Advertisement

      “நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,      

     “ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,

     “அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே கேட்டாங்க?!” என்றாள் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே இருந்த படியால் கவலையுடன்.

     “அதான் கூட்டிட்டுப் போகலையே?! ஆம்புலன்ஸ் வேணுமா வேணாமா?!” என்று அந்த மனிதன் கடுப்பாய்க் கேட்க, வேறு வழியின்றி தலையசைத்தாள் கையில் இருந்த ஆயிரம் ரூபாயைப் பார்த்தபடியே.

     ‘ஆயிரம் ரூபாய் தானே இருக்கு! பேங்க்லயும் எவ்ளோ இருக்குன்னு தெரியலையே?!’ என்று எண்ணியவள், பேங்க் பேலன்ஸ் செக் செய்துவிட்டு செல்வாவிடம் பணம் எடுத்து வரச் சொல்லலாம் என்று தனது கைபேசியை எடுத்துப் பார்க்க, அதில் அவளது அக்கவுண்டிற்கு அவளுக்கு வந்து சேர வேண்டிய பிரதம மந்திரி வீட்டு உதவித் திட்டத்தின் சொச்சப் பணம் அறுபதாயிரம் ரூபாய் வந்து சேர்ந்திருந்தது.

                                                                   *****

     ஆம்புலன்சில் செல்லும் வழியெல்லாம் கீர்த்தி அழுதபடியே வர, சதாசிவத்திற்கு ஏதோ சரியில்லை என்று புரிந்தது.

      “எங்கம்மா போறோம்?!” என்றார் மகளிடம்.

     “ஜிஎச் க்கு ப்பா” என்றவள் தந்தையின் கையைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொள்ள,

      “ஏம்மா அழற?! அப்பா உன்னை விட்டுப் போக மாட்டேன் மா பயப்படாத” என்றார் அவர் அவளுக்கு ஆறுதலாய்.

      ஜிஎச் எமெர்ஜென்சியில் அவரைச் செக்கப் செய்துவிட்டு அவர்கள் கேஸ்ட்ரோஎன்ட்ராலாஜி பகுதிக்கு எழுதிக் கொடுக்க, அங்கு இருந்த மருத்துவர் விவரம் கேட்க, அவள் சொன்னதைக் கேட்டு அந்த மருத்துவர் கோபமாய்,

      “அதான் நாட்டு மருந்து வைத்தியம் பார்த்தீங்க இல்லை அதையே கண்டினியு பண்ண வேண்டியது தானே?! இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்தீங்க?! கிளம்புங்க கிளம்புங்க அட்மிஷன் எல்லாம் போட முடியாது” என்றார் இரக்கமே இல்லாமல்.

     “சார். ப்ளீஸ் சார். தெரியாம செய்துட்டோம் சார். நிறைய பேருக்கு நல்லா ஆனதுன்னு சொன்னதுனால கூட்டிட்டுப் போயிட்டோம் சார்.” என்று அவள் கெஞ்ச,

      “அப்போ நல்லா ஆகும்னு வெயிட் பண்ணுங்க” என்று அந்த மருத்துவர் எழுந்து கொள்ள,

      “சார் சார் ப்ளீஸ் சார்” என்று கீர்த்தி கெஞ்சியும் அவர் பொருட் படுத்தாது எழுந்து சென்றுவிட, கீர்த்தி ஸ்ட்ரெச்சரில் படுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்று அவர் கையைப் பற்றிக் கொண்டு நிற்க, அவள் மனமும் கண்களும் அழுது கொண்டே இருந்தன ஓயாது.

      செல்வாவும் செய்வதறியாது சித்தியின் கையைப் பற்றிக் கொண்டு நின்றான் கண்கள் கலங்க.

     “ஏன் செல்வா நம்ம மாதிரி மனுஷங்களை அந்தக் கடவுள் படைக்கணும்?! ஒண்ணு துணைக்கு நல்ல சொந்த பந்தமாச்சும் இருக்கணும். இல்லை காசு பணமாச்சும் இருக்கணும்! இப்படி ரெண்டும் இல்லாம இந்த மனுஷ ஜென்மமா மட்டும் பொறக்கவே கூடாதுடா பொறக்கவே கூடாது” என்று வெறுத்துப் போய் சொன்னவள், தந்தைக்கு மீண்டும் விக்கல் வரவும்,

      “அய்யோ இவ்ளோ நேரம் இருந்த அலைச்சல்ல தாத்தாவுக்கு ஜீஸ் கூட எதுவும் குடுக்கலையே செல்வா! நீ போய் தண்ணி பாட்டிலும் சாத்துக்குடி ஜீசும் வாங்கிட்டு வரியா?! நான் மறுபடியும் அந்த டாக்டர் வந்தா பேசிப் பார்க்கறேன்.” என்று காசை எடுத்து செல்வாவிடம் கொடுத்து அனுப்ப, மீண்டும் எழுந்த சென்ற அந்த மருத்துவர் திரும்ப வந்து அவர் இடத்தில அமர, அவரை நோக்கிச் சென்றாள் கீர்த்தி.

     “சார் தயவு செய்து அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுங்க சார். ப்ளீஸ் சார் ப்ளீஸ்” என்று அவள் கையெடுத்துக் கும்பிட, இம்முறை கொஞ்சமே மனதிரங்கிய அந்த மருத்துவர்,

     “சரி உள்ள அங்க காலியா இருக்க பெட்ல கூட்டிட்டுப் போய் படுக்க வைங்க. வந்து பார்க்கறேன். என்ன ஏதுன்னு தெரியாமலே நாட்டு மருந்து அது இதுன்னு சாப்பிட்டு ரொம்ப முடியாத பிறகு ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டு வர வேண்டியது. முதல்ல என்ன பிரச்சனைன்னு டெஸ்ட் எடுத்துப் பார்த்துட்டு அப்புறம் மருந்து எடுத்துக்கணும்னு உங்களுக்கு எல்லாம் எப்போதான் புரியப் போகுதோ? படிச்சவங்களும் இப்படித்தான் இருக்கீங்க படிக்காதவங்களும் இப்படிதான் இருக்கீங்க” என, அவரின் கோபத்தின் நியாயம் அப்போதே கீர்த்திக்குப் புரிந்தது. ஆனாலும்  அட்மிஷன் போடாது அலைய விட்டது எல்லாம் தவறுதான் அல்லவா?!

     கீர்த்தி உடனடியாய் வார்ட் பாயிடம் சொல்லி வார்டிற்குள் அழைத்துச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தாள் தந்தையை.

      சிறிது நேரத்தில் செல்வா வர, தந்தைக்கு அவன் வாங்கி வந்திருந்த பழச்சாறைப் புகட்டியவள்,

     “அப்பா கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு ப்பா” என்றாள்.

      அவர் கண்கள் மட்டுமே மூடிக் கொள்ள மனம் மகளை எண்ணித் துடியாய் துடித்தது.

     “என் குழந்தை, என் குழந்தை நான் இல்லனா என்ன பண்ணும்?! அதால தனியா எந்த வேலையும் செய்ய  முடியாதே?! சமைக்கக் கூட என் குழந்தைக்கு எல்லாத்தையும் நான் பக்கத்துல எடுத்துட்டு வந்து குடுத்தாதானே நின்னு சமைக்க முடியும்?! அதோட இப்போவே இந்தக் கார்த்தி பொண்ணு என் குழந்தைய இப்படியெல்லாம் பேசுறா! நானும் இல்லாம போயிட்ட அவளைச் சித்திரவதைப் பண்ணியே கொல்லுவாளே தினம் தினம்?! ஆண்டவா என் குழந்தைக்காகவாவது என்னை குணமாக்கிடேன். இல்லாட்டி என் குழந்தையை எனக்கு முன்னாடி உன்கிட்ட அழைச்சிக்கோ, என் குழந்தையைத் தூக்கிப் போட்டுட்டு நானும் உன்கிட்ட வந்துடறேன்.” என்றார் தான் பெற்ற செல்வம் இந்த உலகத்தில் தான் போய்விட்ட பின் என்னென்ன வேதனையை எல்லாம் அனுபவிப்பாள் என்று நன்கு உணர்ந்த தீர்க்கதரிசியாய்.

     அவர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து ஏழெட்டு மணி நேரம் கடந்த பின்னும்,

     “நீங்க கிளம்புங்க. பின்னாடியே வந்துடறோம்” என்று சொன்ன கார்த்திகா பெரியவனை அழைத்துக் கொண்டு வந்து சேரவில்லை.

     மாலை ஏழு மணி அளவில், கார்த்திகாவும், பெரியவனும், சதாசிவத்தின் தம்பி மகள்களும், தம்பியும் வந்து அவரைப் பார்க்க, இரண்டு நாட்களாய் வாந்தி எடுத்துச் சோர்ந்திருந்த களைப்பில் நினைவு தப்பிக் கொண்டிருந்த சதாசிவம், வந்த எல்லோரிடமும் மட்டும் அன்றி கீர்த்தியிடமே,

     “என் கீர்த்திமா எங்க?! கீர்த்திம்மா எங்க?!” என்று கேட்க ஆரம்பிக்க, கீர்த்தி முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் தாளமுடியாமல்.

     சுயநினைவு தொலைந்த பின்னும் தான் நேசித்த ஜீவனின் பெயரையே மந்திரமாய் உச்சரிக்கும் உயிர் கிடைப்பதெல்லாம் மாபெரும் வரம்! அந்த வரத்தைக் காப்பாற்றக் கையில் ஆகாதவர்களாய் நிற்பதைத் தவிர இவ்வுலகில் வேறந்த கொடிய நிமிடங்களும் மனிதனுக்குப் பெரும் சாபமாகாது!

     அட்மிஷன் போட்டார்கள். சிடி ஸ்கேன். இரத்தப் பரிசோதனை எல்லாம் செய்து ரிசல்ட் வந்தது. கல்லீரலுக்குப் போகும் குழாய், கணையம் எல்லாவற்றிலும் புற்றுநோய் பரவி இருக்கிறது. (கொலஞ்சியோ கார்கினோமா.) பைனல் ஸ்டேஜ். வயதாகி விட்டதால் அறுவை சிகிச்சையும் கீமோ தெரபியும் செய்ய முடியாது. சத்து மாத்திரைகளும், மருந்துகளும்தான் கொஞ்ச காலம் உயிர் வாழ வைக்கும். அதிக பட்சம் மூன்று மாதம்தான் என்று அவர் மரணத்திற்கு நாள் குறித்தனர்.

      நோய்க்கும், புயலுக்கும் வித விதமாய் பேர் வைக்கத் தெரிந்த மனிதர்களுக்கு அதைக் தடுக்கும் விதமும் போக்கும் விதமும் தெரிந்துவிட்டால் அவன் மனிதன் இல்லையே!

     கீர்த்தியும் செல்வாவும், அழுது அழுது ஓய்ந்தனரே தவிர, சதாசிவத்திடம் அவருக்கு வந்திருக்கும் நோயைச் சொல்லவே இல்லை!

     “மருந்து மாத்திரை சாப்பிட்டா சரியாப் போயிடுமாம் ப்பா. கொஞ்சம் உடம்பு தேறினதும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்களாம் ப்பா” என்று மட்டும் சொல்லி வைத்திருந்தாள் கீர்த்தி.

     பக்கத்தில் இருந்த நோயாளிகள் அட்டெண்டர்களிடம் எல்லாம்,

     “என் பொண்ணுக்காக இன்னும் கொஞ்ச வருஷம் நான் வாழ்ந்தா போதும்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார் சதாசிவம்.

     மருத்துவமனையில் இருந்த இருபது நாட்கள், செல்வா தாத்தாவை பெற்றக் கைக்குழந்தையைத் தாய் பார்த்துக் கொள்வதைப் போல் அப்படிப் பார்த்துக் கொள்ள, கீர்த்தியும் தன்னால் இயன்ற பணிவிடையைத் தந்தைக்குச் செய்ய, அந்த வார்டில் இருந்த பேஷண்ட்ஸ், அவர்களின் அட்டெண்டர் என்று அனைவருமே,

     “இந்தக் காலத்துல இப்படி ஒரு பாசாமா?! உங்களுக்காகவாச்சும் அந்த மனுஷன் நல்லபடியா குணமாகிடுவார்!”  என்று வாழ்த்திச் செல்ல, மருத்துவத்தின் மீது நம்பிக்கை போயிருந்தாலும், தெய்வத்தின் மீதும் தங்கள் பாசத்தின் மீதும் இருந்த நம்பிக்கையில், அப்பா இன்னும் சில காலமாவது வாழ்வார் என்று கீர்த்தி நம்பினாள்.

     செல்வா அவரைப் பார்த்துக் கொண்ட விதத்தில் அதுநாள்வரை தன்னைத் தவிர மகளுக்கு யாரும் இல்லை என்று இருந்த  நினைப்பு சதாசிவத்திற்கு மாறியது. தனக்குப் பின் தன் பேரன் மகளைப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்ததாளோ என்னவோ, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த மூன்றாம் நாள் காலை, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட, ஆம்புலன்சிற்கு போன் செய்துவிட்டு, மகளும், பேரனும், இருபுறமும் அவர்களது தோள்மேல் அவரைத் தாங்கியபடி தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க, அவரின் மூச்சு மெல்ல மெல்ல அடங்கத் துவங்கி மொத்தமாய் நின்று போனது.

      “செல்வா செல்வா தாத்தா மூச்சு விடலைடா! மூச்சு விடலைடா” என்று கத்திய கீர்த்தி, பல்ஸ் பிடித்துப் பார்க்க, பல்சும் சுத்தமாய் நின்று போயிருந்தது.

     “அய்யோ பல்சும் இல்லடா?! ஏதாவது செய்டா ஏதாவது செய்டா செல்வா?! என்று கதற, செல்வா எழுந்து தனக்குத் தெரிந்த முதலுதவி செய்ய, சென்ற உயிர் ஒருசில நொடிகள் திரும்ப வந்து மீண்டும் பல்ஸ் குறைந்து கொண்டே வந்து மொத்தமாய் அடங்கிப் போனது அவரின் ஆசைப்படி எதற்காக அவர் வீடு கட்டச் சொன்னாரோ அதற்காகவே என்பது போல் அவரின் கடைசி ஆசையாய்.

     இரவல் தந்தவன் கேட்கின்றான் அது இல்லை என்றால் அவன் விடுவானா?!

                                                                                             -தொடரும்…         

        

 

    

 

 

Advertisement