Advertisement

                                 9

     “அப்பா… அப்பா…” என்ற அவளின் அழைப்பு முதன்முதலாய் அந்த தெய்வத்தின் செவிகளை எட்டாமல் காற்றிலே கரைந்து தொலைந்து போனது.

     அம்மா, காதலன், அப்பா என்று அனைவரையும் தொலைத்துவிட்டு தனிமரமாய் நின்றாள். தந்தையின் இறப்புச் செய்தியை நினைவில் வந்தவர்களுக்கு அழைத்துச் சொன்னாள். உறவுக்காரப் பெரியவர்களிடம் சொல்லி மற்றவர்களுக்கும் தெரிவிக்கும்படி சொன்னாள். உறவினர்கள் வந்தார்கள். சிலர் ஆறுதல் கூறினார்கள். சிலர் பரிதாபப் பட்டார்கள்.

     நெருங்கிய உறவுப் பெண்மணி ஒருத்தி, ‘அழுது என்ன ஆகப் போகுது? போனவரு திரும்பியா வரப் போறாரு?! நீயும் உன் அப்பாவை மாதிரியே நல்ல படியா போய்ச் சேரணும்னு வேண்டிக்கோ!’ என்று வாழ்த்தினாள்.

     நல்ல வேளையாய் கார்த்திகாவும் சேர்ந்து அன்று தங்கையை நோகடிக்காமல் இருந்தாள்.

     அவளது மாணவர்களின் பெற்றோர்கள் வந்தார்கள். அவளைக் கட்டி அணைத்து ஆறுதல் சொல்லித் துணை நின்றார்கள். உறவினர்கள் உதவி வேண்டும் என்றால் கேள் என்றார்கள். அவளது மாணவியின் பெற்றோர் அவள் வாய் திறந்து உதவி கேட்க மாட்டாள் என்று உணர்ந்து செல்வாவிடம் பணம் கொடுத்து, இன்னும் தேவைப்பட்டா ஒரு மெசேஜ் மட்டும் போட்டு விடுப்பா என்று உதவி கேட்காமலே துணை நின்றனர்.

     அவருக்காய் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் ஒரு வருடம் கூட முழுதாய் அந்தத் தந்தை வாழவில்லை!

     அவரின் சொல்படியே, ‘என் சொந்த வீட்டில் தான் என் உயிர் போகணும்!’ என்ற கூற்றுப்படி அவர் மாய்ந்து போனார். மகளை இந்த உலகில் தனியாக விட்டுவிட்டுப் போக மாட்டேன் என்று தினம் தினம் ஜெபித்துக் கொண்டிருந்த அந்த உயிர் இன்று இயற்கையின் விதிப்படி தனியே தவிக்க விட்டுச் சென்றுவிட்டது.

     அவள் வாய்விட்டுக் கதறி அழவில்லை! கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அவள் மனம்  அப்பா அப்பா என்றே ஜெபித்துக் கொண்டிருந்தது. உயிரின் சப்தநாடியும் ஒடுங்கி விட்டது போல் அவள் உடம்பில் உயிர் இருந்தும் அவள் நடைபிணமாய்க் கிடந்தாள். தந்தையை வைத்திருக்கும் அந்தக் கண்ணாடிப் பேழையில் தலை சாய்த்துப் படுத்திருந்தாள். கண்கள் அவரையே வெறித்திருந்தன.

     வருவார்கள் என்று நினைத்த பல உறவினர்கள் வரவே இல்லை! இனி யார் வந்தாலென்ன வராவிட்டால் என்ன?! அவளின் ஜீவனே போன பின்! எல்லா சடங்குகளும் முடிந்து அவள் உயிரின் ஊர்வலம் கிளம்பியது. ஆனாலும் அவள் உயிரோடுதான் இருந்தாள். தாய் போன நாள் முதல் ஒருநாள் கூடத் தந்தையை விட்டுப் பிரிந்து இருந்திராதவள், இன்று ஒரேயடியாக விட்டுக் கொடுத்துவிட்டு உயிரோடுதான் நின்றிருந்தாள். ஆண்பிள்ளையாய் அனைத்துப் பண விஷயங்களையும் ஒருவளாய் நின்று பார்த்தாள். எந்த வீட்டில் தன் தந்தை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு கட்டினாளோ அதே வீட்டிற்குக் கிடைத்த அரசு உதவித் தொகை பணத்தில் அவரது இறுதிச் சடங்கை யாரிடமும் கடன் பெறாது நடத்தி வைத்தாள். அவளைப் பொறுத்த வரையில் தன்னால் இயன்ற அளவு தன் தந்தையின் இறுதி யாத்திரையை நல்லபடியாய் முடித்து வைத்துவிட்டாள்.  

     ஆனாலும், பலர் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறினார்கள். மறுநாள் வரை உறவினர்கள் வருகைக்காய் காத்திருந்து அவள் தந்தையை எடுக்கவில்லையாம். பெரியவர்களை மதிக்காமல் அவள் இஷ்டப்படி ஆடுகிறாள் என்றார்கள்.

      இதை எல்லாம் விட ஒருத்தி, அவள் வாய்திறந்து புலம்பி வருகிறவர்களின் கைபிடித்து, “அண்ணா, சித்தப்பா, மாமா எங்க அப்பா போயிட்டாரு எனக்கு யாரும் இல்லை. நீங்கதான் உதவி பண்ணனும்னு கேட்டு அழுதிருந்தா மத்தவங்க மனசு இறங்கும்! அதைவிட்டுட்டு யார் முகத்தையும் பார்க்காம வீராப்பா அப்பாவையே பார்த்துட்டு இருந்தா?!” என்று அவள் முகத்துக்கு நேரே கேட்க,

     “நான் ஏன் மத்தவங்க கைபிடிச்சு உதவி கேட்டு அழணும்?! ஆயிரம் பேர் இருந்தாலும் என் அப்பாவுக்கு ஈடாக முடியுமா?!” என்றாள் கோபமாகவே.

     “யப்பா இந்தப் பொண்ணுகிட்ட எல்லாம் பேச முடியாது” என்று அவர் சென்றுவிட,

     ‘ம் என்ன உலகம் இது?! ஒருத்தவங்க உதவி கேட்டு தன் கிட்ட கெஞ்சணும்னு நினைக்கிறது என்ன விதமான மனநிலை?! ஏன் மனிதர்களோட மனசு இவ்ளோ வன்மமா மாறிடுச்சு!” என்று வருந்திக் கொண்டாள் தனக்குள்ளேயே.

                                                                  ******

     நான்கு நாள் கழித்து ஹவுஸ் ஓனர் அனிதாவும், அவள் நாத்தனாரும், அவள் அம்மாவும், அப்பாவும் வந்தார்கள். அனிதா ஒரு ஆறுதலுக்காகக் கூட கீர்த்தியிடம் பேசவில்லை! எப்போது தன் தந்தையின் மரணத்திற்கே அவள் வரவில்லையோ அதன்பின் கீர்த்தியும் அவளிடம் எந்த ஆறுதலையும் எதிர்பார்க்கவில்லை!

     அனிதாவின் அம்மா, “யாரைக் கேட்டு நீ அன்றே சாவை எடுத்தாய்? நாங்கள் மறுநாள் வரலாம் என்று நினைத்திருந்தோம். நீ யாரையும் மதிக்கவில்லை, உன் இஷ்டப்படி எல்லாம் செய்கிறாய்!” என்றார்.

     அவளுக்குத் தெரியும் அவர்கள் ஏன் வரவில்லை என்று. இப்போது அதற்கும் தன் மீது பழி போடப் பார்க்கிறார்கள். அனைவரும் பழகிய பழக்கத்திற்காகவும் உறவுக்காகவுமாவது வருவார்கள் என்று அவள் எதிர்பார்த்திருந்தாள் தான். ஆனால் அவர்கள் அனைவரும், வேறொரு உறவினரின் திருமணப் பட்டுப்புடவை எடுக்கப் போயிருந்தார்கள் என்று மறுநாளே வேறு சில உறவினர்கள் மூலம் அவளுக்குத் தெரிய வந்திருந்தது.

     “உங்களுக்கு உண்மையா எங்க அப்பா மேல அன்பு இருந்திருந்தா நீங்க விஷயம் கேள்விப் பட்டதுமே வந்திருப்பீங்க! நீங்க வேற முக்கியமான வேலையில இருந்தீங்க இல்லை. அப்புறம் எப்படி வர முடியும்?!” என்று அவள் எதிர்த்துக் கேட்க,

     “எல்லாருக்கும் சூழ்நிலை எப்படி எப்படியோ இருந்திருக்கும். உடனே கிளம்பி வர முடியுமா?!” என்று அவர் சொல்ல,

     “உங்க வீட்ல இருந்து ஒரு ஆட்டோ பிடிச்சா இங்க வர அரை மணி நேரம் தான் ஆகும். அதுக்கு உங்களால வர முடியலை. மறுநாள் வரலாம்னு நினைச்சீங்களா?!” என்று அவள் கேட்க, அவர் அமைதியானார்.

     “கூடக் கூடப் பேசாதே கீர்த்தி!” என்றார் அவளின் சித்தி.

     கீர்த்தி பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தாள்.

     வந்திருந்த நெருங்கிய உறவினர்கள்,  நடப்பு காரியத்திற்கு இவர்களை அழை அவர்களை அழை என்று பட்டியல் போட்டார்கள்.

     கீர்த்தி, “என்னால் அவ்வளவு பேரை எல்லாம் அழைத்துச் செய்ய முடியாது. என் சக்திக்கு ஏற்றார் போல் முக்கியமான உறவினர்களை மட்டும் அழைக்கிறேன்.” என,

     “உதவி வேணும்னா கேளுன்னு சொல்லி இருந்தோம் இல்ல” என்றார் மீண்டும் அவளின் சின்ன சித்தப்பாவின் மனைவி.

     “எனக்கு வேணாம்! என்னால என்ன முடியுதோ அதை மட்டும் நான் செய்யிறேன்.” என்றாள் கீர்த்தி பிடிவாதமாய்.

     “ஏன் உன் மாமா செத்தப்போ, உன் அப்பா எங்கிட்ட காசே இல்லைன்னு அழுதாரே, அப்போ நாங்கதானே கொடுத்தோம்?!” என்று அவர் சொல்லிக் காண்பிக்க,

     “என் அப்பா உங்ககிட்ட வந்து அழுதாரா?!” என்று கோபம் கொண்டவள்,

      “ஒருத்தர் இறந்துட்டா என்ன வேணா சொல்லலாம்” என்று வெறுப்புடன் சொல்லி,

      “என் அப்பா வேணா அன்னிக்கு உங்ககிட்ட கை நீட்டி காசு வாங்கி இருக்கலாம். ஆனா நான் அப்படி இல்லை! ஊர் மெச்சுக்க செய்தாதான் என் அப்பா ஆத்மா சாந்தி அடையும்னு இல்லை! அவர் போட்டோ முன்னாடி ஒரு ரூபாய் கற்பூரம் ஏத்தி வச்சு நான் மனசார வேண்டினாலே என் தெய்வத்தோட ஆத்மா சாந்தி அடைஞ்சிடும்” என்றாள் ஆதங்கமாய்.

      “இந்தப் பொண்ணுக்கு வீம்பு ரொம்ப அதிகம்” என்ற அந்தப் பெண்மணி,

     “என்னங்க உதவின்னு கேட்டா அவ கௌரவம் குறைஞ்சிடும். அதனால நீங்களே குடுத்துடுங்க” என்று தன் கணவரிடம் சொல்ல, அவளின் சித்தப்பா அவளிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுக்க,

     “இல்லை வேணாம் சித்தப்பா” என்றாள் மறுப்பாய்.

     “கீர்த்தி ஏன்டி இப்படி இருக்க?! நீயா ஒன்னும் கேட்கலை தானே அவங்களாதானே கொடுக்கறாங்க. வாங்கிக்கோடி வாங்கிக்கோ” என்று கார்த்திகா இடை புக,

     “இல்லை” என்று மறுப்பாய் தலையசைத்தவள் தானாக வாங்கமாட்டாள் என்று எண்ணி, அவள் தந்தையின் படத்தின் முன் அவர் வைத்துவிட்டுச் செல்ல, அனிதாவின் அப்பாவும், அவளின் பெரிய சித்தப்பாவும், ஆளுக்கு ஐந்தாயிரம் வைத்துவிட்டுச் சென்றனர்.

      கீர்த்திக்கு அவர்கள் உதவியது பெரும் தர்மசங்கடமாகவும், அதே சமயம் பெரும் வேதனையாகவும் இருந்தது. சதாசிவம், தன் தம்பிகளுக்கு தான் நன்றாக இருந்தவரை எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார்தான். ஆனாலும் மற்றவர்களிடம் உதவி பெற்று தன் தந்தையின் காரியச் செலவுகளைச் செய்யும் நிலையில் ஏன் என்னை இறைவன் வைத்திருக்கிறார் என்று அவளுக்குத் தன்னிரக்கம் எழுந்தது.

     ‘மாமா இறந்தப்பவும் இதே நிலைமை! இப்போ அப்பாவுக்கும்! ஏன் கடவுளே?! எங்க நிலைமை என்னிக்கும் வாங்குற நிலையிலேயே தான் இருக்கணுமா?!’ என்று எண்ணியவளுக்கு  வேதனை நெஞ்சை அடைத்தது.

     ஒருபக்கம் தந்தையின் இழப்பு, ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, இதனிடையே உறவினர்களின் ஏச்சும் பேச்சும் அதோடு கூடிய அவர்கள் உதவியும்.

     உதவி கூட ஒருவர் மனதைக் குத்திக் கிழிக்குமா?! ஆம் குத்திக் கிழிக்கும்! சின்னா பின்னமாக்கி அவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளும்! யார் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று எண்ணிப் பாடுபடுகிறோமோ அவர்கள் முன் மீண்டும் மீண்டும் தாழ்ந்து நிற்கும் நிலை வந்து அவர்களிடம் உதவி பெரும் போது உதவி கூட ஒருவர் மனதைக் குத்திக் கிழிக்கும் தான்!

     எல்லாவற்றையும் தாங்கியாயிற்று! எல்லாம் முடிந்தும் போயிற்று! அவள் தந்தையின் காரியமும். பதினாறாம் நாள் உறவினர்கள் அனைவரும் கிளம்பிவிட, கார்த்திகாவும் மேலும் ஒருவாரம் இருந்துவிட்டுக் கிளம்பினாள்.

     கீர்த்தி அவளைத் தங்களோடே இருந்துவிடும்படி சொல்ல மாட்டாளா என்று கார்த்திகா எதிர்பார்த்தாள். கீர்த்திக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும் பயமாய் இருந்தது. அப்பா இருக்கும் போதே இவள் அந்த பேச்சு பேசுவாள்! இப்போது அப்பாவும் இல்லாத நிலையில் தானே தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொண்டு விடக் கூடாது என்று அமைதியாய் இருந்துவிட்டாள்.

     தாத்தாவிற்காய் ஒருமாத காலமாக கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்த செல்வா, கல்லூரிக்குப் போகத் துவங்கினான். தந்தை இல்லாத அந்த வீட்டில் எங்கும் தந்தையின் பிம்பமே நிறைந்திருக்க, கீர்த்தி அழுதே கரைந்தாள். செல்வாவிற்கும் அவரின் பிரிவு பெரும் துன்பத்தைக் கொடுத்தது. ஆனால், கல்லூரி, படிப்பு, வெளி உலகம் என்று ஓரளவு அவன் கவனத்தை திசை திருப்ப அவன் கொஞ்சம் கொஞ்சமாய் தாத்தாவின் இழப்பில் இருந்து மீண்டான்.

    

Advertisement