Advertisement

“நீ அந்த அனிதா ஆன்ட்டி சொன்ன மாதிரியே இப்போ வேஸ்டாதான் ஆகிட்ட! உன் அப்பாவோட பென்ஷன் பணத்துல தான் நீ வாழ்ந்துட்டு இருக்க! நீ சுயமா சம்பாதிச்சா வாழற?!” என்று ஏகத்திற்கும் பேசினான் கோபம் வரும்போதெல்லாம்.

     அவளுக்குமே பெரும் கோபம் எழ, “நான் என் அப்பா காசுலதானே வாழறேன். உன் காசுல ஒன்னும் வாழலையே?!” என்றாள் பதிலுக்கு. அவன் மேலும் பேச, அவளும் எதிர்த்துப் பேச என, ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப் போக,

     “சரி என்னை என்னதான்டா செய்யச் சொல்ற?!” என்றாள் சலிப்பாய்.

     “ஒன்னு அம்மாவோட காசைத் திருப்பிக் குடுக்கணும். இல்லை நாம எல்லோரும் ஒண்ணா இருக்கணும். காசைத் திருப்பிக் குடுக்க உன்னால முடியுமா முடியாதுல்ல?!” என்றான் குத்திக் காட்டும் விதமாய்.

     எப்போது செல்வாவே இப்படிப் பேசிவிட்டானோ, அவளுக்கு எல்லாமே வெறுத்து விட்டது.

     “முடியும். இந்த இடத்தை வித்துக் குடுக்க முடியும்” என்றாள் அழுத்தமாய்.

     “ம்! நீ இந்த இடத்தை விக்க ஏற்பாடு பண்ணா அம்மா உன்னை சும்மா விட்டுடும்ன்னு நினைக்கிறியா?!” என்றான் நக்கலாய்.

     இப்போது கீர்த்திக்குமே கடும் கோபம் எழுந்தது.

     “என்னடா என்ன செஞ்சிடுவாங்க?! எனக்கு உடம்பில தான் தெம்பில்லை! ஆனா மனசுல இன்னும் தைரியம் இருக்கு!” என்றாள் கோபமாக.

     “உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?! உன் மனசு முழுக்க சுயநலம் மட்டும்தான் இருக்கு!” என்று செல்வா சொல்ல, அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.

     “ம் சுயநலமா எனக்கா?!” என்றவள்,

     “அப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு இப்போ தோணுது! நான் சம்பாதிச்ச காசுல கொஞ்சம் கூட எனக்குன்னு வச்சுக்காம எல்லாத்தையும் மத்தவங்களுக்காக இழந்துட்டு ஆத்திரம் அவசரத்துக்கு ஹாஸ்ப்பிட்டல் போக ஆயிரம் ரூபாய்க்கு கூட மாசக் கடைசியில கடன் வாங்கிக் காலத்தைக் கழிக்கிற நிலைமை வந்திருக்காது பாரு” என்று அவள் சொல்ல,

     “ம் அது யார் தப்பு?! அம்மா அஞ்சு லட்சம் சேர்த்து வச்சுது இல்ல அது மாதிரி நீயும் சேர்த்து வச்சிருக்கணும். நீ சம்பாதிச்சதை சேர்த்து வைக்காம விட்டுட்டு இப்போ புலம்பினா எப்படி?!” என்றான் எல்லாம் அவள் யாருக்காக செய்தாள் என்று தெரிந்திருந்தும்.

      ‘இனி அவனிடம் பேசுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை!’ என்று தோன்ற,

      “சரி நீ என் நிலைமையில இருந்திருந்தா என்ன செய்திருப்ப?!” என்றாள் அமைதியாக.

      “பேசாம இந்த வீட்டை எழுதிக் கொடுத்துட்டுப் போய்க்கிட்டே இருந்திருப்பேன்” என்றான் செல்வா.

     “அப்போ நான் இந்த வீட்டை உங்களுக்கு எழுதிக் கொடுத்துட்டு வெளில போயிடணுமா?!” என்றாள் வலியோடு.

     “நான் அப்படி சொல்லலை!” என்று அவன் மறுக்க,

     “என் உடல் நிலை  நல்லா இருந்திருந்தா, உங்க அம்மா பேசுற பேச்சுக்கு நீ சொல்றதுக்கு முன்னாடியே அதைத்தான் செய்துட்டுப் போயிருப்பேன். ஆனா நான் இருக்க நிலைமையில நான் எங்கப் போய் தனியா வாழ முடியும்?!” என்றவள்,

     “அப்படி நான் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டுப் போனா மட்டும் நீங்க எல்லோரும் என்னை நல்லவன்னு சொல்லிடப் போறீங்களா என்ன?! நல்லவன்னு சொல்ல வேண்டாம்! அட்லீஸ்ட் நமக்காகத்தானே இவ எல்லாம் செய்தான்னு நினைச்சுக் கூடப் பார்ப்பாங்களா உங்க அம்மா?!” என்று கேட்க, அவன் அமைதியாய் அவளைப் பார்த்தான்.

     “போதும்பா! இதுவரைக்கும் மத்தவங்களுக்காக மத்தவங்களுக்காகன்னு நான் இழந்தது எல்லாம் போதும். இன்னைக்கு எனக்குன்னு நான் உயிர் வாழுற வரைக்கும் தங்குறதுக்குன்னு இருக்குற ஒரே ஒரே கூரையையும் நான் விட்டுக் கொடுத்துட்டு தெருவுல நிக்க முடியாது!” என்று அழுத்தமாய்ச் சொன்னவளுக்கு அன்று அனிதா சொன்னது தான் நினைவில் எழுந்தது.

     ‘உன் அக்கா உன்னை அடிச்சித் துரத்திட்டா நீ மறுபடியும் எங்ககிட்டயே வா. நாங்க உனக்கு இடம் கொடுக்கறோம்!’ என்ற வார்த்தைகள் அவள் நெஞ்சில் தீயை வாரி இறைக்க,

      “இல்லை இல்லை யாருக்காகவும் நான் வாழுறதுக்கு ஒரே ஆதாரமா இருக்குற இந்த வீட்டையும் இழக்க மாட்டேன்!” என்று சொல்லிக் கொண்டவள், கண்களில் கண்ணீர் ஆறாய் வழிந்த கண்ணீரைத் துடைத்தெறிந்தாள்.

     “எப்போ நீ இந்த அளவுக்கு நினைச்சிட்டியோ, நானும் இதுக்கு ஒரு முடிவு எடுத்துத்தான் ஆகணும்!” என்றவளை செல்வா கோபத்துடன் பார்த்தான்.

     “என்னால இந்த வீட்டை விட்டுப் போக முடியாது. உங்க அம்மாவையும் இங்க வர சம்மதிக்க முடியாது. முதல்லயாவது உங்க அம்மா வச்சிருக்க நகை பணத்தை வச்சு மாடியில கட்டிட்டு வந்து இருக்க சொன்னேன். இப்போ அவங்களை கிட்ட வச்சுக்கவே எனக்கு பயமா இருக்கு! இங்க இருந்து கொஞ்ச தூரத்துல உங்க அப்பா இடம் இருக்குல்ல, அங்கயே வீடு கட்டிக்கிட்டு அவங்கத் தனியா இருந்துக்கட்டும். உனக்கு உன் அம்மா, அண்ணன் கூட இருக்கணும்னு ஆசை இருந்தா தாராளமா நீயும் அவங்க கூடவே போயிடலாம். என் உயிரான என் அப்பாவே போன பிறகும், உயிர் வாழ்ந்துட்டுதானே இருக்கேன்” என்றாள் மனதைக் கல்லாகிக் கொண்டு.

     “ம்?!” என்று செல்வா அவளை பார்க்க,

     “ஆமா என்னால இனி நிச்சயமா உங்க அம்மா கூட நிம்மதியா வாழ முடியாது. அவ எனக்கு எவ்ளோவோ, எவ்ளோ கஷ்டம் குடுத்திருக்கா, ஆனா கடைசியா அப்பா,  அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது அவ செஞ்சதை என்னால இந்த நொடி வரைக்கும் மறக்க முடியலை! அவர அட்மிட் பண்ணினது முதல் ரெண்டு மூணு நாள் வந்து பார்த்தாதான், இல்லைன்னு சொல்லலை. அதுக்கப்புறம், அவர் சுயநினைவுக்கு வந்த பிறகு, அவரை ஒருமுறை கூட வந்துப் பார்க்கலையே. அவருக்கு அப்படி ஒரு நோய் இருக்கு அவர் இறந்துடுவார்ன்னு தெரிஞ்ச பிறகும் கூட வந்துப் பார்க்கலையே. ‘நான் அப்படி என்னம்மா பாவம் பண்ணிட்டேன் அவளுக்கு?! என்னை வந்துப் பார்க்கக் கூட இல்லையேன்னு?!’ அவர் மனம் கலங்கிக் கேட்டப்போ எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?! நீயும்தானே அப்போ அவ மேல கோபப்பட்டுக் கத்தின?!  அவர் உயிர் மூச்சுக்குப் போராடின கடைசி நிமிடங்கள்ல நீ போன் பண்ணி அவளைத் திட்டின பிறகுதானே வீட்டுக்குக் கிளம்பி வந்தா?! அதுக்குள்ள என் அப்பாவோட மூச்சே நின்னு போச்சுதானே?! இதையெல்லாம் என்னால என்னால எப்படி மறக்க முடியும்?!”

     “அவளுக்காக அவ்ளோ செய்த என் அப்பாவையே அவ பெருசா மதிக்காத போது, நான் என்ன செஞ்சாலும் அவளுக்கு அது கால் தூசுக்குக் கூடப் பெறாது செல்வா!” என்றவள்,

     “ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன். என்னிக்கு இருந்தாலும் இந்த வீடு உனக்கும், அபிக்கும் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை. அட்லீஸ்ட் நான் உயிர் வாழணும்னு எனக்கு விதிக்கபட்டிருக்கக் காலம் வரைக்குமாவது என்னை நிம்மதியா வாழ விடுங்க. உங்க அம்மா கூட இருந்தா, சாப்பாடு தூக்கம்னு என்னோட தினசரி தேவைகளுக்குக் கூட நான் ஒரு அடிமை மாதிரி பயந்து பயந்துதான் வாழணும்! போதும்! போதும் எல்லாராலயும் நான் பட்ட துன்பமெல்லாம்! இனி என் வாழ்கையில சந்தோஷம்கிற ஒன்னு எப்போவுமே கிடையாதுன்னு எனக்குத் தெரியும்! ஆனா எஞ்சி இருக்க காலத்துல கொஞ்சமே மனநிம்மதியோட வாழணும்னு நினைக்கிறேன்!” என்றாள் தீர்மானமாய்.

     செல்வாவிற்கு அவள் பேச்சில் கோபம் எழுந்தாலும், அவளின் நியாயமும் பயமும் கொஞ்சமே புரிந்தது. ஆனாலும் அவனால் முழுதாய் பெற்றவளையும் விட்டுத் தர முடியவில்லை. வளர்த்தவளையும் விட்டுத் தர முடியவில்லை. அவன் மட்டில் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே அவனின் எண்ணம். ஆனால் கீர்த்தியின் இந்த முடிவு அவனைப் பெரும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.

     “நான் உன் பிள்ளையா இருந்தா என்னைப் போ ன்னு சொல்லி இருப்பியா?!” என்றான் அவளைப் பார்த்து.

     “நீ என் பிள்ளையா இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு சூழ்நிலையே வந்திருக்காதே?! என் வாழ்க்கை முழுக்க நான் நேசிச்ச எல்லா சொந்தகளும் எனக்கு இரவல் சொந்தங்களா தானே போயிடுச்சு! என் அப்பா அம்மாவைத் தவிர!” என்றாள் அவளும் வேதனையோடே.

     “ம் இதுதான் உன்னோட முடிவா?!” என்றான். அவள் அமைதியாய் இருந்தாள்.

     “நாளைக்கு உனக்கு உடம்பு ரொம்ப முடியாமப் போயிட்டா அப்போ உனக்கு அம்மாவோட துணை வேணாமா?!” என்றான்.

     “ம்! அப்பாவுக்கு அப்புறம் நீ பார்த்துக்குவேன்னு நினைச்சேன். நீயே இப்போ மாறிட்ட?! உங்க அம்மா என்னிக்குமே என்னைப் பார்த்துக்கிட்டது இல்லை. இனியும் பார்த்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை” என்றவள்,

     “அன்னிக்கு அனிதா கிட்ட சொன்னதுதான். நான் இந்த வீட்டுக்கு வரும் போது கடவுளை மட்டும்தான் நம்பி வந்தேன். இப்போ என்னைப் படைச்ச அந்தக் கடவுளோட சேர்ந்து என்னைப் பெத்த தெய்வமும் எனக்குத் துணை இருக்கும்னு நம்பறேன். நீ இல்லாம வாழுறது கஷ்டம்தான். ஆனா பழகித்தான் ஆகணும்.” என்றாள் பொங்கி வந்த கண்ணீரை கட்டுப் படுத்தி.

     செல்வாவிற்குமே பெரும் வருத்தம் தான் எழுந்தது. அவனுக்குத் தன் தாயைப் பற்றித் தெரிந்தாலும் சித்தியும், அம்மாவும் அனுசரித்து வாழலாம் என்று நினைத்தான். ஆனால் கீர்த்தி இப்படி ஒரேயடியாக மறுக்கிறாள் என்றாள் அவள் எந்த அளவு தன் தாயால் காயப் பட்டிருப்பாள் என்றும் புரிந்தது. வளர்த்தவளின் அன்பு எத்தனைப் பெரியது என்று அவன் பலமுறை உணர்ந்திருந்ததால், அவளால் அவளை தனியா விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை! காலம் எல்லாக் காயத்தையும் ஆற்றி நல்முடிவைக் கொடுக்கும் என்று நம்பினான். தான் சம்பாதித்து சித்தி சொன்னது போல் அப்பாவின் இடத்தில் அம்மாவிற்கு வீடு கட்டிக் கொடுத்துவிட வேண்டும் முடிவெடுத்து கீர்த்தியின் முடிவை ஏற்றுக் கொண்டான்.

      சில பிரச்சனைகளுக்கு சட்டென யாராலும் தீர்வு காண முடிவதில்லை! காலம்தான் எல்லாவற்றுக்கும் பதில் கூறும். நல்லதாய் நடக்கும் என்ற நம்பிக்கையோடே நாட்கள் நீளட்டும்.

     பிரிந்த எல்லாக் காதலர்களுமே சந்திப்பதும் இல்லை! ரவி அவள் வாழ்வில் திரும்ப வரவே வராதது போல்! முடிந்த எல்லோர் வாழ்வும் திரும்ப ஆரம்பிப்பதும் இல்லை! ஒரு விபத்தில் தொலைந்த அவள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கவே கிடைக்காதது போல்! ஆனாலும் தன் வாழ்நாள் வரை அவள் வாழ்ந்து தான் ஆக வேண்டும் மெலிதான நம்பிக்கையைச் சுமந்தபடி.

     எல்லோருக்குமே வாழ்க்கை சொர்க்கமாய் அமைந்து விடுவதில்லை! எல்லா பெண்களுக்குமே கதைகளில் வருவதைப் போல அவளைக் காக்க  அன்பான கதாநாயகன் கிடைத்து விடுவதும் இல்லை! ஆனாலும் அவர்கள் வாழ்ந்துதான் ஆகிறார்கள் அவரவர்க்குக் கிடைத்த வாழ்வின்படி சின்னதாய் நம்பிக்கையைச் சுமந்து கொண்டு. அதே நம்பிக்கையோடு கீர்த்தியும் தன் வாழ்நாளை எதிர் கொள்வாள் என்று இக்கதையை முடித்துக் கொள்கிறேன். நன்றி…

                                     -கீதாஞ்சலி.

         

           

Advertisement