Advertisement

தருணின் இறுதி காரியங்களுக்கு தன்னிடம் எதுவுமே இல்லையென கையை விரித்த கார்த்திகா,

      “என்னை இப்படி நடுத்தெருவில விட்டுட்டுப் போயிட்டாரே என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய, தருணின் நண்பர்கள், சதாசிவத்தின் உறவினர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற பணத்தைத் தருணின் இறுதி யாத்திரைச் செலவுகளை கவனித்துக் கொண்டிருந்த கீர்த்தியிடம் கொண்டு வந்து கொடுக்க அவளுக்குப் பெரும் சங்கடாமாய்ப் போனது.

     “இல்ல பரவயில்லைங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்று அவள் சொல்ல,

     “எப்படிப் பார்த்துக்குவ? நீங்களே எல்லாத்தையும் இழந்து இந்த கதியில நிக்குறீங்க?! இப்போ உங்க அக்கா வேற இப்படி ஆகிட்டா?!” என்று கீர்த்தியின் சித்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் சொல்ல,

     “இல்ல பரவயில்ல சித்தி. என் செயின் இருக்கு. அதை வச்சு ஏற்பாடு பண்ணிக்கறேன்.” என்றாள் கீர்த்தி கொஞ்சமே ரோஷமாய்.

     “இந்த ரோஷதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!” என்று அவள் சித்தி முணுமுணுத்துக் கொள்ள,

     “சும்மாயிரு“ என்று அவரை அடக்கிய அவரின் கணவர் அதாவது கீர்த்தியின் சித்தப்பா,

    “பரவாயில்லைம்மா. இன்னும் காரிய செலவெல்லாம் வேற இருக்கும் இல்லை. அதுக்கு நீ பார்த்துக்கோ. இப்போ இதை வாங்கிக்கோ.” என்று ஐந்தாயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினர்.

     கீர்த்தி தங்கள் நிலையை எண்ணி மனம் நோக அதைப் பெற்றுக் கொண்டாள், ‘சீக்கிரம் திரும்பக் குடுத்துடணும்” என்று எண்ணியபடியே.

     வந்தவர்களிடம் எல்லாம் கார்த்திகா பஞ்சப் பாட்டு பாடி பணம் பெற்றுக் கொண்டதைப் பார்க்க கீர்த்திக்கு அருவருப்பாய் இருந்தது.

     ‘இவ ஏன் இப்படி இருக்கா?!” என்று மனதுள் நொந்து கொண்டாள்.

      தருணின் காரியங்கள் முடியும் வரை அவர்கள் வீட்டில் அவளுக்குத் துணையாய் அவள் உடன் இருந்த சதாசிவமும், கீர்த்தியும், தங்கள் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமாக,

      “அப்பா… நீ கூட என்னைத் தனியா விட்டுட்டுப் போகப் பாக்குறியாப்பா?” என்று கார்த்திகா கேட்க, சதாசிவமும் கீர்த்தியும் கலங்கிப் போயினர்.

     “உங்க கூட வான்னு ஒரு வார்த்தைக் கூப்பிட மாட்டீங்களா?!” என்றாள்.

     சதாசிவத்திற்கு என்ன சொல்வதென்றுப் புரியவில்லை! அவர்களுக்கு வரும் சொற்ப வருமானத்தில் அவர்கள் வாழ்வதே சுமையாய் இருக்க, கார்த்திகா, பேரப்பிள்ளைகள் மூவரையும் சேர்த்துப் பார்த்துக் கொள்வது எப்படி என்று யோசித்தார். பணப் பிரச்சனையை சமாளிப்பதே பெரிய விஷயம் என்றால், கார்த்திகாவின் குணத்திற்கு அவளை அவர்களுடன் வைத்துக் கொள்வது தாங்களே வேலியில் செல்லும் ஓணானை எடுத்துத் மடியில் கட்டிக் கொண்ட கதையாகிவிடுமே, என்று பயந்தார். அதிலும் சின்ன மகள் தற்போது இருக்கும் உடல் நிலையில் அவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வது என்பது நிச்சயம் வெகு சிரமமாக இருக்குமே. இதையெல்லாம் தாண்டி இப்போது அவர்கள் வாடகை வீட்டில் வேறு இருப்பதால், வீட்டு ஓனரிடமும் கேட்க வேண்டும் அல்லவா?

      “என்னப்பா இவ்ளோ யோசிக்கிற?! இப்போ கூட உங்க சின்ன மகளைக் கேட்டுத்தான் முடிவெடுக்கணுமா?!” என்றாள் கார்த்திகா நக்கலாய்.

      “அவளை கேட்டு இல்லைமா ஹவுஸ் ஒனரைக் கேட்டு முடிவெடுக்கணும்” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் கீர்த்தி ஹவுஸ் ஓனருக்கு போன் போட்டிருந்தாள்.

     அவள் ஹவுஸ் ஓனர் தோழியான அனிதாவிடமும் அவர் கணவரிடமும் பேச, அவர்கள்,

     “உங்க ரெண்டு பேருக்குன்னு நினைச்சித்தான் வீடு விட்டோம். உங்க அக்கா குணம் தான் உனக்கே தெரியும் இல்லை. அவங்க இங்க வந்து இருந்தா தேவையில்லாத பிரச்சனைகள்தான்  வரும்.” என்று தங்கள் முடிவைச் சொல்லிவிட, கீர்த்தி அமைதியாய் அக்காவைப் பார்த்தாள்.

     “என்ன? வேணான்னு சொல்லி இருப்பாங்களே?!” என்றாள் அப்போதும் நக்கலாகவே.

     கீர்த்தி கவலையாய் தந்தையைப் பார்க்க, “ம்! என்னைப் பத்தி ஊரெல்லாம் அப்படி சொல்லி வச்சிருக்கீங்க?!” என்று சொன்னவள்,

     “பரவாயில்லை! யார் இல்லாமையும் என்னால வாழ முடியும்” என்றுவிட்டு,

      “இந்தச் சின்னதுதான் தாத்தா தாத்தான்னு உசிரையே விடுது. அவனையாவது உங்க கூட வச்சுப் பார்த்துக்கறீங்களா?!” என்றாள்.

     “நா நான் பார்த்துக்கறேன் க்கா” என்ற கீர்த்தி தன் அக்காவின் சின்ன மகனைத் தன்னோடு அணைத்துக் கொள்ள, சதாசிவம் சின்ன மகளைப் பெருமையுடன் பார்த்தார்.

     தருண் தனது பிசினசில் பெரும் நஷ்டம் அடைந்ததில் வீடு முதல் எல்லாம் பறிபோய் இருக்க, பிள்ளைகளின் வளர்ப்புக்கும் படிப்புக்குமே பெரும் சுமையாய் இருந்தது அவர்களுக்கு. அத்தருணத்தில் தருணின் பழைய முதலாளி தருண் இறந்த விஷயம் கேள்விப் பட்டு, அவர்கள் குடும்பத்திற்கு ஏதேனும் உதவி செய்யலாம் என்று வரச் சொல்ல, கார்த்திகா, கீர்த்தியையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

     “வணக்கங்க ஐயா!” என்று என்று அக்கா, தங்கை பிள்ளைகள் அனைவரும் உள்ளே சென்றதும் அவர்களை வணங்க,

     “வாங்கம்மா உட்காருங்க” என்றார் அந்த நடுத்தர வயது மனிதர்.

     “இவங்க?!” என்று அவர் கீர்த்தியைப் பார்த்துக் கேட்க, கார்த்திகா,

     “என் தங்கச்சிங்க ஐயா” என்றாள்.

     ஒரு சில நிமிடங்கள் அவர் தருணைப் பற்றி விசாரித்து விட்டு, “சரிம்மா உங்களுக்கு என்ன உதவி வேணும்?” என்றார்.

      “வ வந்துங்க ஐயா, அவர் பிசினஸ் லாஸ் ஆனதுல எங்க வீடு உட்பட எல்லாமே போயிடுச்சு! இப்போ எங்களுக்கு வீடு கூட இல்லங்க ஐயா. ஒ ஒரு வீடு லீசுக்கு” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,

     “ஏன் மா நான் என்ன உங்களுக்கு வீடா பார்த்து வைக்க  முடியும்?!” என்று அவர் சற்றே சிடுசிடுக்க,

     “ஒரு நிமிஷம் சார். நான் கொஞ்சம் பேசலாமா?!” என்றாள் கீர்த்தி ஏதோ ஓர் உந்துதலில்.

     “சொல்லுங்க”

     “நானும், என் அக்காவும் படிச்சு நல்ல நிலைக்கு வரணும்னு எங்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டார். ஆனா, ஆனா அவர் ஆசை கனவாவே போய்டுச்சுங்க ஐயா. என் அக்கா குழந்தைகளாவது நல்லா படிக்கணும்னு நான் நினைக்கிறேன். அவங்க படிப்புக்கு உங்களால எதாவது உதவ முடியும்களா?” என்றாள் கீர்த்தி.

     அவர் சிறிதும் யோசிக்காமல், “அதுக்கென்னம்மா தாராளமா பண்ணிட்ட போச்சு” என்றவர், நொடியில் அவர் முன்னே இருந்த பெட்டியில் இருந்து ஐம்பதாயிரத்தை எடுத்து கார்த்திகா கைகளில் கொடுத்து,

     “இந்த வருஷப் படிப்புக்கு இதை வச்சுக்கோங்க. அடுத்த வருஷத்துல இருந்து ஸ்கூலுக்கு நேரடியா பணம் கட்டிடறேன்.” என்று சொல்ல, கார்த்திகா, கீர்த்தி இருவரின் மனமும் குளிர்ந்து போனது.

     “ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்” என்று இருவரும் அவரைக் கைக்கூப்பி வணங்கி விடைபெற,

     “வாங்க” என்றவர், பிள்ளைகளிடம்,

     “நல்லா படிக்கணும் பசங்களா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

     கார்த்திகா வீட்டிற்கு வந்ததும் வராமல், அவர் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்று தருண் அடகு வைத்திருந்த நகைகளில் கொஞ்ச நகைகளை மீட்டுக் கொண்டு வந்துவிட்டாள் யாருக்கும் தெரியாமல்.

     ஆண்டு விடுமுறை முடிந்ததும், பள்ளி துவங்க இருக்கும் சமயம் பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட வேண்டும் என்று கார்த்திகா தந்தையிடம் சொல்லும் போது,

     “ஏன் சார் தான் பணம் கொடுத்தாரே அக்கா. அது எங்க போச்சு. அவ்ளோ பணத்துக்கு அப்பா எங்க போவாரு?!” என்றாள் கீர்த்தி.

     “அதானே எனக்கும் என் பிள்ளைகளுக்கும் செய்யணும்னா மட்டும் உங்களுக்கு பணம் இருக்காதே?! இந்த வீடு கட்ட ஐம்பதாயிரம் கொடுத்துதானே இங்க வந்தீங்க. அப்போ எங்க இருந்து வந்தது பணம்?!” என்று கார்த்திகா நறுக்கெனக் கேட்க,

     “அது என் நகைகளை வச்சி ஏற்பாடு செஞ்சோம். அந்தக் கடனைக் கூட இன்னும் அடைக்கலை அக்கா நாங்க” என்றாள் கீர்த்தி கவலையாய்.

     “அதெல்லாம் எனக்குத் தெரியாது. தருண் டெத் க்கு அவர் பிரெண்ட்ஸ், நம்ம சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து பணம் கொடுத்தாங்க இல்லை. அதையும் நீங்க தானே எடுத்துக் கிட்டீங்க.”

      “அதை நாங்க எடுத்துக்கலை. மாமாவுக்கு தான் செலவு பண்ணோம்” என்றாள் கீர்த்தி சற்றே கோபம் கொண்டு.

     “அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த வருஷப் பணத்தை எப்படியாவது கட்டுங்க. அதான் அடுத்த வருஷத்துல இருந்து அவரே ஸ்கூலுக்கு நேரடியா கட்டிடறேன்னு சொல்லி இருக்கார்ல. இந்த ஒரு வருஷமாச்சும் கட்டினா என்ன குறைஞ்சா போயிடுவீங்க.” என்றாள் அவர்கள் நிலையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல்.

      இருவரும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்க்க, கீர்த்தி தனது காதில் இருந்த கம்மலையும் விரலில் இருந்த மோதிரத்தையும் கழற்றித் தந்தையிடம் கொடுத்தாள்.

                                                                                               

                                                                                                                                           -தொடரும்…

Advertisement