Advertisement

     8

     நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர் இருவரையும் எழுப்ப, கண்விழித்து அவரைப் பார்த்தவளின் மனம் ஏனோ பாரமாகிப் போனது. சற்று நாட்களாகவே அவரின் தோற்ற மெலிவும் நலிவும் மகளின் மனதை அரித்துக் கொண்டே இருக்க,

     “அப்பா” என்றபடி எழுந்து டீயை வாங்கிக் கொண்டு எழுந்து அவர் தோளில் சாய்ந்தவள், 

     “ரொம்ப ஒல்லியாகிட்டே போறப்பா?! உடம்புக்கு ஏதாவது செய்யுதாப்பா?!” என்றாள் கவலையோடு.

     “வயசாகுது இல்லைம்மா எண்பதை நெருங்கியாச்சு இல்லை. ஒரு நேரம் நல்லா இருக்க உடம்பு ஒரு நேரம் இல்லை!” என,

     “ஹாஸ்ப்பிட்டல் போய் பார்க்கலாமா ப்பா?!” என்றாள் அவள் பயந்த குரலில்.

     “பார்க்கலாம் பார்க்கலாம் மா” என,

     “உன் கை எவ்ளோ உறுதியா இருக்கும் தெரியுமாப்பா முன்னாடி எல்லாம். ஒரு வருஷம் முன்னாடி கூட நல்லா இருந்தது ப்பா. இப்போ ரொம்ப மெதுவா குழந்தைங்க கை மாதிரி இருக்குப்பா?!” என்றவளுக்குக் கண்ணீர் ஊற்றெடுக்க,

     “அதெல்லாம் ஒண்ணுமில்லைம்மா. உன்னை தனியா விட்டுட்டு அவளோ சீக்கிரம் போய்ட மாட்டேன்” என்றுவிட்டு அவர் எழுந்து செல்ல,

     ‘என்னன்னே தெரியலைம்மா, கொஞ்ச நாளாவே மனசுக்கு திகிலா இருக்கு! ஏதோ ஒரு பயம் மனசைக் கவ்விட்டே இருக்க மாதிரி இருக்கும்மா! எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா! அப்பாக்கு எதுவும் ஆகக் கூடாது. அவர் நல்லா இருக்கணும்மா. அவர் நல்லா இருக்கணும்’ என்று வேண்டிக் கொண்டவள், மறுநாளே தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பொதுப் பரிசோதனை செய்ய, எல்லாம் நார்மலாக இருப்பதாய் வந்தது.

     ஆனால் சில நாட்கள் கழித்து சதாசிவம் வயிற்றின் வலது பக்கத்தில் அவ்வப்போது வலி வருவதும் சரியாவதுமாய் இருப்பதாய் சொல்ல, வாயு பிரச்சனையாக இருக்கும் என்று சொல்லி மருத்துவர்கள் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்ப, வலி கொஞ்சமும் குறையாமல் நாட்கள் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டே போனது.

      கீர்த்தி மீண்டும் அவர்கள் வீட்டின் அருகே இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துப் போக, அவர்கள் சில டெஸ்ட்கள் எழுதிக் கொடுத்தனர். டெஸ்ட்கள் எடுத்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் சமயம், வீட்டு வசதி வாரியத்தில் வேலை செய்யும் பாலாஜி என்ற அந்த மனிதர், போன் செய்தார்.

     “ம்மா! அந்த ஏஈ எவ்ளோ சொன்னாலும் கையெழுத்துப் போட மாட்றான் ம்மா?! அவனுக்கும் மேல் அதிகாரி ஒருத்தர் இப்போ புதுசா ப்ரோமஷன் ஆகி வந்திருக்க  மனிதர் கொஞ்சம் நல்லவர்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. நீங்க போய் நேர்ல அவரைப் பார்த்து உங்க சூழ்நிலையைச் சொன்னா அவர் நிச்சயமா உதவி பண்ணுவார்” என,

     “ரொம்ப நன்றிங்க ஐயா உங்க உதவிக்கு” என்றவள், அட்ரெஸ் கேட்டு வாங்க, அது அவர்கள் வந்திருந்த மருத்துவமனைக்கு அருகில் இருப்பது தெரிய வர, தந்தை, சின்னவன் இருவரையும் அப்படியே அழைத்துக் கொண்டு அந்த அலுவலகதிற்குச் சென்றாள்.

     அங்கு அவள் மாடிப்படி ஏறி வரண்டாவில் நுழையும் போதே லஞ்சப் பணத்திற்காக கையெழுத்துப் போடாமல் இழுத்தடித்த அந்த ஏ ஈ அவளைப் பார்த்துவிட,

      “ஏய், நீ எதுக்கு இங்க வந்த?! பன்ட் வந்த அப்புறம் தான் பணம் வரும். கிளம்பு கிளம்பு” என்று அதிகாரமாய் சொல்ல இவளுக்குக் கோபமாய் வந்தது.

      ‘என்னமோ இவன் அப்பன் வீட்டு சொத்தைத் தூக்கிக் குடுக்கற மாதிரி எப்படிப் பேசுறான்?! லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை அது இதுன்னு பெருசா பில்டப் பண்றாங்க! ஆனா நாட்டுல ஒரு இடத்துல கூட லஞ்சம் இல்லாம இல்லை! இவனுங்க செய்யிற தப்பை மேலதிகாரி கிட்ட சொல்லக் கூட நமக்கு பயமா இருக்கு! அவங்க எப்படிபட்டவங்களா இருப்பாங்களான்னு தெரியாம?!’ என்று மனதிற்குள் அவனை வறுத்தெடுத்த படியே, திரும்பிச் செல்வது போல் முதலில் இருந்த ஆபீஸ் அறை ஒன்றுக்குள் சென்று நின்று கொண்டவள், அவன் உள்ளே செல்லட்டும் என்று காத்திருக்க, அங்கிருந்த ஒரு பெண்மணி,

     “என்னமா வேணும்?!” என்றார்.

      அவள் நடந்ததை அப்படியே சொல்ல, “சரிம்மா வந்ததும் வந்துட்டா எக்சிகியுடிவ் என்ஜீனியரை பார்த்துட்டுப் போயிடுங்க. இப்போ வந்திருக்க ஆபீசர் நல்ல டைப்தான்” என, அவள் சில நிமிடங்கள் அங்கேயே காத்திருந்து அவன் சென்றுவிட்டானா என்று பார்த்து அவன் உள்ளே சென்றிருந்ததைக் கண்டதும், கடைசியாய் இருந்த அலுவலக அறைக்கு வெளியே சென்று அங்கிருந்த உதவியாளரிடம் நடந்ததைக் கூறினாள்.

     “ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்கம்மா சார் மீட்டிங்க்ல இருக்கார். அவர்கிட்ட கேட்டுட்டு உங்களைக் கூப்பிடுறேன்.” என்று அவர் மரியாதையோடு சொல்லிவிட்டுச் செல்ல, அவளுக்கு சற்றே ஆறதல் ஏற்பட்டது.

      ‘இவர் எவ்ளோ பொறுமையா பேசிட்டுப் போறாரு?! ஆனா இந்த ஏஈ அருண் மாதிரி ஆளுங்க நியாயமா சக மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கூட ஏன் குடுக்க மாட்றாங்க?! யார் இவங்களுக்கு எல்லாம் புத்தி புகட்டுறது?!’ என்று எண்ணியபடியே அவள் நின்றிருக்க,

      “வாங்கம்மா சார் வர சொல்றாரு” என்று அவர் உள்ளே அழைக்க, அவள் உள்ளே செல்ல, அவர் விவரம் கேட்க,

     “சார் நான் பிரதம மந்திரி வீட்டு உதவித் திட்டத்துல வீடு கட்ட உதவி கோரி இருந்தேன். என்னோட மூன்று கட்டத் தொகை வந்துடுச்சு. ஆனா நான்காம் கட்டத் தொகை பல மாசங்கள் ஆகியும் வரலைங்க!”

     “ஏன்?! ஒருமுறை பேமென்ட் வந்தா எல்லா பேமென்ட்டும் சரியா வந்துடுமே?!” என்று அவர் கேட்க,

     “அது வந்து சார்…” என்று தயங்கியவள்,

     “ஏஈ அருண் அவர் கேட்ட லஞ்சப் பணத்தை நான் குடுக்கலைன்னு கையெழுத்துப் போடாம இழுத்தடிச்சுகிட்டே இருக்கார் சார்” என்று சொல்லிவிட்டாள் வருவது வரட்டும் என்று.

    “அந்த ஆளை இங்க வர சொல்லுங்க” என்று தனது உதவியாளரிடம் கட்டளையிட்டவர், அவன் வந்தவுடன்,

      “என்னய்யா என்ன விஷயம்?!” என்றார் அவளைப் பார்த்துக் கைகாட்டி.

     “சார் நான் வந்து, அது வந்து?!” என்று அவன் தந்தியடிக்க,

     “ஒரு வாரத்துக்குள்ள அந்தப் பொண்ணுக்கு சேர வேண்டியத் தொகை அவங்களுக்குப் போய் சேர்ந்திருக்கணும்” என்று எச்சரிக்க,

     “ஓ ஓகே சார்!” என்றவனை, முறைத்துவிட்டு,

     “வரலைன்னா என் நம்பர்க்கு கால் பண்ணுமா” என்று தனது நம்பரையும் கொடுத்து அனுப்ப, அவளை முறைத்தபடியே சென்றான் அந்த ஏஈ.

     ‘என்ன முறைப்பு? போடா போ. நான் மட்டும் அந்த ஆபீசரா இருந்த உன்னை வேலையை விட்டே தூக்கி இருப்பேன். இதோட போச்சேன்னு சந்தோசப்பட்டுக்கோ!’ என்று மனதிற்குள் அவனை வசைபாடிவிட்டு, அவருக்கு நன்றி சொல்லிக் கிளம்பினாள். அவருக்கு உதவி செய்த பாலாஜி சாருக்கும் அழைத்து விவரம் சொல்லி நன்றி கூறினாள்.

     அவர் சொன்னபடியே பணம் வந்ததுதான்! ஆனால் அது வந்ததன் காரணம்?!

                                                                          

                                                                   ******

     ஒரு வாரமாய் தொடர்ந்து மருத்துவமனை, பரிசோதனைகள் என்று அலைந்து கொண்டிருக்கும் போதே, திடீரென ஒரு நாள் தூங்கி எழுந்த போது சதாசிவத்தின் கண்கள் லேசாக மஞ்சள் நிறமாக மாறி இருந்ததை கவனித்த கீர்த்தி,

     “அப்பா கண்ணு எல்லாம் மஞ்சளா இருக்குப்பா?!” என்று பதறிப் போய், உடனே மஞ்சள் காமாலை நோய்க்கான பரிசோதனை செய்ய, அதில் மஞ்சள் காமாலை இருப்பது உறுதியானது. மருத்துவப் பரிசோதனை செய்ய ஆரம்பித்திருந்த அந்த ஓரிரு வாரங்களிலேயே சதாசிவம் மிகவும் நொடிந்து விட, கீர்த்தி தினமும் அழுதே கரைந்தாள்.

     பலரும் ஒவ்வொரு வைத்தியம் சொல்ல, ஒரு கிராமத்தில், மஞ்சள் காமாலைக்கான வைத்தியம் செய்து ஆயிரக்கணக்கானோர் குணமாகி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அங்கே சென்று மருந்து கொடுக்கலாம் என்று கிளம்ப, அவ்வளவு தூரம் கார் வைத்து அழைத்துச்  செல்லக் கூட அவளிடம் கையில் பணமில்லை. ஒரு தெரிந்த ஆட்டோக்காரரிடம் பேசிக் கொண்டு சின்னவன் முன்னே அமர்ந்து கொள்ள, கீர்த்தியும் சதாசிவமும் பின்னே அமர்ந்து கொண்டனர். ஆனால், அரை மணி நேரம் கூட அவரால் அமர்ந்து வர முடியாமல் சோர்ந்து போக,

      “அம்மாடி என்னால ரொம்ப முடியலைம்மா” என்றார் வேதனையோடு.

      “அப்பா.. என்மேல சாஞ்ச மாதிரி படுத்துக்கோ ப்பா” என்று கீர்த்தி அவரைத் தன் மடியில் சாய்த்துக் கொள்ள, அத்தனை காய்ச்சல் நோய்கள் என்று வந்த போதும் ஒரு போதும் படுக்காதவர், அன்று மறுப்பேதும் சொல்லாமல் படுத்துக் கொள்ள, அந்த அதிகாலை குளிரல் அவர் உடல் நடுங்குவதைக் கண்டு போர்வை எடுத்துப் போர்த்திய கீர்த்தி, தந்தையையே பார்க்க அவள் கண்களில் கண்ணீர் கரை புரண்டோடியது. என்னவோ மனதை இனம் புரியாத பாரம் அழுத்த, அப்பாவின் கையை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

Advertisement