Advertisement

  6

பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.

     அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல் நடந்ததைச் சொல்ல,

     “இதுக்குத்தான் சொந்தகாரங்க கிட்ட எல்லாம் உதவி கேட்கக் கூடாது. உங்களுக்கு எல்லாம் பட்டாதான் புரியும்.” என்றவள்,

     “வீடு கட்ட போறேன்னு சொன்னியாமே?!” என்றாள்.

     “ஆமாம். இனி இங்க இருக்கிறது சரி வராது. என் நகைகளை கொஞ்சம் வித்தும் அடமானம் வச்சும், இப்போ பிரதம மந்திரி வீட்டுக் கட்டணத் திட்டம் எல்லாம் இருக்கே அது மூலமாகவும், ஏற்பாடு பண்ணி கட்டலாம்னு இருக்கேன்.” என,

     “கட்டுறதும் கட்டுற டபுள் பெட்ரூம், போட்டுக் கட்டினா நல்லா இருக்கும்ல. நான் வேணா என்கிட்டே இருக்க காசைக் கொடுக்கறேன்.” என்றாள் கார்த்திகா மிகவும் அன்பாய்.

     கீர்த்தி யோசனையுடன், “இல்லை, அதுக்கெல்லாம் ரொம்ப செலவாகும். நான் கணக்குப் போட்டிருக்கிறது வெறும் நானூறு சதுரம், நீ சொல்ற மாதிரிக் கட்டுனா ஆயிரம் சதுரம் ஆகிடும். மூணு மடங்கு பணம் தேவைப் படும். என்னால முடியாது. என் சக்திக்கு என்னவோ அது போல நான் கட்டிட்டுப் போறேன்.” என,

     “பார்த்தியா இப்போ கூட என்னை நீ வேறயாத்தான் பார்க்குற?! அப்பா நீயே சொல்லுப்பா.” என்று அவள் தந்தையை இழுக்க, சதாசிவம் சற்றே யோசனையுடன்,

     “உனக்கு அப்புறம் அவ பிள்ளைங்களுக்கு தானே மா போகப் போகுது. அதனால தான் கொடுக்கறேன்னு சொல்றா. வாங்கிக்கோ” என்றுவிட்டார் நாளை கீர்த்தி இதனால் படப் போகும் துன்பம் தெரியாமல்.

     பிள்ளைகளும் கார்த்திகாவின் சூது அறியாதவர்களாய்,

     “அம்மாதான் கொடுக்குறேன்னு சொல்லுது இல்ல சித்தி. வாங்கிக்கோயேன். அந்த ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி வீடு மாதிரி டபுள் பெட்ரூம் போட்டு சூப்பரா கட்டுவோம்.” என்று சொல்ல, கீர்த்தி இருமனதுடன் சரி எனத் தலையை ஆட்டினாள்.

     பெரும் மனப் போராட்டத்திற்குப் பின்னும், அலைச்சலுக்குப் பின்னும் வீடு கட்டும் பணி ஆரம்பம் ஆனது.

     இவ்வளவு பட்ட பிறகும், சதாசிவம் வெளி ஆட்களை வைத்து வீட்டைக் கட்டாமல், தனது பங்காளி மருமகனான மேஸ்திரி ஒருவரிடம் வீடு கட்டும் பொறுப்பை ஒப்படைக்க, அவனோ, நல்ல பொருளாக வாங்கிப் போடுகிறேன் என்று சொல்லி சொல்லியே கொள்ளையடித்தான். அதோடு, வீட்டைக் கட்டி முடித்த பின் அனைவருக்கும் சொல்லிக் கொள்ளலாம் என்று சதாசிவம் கீர்த்தியிடம் சொல்லி இருந்ததாலும், ஏற்கனவே மட்டம் தட்டிப் பேசியவர்களிடம் ஒரு காரியத்தை செய்து  முடிக்காமல் தெரிவித்து மேலும் கேலி பேச்சுக்கு ஆளாகாமலும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஹவுஸ் ஓனர் தோழி இடமும், முருகன் மாமாவிடமும் கீர்த்தி எதுவும் சொல்லாமல் விட்டிருக்க, மேஸ்திரி உறவினர் என்பதால் அரசல் புரசலாக அவர்கள் வீடு கட்டும் விஷயம் ஒரு சிலருக்குத் தெரிய வந்தது.

     அவர்கள் வீடு பேஸ்மென்ட் போட்ட நாள் அன்று ஹவுஸ் ஓனர் வீட்டில் இருந்தப் பாட்டி இறந்துவிட, இறப்புக்கு வந்திருந்த உறவினர் ஒருவர் கீர்த்தி வீடு கட்டுவதை அவர்களுக்குச் சொல்லிவிட, அனிதாவிற்கும், அவள் அம்மா, நாத்தனார் என்று அனைவருக்கும் பெரும் கோபமும், ஆதங்கமும் எழுந்தது.

     “நன்றி கெட்டவங்க! உதவின்னு அன்னிக்கு எங்ககிட்ட வந்து நின்னுட்டு இன்னிக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாம வீடு கட்டுறாங்க.” என்று பொருமித் தள்ளினர். ஆனால் கீர்த்தியிடமோ, சதாசிவத்திடமோ நேரடியாய் எதுவும் கேட்கவில்லை.

     அந்தப் பாட்டியின் காரியத்திற்கு கீர்த்தியும், கார்த்திகாவும் சென்றிருக்க, அனிதா, சாக்கிட்டுப் பேசுவது போல், கார்த்திகாவிடம் வந்து, கீர்த்தியைப் பார்த்து முறைத்தபடியே,

     “உங்க பிள்ளைங்க எப்படிப் படிக்கிறாங்க அக்கா?!” என்றாள்.

     “கீர்த்திக்கிட்ட தானே டியுஷன் படிக்கிறாங்க. உனக்குத் தெரியாதா அவங்க எப்படிப் படிக்கிறாங்கன்னு?!” என்று கீர்த்தி கேட்க,

     “ம். தெரியும்.. இருந்தாலும்,” என்றவள்,

     “நாளைக்கு உங்க பிள்ளைங்க படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து கார், வீடுன்னு வாங்கினா நாங்க என்ன பொறமையா படப் போறோம்?! எங்க வீட்ல இருந்து ஒருத்தர் நல்ல நிலைமைக்கு வந்தா எங்களுக்கும் சந்தோஷம் தானே?! எங்களைப் பார்த்தா எல்லோருக்கும் எப்படி இருக்குன்னு தெரியலை! நாங்க ஒன்னும் பொறாமை படுறவங்க இல்லை. நாங்க மத்தவங்களுக்கு நல்லதுதான் நினைச்சிருக்கோம். எங்க கை இதுவரைக்கும் எல்லோருக்கும் கொடுத்துத்தான் வழக்கம்!” என்று கண்களில் கோபத்துடன் கீர்த்தியை ஆதங்கத்துடன் பார்த்தபடி சொல்ல கீர்த்திக்கும் சங்கடமாய்தான் இருந்தது. ஆனால், அவள் வீடு கட்டுவதை சொல்லி இருந்தால் அதற்கும் நிச்சயம் யாரும் நல்ல வார்த்தை சொல்லி இருக்க மாட்டார்கள் என்று அவளுக்கு நன்றாத் தெரியும்.

     அனிதா அங்கிருந்து சென்றவுடன், ஒரு சிலர் கீர்த்தியிடம் வந்து, வீடு, கட்டுறியாமே, உனக்கு எது பணம்? வீட்டு லோன் வாங்கினியா? ஏன் திடீர்னு வீடெல்லாம் கட்ற? அனிதா கிட்ட கூட சொல்லாம கட்டுறியாமே?! அப்படி என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?! என்று கேட்க, கீர்த்தி அவர்கள் கேட்ட தோரணையின் வெறுப்பில்,

     “எத்தனை நாளைக்குத்தான் எல்லோரும் பேசுறதைப் பொறுத்துக்க முடியும்?!” என்றுவிட்டாள் ஆதங்கத்தில். அவளும் சாதரண மனுஷிதானே! தெய்வப் பிறவி அல்லவே அனைத்தையும் பொறுத்துக் கொண்டு போக.

     ஆனால் அவள் அன்று சொல்லியதை ஒன்றுக்கு இரண்டாய் திரித்து மற்றவர்கள் அனிதாவிடம் சொல்ல, அனிதா குடும்பத்தினரின் கோபம் கீர்த்தியின் மேலும், சதாசிவத்தின் மேலும் மேலும் அதிகமானது. அதிலும் சதாசிவம் அவர்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டிருக்க, அவர்களுக்கு பெரும் ஆதங்கம் எழுந்தது.

     அனிதாவின் அப்பா, முருகன்  மாமாவும், அனிதாவின் கணவரும் தான் வீடு காலி செய்யும் வரை பிரச்சனை வேண்டாம் என்று பெண்களிடம் சொல்லி அமைதியாய் இருக்க வைத்தனர். ஆனாலும், வீட்டுப் பெண்கள் அவ்வப்போது கீர்த்தியின் மனம் நோகும் படி ஏதேனும் பேசிக் கொண்டே தான் இருந்தனர்.

     ஒரு சில நலம் விரும்பிகள் மட்டும், கீர்த்தியிடம், “ஏன்ம்மா உங்க அக்காவால எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பீங்க நீங்க?! மறுபடியும் அவ கூட சேர்ந்து ஏன் ம்மா வீடு கட்டுற?!” என்று கேட்க, கீர்த்திக்குள் கலக்கம் எழத்தான் செய்தது.

     அவர்கள் சொல்லியதற்கு ஏற்றார் போல், கார்த்திகாவும், பூஜை போட ஆரம்பித்ததில் இருந்தே கீர்த்தியை மிகவும் மட்டம் தட்டிக் கொண்டுதான் இருந்தாள்.

     “உன்கிட்ட இருந்த காசுக்கு, உன்னால சமையல் கட்டு மட்டும்தான்டி கீர்த்தி கட்டி இருக்க முடியும்!”

      “நான் மட்டும் இல்லைன்னா உன்னால இந்த வீடு கட்டி இருக்கவே முடியாது.”

      “ம்! அப்பாவுக்காகவும், உனக்காகவும் நான் எவ்ளோ செய்யிறேன் பாரு.  இதே நான் வீடு கட்டுறதா இருந்தா நீ பத்து காசு கொடுத்திருப்பியா?!” என்று ஏகப்பட்ட பேச்சுக்கள் கார்த்திகாவிடமிருந்து.

     ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கீர்த்தி, “நான் ஒன்னும் உன்கிட்ட காசு கொடுன்னு வந்து நிக்கலையே?! நீ நாளைக்கு உன் பிள்ளைங்களுக்கு வரப் போகுதுன்னு கொடுத்த. எனக்காகவும், அப்பாவுக்காகவுமா தூக்கிக் கொடுத்த?!” என்றுவிட்டாள்.

     “பேசுவடி பேசுவ?! காசு வாங்கிட்ட இல்லை. இதுவும் பேசுவ?! இதுக்கு மேலயும் பேசுவ?!” என்று கார்த்திகா கோபமாய் பேச ஆரம்பிக்க,

     “இப்போ என்ன? உன் காசு உனக்கு வேணுமா?! கட்டுற வீட்டை பாதியில் அப்படியே நிறுத்திட்டு இடத்தை வித்து உனக்கு செட்டில் பண்ணிடறேன் போதுமா?!” என்றாள் அவளும் உறவுகள் மேல் இருந்த வெறுப்பின் உச்சக்கட்டத்தில்.

     “இடம் உன்பேர்ல இருக்கத் திமிருல பேசுறியா?!” என்று கார்த்திகா கேட்க,

     “இல்லை நீ பண்ற டார்ச்சர் தாள முடியாம பேசுறேன்” என்றவள், சட்டென எழுந்து போய்விட,

     “எல்லாம் என் தலை எழுத்து, அந்த மனுஷன் மட்டும் எனக்கு ஏதாவது சேர்த்து வச்சிட்டுப் போயிருந்த கண்டதுங்க எல்லாம் இப்படிப் பேசுமா?! இதுங்களுக்கு எல்லாம் உதவி செய்ய நினைச்சேன் பாரு என்ன சொல்லணும்!” என்று கார்த்திகா புலம்பியது கேட்டு கீர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

     “ஏன்? ஏன் கடவுளே என்னை இப்படி சோதிக்கிற?! ஒருத்தி என்னன்னா வேஸ்ட்ன்னு சொல்றா, உன்னால ஓட்டு வீடு கூட கட்ட முடியாதுன்னு சொல்றா? ஒருத்தி கிட்சன் கூட கட்ட முடியாதுன்னு சொல்றா?! ஏன்? ஏன் என் உடம்புக்கு இப்படி ஒரு இயலாமையை கொடுத்த? நான் நல்லா இருந்திருந்தா இந்நேரம் நான் நல்ல வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சு எல்லாத்தையும் நானே சுயமா தனியா நின்னு செய்திருப்பேன் இல்லை! எதுக்கு இப்படி மத்தவங்க தயவுலயே என்னை வாழ வச்சுச் சித்திரவதைப் பண்ற?!” என்று முறையிட்டாள்.

    இறைவனிடம் முறையிட்டதும் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விட்டால் அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா? ஆனால் இவள்தான் பிறந்தது முதலே செய்யாத தவறுக்கும் சிலுவை சுமக்க வேண்டியவளாயிற்றே?! இப்போது மட்டும் அவள் நிலை மாறிவிடுமா என்ன?

     ஒருபக்கம் பக்கத்துவீட்டுப் பெண்ணின் அட்டகாசம், ஒருபக்கம் கார்த்திகாவின் பேச்சு, ஒரு பக்கம் ஹவுஸ் ஓனர் வீட்டுப் பெண்களின் நக்கல்கள், முகம் திருப்பல்கள், ஒருபக்கம் பணம் திரட்டும் பிரச்சனை, ஒருபக்கம் மேஸ்திரியின் கொள்ளை என்று கீர்த்திக்கு மண்டை வெடித்து விடும் போல் ஆகிவிட்டது.

     இதில் பலரும், இவள் எப்படி கட்டி முடிக்கப் போகிறாள் என்று எதிர்பார்த்தது போலவே, கீர்த்தி ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துவிட்டு கைகள் விரித்துவிட, பதினான்கு லட்சங்கள் கரைந்தும் வீட்டு உள் பூச்சு வேலைகள் மட்டுமே முடிக்க முடிந்தது. வெளிப் பூச்சு வேலைகள், தரை போடுவது, வையரிங், ப்ளம்பிங், பெயிண்டிங் என்று அனைத்து வேலைகளும் நின்றன பிரதம மந்திரி வீட்டு உதவிக் கட்டணம் கிடைக்கததால்.

Advertisement