Advertisement

                               7

     புதுவீட்டிற்கு குடி வந்தது அத்தனை சந்தோஷமாகவும் அசுவாசமாகவும் இருந்தது கீர்த்திக்கும் சதாசிவத்திற்கும். ஆனால் அந்த நிம்மதியெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட முடியுமா என்பது போல் கார்த்திகா குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே ஒன்றாக வந்து விடுவது பற்றி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள்.

     வீடு ஆரம்பிக்கும் முன்பே சதாசிவம் தீர்மானமாய் சொல்லி இருந்தார். ஒன்றாக சேர்ந்து இருப்பது எல்லாம் சரி வராது. கீழ் வீடு கீர்த்தி இருக்கும் வரை அவளுக்கும் பின் சின்னவனுக்கும் என்றும், பெரியவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டதால்,  அவன் வேலைக்குச் சென்றதும் லோன் போட்டு அவனுக்கு மாடியில் கட்டிக் கொண்டு நீயும் அவனும் வந்து விடுங்கள் என்றும் பேசி இருந்தார். ஆனால் குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே கார்த்திகா பிரச்சனையை ஆரம்பித்து இருந்தாள்.

     “என்னால வாடகை குடுக்கவே முடியலை! நான் அவ்ளோ பணத்தை தூக்கி உங்களுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இன்னிக்கு கஷ்டப் படுறேன்” என்றாள்.

     சதாசிவமும் கீர்த்தியும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்க்க, “என்ன அப்படிப் பார்க்குறீங்க?! வாங்கும் போது நல்லா இருந்தது இல்லை? இப்போ மட்டும்?” என,

     “இதோ பாருக்கா. சும்மா சும்மா இப்படி எல்லாம் பேசின? நானா உன்னை வந்துப் பணம் குடு குடுன்னு கேட்டேன். ஒழுங்கா நானூறு சதுர அடியில வீடு கட்டிட்டு வந்திருப்பேன். இப்போ உன்னால ஆயிரம் சதுர அடிக்குப் போய், இருக்குற எல்லா நகையும் அடகு வச்சும் இன்னும் வெளி வேலையெல்லாம் அப்படியே முடியாம இருக்கு! இதுல நீ வேற ஆரம்பிக்காத!” என்றாள் கீர்த்தி சலிப்பாய்.

     “சொல்லுவடி சொல்லுவ?! நீயெல்லாம் இந்த கதியில இருக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரு இருக்கு! இன்னும் நல்லா இருந்திருந்தா அவ்ளோதான்.” என்று கார்த்திகா வார்த்தைகளை விட,

     “இந்த கதியில இருந்தாலும் நான் உழைச்சுதான் சாப்பிடுறேன்” என்றாள் கீர்த்தியும் பதிலுக்கு பதில்.

     “அப்போ நான் பிச்சை எடுத்து சாப்பிடுறேன்னு சொல்றியா?” என கார்த்திகா ஆங்காரமாய் கேட்க,

     “நான் ஒன்னும் அப்படிச் சொல்லலை! உண்மை உனக்கே தெரியும்!” என்றாள் கீர்த்தியும் காட்டமாகவே.

     “நீ சொல்லுவடி சொல்லுவ?! அப்பா பென்ஷன்ல நல்லா சொகுசா வாழுற இல்லை?!”

     “சொகுசாவா நாங்களா?! அப்படி சொகுசா வாழுறவங்களா இருந்தா உன்கிட்ட ஏன் காசு வாங்கிக் கட்டி இருக்கப் போறோம்?”

     “இவ்ளோ ரோஷம் இருக்குறவ ஏன் வாங்கினேன்னு தான் கேட்கறேன்?!” என்றாள் கார்த்திகா மீண்டும்.

     “ச்சே எல்லாம் என் தலை எழுத்து?! பசங்க சம்பாதிச்சு பெருசா கட்டிக்கட்டும்னு விட்டிருக்கணும். அப்பா சொன்ன மாதிரி மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கிட்டு, இன்னிக்கு நட்டாத்துல கிடந்து தத்தளிச்சிட்டு இருக்கேன்.” என்று கண்கள் கலங்க தலையில் கைவைத்துக் கொண்டு அமர,

     “ரெண்டு பேரும் இப்படி மாறி மாறி பேசினா எப்படிம்மா?! கீர்த்தி நீயும் ஏன்மா?!” என்றார் சதாசிவம் கார்த்திகாவின் குணம் அறிந்து.

     “போதும் ப்பா இன்னும் எவ்ளோ காலத்துக்கு தான் எல்லோருக்கும் அடங்கியே போடறது. இவளால தானே இப்படி மாட்டிட்டு முழிக்கிறேன். ஏற்கனவே மூணு லட்ச ரூபாய் நகைக்கடன் இருக்கு?! அதையே எப்போ எப்படி அடைக்கப் போறேன்னே தெரியலை! வர்ஷினி அம்மாவுக்கும் மாசா மாசம் அஞ்சாயிரம் ரூபாய் கொடுக்கறேன்னு சொல்லி இருக்கேன். இதுல இவ கொடுத்த பணத்தை சொல்லிக் காட்டிட்டே இருந்தா அவ்ளோ பணத்துக்கு நான் எங்கே போவேன். அவ கொடுக்கறேன்னு சொல்லும் போதே நான் வேணான்னு சொன்னேன்ல. உனக்கு கூட எவ்ளோ பட்டும், இவ்ளோ வயாசாகியும் புத்தி வரலையே அப்பா?!” என்றாள் தந்தையின் மீதும் கோபமும் வருத்தம் கொண்டு.

      “நாளை பின்ன அவ பிள்ளைங்களுக்குத் தானே சொத்து போய்ச் சேரப் போகுதுன்னு நினைச்சுதான் வாங்கிக்கச் சொன்னேன். இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு நான் நினைக்கலயே?!” என்றார் அவரும் தன் செயலை நொந்து.

     “எவ்ளோ சொன்னேன் ப்பா அவ காசு வேணாம் வேணாம்னு?! உன் பேரப்பிள்ளைகளை பார்த்துட்டு என் மன நிம்மதியைக் கெடுத்துட்டியே ப்பா?!” என்று கீர்த்தி கேட்க, அவர் மேலும் நொந்து போனார்.

     ‘கடைசியா சின்னவளுக்குன்னு இருந்த ஒரு இடத்தையும் இப்படிப் பிரச்சனையில மாட்டி விட்டுட்டேனே?!’ என்று அவர் வருந்த,

     “போதும் போதும் உங்க நாடகம்?!” என்றாள் கார்த்திகா.

     “ம் நாடகமா?!” என்ற கீர்த்தி,

     “இப்போ உனக்கு என்னதான் வேணும்?!” என்றாள்.

     “ஒன்னு இந்த வீட்ல நான் ஒண்ணா இருக்கணும் இல்லை நான் போட்ட பணத்தை எனக்குக் கொடுங்க நான் மாடியில வீடு கட்டிட்டு வந்துக்கறேன்.” என, கீர்த்திக்கு வெறுப்புடன் கோபமும் எழ,

     “நீ தூரமா இருக்கும் போதே இவ்ளோ டார்ச்சர் பண்றியே?! இன்னும் பக்கத்துல வந்துட்டா அவ்ளோதான்?! நீ சின்ன வயசுல இருந்து எனக்கு பண்ண எதையும் நான் மறக்கலை?! நான் சாப்பிடுற சாப்பாட்டுல இருந்து, தூங்குறது, டிவி பார்க்குறது, புதுத் துணி போடுறது, வேலை வாங்குறதுன்னு எல்லாத்துக்கும் என்னையும், அப்பாவையும் நீ படுத்தின பாடெல்லாம் எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு.  ஆனாலும் நீ இன்னிக்கு மாறுவ நாளைக்கு மாறுவன்னு நான் எவ்ளோவோ பொறுத்துப் போனேன். நீ கல்யாணம் பண்ணி போன பிறகுதான் கொஞ்சமே நானும் அப்பாவும்  நிம்மதியா இருந்தோம். என் ரவி என் ரவி மட்டும் இருந்திருந்தா?!”

     “நானும்தான்டி என் புருஷன் இருக்க வரைக்கும் ராணி மாதிரி இருந்தேன். இன்னிக்கு கண்டதுங்க எல்லாம் பேசுற நிலைமைக்கு இருக்கேன். உன் ரவி இருந்திருந்தா கிழிச்சிருப்பான். அவன் அப்பன் உன்னைத் தெருவுல அடிச்சித் துரத்தி இருப்பான்” என்று கார்த்திகா பொரிய, கீர்த்தி மனம் உடைந்து அழுதாள்.

     பின் தானே கண்ணீரைத் துடைத்தெறிந்து, “சீக்கிரமே இந்த வீட்டை வித்து உன் காசை செட்டில் பண்ணிடறேன். போதுமா?!” என்றாள் தீர்மானமாய்.

     “அப்போ கூட ஒண்ணா வந்து இருன்னு ஒரு வார்த்தை வருதா பார்த்தியா உன் வாயில இருந்து?!” என்றாள் கார்த்திகா.

     “ஒண்ணா இருக்கலாம்னு நினைச்சேன் தான். இந்த வீடு கட்ட ஆரம்பிக்கும் போது அப்படி நினைச்சேன் தான். ஆனா நீ பூஜை போட்ட அன்னியில இருந்து பேசுன பேச்சுல, அய்யோ சாமி இது சரி வராது, அப்பா சொன்னதுதான் சரி, நீ மாடியிலயும் நாங்க கீழயும் இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என,

     “ஆமாமாம்! கீழ நீங்க உட்கார்ந்திருக்கவும் நான் காசு கொடுத்துட்டு மேலயும் நான் காசைப் போட்டுக் கட்டிட்டுப் போக முடியுமா?!” என்றாள்.

      “அதுக்கு நீ சின்னதா நாங்க கட்ட நினைச்ச அளவான வீட்டு மேல நீ கட்டிட்டு வந்திருக்கணும். பெருசா கட்டுன்னு ஆசைப் பட்டிருக்கக் கூடாது. இப்போதானே தெரியுது நீ என்ன ப்ளான்ல பெரிய வீடா கட்ட சொல்லி இருக்கேன்னு?!” என்றாள் கீர்த்தியும் அவளின் திட்டம் புரிந்தவளாய்.

     “என்ன கீர்த்திம்மா நீயும் இப்படி எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க?!” என்றார் சதாசிவம்.

     “அப்போ என்னப்பா ஒண்ணா இருக்கலாம்னு சொல்றியா?!” என்றாள் கீர்த்தி.

     “அதெல்லாம் சரியா வராதும்மா.” என்றவர் பெரிய மகளிடம் திரும்பி,

     “வீடு ஆரம்பிக்கும் முன்னாடியே சொன்னேன்தானே கார்த்திமா. மறுபடியும் மறுபடியும் ஏன் இப்படி பிரச்சனை பண்ற?!” என,

     “அது சரி! நீங்க ரெண்டு பேரும் ஜம்முன்னு இந்த வீட்ல உட்கார்ந்திருக்க நான் ஏன் பணத்தைத் தூக்கிக் கொடுக்கணுமா?! ஒன்னு ஒண்ணா இருக்க சம்மதிங்க. இல்லை என் காசைக் குடுங்க? நான் மேல கட்டிக்கிட்டு வந்துடறேன்.” என்று சட்டமாய் சொல்லவும்,

     “சும்மா சும்மா மேல கட்டிட்டு வந்துடறேன்னு சொல்ற?! நான் நிலம் குடுக்காம நீ என்ன அந்தரத்துலயா வீடு கட்டிட்டு வருவா?! நிலம் என்னோடது தானே?! இந்த இடம் இன்னைக்கு தேதிக்கு நாப்பது லட்சம் போகுது. வேணும்னா இடத்துக்கு உண்டான பாதி காசு இருபது லட்சத்தை குடுத்துட்டு மேல கட்டிக்கோ. நீ கீழ் வீடு கட்ட போட்ட ரூபாயை நானும் திருப்பிக் கொடுத்துடறேன்” என்று கீர்த்தி கார்த்திகா எதிர்பாராத வகையில் செக் வைக்க, கார்த்திகா சற்று நேரம் வாயடைத்து நின்றாள்.

     ‘எம்மா?! என்ன உஷாரா ஆயிடுச்சு இந்தப் பொண்ணு?!’ என்று யோசித்தவள்,

     “நீ முன்ன மாதிரியே இல்ல கீர்த்தி?! பயங்கரமான ஆளாகிட்ட?!” என்றாள் கார்த்திகா வஞ்சத்துடன்.

     “பயங்கரமான ஆளா?! நானா?!” என்று சிரித்தவள்,

     “இப்போதான் என் புத்தி கொஞ்சமே வேலை செய்யுது!” என்றுவிட்டு தந்தையைப் பார்த்து,

     “நான் சொன்னது சரிதானே அப்பா?!” என,

     “என்னமோ மா சொந்த வீட்ல வந்தாவது நிம்மதியா இருந்துட்டு கண்ணை மூடாலம்னு நினைச்சேன். நீங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுகறதைப் பார்த்தா போற உசிரு கூட நிம்மதியா போகாது போல?! எனக்கும் முன்னாடியே நீ போய் சேர்ந்துட்டா நல்லா இருக்கும்! உன்னையும் எடுத்துப் போட்டுட்டு நானும் போயிட்டா எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க” என,

      “அப்பா?! ஏன் ப்பா இப்படி சொல்ற?! நீ நிம்மதியா வாழணும்னு தானே ப்பா எல்லார் கிட்டயும் இவ்ளோ பேச்சு வாங்கிட்டு இந்த வீட்டைக் கட்டி முடிச்சேன். நீயே இப்படிப் பேசினா எப்படிப்பா?!” என்று கீர்த்தி தந்தையின் கையைப் பற்றிக் கொண்டு கண்கலங்க,

     “என்னமோ போம்மா?!” என்று சதாசிவம் எழுந்து வெளியே சென்று மாடிப் படியில் அமர்ந்து விட,

     “இப்போ உனக்கு சந்தோஷமா?! சொந்தகாரங்க தான் தேளா கொட்டுனாங்கன்னு இங்க வந்தா நீ பாம்பா கொத்துறியே?!” என்று கீர்த்தி கண்களில் நீர் வழியச் சொல்ல,

     “நா நான் பாம்பா?! ச்சே உனக்கு போய் பணம் குடுத்தேன் பாரு என்னை என்னைச் சொல்லணும்?!” என்று கார்த்திகா மறுபடியும் புலம்ப ஆரம்பிக்க, கீர்த்தியும் எழுந்து வெளியே சென்று அமர்ந்து கொண்டாள்.

     “வாடா வா. நாம நம்ம வீட்டுக்கு போவோம்?! இனியும் இங்க இருந்து என்னப் பிரயோஜனம்?!” என்று கார்த்திகா பெரியவனை தங்கள் வீட்டிற்குக் கிளம்புமாறு பணிக்க, பெரியவன் வேறு வழியின்றி அவளை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குக் கிளம்பினான்.

     “ஏம்மா இப்படி திடுதிப்புன்னு கிளம்புற?! இருந்து நாளைக்குக் காலையில போயேன் ம்மா?!” என்று சதாசிவம் சொல்ல,

     “எப்படி இருந்தாலும் போய்தானே ஆகணும்? இப்போ போனா? என்ன காலையில போனா என்ன?!” என்றவள்,

     “டேய் சின்னவனே, தாத்தா தாத்தான்னு உருகுன இல்லை! இப்போ இங்கயே இருந்து அவங்களோடவே அனுபவி!” என்றுவிட்டு விருவிருவென நடக்க,

     “ஏன் க்கா இப்படி பண்ற?! இட்லி சுட்டு சட்னி எல்லாம் கூட அரைச்சு வச்சுட்டேன். சாப்பிட்டாவது கிளம்பு.” என்று கீர்த்தி சற்றுப் பணிந்து வந்து சொல்ல,

      கீர்த்தியிடம் நேரடியாய் பேசாமல், தன் பெரிய மகனைப் பார்த்து,

     “ஏய் இன்னும் எதுக்கு நிக்குற?! அவங்க போடப் போற இட்லிக்காகவா?! கிளம்பு கிளம்பு?!” என்று பெரியவனை மிரட்ட, அவனும் பேசாமல் கிளம்பி விட்டான். சதாசிவம் மனவேதனையுடன் பெரிய மகள் செல்வதைப் பார்க்க, கீர்த்தி பெரும் பாரத்துடன் கார்த்திகாவும் பெரியவனும் செல்வதைப் பார்த்திருந்தாள்.

     வாடகை இருந்த வீட்டில் ஒரு வித பிரச்சனைகள் என்றால், சொந்த வீட்டிற்கு வந்து வேறு விதமான பிரச்சனையில் மாட்டிக் கொண்டனர் கார்த்திகாவின் பணம் வாங்கியதால். இதில் வெளி வேலைகள் முடிவடையாது இருக்க மழைக் காலம் ஆரம்பமானதில், மேஸ்திரி சரியாக வேகாத செங்கல்களையும் இடையிடையே வைத்து வீட்டைக் கட்டி இருந்ததில், ஆங்காங்கே செங்கல்கள் கரைந்து வழியத் துவங்கின. பக்கத்துக்கு வீட்டுப் பெண்மணி ஒருவர் பார்த்து,

      “அய்யோ என்னம்மா இது செங்கல் எல்லாம் இப்படிக் கரையுதே?! இவ்ளோ காசைக் கொட்டிக் கட்டிட்டு வெளி வேலை முடிக்காம விட்டுடீங்களே மா? எப்படியாவது கடனை உடனை வாங்கி வெளிப் பூச்சு வேலையும் முடிச்சிடுங்கமா” என்று மனம் தாளாமல் சொல்லிவிட்டுப் போக, கீர்த்தியும் சதாசிவமும் கலங்கிப் போனார்கள்.

     “ஏன் ப்பா நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?! எல்லோருக்கும் வீடு கட்டினா கடன் இருக்கும்தான் அதனால கொஞ்சம் கஷ்டமும் இருக்கும்தான். ஆனா இப்படி கட்டி முடிச்ச பிறகும் இவ்ளோ பிரச்சினைகளா?! நோயால ஒருபக்கம் தவிக்கிறேன். பணத்தால ஒரு பக்கம் கஷ்டம், இதுல மனுஷங்களும் நமக்குன்னு தேடி தேடி வந்து  ஏமாத்துறாங்களே?! என்னால முடியலை ப்பா?!” என்றாள் சோர்வாக.

     “என்ன பாவம் பண்ணோமோ தெரியலையே மா?!” என்றார் சதாசிவமும் வேதனையோடு.

     “நாம என்னப்பா பாவம் செஞ்சிட்டோம். கார்த்திகா, ஜெகன்நாதன் மாமா, அனிதா, அந்த மேஸ்திரின்னு எல்லாரும் நம்மளை அவமதிச்சு பேசின பேச்சையும், செய்த செயல்களையும் பொறுத்துகிட்டு தானே போனோம்? அதுதான் நாம செஞ்ச பாவமா?!” என்றாள் கீர்த்தி ஆதங்கமாய்.

     சதாசிவம் மகளை எப்படி ஆறுதல் படுத்துவது என்றுப் புரியாமல் அமர்ந்திருக்க, கீர்த்தி சட்டென ஏதோ யோசனை வந்தவளாய்,

     “அப்பா அந்த பிரதம மந்திரி திட்டத்தோட கடைசி கட்ட பணம் நமக்கு கிடைக்கவே இல்லையே ப்பா? அதுக்கு வேணா திரும்ப முயற்சி பண்ணிப் பார்க்கவா?” என,

     “ம் கேட்டுப் பாரும்மா?” என்றார்.

     கீர்த்தி உடனடியாக, அந்த அலுவலகத்தின் எண்ணுக்கு அழைக்க, அவளது கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக முதல் மூன்று கட்ட பணத்தை வாங்கிக் கொடுத்த பாலாஜி என்ற அந்த மனிதரே அழைப்பை ஏற்றார்.

      அவள் அவரிடம் இறுதி கட்டத் தொகையையும் வாங்கிக் கொடுக்க உதவுமாறு கேட்க,

     “பில்டிங் புல் பினிஷிங் ஆனாதான் மா இறுதி கட்டத் தொகை கிடைக்கும்” என்றார்.

     “ஐயா அவளோ பணம் எங்ககிட்ட இல்லைங்க ஐயா” என்று அவள் தயக்கமாய் சொல்ல,

     “அப்போ ஒரு வேலை பண்ணுங்க. முன்பக்கம் மட்டுமாவது பூசு வேலை செய்து, பெயின்ட் அடிச்சி போட்டோ எடுத்து அனுப்புங்க. அதை வச்சி எப்படியாவது வாங்க முயற்சி பண்ணலாம்” என,

      “ஓ! சரிங்க ஐயா. ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி போனை வைத்தாள்.

     விவரத்தை தன் தந்தையிடமும் சொல்ல, அதுக்குக் கூட எப்படியும் இருபதாயிரம் மேல ஆகுமே மா” என்றார்.

     “ஆமாம் ப்பா. இதோ இந்த ஜிமிக்கி இருக்குல்ல இதை வைச்சா ஒரு பத்தாயிரம் வராது?!” என,

     “என்ன ம்மா காதுல போட்டிருக்க கம்மலைக் கூட கழட்டிட்டா எப்படிம்மா?!” என்றார் வருத்தமாய்.

     “பரவாயில்லை ப்பா. கொஞ்சம் கொஞ்சமா கட்டி மீட்டுடலாம்.” என்றவள், அன்றே நகை வைக்க வங்கிக்குக் கிளம்பினாள் தந்தையை அழைத்துக் கொண்டு.

     பணம் ஏற்பாடு செய்து வந்த பின், அவள் மேஸ்திரிக்கு அழைக்க, அவனோ, அவள் அழைப்பை ஏற்கவே இல்லை.

      “அப்பா நாலஞ்சு முறை போன் பண்ணிட்டேன். போனே எடுக்கலை ப்பா. அவ்ளோ பணத்தையும் பொருளையும் நஷ்டம் பண்ணிட்டுப் போனவன்கிட்டயே எதுக்குப்பா திரும்பத் திரும்ப போய் நிக்கணும். இங்க என்கிட்டே டியுஷன் படிக்கிறானே கிஷோர். அவங்க வீடு கட்டினாரே அந்த மேஸ்திரி ரொம்ப நல்லவர்னு கிஷோர் அம்மா சொல்லி இருக்காங்க. அவங்க கிட்ட கேட்டுப் பார்க்கலாமா?”

     “ம். வேற என்னம்மா பண்றது? கேட்டுப் பாரு” என அவர்கள் உதவியால், அவள் நினைத்த வேலை செவ்வென முடிந்தது. ஆனால் அத்தனையும் செய்து போட்டோ எடுத்து போட்டோ அனுப்பி வைத்த பின் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் உதவிப் பொறியாளர் அவளது இறுதி கட்டத் தொகை வழங்குவதற்கு கையெழுத்திட இழுத்தடித்துக் கொண்டே இருக்க, பாலாஜி என்ற அந்த மனிதர்,

     “ம்மா! அந்த ஆள் சரியான பணப் பிசாசும்மா. இரண்டு லட்சா ரூபாய் உதவித் தொகைக்கு அம்பதாயிரம் கொடுத்தாதான் மா கையெழுத்தே போடுவான். நீங்க கடைசி செட்டில்மெண்ட் பணம் வாங்கும் போது கொடுப்பீங்கன்னு சொல்லி சொல்லித்தான் மூணு கட்டத் தொகையையே வாங்கிக் கொடுத்தேன். இப்போ நான் எவ்ளோவோ எடுத்துச் சொல்லியும் அவன் போட மாட்டுறான் ம்மா” என்று குண்டைத் தூக்கிப் போட,

     “அய்யோ அவ்ளோ பணம் இருந்திருந்தா நானே வீட்டு வேலையை முடிச்சிருப்பேனே ஐயா?! என்னால முடியாதுங்க ஐயா. பரவாயில்லை எனக்கு பணம் கிடைக்கலைன்ன பரவாயில்லைங்க. அந்த மூன்று கட்ட உதவித் தொகை வாங்கிக் கொடுத்தீங்களே அதுவே போதுங்க ஐயா. ரொம்ப நன்றி” என்றுவிட்டு அவள் செல்ல, பாலாஜி என்ற அந்த மனிதருக்கு அவளின் தோய்ந்த நடையும் வாடிய முகமும் மனதைப் பிசைந்தது. அவரும்தான் என்ன செய்வார்? எத்தனை படங்கள் எடுத்தாலும், எத்தனை சட்டங்கள் வகுத்தாலும் உழல், லஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாம் இன்னமும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. நீதிகள் அநீதிகளின் கைகளில் அல்லவா சிக்கித் தவிக்கிறது!

                                         -தொடரும்…

    

 

Advertisement