Advertisement

சொந்தம என்று நாடி வந்தக் குற்றத்திற்கு ஒவ்வொருவரும் பேச்சு செயல் என்று ஒவ்வொரு விதத்தில் சதாசிவத்தையும், கீர்த்தியையும் காயப்படுத்த நாட்கள் ரணமாகக் கழிந்தது இருவருக்கும்.

    சதாசிவம், கீர்த்தி, இருவரது ஒரே ஆறுதல் சின்னவனும், டியுஷன் பிள்ளைகளும்தான். அந்தக் குட்டி உள்ளங்கள் தான் இன்னமும் உலகில் அன்பு சூழ்ந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது. 

     சின்னவன் பள்ளிப்படிப்பை முடிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்க, இன்றைய காலத்துப் பல பிள்ளைகளைப் போல், அவனுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் முளைத்தது போன், பைக், ஊர் சுற்ற வேண்டும் என்றெல்லாம். ஆனால் அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அளவிற்குக் கூட சதாசிவத்திடம் பணவசதி இல்லாது போக, கீர்த்தி குடும்ப சூழ்நிலையைச் சொல்லி அவனைச் சமாதானப் படுத்தி வைத்தாள். ஆனால் கார்த்திகாவோ இதைக் கேள் அதைக் கேள் என்று தூண்டிய வண்ணமே இரு பிள்ளைகளையும் வளர்க்க, கீர்த்திக்குத்தான் அவர்களைச் சமாளிப்பது பெரும் திண்டாட்டமாய்ப் போனது.

      இந்நிலையில் இருக்கும் பிரச்சனை போதாதென அவர்கள் வீட்டிற்கு அருகில் குடி இருந்த பெண் தன் கணவருடன் வெளிநாடு சென்றுவிட, அவள் இருந்த வீட்டில் அவளது விதவைத் தங்கையை அழைத்து வந்து குடியமர்த்திவிட்டு அவள் சென்றிருந்தாள். குழந்தையுடன் குடிவந்த அப்பெண் கீர்த்தியிடம் சகஜமாய்ப் பழக, கீர்த்தியும் அன்பாகவே பழகினாள். அவளது பிள்ளைக்கு கட்டணம் வாங்காமல் டியுஷனும் சொல்லிக் கொடுத்தாள். ஆனால், நெருங்கிப் பழகும் வரை அனைவருமே நல்லவர்கள் பிம்பத்தையே கொண்டிருப்பார்கள் அல்லவா? அதுபோல வந்த ஓரிரு வாரத்திலேயே அந்தப் பெண்ணின் பேச்சும் செயல்களும் சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட கீர்த்தி, கொஞ்சமாய் விலகி இருக்கத் துவங்கி விட்டாள். ஆனால் அப்பெண்ணோ, கார்த்திகாவிற்கு அக்காவைப் போல் நடந்து கொள்ள, கீர்த்திக்கு சலிப்பாய் வந்தது. வீட்டில் இருப்பவளையும் உறவினர்களையும் தான் விதியே எனப் பொறுத்துக் கொள்ள வேண்டும். எல்லாருக்கும் அடங்கிப் போக முடியுமா என்று சலித்துப் போனது அவளுக்கு. புதியதாய் வந்த பெண் மாடியில் இருக்கும் அவர்கள் இரு வீட்டிற்கும் வரும் வழி பாதையிலேயே பல இடையூறுகளை வைத்ததோடு, மீன் கழுவிய நீர், ஏசி தண்ணீர், பிள்ளையை சிறுநீர் கழிக்க வைப்பது என்று வழியையே அசுத்தம் செய்ய, சதாசிவமும், கீர்த்தியும் எத்தனையோ முறை அப்படிச் செய்யாதே என்று தன்மையாய் சொல்ல அப்போதும் அந்தப் பெண் கேட்பதாய் இல்லை. ஓர்நாள் சதாசிவம் தண்ணீர் குடம் தூக்கிக் கொண்டு வரும்போது அதில் விழுந்து அடிபட, அவருக்கு வலியோடு கோபமும் சேர்ந்து கொள்ள,

     “ஏம்மா எத்தனை முறை சொல்றோம். இப்படி நடக்குற வழிய அசிங்கமா வைக்காதேன்னு. உனக்கு அறிவே இல்லையா?!” என்று கத்திவிட்டார்.

     அதற்கு அந்தப் பெண்ணும், “யோவ்! இதோ பாரு அறிவில்லை கிறிவில்லைனா அவ்ளோதான் உனக்கு!” என்று வயதைக் கூடப் பொருட்படுத்தாமல்  அவரைப் பேச,

     “சீ பொண்ணா நீ?! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு?!” என்று சதாசிவம் எழுந்து உள்ளே செல்ல, கீர்த்தி தந்தையின் காயத்தைப் பார்த்துப் பதறிவிட்டாள்.

     “அய்யோ அப்பா?! என்னப்பா இது இப்படி அடி பட்டிருக்கே?!” என்றவளிடம்,

     “எல்லாம் அந்த பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணு இருக்கே அதனால்தான். எவ்ளோ சொன்னாலும் அதுக்கு அறிவு வர மாட்டேங்குது.” என,

     “ச்சே இந்தப் பொண்ணு ஏன் இப்படிப் பண்றா? எத்தனை முறை சொல்றது அவளுக்கு?!” என்ற கீர்த்தியும் சலிப்பாய்ப் பேச, இவர்கள் பேசுவதை வெளியே நின்றுக் கேட்டுக் கொண்டிருந்த அப்பெண், உடனே ஹவுஸ் ஓனரை அழைத்து இவர்கள் என்னைத் தவறாக பேசுகிறார்கள் என்றாள்.

     அனிதாவும், நடந்தது என்ன என்றே கேட்காமல், “ஏன் கீர்த்தி இப்படிப் பண்றீங்க?! எப்பப் பாரு அப்படி என்னதான் பிரச்சனை வருமோ உங்களுக்கு?!” என்று சலிப்பாய் சொல்ல, கீர்த்திக்கும் கோபம் வந்துவிட்டது.

     “பிரச்சனை எங்களால இல்லை! இதோ நிக்குறாங்களே இவங்களாலதான். பாரு இந்த இடமெல்லாம் எப்படி இருக்குனு?! இவங்க வர வரைக்கும் இந்த இடம் எவ்ளோ சுத்தமா இருக்கும். ஆனா இப்போ அப்படி இருக்குன்னு பாரு?! இந்த வழியில நாங்க எப்படி நடந்து போறது?! நானும் சரியா நடக்க முடியாதவா, அப்பாவுக்கும் வயசாகுது, சின்னப் பசங்க எல்லாம் வந்து போற வழி. இப்படி எல்லாம் அசுத்தம் பண்ணாத, சுத்தமா வச்சுக்கோன்னு பலமுறை சொல்லிப் பார்த்தோம். இவங்க கேக்கவே இல்லை. இன்னிக்கு அப்பா இந்தத் தண்ணியில வழுக்கி விழவும் கோபமா பேசிட்டாரு. தப்புதான் இல்லைன்னு சொல்லலை. அவரு சொன்னதுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஆனா இந்தப் பொண்ணு செய்யிறதும் கொஞ்சம் கூட சரியில்லை! நியாயமா ஹவுஸ் ஓனர் நீதான் இதெல்லாம் கேட்கணும் அனிதா. ஆனா நீ கேட்ட எங்களைக் குறை சொல்ற?!” என்று கொட்டித் தீர்த்துவிட்டாள் பல நாள் பொறுமையைத் தொலைத்து.

     அதற்குள், அனிதாவின் அப்பா, முருகன் மாமா, “என்னம்மா இங்க சத்தம்?! எதுக்கு இந்த மாதிரி பேசுறீங்க? வாடகைன்னு இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போய்தான் ஆகணும். அப்பாகிட்ட சொல்லி வைம்மா” என கீர்த்திக்கு அழுகையே வரும்போல் ஆகிவிட்டது.

     ‘இன்னும் யார் யார்கிட்டதான் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்?! உங்க பொண்ணு எங்களை ஒவ்வொரு தடவையும் மட்டம் தட்டிப் பேசுற பேச்சுக்குதான் சொந்தக்காரங்க, பிரெண்டு, இருக்க இடம் கொடுத்து உதவினீங்கன்னு பொறுத்துப் போறோம்?! இந்தப் பொண்ணு, இந்தப் பொண்ணு யார் எங்களுக்கு?! இவ செய்யிற வேலைக்கும் பேசுற பேச்சுக்கும், நாங்க ஏன் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்?! இவளால என் அப்பா இன்னிக்கு கீழ விழுந்து அடிபட்டு இருக்காரு. ஏதோ லேசான காயம் பட்டதால போச்சு?! இல்லைன்னா?!’ என்று அவள் வெளியே சொல்ல இயலாது மனதிற்குள் புழுங்க,

     “என்னமா சொல்றது புரியுதா? அப்பாகிட்ட சொல்லி வை” என்றுவிட்டு நியாயம் என்னவென்று கேட்காமலேயே ஒருதலைப் பட்சமாய் அவர் முடிவு சொல்லிச் சென்றுவிட, அந்தப் பெண் நக்கலாய்ச் சிரித்தபடி அவள் வீட்டினுள் சென்றாள்.

     அதைப் பார்த்த கீர்த்திக்கு மேலும் கோபமும், சலிப்பும் எழ, “ச்சே! எனக்கு செம கடுப்பா இருக்கு அனிதா இந்தப் பொண்ணு செய்யிறது எல்லாம். என் உடல்நிலை மட்டும் நல்லா இருந்திருந்தா சிட்டி அவுடரா இருந்தாலும் பரவாயில்லைன்னு எங்க இடத்துல சின்னதா ஒரு வீடு கட்டிட்டுப் போயிடுவேன்.” என்றாள் கீர்த்தி.

     “என்ன கீர்த்தி இப்படிப் பேசுற?! நீயும் உங்க அப்பாவும் இருக்குற வரைக்கும் இங்கயே இருந்து போயிட்டா, நாங்களே நல்லபடியா எடுத்துப் போட்டுலாம்னு நினைச்சுதான் நாங்க வீடு விட்டோம். நீ என்னன்னா இப்படிப் பேசுற?!” என்றவள் அதோடு விட்டிருந்தால் கூட கீர்த்தி ஏதோ அவர்கள் மேல் உள்ளல அக்கறையில், அல்லது பரிதாபத்தில் சொல்கிறாள் என்று எண்ணி விட்டிருப்பாள். ஆனால். அவள் மேலும் தொடர்ந்து,

     “ஒருவேள உனக்கு இங்க இருந்து போயிதான் ஆகணும்னு தோணுச்சுன்னா உன்னால எல்லாம் என்ன முடியும்?! ஒரு ஒத்தக்கல்லு சுவர் வச்சு எங்க நாத்தனார் வீட்டோட பழைய ஓடு பிரிச்சுப் போட்டு வச்சிருக்காங்க பாரு. அதை வேணா எடுத்துப் போட்டுட்டுப் போங்க” எனவும் கீர்த்தி அத்தனை அவமானமாய் உணர்ந்தாள்.

      ‘எ எங்களைப் பத்தி எவ்ளோ தாழ்வா நினைச்சிட்டு இருக்கா இந்தப் பொண்ணு?! ஒரு காலத்துல இவளும் ஒட்டு வீட்ல இருந்தவங்க தானே?! ஆனா நாங்க நாங்க எவ்ளோ செல்வாக்கா இருந்தோம்?! இன்னிக்கு இந்தப் பேச்சை எல்லாம் கேட்கும் படி ஆகிடுச்சே?!’ என்று உள்ளத்துள் குமுறியபடி அவள் நிற்க,

     “எனக்கு நேரமாகுது நான் போய் சமைக்கணும்” என்று சொல்லி அனிதா செல்ல, சிறிது நேரத்தில், அனிதாவின் கணவர் அங்கு வந்தார்.

     அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பெண் வெளிநாட்டில் இருக்கும் அவள் அக்காவிற்கு போன் செய்து கீர்த்தியையும் அவள் தந்தையையும் பற்றி அவதூறாய் சொல்லியதில், அவர்கள் அனிதாவின் கணவருக்கு நல்ல நண்பர்கள் என்பதால் உடனடியாக அவருக்கு போன் செய்து பேசி இருக்க, அவரும் கீர்த்தியின் வீட்டிற்கு வந்தார். அவர் வந்ததும் மீண்டும் அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பெண் வெளியே வந்துவிட, அவர் அந்தப் பெண்ணிடம் எதுவுமே கேட்காமல், வந்ததும், வராததுமாய்,

     “ஏம்மா கீர்த்தி இவ்ளோ பிள்ளைங்களுக்கு டியுஷன் எடுக்குற? ஆனா இப்படி நடந்துக்கற?! எவ்ளோ பேர் வீடு இல்லாம பிளாட்பாரம்ல எல்லாம் இருக்காங்க?! நீங்க என்னன்னா?!” என அன்னியப் பெண் முன் பிளாட்பாரம் வரை அவர் உதாரணம் காட்டிப் பேச,

     ‘அந்த அளவிற்கா நாங்கள் தாழ்ந்து போய்விட்டோம்?!” என்று கீர்த்தியின் பொறுமை மொத்தமாய்க் காற்றில் பறந்தது.

      “டியுஷன் எடுக்குறதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் அண்ணா?! அந்தப் பொண்ணு பண்றது எதுவுமே சரியில்லை! வர்ற வழியை அசுத்தம் பண்றது முதற்கொண்டு, துணி காயப் போடுறது வரை எல்லாத்துக்கும் அப்பாவோட சண்டை போடுது. இத்தனை வருஷமா அவ அக்கா இருந்தா இல்ல? அவளும் நானும் எவ்ளோ ப்ரென்ட்லியா இருந்தோம்னு உங்களுக்கே தெரியுமே?!”

     “ஆமாம் தெரியும். ஆனா இன்னிக்கு அவங்கதான் போன் பண்ணி உன்கிட்ட பேசச் சொன்னதே?!” என்றார்.

     “ஓ!” என்று என்றவள்,

      ‘தங்கச்சின்னு வந்ததும் நட்பு வேண்டாததா ஆகிடுச்சு போல!’ என்று எண்ணிக் கொண்டு நிற்க,

     “இனி எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கோங்க. குடித்தனம்னு இருந்தா அக்கம்பக்கத்துல அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் போகணும்” என்று மீண்டும் மீண்டும் கீர்த்திக்கே அட்வைஸ் சொன்னவர்கள் அந்தப் பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் செல்ல, கீர்த்தி சோர்வுடன் வீட்டினுள் சென்றாள்.

     கீர்த்தி உள்ளே வந்ததும், சதாசிவம், “என்னமா சொல்லிட்டுப் போறாங்க எல்லாரும்?! நாம அந்தப் பக்கத்துக்கு வீட்டுப் பொண்ணுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும்னா?!” என்று கேட்க, கீர்த்திக்கு அழுகை வந்தது.

     “ஒருத்தர் கேட்டு நொந்து சொந்தகாரங்க கிட்ட வரவே கூடாது இல்லைப்பா?!நான்தான் நான்தான் தப்பு பண்ணிட்டேன். என்னால நீயும் அவமானப் படுற!” என,

     “போதும்மா போதும்! இனியும் இங்க இருந்தா நமக்கு மரியாதை இருக்காது. அன்னிக்கு முருகன் சொன்ன ஒரு வார்த்தைக்காக அவன் பொண்ணு, மருமகன் மச்சினிச்சின்னு எல்லாரும் பேசினதை பொறுத்துட்டுப் போனோம். இனியும் அது தேவை இல்லைம்மா! கடைசி வரைக்கும் இங்கேயே இருந்துட்டுப் போய்ச் சேர்ந்திடலாம்னு இருந்தேன். ஆனா இனி இந்த வீட்ல என் உயிர் போகக் கூடாது. குடிசை வீடா இருந்தாலும் அது நம்ம இடத்துல போகட்டும்” என்றார் மனம் நொந்து.

     “ஏன் ப்பா?! ஏன் ப்பா அப்படி சொல்ற?! நான் கட்டுறேன் ப்பா குடிசை வீடு இல்லை தளம் வீடே கட்டுறேன்ப்பா. நாம இப்போ குடி இருக்கோம்ல இந்த நானூறு ஸ்கொயர் பீட் தளம் வீடு இதே மாதிரி கட்டறேன் ப்பா. நம்ம இடத்துல  நம்ம வீட்ல நீ ராஜா மாதிரி வாழணும் ப்பா ராஜா மாதிரி” என்று அவள் தந்தையைக் கட்டிக் கொண்டு சொல்ல இருவரின் கண்களிலுமே கண்ணீர் வழிந்தது…

                                                                    -தொடரும்…

    

    

 

     

   

     

 

Advertisement