Advertisement

                                                                             4

     அவன் சென்ற பத்து நிமிடத்தில் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, அவள் உடல் மீண்டும் நடுங்கியது.

     “ய யாரு?!” என்று அவள் உள்ளிருந்தே குரல் கொடுக்க,

     “கீர்த்திம்மா” என்று குரல் கொடுத்தார் சதாசிவம்.

     “அ அப்பா” என்று கத்தியபடியே எழுந்து வந்து கதவைத் திறந்தவள் அவரைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட அவரும் பதறிவிட்டார்.

     “என்ன என்னடா ஆச்சு?!” என்று அவர் கலக்கமாய் கேட்க,

     “அ அப்பா அந்த ஹவுஸ் ஓனர் ஆன்ட்டி பையன்” என்று அவள் நடந்ததைச் சொல்ல, அவர் ஆக்ரோஷமாய் அவளை விலக்கி அமர்த்திவிட்டு அவன் வீட்டிற்குச் சென்று அவனை நன்கு புடைத்து எடுத்துவிட்டார்.

     “ஏன்டா எவ்ளோ தைரியம் இருந்தா அப்படிப் பண்ணுவ?! கொன்னுடுவேன் உன்னை” என்று அறுபத்தி ஐந்து வயதிலும் அத்தனை கம்பீரமாய் நின்றவரைப் பார்க்க அவன் பயத்தில் வெலவெலத்துப் போனான். வாங்கிய அடியின் வலிகள் அப்படி!

     அவர் மிரட்டிவிட்டுக் கிளம்பும் சமயம் ஹவுஸ் ஓனர் அம்மா வந்துவிட, மகனின் நிலையைப் பார்த்துக் கலங்கிப் போனார். ஆனாலும் அவன் குணம் தெரிந்தவர் ஆயிற்றே!

     “எ என்னங்க அண்ணே ஆச்சு?!” என்றார் கலக்கத்துடன்.

     “கீர்த்தி கீர்த்தியை”

     “அய்யோ?!” என்று அவர் பதற,

    “இல்லை கெட்டதுலயும் ஒரு நல்லதா அவளோட காயங்கள் அவளைக் காப்பாத்திடுச்சு!” என்றவர் நடந்ததைக் கூற,

     “பாவி! பாவி” என்று அவரும் சேர்ந்து மகனை நன்கு துவைத்து எடுத்து விட்டார்.

     “நான் சீக்கிரம் வீடு காலி பண்ணிடறேனம்மா. வேற ஆளுக்கு சொல்லி வச்சுடுங்க” என்றார் சதாசிவம்.

     “இவன் இனி எந்த தப்பும் பண்ணாம நான் பாத்துக்கறேன் அண்ணே. எல்லா இடத்திலையும் இப்படி ஒரு கேடுகெட்ட ஜென்மம் இருக்கத்தான் செய்யுது. இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் பயந்து பயந்து வீடு காலி பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா?!” என்று அந்தப் பெண்மணி கேட்க,

     “வாஸ்தவம்தான். ஆனாலும் இனி இங்க இருக்கிறது சரிவராது ம்மா” என்றுவிட்டு அவர் சென்றுவிட,

     “பாவி நல்ல மனுஷங்களா பக்கத்துல இருக்க விட மாட்டேங்குறியே?!” என்று மீண்டும் மகனை அடிக்க,

     “சும்மா சும்மா அடிக்காத அதான் ஒன்னும் நடக்கலை இல்லை! பேயை விட மோசமா இருக்க அவளைப் போய் இனி சீண்டுவேனா” என்று அவன் அப்போதும் நக்கலாய்ப் பேச அவன் வாய் மீதும் படீரென்று வைத்தார்.

     “ஓ! இதெல்லாம் தெரிஞ்சும் தான் நீ போய் பொண்ணு கேட்டியா?!” என்றான் அவன்.

      “ஆமாம்டா! தெரிஞ்சுதான் கேட்டேன். உன் மனசை விட அவ காயங்கள் ஒன்னும் விகாரம் இல்லை! ஆனா உனக்காக போய் அவளைக் கேட்டேன் பாரு! என்னை என் புத்தியைத்தான்” என்றவர், அழுது கொண்டே உள்ளே சென்றுவிட்டார்.

                                                                         *****

     நல்ல மனிதர்களாய், ஆண்பிள்ளைகள் இல்லாத வீடாய் தேடித் தேடி சதாசிவம் அலைய, எங்கும் அவருக்கு மனதிற்கு ஏற்பாய் வீடு அமையவில்லை.

     “எத்தனைக் கூடப் பிறந்தவங்க இருந்து என்னப் பிரயோஜனம்?! ஒருத்தனாவது, நம்ம வீட்ல வந்து வாடகைக்கு இருந்துக்கோங்கன்னு ஒரு வார்த்தை சொல்றானுங்களா?!” என்று அவர் மகளிடம் வேதனையாய் சொல்ல,

     “அப்பா நான் வேணா முருகன் மாமா கிட்டக் கேட்டுப் பார்க்கவா?! அவங்க வீட்ல தான் அத்தனை போர்ஷன் இருக்கே. கண்டிப்பா தருவாங்க ப்பா” என்றாள்.

     “ம்!” என்று யோசித்தவர்,

     “சரிம்மா கேட்டுப் பாரு.” என்றார்.

      கீர்த்தி, தனது தோழி அனிதாவின் மகளின் காதுகுத்து விழாவிற்குச் சென்ற போது. அனிதாவின் அப்பாவும், அவளது ஒன்று விட்ட சொந்தமுமான முருகன் மாமாவிடம் உதவி கேட்க, அவர்,

     “எல்லா போர்ஷனிலும் குடித்தனம் இருக்காங்களே மா. எப்படி காலி பண்ண சொல்ல முடியும்?!” என,

     “மாடியில கொஞ்சம் இடம் காலி இருக்கே மாமா அங்க ஒரு ரூமும் ஒரு கிட்சனும் போட்டுக் கொடுத்தா கூட போதும். நாங்க வேணா கொஞ்சம் பணம் தரோம்” என,

     “எவ்ளோ குடுக்க முடியும்?”

     “அட்வான்ஸ் வெளில எல்லாம் பத்தாயிரம், பதினஞ்சு ஆயிரம் கேட்குறாங்க. அதுக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கோம்”

      “பத்தாயிரம், பதினஞ்சு ஆயிரத்துல எப்படிம்மா வீடு கட்ட முடியும்? இந்த காலகட்டத்துக்கு எப்படியும் நீ கேட்ட மாதிரி ஒரு ரூம் கிட்சன் போடணும்னா கூட ஐம்பதாயிரம் மேல வந்துடும்” என்றவர், சிறிது யோசித்துவிட்டு,

     “ஒரு அம்பதாயிரம் குடுத்துடுங்க ம்மா. நான் மேற்கொண்டு ஆகிறது போட்டு ஹால், பெட்ரூம், கிட்சன்னு ஒரு போர்ஷனா கட்டிக்  குடுத்துடறேன். இதுக்கே எப்படியும் ஒரு லட்சம் மேல வந்துடும். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை மாசா மாசம் குடுத்துடணும்.” என,

     “ஐம்பதாயிரமா?!” என்று தயங்கியவள், தனது நகைகளை வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி,

     “சரிங்க மாமா ஏற்பாடு பண்றோம்” என்றுவிட்டாள்.

     புதிய வீட்டிற்கு தந்தையும், மகளும் குடி வந்துவிட்டனர். அவர்களுக்காய் இத்தனை பெரிய உதவி செய்தார்கள் என்ற நன்றி இருவர் மனதிலும் இருக்க, அனிதாவும் அவள் குடும்பத்தினரும் கூட அன்பாகவே பழகினர். அனிதாவின் மாமியார், ராஜம் சதாசிவத்திற்கு சித்தி முறை ஆனதால் அந்தப் பாட்டியும் கீர்த்தியை அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு அவளுக்குத் துணையாய் சிறிது இருந்துவிட்டுச் செல்வார்.   

     “எப்படி இருந்த பொண்ணு, என் அக்கா அதான் உன் ஆயா உன்னை எப்படி எல்லாம் தாங்குவாங்க தெரியுமா? கடைசியில இந்த கதியில ஆண்டவன் வச்சுட்டானே ?! உன் அப்பனுக்கு அப்புறம் உன் கதி என்னவாகுமோ?! என்று அவர் அவ்வப்போது புலம்பும் போது கீர்த்திக்கு மனதில் சொல்லொணா கலவரம் எழும்.

     “கடவுளே என் அப்பா, என் அப்பாவை மட்டும் என்கிட்டே இருந்துப் பறிச்சிடாத! அவருக்கு முன்னாடியே நான் செத்துடனும் கடவுளே!” என்று அவள் தினம்தோறும் வேண்டிக் கொள்வாள்.

     டியுஷன், வீட்டு வேலை என்று கீர்த்தியின் நேரம் பறக்க, அவள் ஓரளவு கவலைகளைப் புறம்தள்ளி வாழ பழகிக் கொண்டாள். இப்படி இருக்க ஓர்நாள் காலை பத்துமணியளவில், கார்த்திகா, தனது பிள்ளைகளுடன் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றாள் கண்ணீருடன்.

     “அ அக்கா?!” என்று கீர்த்தி அவள் இருந்த கோலத்தைக் கண்டு பதறிப் போய் அவளருகே வந்து அவளைக் கட்டிக் கொள்ள,

     “யாரும்மா?!” என்று சமையல் அறையில் இருந்து வெளியே வந்த சதாசிவத்திற்கும் கழுத்தில் வெறும் தாலிக் கயிருமாய், உடல் மெலிந்து முகம் சோர்ந்து காணப்பட்ட மகளைப் பார்த்ததில் நெஞ்சை அடைத்தது.

     “கார்த்திம்மா?!” என்று அவரும் அவளருகே வர,

     “அப்பா!!!” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழுதாள் கார்த்திகா.

     “என்னம்மா என்னம்மா ஆச்சு?! ஏன் இப்படி இருக்க? மாப்பிள்ளை எங்கம்மா?!” என்று அவர் கேட்க,

     “அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்காரு தாத்தா.” என்றான் கார்த்திகாவின் பெரிய மகன் அபினேஷ்.

     “அப்பா அவரு அவருக்கு லிவர் பெயிலியர் ஆகிடுச்சாம் ப்பா! அவர் அவரு” என்று அவள் அழ, இருவருக்குமே இடி விழுந்தது போல் ஆனது.

      ‘அய்யோ சின்ன மகளின் வாழ்வுதான் இப்படி சீர் இழந்துவிட்டது. பெரிய மகள் நல்லவளோ, கெட்டவளோ எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருந்தால் போதும் என்று அவர் நினைத்திருக்க, அவள் வாழ்வும் இப்படி ஆகிவிட்டதே?!’ என்று இடிந்து போனார் தந்தையாய்.

     “வாப்பா உடனே ஹாஸ்பிட்டல் போகலாம்.” என்று கீர்த்தி அழைக்க,

     “கீர்த்தி நாங்க எல்லோரும் நல்லா சாப்பிட்டு பல நாள் ஆச்சு கீர்த்தி. அவர் அவரும் எதுவும் சரியா சாப்பிடலை” என, 

     “இதோ இதோ ஒரு மணி நேரத்துல நான் ஏதாவது சமைச்சுக் கொண்டு வரேன் க்கா” என்றவள், பரபரவென வேலையில் இறங்க,

     “மாப்பிள்ளை கூட யாரம்மா இருக்கா துணைக்கு? சம்மந்தியா?” என்று சதாசிவம் கேட்க,

     “அவங்களைப் பத்திப் பேசாத ப்பா. இவரோட பிசினஸ் லாஸ் ஆனதும் அதுங்க ரெண்டும் பொண்ணு வீட்டோட போயி செட்டில் ஆகிடுச்சுங்க. புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதும் வந்து ஒரு நாள் பார்த்துட்டுப் போனதோட சரி தங்கச்சியும், அம்மா, அப்பாவும். நான் ஒருத்திதான் கிடந்து அல்லாடுறேன்” என்று அவள் சொல்ல, அவருக்கு அய்யோ என்றானது.

     ‘மகள் அவர்களைப் படுத்திய பாடு அவருக்குத் தெரியாத என்ன? அதனால்தான் ஒதுங்கிப் போய்விட்டார்கள் போல? ஆனாலும் உடம்பு முடியாத மகனையாவது வந்துப் பார்த்து கொள்ளலாம் அல்லவா?!’ என்று எண்ணிப் பெருமூச்செறிந்தார்.

     ஒரு மணிநேரத்தில் கீர்த்தி சாதம், வத்தக் குழம்பு, கூட்டு, அப்பளம், முட்டை என்று அவர்களுக்கு தட்டில் சாதத்தை போட்டு எடுத்து வந்துக் கொடுத்துவிட்டு தருணிற்குக் காரம் உப்பு கம்மியாய் சேர்த்து செய்திருந்த கூட்டையும் சாதத்தையும் டிபன் பாக்சில் கட்டி எடுத்துக் கொண்டாள்.

     சிறிது நேரத்தில் அனைவரும் மருத்துவமனையை அடைய, அவர்களுக்காகவே காத்திருந்தது போல், அவர்களைப் பார்த்து அவர்களிடம் மனைவியையும் குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டோம் என்ற நம்பிக்கையில் தருணின் உயிர் மறுநாளே பிரிந்தது.      

     

Advertisement