Advertisement

     அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், மூன்று உருண்டைகள் போன்ற மூலிகை மருந்தை கொடுத்தவர்கள்,

     “மூணு நாளைக்கு வேற எந்த ஆங்கில மருந்தும் சாப்பிடக் கூடாதும்மா. மீறி சாப்பிட்டு ஏதாவது ஆனா நாங்க பொறுப்பில்லை” என,

     “அய்யோ இது என்ன இப்படி சொல்றாங்க?!” என்று கலக்கத்துடன் அவள் மருந்தை வாங்கிக் கொண்டு வெளியே வர,

     “அதெல்லாம் ஒன்னும் பயமில்லைம்மா. எங்க சொந்தகார அம்மா ஒருத்தவங்க எங்க போயும் குணமாக இங்க வந்துதான் போன வருஷம் குணமாகி இப்போ நல்லா ஜம்முன்னு இருக்காங்க. அதை நம்பித்தான் இப்போ என் புள்ளைய இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். தைரியமா குடும்மா” என்று ஒரு அம்மா நம்பிக்கை கொடுக்க, இறைவனை வேண்டிக் கொண்டு தந்தைக்கு மருந்தைக் கொடுத்தாள்.

     ஒருவழியாய் அலைச்சல் பட்டு, மதியம் போல் வீடு வந்து சேர்ந்தனர். வந்ததும், சதாசிவத்திற்கு நீராகமாய் சிறிது மோர் கொடுக்க, அவர் கொஞ்சமாய் குடித்துவிட்டு,

     “நான் கொஞ்சம் கொஞ்சமா குடிச்சிக்கறேன். நீங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்கம்மா” என்றார்.

     வரும் வழியில் ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டைப் பிரித்து சின்னவனுக்குக் கொடுத்துவிட்டு தானும் உண்டு முடிக்க, சதாசிவத்திற்கு திடீரென விக்கல் வர ஆரம்பித்தது. விக்கல் வரவும் கீர்த்தி தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிக் குடித்த பின்பும் விக்கல் நிற்கவே இல்லை.

     வெகு நேரம் கடந்த பின்னும் சதாசிவத்திற்கு தொடர்ந்து விக்கல்  வர, அவளும் சின்னவனும் வெகுவாய் பயந்து போயினர். அருகே குடியிருந்த அவள் டியுஷன் சொல்லிக் கொடுக்கும் மாணவன் கிஷோரின் அம்மாவுக்கு அவள் அழைத்து விவரம் சொல்லி அழ, அவர் உடனடியாக ஓடி வந்தார்.

     “ஒண்ணும் பயமில்லை மிஸ் சிலருக்கு இப்படி வரது சகஜம்தான். சரியாகிடும். நாட்டு மருந்து வேற சாப்பிட்டிருக்காரு இல்லை. அதனால கூட இருக்கலாம்.” என்று அவர் தைரியம் கொடுக்க,

     “எந்த பக்க விளைவும் இருக்காது, நல்லபடியா குணமாகிடும்னு நிறைய பேர் சொன்னாங்க கிஷோர் அம்மா. அதான் அப்பாவை அங்கக் கூட்டிட்டுப் போனேன். இப்போ என்னன்னா?!” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சதாசிவம் வாந்தி எடுக்க, கீர்த்தி வேகமாய் சென்று தந்தையைத் தாங்கிக் கொள்ள, சின்னவன், ஓடிப் போய் தாத்தாவிற்கு ஜக் எடுத்து வந்து கொடுத்தான். நேரம் செல்ல செல்ல, விக்கல் வாந்தி என்று மாறி மாறி சதாசிவத்தைப் படுத்தி எடுக்க, கீர்த்தி பயந்து போய் தங்களுக்கு தெரிந்த மருத்துவருக்கு அழைத்து விவரம் சொன்னாள்.

     “சார் இப்போ அப்பாவுக்கு நாட்டு மருந்து வேற கொடுத்திருக்கோம். வேற மருந்து கொடுத்தா எதுவும் பாதிப்பு வருமான்னு வேற பயமா இருக்கு என்ன செய்யிறதுன்னே புரியலை?” என்றாள் அழுதபடியே.

     “பயப்படாதீங்க மா. நாட்டு மருந்து சாப்பிட்டதுனால இத்தனை நாளா உடல்ல தங்கி இருந்த நச்சுக்கள் வெளியேறும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமா. இவருக்கு வாந்தி மூலமா வெளியேறுது. எதுக்கும் இரத்தப் பரிசோதனை மூலமா லிவர் பங்ஷன் டெஸ்ட் ஒன்னு எடுத்துடுங்க.” என, அவள் உடனடியாக லேபிற்கு கால் செய்து டெஸ்ட் எடுக்க வாருங்கள் என்று அழைக்க,

     “மணி ராத்திரி எட்டாகுதும்மா நாளைக்கு காலையில தான் வர முடியும்” என,

     “சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ்” என்று இவள் அழுகையோடு கெஞ்சவும், அந்த லேப் மேன் உடனடியாக வந்து இரத்தம் எடுத்துப் போனார்.

     “பரிசோதனை முடிவு நாளைக்கு காலையில தான்மா வரும்.” என கீர்த்தி பரிதவித்துப் போனாள்.

     சின்னவன் கார்த்திகாவிற்கு போன் செய்து, “தாத்தாவுக்கு ரொம்ப முடியலைமா. நீயும் அண்ணனும் வரீங்களா” என்று அழ,

     “என்னடா ஆச்சு? அதான் நாட்டு மருந்து குடுக்கக் கூட்டிட்டுப் போனீங்களே.. நல்லா ஆகிடும்டா பயப்படாத” என்று கார்த்திகா சமாதானம் சொல்ல,

     “இல்லைமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. சித்தி வேற அழுதுட்டே இருக்கு. நீ உடனே பெரியவனைக் கூட்டிட்டுக் கிளம்பி வரியா?!” என,

     “சரி சரி வரேன். பயப்படாத” என்றவள், அன்று இரவு பெரியவன் வேலையில் இருந்து வந்ததும் சதாசிவத்தைப் பார்க்க வந்தாள்.

     அவளைப் பார்த்ததும், கீர்த்திக்கு அழுகை வந்துவிட, “அக்கா அப்பா அப்பா?” என்று அழத் துவங்க,

     “ஒண்ணும் ஆகாதுடி. பயப்படாத” என்றுவிட்டு அப்பாவிடம் சென்று,

     “ஒண்ணும் ஆகாதுப்பா பயப்படாத” என்றாள்.

     “ம்” என்ற சதாசிவம், தனது சின்ன மகளைக் கவலையுடன் பார்த்துவிட்டு கண்களை மூடிக் கொண்டார் சோர்வுடன்.

     இரவு பத்து மணிக்கு மேல் விக்கலும் வாந்தியும் நிற்க சதாசிவம் மெல்ல உறங்க ஆரம்பிக்க, கீர்த்தி சற்றே நிம்மதி கொண்டாள். ஆனால் விடியற்காலை முதல் சதாசிவத்திற்கு மீண்டும் வாந்தியும் விக்கலும் மாறி மாறி வர, அவள் மருத்துவர் சொன்னபடி, சதாசிவத்தின் உடலில் நீர் சத்து வற்றிப் போகாமல் இருக்க, உப்பும், சக்கரைத் தண்ணீரும் கலந்த நீரையும், பழச்சாறுகளையும் அவ்வப்போது புகட்டிக் கொண்டே இருந்தாள்.

     மறுநாள் காலை இரத்தப் பரிசோதனை அறிக்கை வரவும், அதை போட்டோ எடுத்து அவள் மருத்துவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்ப அதைப் பார்த்து விட்டு மருத்துவர் உடனடியாக அவளுக்கு போனில் அழைத்தார்.

     “ம்மா நான் பயந்த மாதரியே லிவர் பங்ஷன் எல்லாமே ரொம்ப அப்நார்மலா இருக்கு. நீங்க இனியும் தாமதிக்காம பக்கத்துல இருக்க ஏதாவது நர்சிங் ஹோம்கு அழைச்சிட்டுப் போறதுதான் நல்லது.” என, கீர்த்தி கலங்கிப் போனாள்.

     சின்னவனிடம் விவரம் சொன்னவள், “தாத்தாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போயிடலாம் மா. கேப் புக் பண்ணுமா” என்றுவிட்டு,

     “அப்பா, ஹாஸ்பிட்டல் போகலாம் வா ப்பா. மெல்ல எந்திரிப்பா” என்று தந்தையைக் கைபிடித்து எழுப்ப, அவர் எழுந்து அமரக் கூடத் தெம்பில்லாமல், பொத்தென அப்படியே சாய,

      “அப்பா” என்று பதறியபடி அவரைத் தாங்கியவளால், சற்று நேரத்திற்கு மேல் அவரைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை!

     “செல்வா செல்வா. தாத்தாவால உட்காரக் கூட முடியலைடா அப்படியே சாயுறார் சீக்கிரம் வாடா” என்று கத்த, சின்னவன் ஓடி வந்து தாத்தாவைத் தாங்கினான்.

      “அப்பா அப்பா… என்னப்பா செய்யிது ரொம்ப முடியலையாப்பா?!” என்று கீர்த்தி அழ,

     “முடியலைமா!” என்று கைகளை அசைத்துக் காண்பித்தவர், மெல்ல எழ முயல மீண்டும் அப்படியே சாய்ந்தார்.

     கீர்த்தி கதறிவிட்டாள். “செல்வா எனக்கு பயமா இருக்குடா” என்று அழ,

     “ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை சித்தி. தாத்தாக்கு எதுவும் ஆகாது.” என்றவனுக்குமே கண்ணீர் பெருக்கெடுத்தது.

      “தாத்தா.. என்னை என்னைப் பிடிச்சுக்கோ தாத்தா” என்றவன்,

     “டேய் அபினேஷ் வெளிய என்னடா பண்ற? இங்க வா வந்து தாத்தாவை கொஞ்சம் புடி” என்று கத்த, அபிநேஷும் ஓடி வந்தான்.

     சில நிமிடங்களில் அவர்கள் புக் செய்திருந்த கார் வர, அதில் மிகச் சிரமப்பட்டு சதாசிவத்தை ஏற்றிவர்கள், அருகே இருந்த நர்சிங் ஹோமிற்கு அழைத்துச் செல்ல, அவர்கள் அவர் நிலையைக் கண்டு பயந்து போய்,

     “அச்சோ இவர் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. உடனடியா, பக்கத்துல இருக்க ஸ்டேட்போர்ட் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க” என்றுவிட, அப்படியே அங்கிருந்த அந்த மருத்துவமனைக்குக் கிளம்பினர்.

     அங்கு சென்ற அரை மணி நேரத்திலேயே வெகு துரிதமாய் சில டெஸ்ட்களை  எடுத்தவர்கள், அங்கிருந்த தலைமை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர், இதுவரை பார்த்த மருத்துவர்கள் யாருமே கண்டுபிடிக்காத நோயின் தன்மையையும் காரணத்தையும் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

     “இங்க பாரும்மா. உங்க அப்பாவுக்கு எண்பது வயாசாகுது. அவருக்கு மஞ்சள்காமாலை வந்ததுக்கு காரணம், அவரோட கல்லீரல் சரியா வேலை செய்யததுனால. அதுக்கு காரணம் கல்லீரல் புற்று நோயா இருக்கலாம். இல்லை கல்லீரலுக்கு போற குழாய்கள்ல உருவானப் புண்களாவோ இல்லைத் தடைகளாவோ இருக்கலாம். எதுவா இருந்தாலும் அவருக்கு வயசானதுனால அறுவை சிகிச்சை மூலமா இனி எதுவும் செய்ய முடியாது. முடிந்தவரை மருந்து மாத்திரைகள் தான். அதுவும் இதுக்கான சிகிச்சை பெரியப் பொது மருத்துவமனையில் தான் இருக்கு. அதனால நேரத்தை வீணடிக்காம நேரா ஜி.எச் போயிடுங்க” என்று சொல்ல, கீர்த்திக்கு உடல் வெலவெலத்துப் போனது. அருகே இருந்த டேபிளைப் பற்றிக் கொண்டு தனது நிலையைச் சமன்படுத்திக் கொண்டவள்,

     “ம் சரி சரிங்க ஐயா” என்றுவிட்டு ஸ்டேரெச்சரில் படுத்துக் கொண்டிருந்த தந்தையைப் பார்க்க, சதாசிவம் இவர்கள் பேசுவது என்ன புரியாமல் பார்த்திருக்க, அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. முகத்தை தந்தைக்கு தெரியாமல் மறுபுறம் திருப்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டவள், தந்தையிடம் வந்து போலாம் பா” என,

     “எங்கம்மா?!” என்றார் சதாசிவம்.

     “ஜிஎச் க்கு போக சொல்றாங்க ப்பா.” என்றவள், எங்கு இன்னும் சில நொடிகள் அவரிடம் பேசினாள் உடைந்து அழுதுவிடுவோமோ என்று பயந்து,

     “செல்வா நீ தாத்தாவை அழைச்சிட்டு வா. நான் கேப் புக் பண்றேன்.” என்று சட்டென வெளியே சென்றுவிட்டாள்.

     “எம்மா அவர் இருக்க நிலைமையில கேப்ல எல்லாம் கூட்டிட்டுப் போக வேண்டாம் ம்மா. இங்கயே ஆம்புலன்ஸ் இருக்கு அதுல நாங்களே கூட்டிட்டுப் போய் விட்டுடுவோம்.” என்று ஒரு வார்ட் பாய் சொல்ல,

      “அ ஆம்புலன்ஸா?!” என்றாள் கலக்கத்துடன்.

     “ஆமாமா. அவர் இருக்க நிலைமையைப் பார்த்தா அவருக்கு எந்த நேரம் எதுவேணா ஆகலாம்” என்று அந்த மனிதர் சொல்ல,

      “அய்யோ! என்னங்க இப்படி எல்லாம் சொல்றீங்க?! என் அப்பா நல்லா இருக்கார். அவர் நல்லா இருக்கார். அவருக்கு எதுவும் ஆகாது. நான் அவரைக் கார்லயே கூட்டிட்டுப் போறேன்” என்று அவள் கேபிற்கு அழைக்க, அந்த கேப் டிரைவர் சதாசிவத்தின் நிலையைப் பார்த்துவிட்டு, அழைத்துப் போக முடியாது என்றுவிட்டார்.

Advertisement