Advertisement

சில நாட்களுக்குப் பிறகு.

     சதாசிவத்தின் உடல்நிலை சரியில்லாது போனதிலும், செலவுகள் கைமீறிப் போனதிலும் கீர்த்தி செல்வாவின் நான்காம் செமஸ்டர் கட்டணம் கட்ட மறந்து போயிருக்க, கட்டணம் கட்டி முடித்தால்தான் தேர்வு எழுத விடுவோம் என்று சொல்லி அவனை வெளியே அனுப்பி விட்டனர் நிர்வாகத்தினர். செல்வாவிற்கு சித்தி இருக்கும் நிலை நன்கு தெரியும் ஆதலால் அவளிடம் எப்படிப் பண உதவி கேட்பது என்று எண்ணி, அவளிடம் சொல்லவே இல்லை! தன் அண்ணனிடம் நடந்ததைச் சொல்ல, அவன் கார்த்திகாவிடம் சொல்லிவிட்டான். கார்த்திகா மூலம் கீர்த்திக்குத் தெரிய வர, கீர்த்திக்கு பெரும் வேதனை எழுந்தது.

      “ஏன்டா கண்ணா என்கிட்ட சொல்லலை! நான் உனக்கு அவ்ளோ அந்நியமாகிட்டானே?!” என்று கீர்த்தி உடைந்து போய் கேட்க,

      “இல்லை சித்தி நீயே கஷ்டப் படுற?! அதனால்தான்.” என்றவன்,

     “நான் ப்ரெண்ட்ஸ் கிட்ட பார்ட் டைம் வேலைக்கு கேட்டு இருக்கேன் சித்தி. அது கிடைச்சுதுன்னா பார்த்துக்கலாம்.” என்றான்.

     “லூசாடா நீ அதுவரைக்கும் எக்ஸாம் எழுதாம இருப்பியா?!” என்று கடிந்தவள்,

     “போ இந்த காசை எடுத்துட்டுப் போய் கட்டு” என்று சொல்லி அவனிடம் இருபதாயிரம் ரூபாயைக் கொடுக்க,

     “எ ஏது சித்தி இவ்ளோ பணம்?!” என்றான் திகைப்பாய்.

     “அன்னிக்கு தாத்தா நடப்பு அன்னிக்கு எல்லாரும் சேர்ந்து தாத்தா படத்துக்கு முன்னாடி வச்சாங்களே அந்தக் காசு. வீட்டோட கடைசி மானியப் பணம் வந்தது இல்லை. அதுல மீதி இருந்த பணத்துலயே மத்த செலவும் அடங்கிடுச்சு. அதனால் இந்தக் காசை எடுக்காம அப்படியே வச்சிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சு அவங்களுக்குத் திரும்பக் கொடுத்துடலாம்னு. இப்போ படிப்புன்னு வரும் போது, என்ன செய்யிறது?! அதுதான்.” என்றாள்.

     “நான் சம்பாதிச்சதும் அவங்க காசை எல்லாம் திருப்பிக் கொடுத்திடலாம் சித்தி!” என்று அவன் சொல்ல,

     “ம்! முதல்ல நல்லா படிச்சு பரிட்சை எழுது” என்றாள் அவனைத் தட்டிக் கொடுத்து.

     இரண்டு மாதம் அமைதியாய் சென்றிருக்கும். கார்த்திகா வந்தாள்.

     மீண்டும் அதே பிரச்சனை! வீடு, பணம், இடம் என்று! வீட்டை விற்கவும் விடாமல் கீர்த்தியை அங்கு நிம்மதியாய் வாழவும் விடாமல் கார்த்திகா படுத்தி எடுத்தாள். நாட்கள் மிக மோசமாய்க் கழிந்தது.

     சதாசிவம் இறந்து ஒன்றரை வருடங்கள்  ஓடிவிட்டது. செல்வா கல்லூரிப் படிப்பை முடித்திருக்க, கீர்த்தி தனது மாணவியின் பெற்றோரிடம் சொல்லி வைத்து செல்வாவிற்கு ஐடி கம்பனி ஒன்றில் வேலைக்கு ஏற்பாடு செய்ய, அவனும் ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்திருந்தான். கீர்த்தியின் முயற்சியால் அவளது தந்தையின் பென்ஷன் பணமும் மூன்றில் ஒரு பங்கு குடும்ப ஓய்வுதியத் திட்டத்தின் கீழ் அவளுக்குக் கிடைக்கப் பெற்றது. தந்தையின் இறப்பிற்கு வந்த பணத்தையும், ஒன்றரை வருடமாய் சேர்த்து வந்த பென்ஷன் பணத்தையும் கொண்டு இருக்கும் கடனை அடைத்து விடலாம் என்று கீர்த்தி நினைக்க, இப்போது கார்த்திகா மட்டும் அல்லாது செல்வாவும் சேர்ந்து மறுபடியும் அந்த முட்டாள் கீர்த்தியின் மனதைக் கலைத்து,

     “பார் சித்தி, தளமெல்லாம் தண்ணி நிக்குது பேஸ்மென்ட் கல்லெல்லாம் கரையுது. பதினாறு லட்சம் போட்டு வீட்டைக் கட்டிட்டு இப்படிப் பாழப் போகுறதை உன்னால பார்க்க முடியுதா?! நான்தான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேனே? தாத்தா காசை வச்சி வீட்டு வேலையை முடிச்சிடலாம்! நான் மாசா மாசம் சம்பாதிக்குற பணத்தை வைச்சி நகைக் கடனை அடைச்சிடலாம்” என்றான்.

     “ஆனா இந்தப் பணம் பத்தாதே பா” என்று அவள் சொல்ல,

     “அதெல்லாம் பத்தும் சித்தி” என்று செல்வா சொல்ல, மேச்திரியைக் கூப்பிட்டு எவ்வளவு ஆகும் என்று விவரம் கேட்க, அவர் இரண்டு லட்சம் ஆகும் என, கையில் இரண்டு லட்சம் இருந்ததில், அவள் மீண்டும் முட்டாள்தனமாய் கையில் இருந்த பணத்தைக் கொண்டு கடனை அடைக்காமல் வீட்டு வேலைகளை முடித்து வீட்டை மழை நீரில் இருந்து காப்பாற்றிவிட்டு தன் வாழ்வைப் நீரில் மிதக்கும் காகிதப் படகாய் ஆக்கிக் கொண்டாள். எவ்வளவு பட்டாலும் சில மனிதகர்களுக்கு புத்தி வராது அல்லவா?! அந்த ரகம் இந்த கீர்த்தி. ஏற்கனவே இருந்த கடனில் பாதியை மட்டுமே பெரும் பாடுபட்டு அடைத்திருந்தவள், மேலும் வீட்டிற்காய் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி கடனாளி ஆனாள்.

     செல்வா சொன்னது போல் அவனது மாதச் சம்பளத்தில் கடனை அடைக்காமல், வீட்டிற்கு டிவி, தனக்கு போன், வாசிங் மெசின் என்று ஈஎம்ஐ யில் வாங்கிப் போட்டு அதை கட்டவும், கார்த்திகாவிற்கு கொஞ்சம் கொடுக்கவும், அவனது போக்குவரத்து செலவுகள், வெளிச்செலவுகள், கொஞ்சம் வீட்டுச் செலவுகளுக்கு என்றே அவன் சம்பாத்தியம் கரைந்து போனது. அவள் தந்தையின் பென்ஷன் பணமும் மளிகை, கரண்ட்பில், கேஸ் சிலிண்டர், காய்கறி, அவளது மருந்து மாத்திரைகள், என்று கரைந்தது. வருடா வருடம் வட்டி கட்ட மேலும் மேலும் வைத்திருந்த நகையையே அதிகத் தொகைக்கு வைத்து வட்டி கட்டும் நிலையில் இருந்தாள். 

     எல்லாவற்றிலும் பெரிய சோதனையாய், தாத்தா இறந்தது முதல் தந்தையாய் இருந்து தன் சித்தியைப் பார்த்துக் கொண்ட செல்வாவும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற ஆரம்பித்தான் கார்த்திகாவின் புலம்பலிலும் அழுகையிலும்!

     அபினேஷும், செல்வாவும் வேலைக்குப் போக ஆரம்பித்ததில் இருந்து கார்த்திகாவின் பேச்சோடு சேர்ந்து அபினேஷ், செல்வா இருவரின் நடவடிக்கையும் மாறிப் போனது.

    “எல்லா பசங்களும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க தெரியுமா?! நான் மட்டும்தான் வீட்டு வேலையெல்லாம் செஞ்சிக்கிட்டு எங்கேயும் போக முடியாம உட்கார்ந்திருக்கேன்” என்று ஆரம்பித்த செல்வாவின் புலம்பல்,

     “அம்மா இருந்தா எனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்குமா?!” என்ற ஆதங்கத்தில் வந்து நின்றது.

     கீர்த்திக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை! அவளுக்கும் அவன் பாத்திரம் தேய்த்து வீடு பெருக்கி சுத்தம் செய்யும் போதெல்லாம் வருத்தமாகத்தான் இருக்கும். தன்னால் இதைக் கூட செய்ய முடியவில்லையே என்று. ஆனால் பெண் பிள்ளையாக இருந்தால் வீட்டு வேலையும் செய்து கொண்டுதானே வேலைக்குச் செல்கிறார்கள். ஆண்கள் மட்டும் செய்தால் என்ன தவறு?! அதிலும் தன்னால் செய்ய இயலாத நிலை என்பதால் தானே?! என்று எண்ணி தேற்றிக் கொள்வாள். ஆனால் நாளாக ஆக செல்வாவிற்கு அதுவே பெரும் எரிச்சலாகவும் கோபமாகவும் மாற, ஒருநாள்,

     “ஏன் சித்தி நீ இவ்ளோ சுயநலமா இருக்க?! நீ மட்டும் நல்லா வாழணும்னு நினைச்சுதான் இந்த வீட்டைக் கட்டினியா?! அம்மா, அபினேஷ், நான் யாரும் நிம்மதியா ஒண்ணா சந்தோஷமா வாழவே கூடாதா உனக்கு?! சின்ன வயசுலதான் என்னையும் அபினேஷையும் பிரிச்சு வச்சீங்க?! இப்போவும் கூட நாங்க ஒண்ணா இருக்கக் கூடாதா?!” என்று அவன் கேட்ட கேள்வியில் கீர்த்தி சிலையாய் உறைந்துவிட்டாள்.

     “நீ மட்டும் நிம்மதியா தனியா இந்த வீட்ல வாழணும். நாங்க எல்லாரும் செத்துப் போயிடணும் அதானே உனக்கு வேணும்?!” என்று அவன் கேட்கக் கேட்க தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்றே அவளுக்குத் தோன்றியது.

     ஆனால் என்ன செய்வது இறப்பு என்பது நாம் நினைத்தவுடன் கிடைக்கக் கூடிய வரமா என்ன?!

     அவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை! ஏற்கனவே உடல்நிலை சரியில்லை! தந்தையின் உதவி இன்றி சமையல் வேலைகளைச் செய்து செல்வாவையும் அவளையும் பார்த்துக் கொள்வதே அவளுக்குப் பெரும் சுமையாய் இருந்தது. இதில் கார்த்திகா வேறு இங்கு வந்தவிட்டால் அவள் ஏச்சையும் பேச்சையும் வேறு சமாளித்துக் கொண்டு நால்வருக்கும் சேர்த்துச் சமைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு அவளது உடல்நிலை இல்லை என்று அவள் மனம் உரைக்க, என்ன முடிவு எடுப்பது என்று புரியாமல் குழம்பித் தவித்தாள்.

     கீர்த்தி கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பதைப் பார்த்து,

     “இப்போ இப்படி உட்கார்ந்து அழுறதுக்கு அம்மாகிட்ட காசு வாங்குறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். அவங்க காசையும் போட்டுதானே வீட்டைக் கட்டின?! அப்போ அவங்க இங்க இருக்கணும்னு கேட்கறது நியாயம் தானே?!” என்று அவன் பேசப் பேச, கீர்த்திக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று உரைத்தது.

    “தப்புதான் ப்பா நான் செஞ்சது பெரிய தப்புதான். அன்னிக்கு நீங்களும் உங்க தாத்தாவும் பணத்தை வாங்கிக்கோன்னு சொல்லும் போது நான் வாங்கினது பெரிய தப்புதான். நான் சுயமா சிந்திச்சு முடிவெடுத்திருக்கணும்.” என்று அழுது கொண்டே சென்று விட்டாள்.

     ஆனால் பிரச்சனை அதோடு முடியவில்லை. முன்பெல்லாம் கார்த்திகா தான் வாரம் ஒருமுறை பிரச்சனையை ஆரம்பிப்பாள். இப்போது செல்வா கார்த்திகா பக்கம் சாய்ந்ததில், அவனை வைத்துத் தன் காரியத்தைச் சாதிக்கப் பார்த்தாள். கீர்த்திக்குப் பெரும் சலிப்பு எழுந்தது.

     ‘ச்சே வீடு கட்டி மூணு வருஷம் ஆகுது! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த போராட்டம்?! என் அப்பாவை உன்கிட்ட அழைச்சுக்கிட்ட மாதிரி என்னையும் அழைச்சிக்கோயேன்?! ஒரு பக்கம் நோயோட போராட்டம்?! ஒரு பக்கம் கடனோட போராட்டம்! ஒரு பக்கம் நான் நேசிச்ச உறவுகளாலேயே போராட்டம்!’ என்று கடவுளிடம் தினமும் மன்றாடினாள்.

     தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட பல முறை யோசித்தாள். ஆனால் பல தோல்விகளை எதிர்கொண்டும் உயிர் வாழும் தான் மரணத்திலும் தோற்றுப் போகக் கூடாது என்று தனக்குத்தானே தைரியம் சொல்லித் தேற்றிக் கொண்டாள். ஆனால் நாளுக்கு நாள் கார்த்திகா பிரச்சனை செய்தாளோ, இல்லையோ செல்வா அடிக்கடி அவளை வார்த்தைகளால் கொன்று புதைத்தான். ஒரு நேரம் அவளுக்கு உதவியாய், உறுதுணையாய் இருந்தவன், ஒரு நேரம் கார்த்திகாவிற்காய் அவளை வெகுவாய் காயப்படுத்தினான்.

     அவள் நொந்து போனாள். மனம் சோர்வடைய சோர்வடைய உடல் நிலை முன்பை விட வெகுவாய் தளர்ந்து போக, அவளால் டியுஷன் கூட எடுக்க இயலாமல் போனது. அதற்கும் சேர்த்து செல்வா அவளைக் குத்திக் காட்டினான்.

     “உன்னை விட மோசமான உடல் நிலையில இருக்க பல பேர் எவ்ளோவோ சாதிக்கிறாங்க! நீ முடியாது முடியாதுன்னு இப்படிச் சும்மாவே காலத்தைக் கழிக்கிற?!” என்றான்.

    

Advertisement