப் பார்க்கிறதே அதிசயமா இருக்கு.” என அவன் அம்மா கிரிஜா பேசிக் கொண்டே இருக்க… அவனிடம் இருந்து கைபேசியைப் பறித்த நக்ஷத்ரா, “மாமி உங்க பையன் இந்த வாரம் ப்ரீ தான். அதனால விடாதீங்க.” எனப் போட்டுக் கொடுக்க…

“நக்ஷத்ராவா? எப்படி டா இருக்க?”

“நல்லா இருக்கேன் மாமி. நிர்மல் எப்படி இருக்கான்? நேத்ரா, மீனு குட்டி எல்லாம் சவுக்கியமா?”

“எல்லாம் நல்லா இருக்காங்க. நீயும் யுகேந்திரனோட வாயேன் நக்ஷத்ரா.” என அவர் அழைக்க….

“எனக்கு ஒரு ஷோ இருக்கு ஆண்டி, இன்னொரு முறை வரேன்.” என்றவள் கைபேசியை யுகேந்திரனிடம் கொடுக்க…

“இந்த வாரம் வரேன் மா…” என்றவன் அழைப்பை வைத்தான்.

“எனக்கு என்ன நீ வாயா? எனக்குப் பேச தெரியாதா?” யுகேந்திரன் கேட்க…

“நீங்க தான் என் ஷோவுக்கு வர மாட்டேன்னு சொல்லிடீங்க இல்ல… அப்போ உங்க வீட்டுக்காவது போங்க.” என்றதும்,’

“நக்ஷத்ரா, உனக்குக் கடைசியா சொல்றேன். நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லாத.” என்றதும்,

“சரி… அதே போல நீங்களும் நான் என்ன பண்ணனும்னு இனிமே சொல்லாதீங்க. இவர் மட்டும் எனக்குக் கிளாஸ் எடுக்கலாம்.” என்றாள் கடுப்பாக.

இவர்கள் இருவர் சண்டை போட்டுக்கொள்ள…பிரசன்னாவோ அவன் பாட்டுக்கு உண்டு கொண்டிருந்தான். அவனுக்கு இதெல்லாம் புதிது இல்லை போல…

“சரி ரெண்டு பேரும் சாப்பிட்டு முடிங்க. நமக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு.” என அவன் சொல்ல… இருவரும் அதன் பிறகு எதுவும் பேசாமல் சாப்பிட்டு எழுந்தனர்.

சைதாபேட்டை முக்கியச் சாலையில் கீழே கடைகள் இருக்க… முதல் தளத்தில் இவர்களுடைய அலுவலகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததும் வரவேற்பு அறை இருக்க… அடுத்து ஒரு பெரிய கூடம்… அங்கிருந்த மேஜைகள் கேஸ் கட்டுகள் மற்றும் வழக்கு சம்பந்தமான புத்தகங்களால் நிறைந்து இருக்க… கேஸ் சம்பந்தமாகப் பேச வரும் நபர்களுடன் தனியாக இருந்து பேச… பக்கவாட்டில் ஒரு பெரிய அறை இருக்கும். அங்கிருக்கும் அலமாரியில் தான் முக்கியமான கோப்புகள் இருக்கும்.

இவர்களைப் பார்த்ததும், “வாழ்த்துக்கள் நக்ஷத்ரா.” என அங்கிருந்த இன்னொரு வக்கீலும், இவர்களின் நண்பனுமான பிரதீப் சொல்ல… அலுவலக வேலை பார்க்கும் ஜனனியும் வாழ்த்துக்கள் என்றாள்.

“தேங்க்ஸ்… உங்களுக்காவது என்னை வாழ்த்தனும்னு தோனுச்சே… சில பேருக்கு என் மேல பொறாமை. நான் அவங்களை டாமினேட் பண்ணிடுவேன்னு.” என நக்ஷத்ரா யுகேந்திரனை பார்த்துக் கொண்டு சொல்ல…

“போன ஹியரிங்லையே முடிய வேண்டிய கேஸ்…. நீ போடுற காட்டு கூச்சல் ஜட்ஜுக்கு புரியதான் தாமதம் ஆகி இருக்கும்.” என யுகேந்திரன் சொல்ல… நக்ஷத்ரா அவனை முறைக்க… மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.

“என்னை டேமேஜ் பண்ணலைனா உங்களுக்குத் தூக்கம் வராதா பாஸ்.” என்ற நக்ஷத்ரா சென்று அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொள்ள…

யுகேந்திரன் அங்கிருந்த பீன் பேகில் உட்கார்ந்து கொண்டு, அவனுடைய மடிகணினியில் வேலை பார்க்க ஆரம்பித்தான்.

அலுவலகம் போல அல்லாமல் அவரவர் வசதிக்கு உட்கார்ந்து கொண்டு தான் வேலை பார்ப்பார்கள். கேஸ் சம்பந்தமாக வரும் நபர்களை வரவேற்பு அறையில் வைத்து ஜனனி எல்லாம் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொள்வாள். பிறகு மற்றவர்கள் அந்த வழக்கை பற்றி ஆராய்ந்து, எடுப்பதா வேண்டாமா என முடிவு செய்து, பிறகு யார் அந்த வழக்குக்காக ஆஜராவது என முடிவு செய்வார்கள். அவர்களிடம் பயிற்சி பெரும் ஜூனியர் வக்கீல்களும் உண்டு. கோர்ட் வேலைகள் மற்றும் காவல் நிலையம் செல்லும் வேலைகளை எல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மாலை ஏழு மணி வரை எல்லோரும் வேலையில் மூழ்கி கிடந்தனர். வேலையின் நடுவே நேரத்தை பார்த்துவிட்டு யுகேந்திரன், “நக்ஷத்ரா நீ வீட்டுக்கு கிளம்பு.” என்றதும்,

“ஓகே பாஸ்.” என்றவள், “நாளைக்கு எதோ காலேஜ் விழாவுக்குப் போகணும்னு சொன்னீங்களே… இப்படிப் போகாம… கொஞ்சம் உங்க தாடியை இன்னும் ட்ரிம் பண்ணிட்டு, நல்லா டிரஸ் பண்ணிட்டு போங்க.” என்றதும்,

“ம்ம்… என்றவன், “என்ன டிரஸ் போடுறது?” எனக் கேட்க…

“அன்னைக்கு ஒரு கருப்பு கலர் ஷர்ட் வாங்கினீங்க இல்ல… அதைப் போட்டுட்டு போங்க.” என நக்ஷத்ரா சொல்ல… சரி என்றான்.

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரசனன்னா, “மதியம் தான் ரெண்டு பேரும் அடுத்தவர் விஷயத்துல தலையிடுறது இல்லைன்னு… எப்பவும் போல நூறாவது முறையா சொல்லிகிட்டாங்க.” என அவன் நக்கலாகச் சிரிக்க… அருகில் இருந்த பிரதீப், “இது என்ன நமக்குப் புதுசா? ரெண்டு பேரையும் பார்த்தா எனக்கு நல்ல ஜோடியா தான் தெரியுது ஆனா ரெண்டு பேரும் எங்களுக்குள்ள எதுவுமே இல்லைன்னு சாதிப்பாங்க.”

“அவளைக் கேட்டா யுகேந்திரன் என்னோட எதிரின்னு சொல்லுவா… அவரைக் கேட்டா என்னோட தலைவலின்னு சொல்லுவார். ஆனா அவளும் இவர்கிட்ட சொல்லாம எதுவும் செய்யுறது இல்லை. இவரும் ஏதாவதுன்னா அவளைத்தான் கேட்பார். எனக்குத் தான் ஒன்னும் புரிய மாட்டேங்குது.” என்றதும்,

“நிஜமாவே அவங்களுக்குள்ள எதுவும் இல்லை டா…” என்றான் பிரசன்னா.

“பாய் பிரசன்னா, பாய் பிரதீப்.” என்ற நக்ஷத்ரா அலுவலக வேலை பார்க்கும் ஜனனியை பார்த்து, “என்ன மேடம் என்னோட வர்றீங்களா… இல்லைனா நீங்க இன்னும் சைட் அடிச்சு முடிக்கலையா?” என யுகேந்திரனை ஜாடை காட்ட…

“அடங்கவே மாட்டியா நீ. வா போகலாம்.” என முனங்கிய ஜனனி தனது கைப்பையுடன் கிளம்பினாள்.

ஜனனி யுகேந்திரனிடம் சொல்லிக்கொள்ளச் செல்ல…. அவளைப் பார்த்து ஜாடையாகச் சிரித்த நக்ஷத்ரா, அவளும் யுகேந்திரன் இருக்கும் இடம் சென்றவள், “பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நைட்டெல்லாம் இங்க உட்கார்ந்திட்டு இருக்காம. நீங்களும் சீக்கிரம் வீட்டுக்கு போய் நேரத்துக்குச் சாப்பிடுங்க.”

“லேட் லேட்டா சாப்பிட்டு உங்க வயிறு தொப்பை போடுது.” என்றதும்,

தனது சட்டையை இழுத்து விட்ட யுகேந்திரன், “ஏற்கனவே தலைவலியில இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு.” என்றான். அதைக் கேட்டு அருகில் இருந்த ஜனனி சிரிக்க…

“நாளைக்குத் திரும்ப இதே ஆபீஸ்க்கு தான் வரணும்.” எனச் சொல்லிவிட்டு சென்றாள்.

அவர்கள் சென்றதும் யுகேந்திரன் வேலையில் மூழ்கி இருந்தாலும், அதிக நேரம் ஆக்காமல் இன்று நேரத்துடனே எழுந்து கொண்டான்.

அவன் சீக்கிரமாகக் கிளம்பியதும், அவனை ஆச்சர்யமாகப் பார்த்த பிரசன்னா, அவனும் உடன் கிளம்பினான். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி இருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் பெசண்ட் நகரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் இருக்கிறார்கள். வீடு வந்ததும், “உனக்கு டின்னருக்கு என்ன சொல்ல யுகி?” எனப் பிரசன்னா கேட்க…

“எனக்கு மூன்னு சப்பாத்தியும், சென்னாவும் மட்டும் போதும். நான் கொஞ்ச நேரம் ஜாகிங் போய்ட்டு வந்து சாப்பிடுறேன். நீ நேரத்தோட சாப்பிடு.” எனச் சொல்லிவிட்டு சென்றவன், உடைமாற்றி விட்டு, படி வழியாகக் கீழே வந்தவன், அவர்கள் அபார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்ததும் கடற்கரை சாலையில் ஓட ஆரம்பித்தான்.

Advertisement