Advertisement

                                                                                5

     சின்னவனுக்கு என்னதான் தாத்தாவையும், சித்தியையும் பிடித்திருந்தாலும், அவர்களும் அவனை உயிருக்கு உயிராய் பார்த்துக் கொண்டாலும், வார இறுதிகளில் அம்மாவைத் தேடியே ஓடினான். அதிலிருந்தே தெரிந்தது கார்த்திகா அவனை வலுக்கட்டாயமாய் அவர்களுடன் தங்கச் சொல்லி இருக்கிறாள் என்று.

     சதாசிவத்திற்கும், கீர்த்திக்கும் கொஞ்சமாய் அதில் வருத்தம் எழுந்தாலும், என்ன இருந்தாலும் தாய்ப் பாசம் தானே பெரிது என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டனர். கீர்த்தி தான் எடுக்கும் டியுஷன் பணத்தில் பிள்ளைகளின் சின்னச் சின்ன ஆசைகளை ஓரளவு பூர்த்தி செய்தாள். ஆனாலும் தருண் முன்பு அவர்களுக்கு செய்த அளவிற்கு அவளால் செய்ய இயலவில்லை. கார்த்திகா ஒரு பிரபலமான சூப் கடையில் கேஷியராய் வேலை செய்தும், தருணின் இன்ஷூரன்ஸ் பணத்தை வட்டிக்கு விட்டும் தன்னையும் தன் பெரிய மகனையும் பார்த்துக் கொண்டாள். பெரியவனும் கீர்த்தியிடமே டியுஷன் படித்ததால், அவனும் பள்ளி முடிந்ததும் தினமும் அவர்கள் வீட்டில் இருந்து விட்டு இரவு பத்து மணிக்கு கார்த்திகா கடையில் இருந்து வந்த பிறகு அவர்கள் வீட்டிற்குச் செல்வான்.

     ஒருவருடம் இப்படியே ஓடியது பெரிதாய் எந்த மாற்றமும் பிரச்சனையும் இல்லாமல்.  கார்த்திகா கஷ்டப்பட்டு வேலை செய்தது அந்த ஒரு வருடம்தான். அதன் பின் எந்த வேலைக்கும் செல்லவில்லை. ஆனால் பணம் மட்டும் அவள் கையில் அவ்வளவு புரண்டது. ஆனாலும் அவளின் பஞ்சப் பாட்டு மட்டும் நிற்கவே இல்லை! உறவினர்கள் கார்த்திகாவைப் பற்றி அரசல் புரசலாய் அவதூறு பேச, கீர்த்திக்கு பெரும் வருத்தம் எழுந்தது.

      “அக்கா, பிள்ளைங்க வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு நீ நடந்துக்கோ அக்கா” என்றாள் மறைமுகமாய்.

     “அப்படின்னா என்ன சொல்ல வர?!” என்று கார்த்திகா சீற,

     “அய்யோ நான் எதுவும் தப்பா சொல்லலை அக்கா. வெளிய எல்லோரும்” என்று அவள் தயங்க,

     “ஓ?! ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா உடனே அவ தப்பான வழியிலதான் போறான்னு அர்த்தமா?!” என்று எகிறினாள் அவள்.

     “அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லையே? நீயே ஏன் அப்படிப் பேசுற?” என்றவள்,

      “நீ செய்யிற எதுவும் எங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்காத அக்கா. மாமா பிரெண்ட் அந்த சேகர் அடிக்கடி உன் வீட்டுக்கு வரதும், நீ அவர் கூட அடிக்கடி வெளில போறதும் நல்லா இல்லை. நீ அவருக்கு பணம் வேற குடுத்து உதவி இருக்கேன்னு கேள்வி பட்டோம். எல்லாத்தையும் என்னால ஓபனா பேச முடியலை. ஆனா ஒன்னு மட்டும் நியாபகம் வச்சிக்கோ! நீ செய்யிற ஒவ்வொரு தப்பும் உன் பசங்க வாழ்க்கையை பாதிக்கும். பார்த்து நடந்துக்கோ.” என்றுவிட்டு அவள் எழுந்து சென்றுவிட, கார்த்திகாவிற்கு ஆத்திரமாய் வந்தது.

     “இதெல்லாம் கேள்வி கேட்குற அளவுக்கு என் நிலைமை ஆகிப் போச்சு! எல்லாம் இந்தப் பாவி மனுஷன் போனதுதான் காரணம். இல்லனா நான் ஏன் மத்தவன் தயவை எல்லாம் நாடணும். இதுங்க கிட்ட எல்லாம் பேச்சு வாங்கணும்” என்று சலித்துக் கொண்டாள்.

     வருடங்கள் வேகமாய் ஓடியது. கார்த்திகா எப்போதும் போல் தன் இஷ்டப்படிதான் வாழ்ந்து வந்தாள் பணம் சேர்ப்பது ஒன்றே குறிக்கோளாய் எண்ணி. பெரியவன் பள்ளிப்படிப்பை முடிக்கவே கீர்த்தி பெரிதும் போராட வேண்டியாகிற்று. இரண்டு பிள்ளைகளுக்குமே சுமாராகத்தான் படிப்பு வந்தது. இரவும் பகலும், ஆசானாகவும், தந்தையாகவும் இருந்து அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்து ஒருவழியாய் பெரியவனைப் பள்ளிப்படிப்பை முடிக்க வைத்துக் கல்லூரியில் அடியெடுத்து வைக்க வைத்துவிட்டாள். தருணின் முதலாளியும் வாக்கு கொடுத்தது போலவே பள்ளிப் படிப்பு முடியும் வரை கல்விக் கட்டணத்தை கட்டி முடித்தார். ஆனால் கல்லூரியில் இருந்து மறுபடியும் பிரச்சனை ஆரம்பம் ஆனது.

     கார்த்திகா, பெரிய மகனின் கல்லூரி படிப்புக்கு சதாசிவத்திடம் பணம் கேட்க, 

      “அதான் நீ பேங்க்ல சேர்த்து வச்சிருக்க இல்லை லட்ச லட்சமா அதுல இருந்து எடுத்துக் கட்டு. எங்களால மேலும் மேலும் கடனாளி ஆக முடியாது.” என்றாள் கீர்த்தி  இப்போது கொஞ்சமே புத்தி பெற்றவளாய்.

     “நா நான் எங்க சேர்த்து வச்சிருக்கேன்?!” என்று கார்த்திகா கேட்க,

     “எல்லாம் எனக்குத் தெரியும். எங்க வருமானம் எங்க மூணு பேர் செலவுக்கே போத மாட்டேங்குது. சின்னவன் ஏதாவது எக்ஸ்ட்ரா கிளாஸ் சேர்த்து விடச் சொல்லி கேட்குறான் அதுக்கே எங்ககிட்ட பணம் இல்லை. இதுல நாங்க எங்க போறது அறுபதாயிரத்துக்கு?!” என்றாள் கீர்த்தி.

     “மூணு பேர்னு ஏன் சொல்ற?! என் பிள்ளைக்கு அப்படி என்ன செலவு பண்ணிட்டீங்க நீங்க? காலைல ரெண்டு தோசை, நைட்ல ரெண்டு இட்லி. மதியம் சாப்பாடும் எங்க வீட்டுத் தெருவிலேயே ஸ்கூல் இருக்குன்னு நான் சுடச்  சுட என் பிள்ளைக்கு சமைச்சுக் கொண்டு போய் குடுத்துடறேன்.” என்றவளைப் பார்த்து சதாசிவதிற்கே வெறுப்பு எழுந்தது.

     “ஆமாம்மா நாங்க ரெண்டு தோச, ரெண்டு இட்லி மட்டும்தான் போட்டு உன் பிள்ளையை வளர்க்கறோம். வேற எதுவுமே செய்யலைமா! செய்யலை! வேணும்னா நீ உன் பிள்ளையை உன் வீட்டுக்கே கூட்டிட்டுப் போய் வச்சுப் பார்த்துக்கோ” என்றார் மனம் தாளாமல்.

     “அதானே?! உங்களுக்கு என்னதான் பேரன் மேல பாசம் இருந்தாலும், உங்க சின்னப் பொண்ணுன்னு வந்துட்டா எல்லோரும் அப்புறம்தான்.” என்றாள் அதற்கும் கார்த்திகா நக்கலாய்.

      “இப்போ எதுக்கு அவளை இழுக்குற?! அவ என்ன பண்ணா?!” என்றார் அவர் சற்றே கோபமாய்.

     “அவதானே பீஸ் கட்ட முடியாதுன்னு சொல்றா?!” என்றாள் கார்த்திகா.

     “அவ என் நிலைமையைப் புரிஞ்சு சொல்றா?!”

     “அப்போ நான் புரிஞ்சிக்கலைன்னு சொல்றீங்க?”

     “ஆமா புரிஞ்சிக்கலை!” என்றவர்,

     “என்னால ரெண்டு பிள்ளைகளோட செலவைப் பார்த்துக்க முடியாதும்மா. சின்னவன் காலேஜ் படிப்புக்கு வேணா கொஞ்சம் கொஞ்சமா  சேர்த்து வைக்கப் பார்க்கறேன். ஆனா இப்போதைக்கு எங்ககிட்ட எதுவும் இல்லை. என் பொண்ணு ஏதோ கொஞ்ச நஞ்ச நகை வச்சிருக்கா. அதுவும் ஏதாவது ஆத்திரம் அவரசத்துக்கு நாங்க வச்சு எடுக்கத் தேவைப்படுது.” என்று கறாராய் சொல்லிவிட,

     “சரி அவனோட பஸ் செலவுக்காச்சும் மாசம் ஆயிரம் ரூபா குடுங்க” என்று கார்த்திகா சட்டமாய் சொல்ல,

     “குடுக்கறேன். ஆனா அவன சாயந்திரத்துல இங்க வந்து என்கிட்ட படிக்கிற சின்னப் பிள்ளைங்களுக்கு டியுஷன் சொல்லிக் கொடுக்க சொல்லு. அதுக்கு டியுஷன் பீசா ஆயிரம் என்ன ரெண்டாயிரம் கூட குடுக்கறேன்.” என்றாள் கீர்த்தி.

     “அப்போ கூட என் பிள்ளை வேலை செஞ்சாதான் குடுப்ப இல்லை?!” என்று கார்த்திகா கோபமாய்க் கேட்க,

     “ஆமாம்! அப்போதான் அவனுக்கும் பொறுப்பு வரும். மத்தவங்களா மாதிரி உட்கார்ந்தே சம்பாதிக்கணும்னு நினைக்க மாட்டான்ல?!” என்றாள் கீர்த்தியும் காட்டமாகவே.

     “பார்த்துக்கோடா பார்த்துக்கோ. இதுதான் உலகம். என்னதான் தாத்தா, சித்தியா இருந்தாலும், பணம்னா இப்படித்தான். என்னிக்கு இருந்தாலும் உங்களுக்கு நான்தான் உங்க அம்மா மட்டும்தான் எல்லாம்” என்று பெரியவனிடம் கார்த்திகா சொல்ல அவன் அமைதியாய்,

     “பரவாயில்லைமா. நான் டியுஷன் எடுக்கறேன்” என்றான்.      

     ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சின்னவன் எல்லாவற்றிற்கும் சாட்சியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தானே தவிர அவனால் அவன் வயதிற்கு சரி எது தவறெது என்பதெல்லாம் புரியவில்லை!

     கார்த்திகா செலவுகளைச் சமாளிக்க மட்டுமே சின்ன மகனை அவர்களிடம் விட்டு வைத்திருந்தாளே தவிர உரிமையை ஒருபோதும் அவர்களுக்குக் கொடுத்ததில்லை.. எப்போதும் தான்தான் தன் பிள்ளைகளுக்கு எல்லாமாகவும் இருக்கிறேன் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.

     ஆனால் சதாசிவமும், கீர்த்தியும் சின்னவன் அஜய் மீது அளவிலா அன்பைக் கொட்டி வளர்த்ததில், ஆரம்பத்தில் பெரிதாய் தாத்தா, சித்தியிடம் ஒட்டுதல் இல்லாமல் இருந்தவன், போகப் போக இருவர் மீதும் அவ்வளவு ஒட்டுதல் ஆகிவிட்டான். என்னதான் அம்மா முக்கியம் என்று எண்ணினாலும், தாத்தா, சித்தி இருவரையும் கூட அவளுக்கு நிகராய் பார்க்க ஆரம்பித்திருந்தான் அவர்கள் அன்பைப் புரிந்து கொண்டவனாய்.

     ஒருபக்கம் கார்த்திகாவின் முள் போன்ற வார்த்தைகளால்  கீர்த்தி மனவேதனை கொள்ள, நெருங்கிய நட்பென்று எண்ணிய ஹவுஸ்ஓனர் அனிதாவும் பணவசதி அதிகமானதில் வார்த்தைகளை அதிகமாய் விடத் துவங்கி இருந்தாள் இப்போதெல்லாம். ஏதோ தங்கள் தயவில்தான் கீர்த்தியும் அவள் தந்தையும் வாழ்கிறார்கள் என்ற ரீதியில்.

     கீர்த்தி உற்ற தோழியென நினைத்து தன் கடந்த காலக் காதல் முதற்கொண்டு, கார்த்திகா படுத்தும் வேதனை, தன் உடல் வேதனை எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்திருக்க, அவள் அதை வைத்தே கீர்த்தியை விளையாட்டுப் பேச்சு என்ற ரீதியில் கேலியாய் பேச ஆரம்பித்திருந்தாள்.

     ஒருநாள், இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், “என் ரவி மட்டும் என் பக்கத்துல இருந்திருந்தா என்னை எப்படி எல்லாம் பார்த்துட்டு இருந்திருப்பான் தெரியுமா?!” என்று கீர்த்தி ஆசையாய் தோழியிடம் சொல்ல,

     “என்னமோ கீர்த்தி, உன் வாழ்க்கையே இப்படி ஆகிப் போச்சு இல்லை! ரவை இருந்திருந்தா மட்டும் என்ன?! நீதான் ஒரு வேஸ்டா ஆகிட்டயே” என்றாள் கீர்த்தியின் உடல் நிலை கருதி வருத்தப் படுவது போல்.

     “வேஸ்ட்?!” என்று அவள் சொன்ன அவ்வார்த்தை கீர்த்தியை வெகுவாய்க் காயப்படுத்த, அவள் மனம் சாட்டையால் அடிவாங்கியது போல் வலித்தது.

     ‘வேஸ்ட் வேஸ்ட்! அ அப்போ, அழியக் கூடிய உடலுக்கு இருக்க மதிப்பு, உணரக் கூடிய ஆன்மாவுக்கு இல்லையா?! ந நான் நிஜமாவே வேஸ்டா?! ஒரு ஆண்மகனைச் சந்தோஷப் படுத்த முடியலைன்னா அந்தப் பொண்ணு ஒரு வேஸ்டா?! ஒரு குழந்தையைச் சுமக்க முடியலைன்னா அந்தப் பொண்ணு ஒரு வேஸ்டா?!’ என்று மனதிற்குள் அழுத கீர்த்தி,

     ‘ச்சே இனி யார்கிட்டயும் என் கஷ்டத்தைச் சொல்லவே கூடாது!’ என்று எண்ணிக் கொண்டாள்.   

     ஆனாலும் அனிதா அவளைத் தேடித் போய் பேசினாள். அவள் பேசுவது அவளுக்குத் தவறாகவே தோன்றவில்லை. விளையாட்டாகவும், பரிதாபமாகவும் பேசுவதாய் நினைத்துக் கீர்த்தியை வார்த்தைகளால் குத்திக் கிழித்தாள், அவள் அக்காவைப் போலவே. அன்று கீர்த்தி தன் டியுஷன் பிள்ளையின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குச் சென்றுவிட்டு வர,

     “என்ன ஒரே ஊர் சுத்தலா இருக்கு?! டேட்டிங்கா?!” என்றாள் விளையாட்டாய்.

     கீர்த்திக்கு சுருக்கென கோபம் எழ, எதுவும் பேசாமல் விடுவிடுவென சென்றுவிட்டாள்.

     ‘இவங்க எல்லாம் தெரிஞ்சுதான் பேசுறாளா இல்லைத் தெரியாம பேசுறாங்களா?! வார்த்தையிலேயே தீயை அள்ளிக் கொட்டுறாங்களே?!’ என்று கீர்த்திக்கு அழுகையாய் வந்தது.

     ‘ஏற்கனவே கார்த்திகாவால் தந்தை படும் வேதனை போதாதா?! இதெல்லாம் வேறு சொல்லி அவர் மனதைப் புண்படுத்த வேண்டுமா?!’ என்று கீர்த்தி பலவற்றை வேலியில் சொல்லாமலேயே மனதிற்குள்ளேயே போட்டுப் புழுங்கினாள். 

    

Advertisement