Advertisement

வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில் அந்த உடம்பை வைத்துக் கொண்டு அலையாய் அலைந்தாள் பிரதம மந்திரி திட்டத்தின் உதவி பெற. அவள் அத்தனைக் கண்ணீருக்கும் போராட்டதிற்கும் ஒருவழியாக முதற்கட்ட தொகையாய் ஒரு லட்ச ரூபாய் அரசாங்கத்தில் உதவி கிடைக்க, கழுத்தில் தனது இறுதி காரியத்திற்கு என்று தன் டியுஷன் பணத்தில் சேமித்து வாங்கிப் போட்டுக் கொண்டிருந்த அந்தத் தங்கச் சங்கிலியையும் அடகு வைத்தாள். ஆனால் அப்போதும் பணம் போதாமல் போக, டைல்ஸ் ஏதும் ஒட்டாமல் தரை மட்டும் போட்டுக் கொண்டு செல்லலாம் என்று அவள் முடிவெடுக்க, அவள் மீது நன்மதிப்பு கொண்டிருந்த அவள் டியுஷன் எடுக்கும் மாணவியின் அம்மா ஒருவர், விஷயம் அறிந்து,

     “ஏன் மிஸ் இப்படிப் பண்றீங்க?! இவ்ளோ தூரம் நிறைவேத்திட்டீங்க. குடித்தனம்னு போயிட்டா திரும்பத் திரும்ப உள்வேலைகள் வச்சுக்கிட்டா கஷ்டமா இருக்கும்! தரை டைல்ஸ் மட்டுமாவது போட்டுட்டா வெளிப் பூச்சு வேலை கூட பொறுமையா பண்ணிக்கலாம் இல்லையா?!” என,

     “இல்லீங்களே என்ன செய்ய? என்னால எங்க சொந்தகாரங்க யார்கிட்டயும் கடன் கேட்க முடியாது. என் அக்கா கிட்ட வாங்கினதுக்கே ரொம்ப அவஸ்தைப் படுறேன்.” என்றாள்.

     “ஏன் நாங்க எல்லாம் இல்லையா? நான் இப்போ வீடு கட்டிட்டு இருக்கேன் மிஸ். இல்லாட்டி முன்னாடியே கொடுத்திருப்பேன்.” என்றார் அவர்.

     “இல்லை பரவாயில்லைங்க” என்றாள் கீர்த்தி.

     “டைல்ஸ்கு எவ்ளோ தேவைப் படும்?!” என்றார் அவர் மீண்டும்.

     “தோராயமாத்தான் சொன்னாங்க. கூலி பொருள் எல்லாம் சேர்த்து ஐம்பதாயிரம் ஆகும்னு.”

     “சரி நான் தரேன். டைல்ஸ் மட்டுமாச்சும் போட்டுட்டு போங்க மிஸ்.” என்று அவர் சொல்ல, அவள் தயக்கத்துடன்,

     “சரிங்க வர்ஷினி அம்மா” என்றாள்.

     ஆயிற்று ஓரளவு உள்வேலைகள் முடிய, டைல்ஸ் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. அந்த மாதத்தில் வந்த கடைசி மூகுர்த்த நாளில் புதுமனைப் புகுவிழாவிற்கு நாள் குறிக்கப் பட்டிருந்தது. டைல்ஸ் வேலைக்கு வந்தவர்கள் சமையல் அறை குளியல் அறைக்கு மட்டும டைல்ஸ் வேலையை முடித்துவிட்டு ஊருக்குச் சென்று விட இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று அலைகழித்துக் கொண்டே இருந்ததில் டைல்ஸ் போடாமலேயே விழா நடத்த வேண்டியதாகி விட்டது.

     தன்னைத் தன் தந்தையை மதித்து அழைக்காத நெருங்கிய உறவுகளைக் கூட அவள் மதித்து அழைத்தாள். ஆனால் அவள் உறவென்று வந்த பலரும் குறை கூறிக் கொண்டேதான் சென்றார்கள். ஒருசிலர் மட்டுமே உண்மையாய் அவளுக்காய் மகிழ்ந்தனர்.

     ஹவுஸ் ஓனர் தோழி அனிதாவும் அவள் அப்பாவும், அவள் நாத்தனாரும் மட்டும் அவர்கள் வீட்டில் இருந்து வந்திருந்தனர். ஆனால் கீர்த்தி எவ்வளவு சொல்லியும் அனிதா கீர்த்தியின் புது வீட்டில் அமரவும் இல்லை. சாப்பிடவும் இல்லை. அவள் தந்தையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு மட்டுமே அங்கு வந்திருந்தாள்.

     ஒரு வழியாய் விழா முடிந்து, அவர்கள் குடித்தனம் செல்லும் நாளும் வந்தது. காலி செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனிதாவின் கணவரையும் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்வதுதான் பண்பு என்று கீர்த்தி அனிதாவின் வீட்டிற்குச் செல்ல,

     “உட்காரு கீர்த்தி.” என,

     “நீ மட்டும் பன்ஷனுக்கு வந்துட்டு எங்க வீட்ல உட்கார, சாப்பிடக் கூட இல்லையே அனிதா.?!” என்றாள் கீர்த்தி மனதில் பட்டதை ஒளியாமல்.

     “அது அன்னிக்கு நான் விரதம். அதான்” என்று அனிதா சமாளிக்க,

     “சரி. விரதம்னா உட்காரக் கூடவா கூடாது?!” என்றாள் கீர்த்தியும் விடாமல்.

     “அங்க ஜென்ஸ் நிறைய பேர் உட்கார்ந்திருந்தாங்க.” என்றவள்,

      “நீங்க கூட வரலை அண்ணா?!” என்றாள்.

     “வரக்கூடாதுன்னு இல்லைம்மா வேலை இருந்தது” என்று அவர் சொல்ல,

     “சரி நீ உட்காரு” என்று மீண்டும் அனிதா சொன்னதும், தானும் அவர்களைப் போல் நடந்து கொள்ளக் கூடாது என்று அமர்ந்தவள்,

     “நான் கூட இந்த வீட்டு விஷயத்தை யாருக்கும் வேணும்னே சொல்லக் கூடாதுன்னு எல்லாம் சொல்லாம விடலை அண்ணா. நிறைய பேர் நான் தோத்துப் போகத்தான் லாயக்கு என் முகத்துக்கு நேராவே சொல்லி இருக்காங்க. அதனால்தான் ஜெயிச்சா சொல்லலாம்னு இருந்தேன்.” என்று அவள் சொல்ல, அவர்கள் அமைதியாய் இருக்க,

     “வர்ற புதன்கிழமை வீடு காலி பண்ணலாம்னு இருக்கோம் அண்ணா” என்றாள்.

     “அதுக்குள்ள வீடு ரெடி ஆகிடுச்சா?! தரை கூட போடாம இருந்ததே?!” என்றவள் தன் கணவரிடம் திரும்பி,

     “தெருவில் இருந்து வீட்டுக்குப் ஏறிப் போக, படி கூட போடலைங்க. மண்மூட்டை தான் வச்சு இருக்கு! பேருக்கு வீடுன்னு இருக்குங்க!” என, கீர்த்தியின் மனது அவ்வளவு வலித்தது. உடல் ஊனமுற்று, உறவுகள் துணையற்ற ஒரு பெண் இவ்வளவு போராடி வீட்டைக் கட்டி இருக்க அதைப் பாராட்ட மனதில்லை என்றால் கூடப் பரவாயில்லை! பெயருக்கென வீடுன்னு இருக்கு என்று அனிதா சொல்லியது கீர்த்திக்கு பெரும் வேதனை எழுந்தது.

    “இல்லை உள்வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சு” என்றாள் தன் வேதனையை வெளிகாட்டாமல் சமாளித்துக் கொண்டு. 

     “ஓ!” என்றவள்,

     “நாங்க அப்படி என்ன செய்துட்டோம் கீர்த்தி உனக்கு?! எல்லார்கிட்டயும் அவரைப் பத்தியும் என்னைப் பத்தியும் தப்பு தப்பா சொல்லி வச்சிருக்க?!” என்றாள் அனிதா இத்தனை நாள் மனதில் வைத்திருந்ததை வெளிக்கொட்டும் விதமாய்.

     “நான் சொன்னேன்தான். எல்லோரும் ஏன் வீடு காலி பண்றீங்க? ஏன் வீடு கட்றீங்கன்னு கேட்டப்போ சொன்னேன்தான். ஆனா தப்பா எல்லாம் சொல்லலை. ஜனங்க என்னிக்கு சொன்னதை சொன்னபடி சொல்லி இருக்காங்க ஒன்னுக்கு ரெண்டா திரிச்சுதானே சொல்றாங்க அனிதா?!” என, அனிதா,

     “அப்படி என்னதான் நாங்க செய்துட்டோம் சொல்லு?!” என்றாள் கோபம் தாளாமல்.

     கீர்த்தியும் தான் என்ன தவறு செய்தோம் என்றே அனிதா தெரியாதது போல் கேட்கவும், மனம் தாளாமல்,

     “எதுவுமே சொல்லலையா அனிதா நீ? எத்தனை முறை எத்தனை முறை நீ என்ன வார்த்தையால காயபடுத்தி இருக்க தெரியுமா?! ஆனா ஒவ்வொரு முறையும், நீயும், அண்ணாவும், மாமாவும் செஞ்ச உதவிங்களை நினைச்சு நினைச்சு பதில் கூட பேசாம அமைதியா கடந்து போயிருக்கேன்” என்றாள்.

     “அப்படி என்னதான் சொல்லிட்டேன் நான்?!”என்றாள் அனிதாவும் மனம் தாளாமல்.

     “நீ சொன்னது எதுவும் உனக்கு நியாபகம் கூட இல்லையா?!” என்றவள்,

     “அன்னிக்கு, அன்னிக்கு நீ என்னை வேஸ்ட்னு சொன்னியே அப்போவே எனக்கு அவ்ளோ வலிச்சது அனி. ஆனா அதை மெல்ல மெல்ல நான் கடந்து வந்துட்டேன். இன்னொரு நாள், டேடிங் போயிட்டு வரியான்னு நீ கேலியா கேட்ட, என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சும் நீ அப்படி ஒரு வார்த்தை கேட்டியே நான் எவ்ளோ துடிச்சுப் போனேன் தெரியுமா?!” என்று கீர்த்தி மனம் இறுகக் கேட்க,

      “நா நானா நான் அப்படிக் கேட்டேனா? நான் ஏன் அப்படி எல்லாம் கேட்கப் போறேன்” என்று அனிதா சொல்ல,

     “நீ சொன்ன அனிதா” என்றவள் அவள் கணவரிடம் திரும்பி,

     “அப்புறம் நீங்க அண்ணா, அன்னிக்கு நீங்க என்னைப் பார்த்து, எவ்ளோ பேர் வீடு இல்லாம பிளாட்பாரத்துல எல்லாம் இருக்காங்க. இதுவாச்சும் இருக்கேன்னு? சொல்ல வந்து நிறுத்தினீங்களே அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு முன்னாடி, அது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா?! ஒருகாலத்துல நாங்க எப்படி வாழ்ந்தோம்னு உங்களுக்கே தெரியும்?! ஆனா நீங்களே?!” என்று அவள் நிறுத்த,

     “நா நானா அப்படி சொன்னேன்?!” என்றார் அவரும் அனிதாவைப் போலவே.

      கீர்த்திக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. சரி பேசிவிட்டேன் தவறுதான் என்று அவர்கள் சொல்லி இருந்தால் கூட அவளுக்கு பெரிதாய்த் தெரிந்திருந்திருக்காது. ஆனால் இருவருமே தாங்கள் எதுவுமே பேசவில்லை என்பது போல் சொல்ல, அவளுக்கு விரக்திதான் எழுந்தது.

     ‘சொல்லப்படாத வார்த்தைகளுக்காக, படாத அவமானதிற்காக நான் ஏன் இத்தனைப் போராட்டத்தை எதிர்கொண்டு வீடு கட்டப் போறேன்?!’ என்று எண்ணிக் கொண்டிருக்க,

     “என்னங்க நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லைங்க” என்றாள் அனிதா தன் கணவரிடம்.

     “நீ சொல்லலைன்னு உன் மனசாட்சிக்குத் தெரியும் இல்ல. விடு” என்றவர்,

     “நீ எங்களை எப்படி நினைக்கறயோ ஆனா, நாங்க என்னிக்குமே உங்களை சொந்தமாத்தான் மா பார்த்தோம். இப்போவும் அப்படித்தான். எதிர்காலத்துல உனக்கு எந்த உதவி வேணும்னாலும் எனக்கு ஒரு போன் பண்ணு” என்றுவிட்டு அவர் எழுந்து செல்ல, அனிதா,

     “நீ போகப் போறேன்னு தெரிஞ்சதும் எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்றாள்.

      “எனக்கு மட்டும் இல்லையா?! என் அக்காவை விட உன் மேல அதிகமா அன்பு வச்சிருந்தேன்டி. நீ சொன்ன மாதிரியே கடைசி வரைக்கும் இந்த வீட்லயே இருந்துட்டுப் போயிடலாம்னு தான் நானும் எங்க அப்பாவும் இருந்தோம்” என்ற கீர்த்திக்கு கண்கள் கலங்கிவிட,

     “நாங்க ஒன்னும் உங்களைப் போக சொல்லலையே?!” என்றாள் அனிதா.

     “ஆனா போயி ஆகணும்ங்கிற சூழ்நிலை வந்துடுச்சே” என்றவள்,

     “எதுவா இருந்தாலும் கடவுள் பார்த்துக்கட்டும்”   என,

      “நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. ஒருவேளை உன் அப்பாவுக்கு ஏதாவது ஆகி, உன் அக்கா உன்னை அடிச்சுத் தொரத்திட்டா நீ திரும்ப இங்க தாரளமா வரலாம். நாங்க உனக்கு இருக்கோம்.” என, கீர்த்திக்கு சுருக்கென்று வலித்தது.

      ‘இவள் தெரிந்து தான் பேசுகிறாளா இல்லைத் தெரியாமல் பேசுகிறாளா?!’ என்று நெஞ்சம் வலிக்க அவளைப் பார்த்தவள்,

     “யார் நிலமை எப்போ எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது அனிதா. எதுவா இருந்தாலும் எனக்கும் என் அப்பாவுக்கும் ஆண்டவன் மட்டும்தான் துணைன்னு நினைச்சுதான் இந்த வீடு கட்டுற முடிவை எடுத்தேன். அவன் என்ன நினைக்கிறானோ நடத்தட்டும். நான் கிளம்பறேன்.” என்றுவிட்டு எழுந்து கொள்ள, உறவுகளின் பிரிவும் நட்பின் பிரிவும் கீர்த்திக்கு மனதை பாரமாய் அழுத்தியது.

                                                                   -தொடரும்….

         

        

Advertisement