Advertisement

                              3

     சதாசிவம் பயந்தது போலவே, கீர்த்தனா கண்விழித்த நொடியே, “அ அப்பா.. ரவி ரவி எப்படி இருக்கான் ப்பா?! அவனுக்கு எதுவும் ஆகலையே?!” என்றாள் கலக்கமாக.

     “ஹா ஹான் அதெல்லாம் ஒன்னும் ஆகலைம்மா. அ அவன் நல்லா இருக்கான்.” என்றார் சமாளிப்பாய்.

     ஆனால் அவரது திணறல், அவளுக்கு பயத்தை  ஏற்படுத்த,

             “நா நான் ரவியைப் பார்க்கணும்” என்றாள்.

     “அ அவன் ரொம்ப நல்லா இருக்கான் ம்மா. நீ நீ இந்த நிலைமையில எப்படிமா அங்க போவ?! கொஞ்சம் சரியாகட்டும் நானே அழைச்சிட்டுப் போறேன்.

     “நீங்க சொன்ன மாதிரி அ அவன் நல்லா இருந்தா இந்நேரம் என்னைப் பார்க்க வந்திருப்பானே ப்பா?!” என்றாள் கேள்வியாய்.

     “அ அது வந்தும்மா அவனுக்கு ஒரு சின்ன ஆபரேஷன். அதான் அவன் ரெஸ்ட் எடுக்கணும்னு..”

     “ஹா ஆபரேஷனா?! ஏன்? எதுக்குப்பா?!” என்று அவள் பதறி எழ முயல, வார்டில் இருந்த நர்ஸ் அதைப் பார்த்துவிட்டு,

     “ஏன்மா என்ன பண்ற நீ?! பேசாம அமைதியா படு” என்று மிரட்டிவிட்டுச் செல்ல,

     “அ அப்பா ரவிக்கு என்னப்பா ஆச்சு சொல்லுப்பா?!” என்று கீர்த்தனா அழவே துவங்கி விட்டாள்.

      முதலில் சொல்ல வேண்டாம் என்று எண்ணி அமைதி காத்தவர், பின் இது நிச்சயம் அவள் ஏற்றே ஆக வேண்டிய உண்மை என்று தீர்மானித்து, நடந்ததைக் கூறினார்.

     கீர்த்தி அப்படியே ஸ்தம்பித்து விட்டாள் சில நொடிகள்.

     “கீர்த்தி கீர்த்தி ம்மா?!” என்று சதாசிவம் குரல் கொடுக்க, சகஜ நிலைக்குத் திரும்பியவள், தன் உடலில் இருந்த காயங்களை வருட அது அத்தனை எரிச்சலைக் கொடுத்தது. ஆனால் அதைவிடவும் அவள் நெஞ்சம் அதிகமாய் எரிந்தது.

     “மாமா செஞ்சதும் சரிதான் இல்லைப்பா.” என்றுவிட்டு அமைதியாய் அவள் கண்களை மூடிக் கொள்ள, அவளைப் பெற்ற மனம் வாய்மூடி ஊமையாய் அழுதது.

      உண்மை தெரிந்தால் கதறி அழுவாளோ, கோபம் கொள்வாளோ, என்று எண்ணி இருந்த தந்தைக்கு, மகளும் தன்னைப் போலவே, இத்தனை பொறுமையாய் வந்த துன்பத்தை அமைதியாய் ஏற்றுக் கொண்டு விட்டாளே என்பதை நினைக்க ஒரு பக்கம் பெருந்தமையாக இருந்தாலும் ஒரு பக்கம் பெரும் வேதனையாய் தான் இருந்தது.

     ஒவ்வொரு கட்டமாய் கீர்த்தியின் சிகிச்சைகள் முடிந்து அவள் வீடு திரும்ப கிட்டத்தட்ட வருடம் ஆகிவிட்டது.

      மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் அவர்கள் வந்து சேர்ந்தது புது ஊர் புது வீடாக இருக்க, அவள் புரிந்து கொண்டாள் அப்பா எதற்காக இப்படிச் செய்திருக்கிறார் என்று.      

     ரவியின் முகத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தவள், “ம்!” என்று விரக்தியாய் சிரித்துக் கொண்டாள்.

     பத்தொன்பது வயதிற்குள்ளேயே எல்லாம் முடிந்துவிட்டது. அவள் இளமையின் துள்ளல், கண்களின் கனவுகள், அவள் மனதின் ஆசைகள் எல்லாம்.

     கார்த்திகா அன்று போனவள்தான். கீர்த்தனாவிற்கு அடிபட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே சதாசிவம் பழைய வீட்டை காலி செய்திருந்தார். ஒருவேளை ரவி சிகிச்சை முடிந்து வெளிநாட்டில் இருந்து திரும்பினால் நிச்சயம் அவன் அவர்களை விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற எண்ணத்தில். அதோடு சதாசிவம் இடம் பெயர்ந்து வரும் போது யாரிடமும் எங்கு போகிறோம் என்று விவரம் சொல்லாமல் வந்து விட்டதால், கார்த்திகா அவர்களைத் தேடி வந்தாளா என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை! ஆனால் ஒரு வருடமாய் அவர்கள் மருத்துவமனையில் இருந்த போது அவள் அவர்களைத் தேடி வந்திருக்கவில்லை.

     சதாசிவத்தின் பென்ஷன் பணத்தில் அவர்கள் தினசரி வாழ்வு பிரச்சனை இல்லாமல் ஓடியது. ஆனால் கீர்த்தியால் மேற்படிப்பைத் தொடரவோ வெளியே செல்லவோ இயலாத நிலை. அவள் தொடை நரம்புகளும் பாதிக்கப்பட்டிருந்ததில் சரியாக நடக்க கூட முடியாமல், வீட்டில் ஏதோ சின்னச் சின்ன வேலைகளை மட்டுமே அவளால் செய்ய முடியும் அளவிற்கே இயங்கினாள். ஆனால் ஓடி திரிந்து துறுதுறுவென இருந்த பெண்ணிற்கு வீட்டில் முடங்கிக் கிடப்பது பெரும் சுமையாகவும் சோர்வாகவும் இருந்தது.

     “அப்பா எனக்கு வீட்ல சும்மா இருக்க ஏதோ போல இருக்குப்பா. நான் சின்னப் பசங்களுக்கு டியுஷன் கிளாஸ் எடுக்கவா ப்பா?” என்று தந்தையிடம் அனுமதி கேட்க,

      “செய்யலாம் மா. ஆனா ஒரு வார்த்தை ஹவுஸ் ஓனர் கிட்ட கேட்டுட்டு செய்வோம்” என,

      “இப்போவே போய்க் கேட்கவா ப்பா?” என்றாள் ஆர்வமுடன்.

     “ம் சரி” என்று அவர் புன்னகையுடன் அனுமதி கொடுக்க, அவள் மெல்லத் தாங்கித் தாங்கி நடந்தபடி அங்கு சென்றாள்.

     “ஆன்ட்டி..” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவள் செல்ல,

     “வாம்மா” என்று அவர் வரவேற்பதற்குள்,

     “வா கீர்த்தி” என்று இளித்து வைத்தான் அவரின் மகன்.

     அவன் பார்வையும் பேச்சும் ஆரம்பத்திலிருந்தே தவறாய் இருந்ததை உணர்ந்தவள், பொதுவாய் அவர்கள் வீட்டுக்கு வருவது அரிது. ஆனால் இன்று ஏதோ ஓர் ஆர்வத்தில் அவள் அவனைப் பற்றிய நினைவு இல்லாமல் வந்துவிட்டாள்.

      “சொல்லு கீர்த்தி. என்னம்மா?!” என்று அப்பெண்மணி பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்ததை விட்டு கைக்கழுவிக் கொண்டு வெளியே வர,

      “ஆன்ட்டி ஒரு உதவி?! நா நா எனக்கு வீட்ல சும்மா இருக்க போரடிக்குது. அதனால சின்னப் பிள்ளைங்களுக்கு டியுஷன் க்ளாசஸ் எடுக்கலாம்னு தோணுது. அதோட அதில் கொஞ்சம் வருமானம் வந்தா அப்பாவுக்கும் உதவின மாதிரி இருக்கும்” என,

      “அட நல்ல யோசனைதான் மா. தாராளமா எடு. ஆனா பசங்க அமர்க்களம் பண்ணாம வந்துட்டு போற மாதிரி இருக்கணும். வீட்டு சுவர்லயும் அங்க இங்கன்னு கிறுக்கி வைக்காம பார்த்துக்கோ” என்றவரிடம்,

      “தேங்க் யு தேங்க் யு சோ மச் ஆன்ட்டி” என்று அவர் கைகளைப் பிடித்து நன்றி கூற,

     “அட இதுக்கு எதுக்கும்மா தேங்க்ஸ் எல்லாம்? இந்த நிலைமையிலயும் நீ சும்மா உட்காராம எதாவது செய்யணும்னு நினைக்கிறியே?! அதை நினைக்கும் ரொம்பப் பெருமையா இருக்கும்மா! இதோ ஒன்னு இருக்கு பாரு, தடி மாடு மாதிரி வளர்ந்துட்டு இன்னும் வீட்ல உட்கார்ந்து டிவியையும் போனையும் நோண்டிகிட்டு இருக்கு. அப்பாதான் போயிட்டாரே, அம்மா ஒத்தையா கஷ்டப்படுறாளே படிக்க வச்சதுக்கு ஒரு நல்ல வேலை வெட்டிக்கு போயி அம்மாவுக்கு உறுதுணையா இருப்போம்னு இல்லாம பாரு எப்படி உட்கார்ந்திருக்குதுன்னு?! இந்த வீடுகளை மட்டும் கட்டி வைக்காம அந்த மனுஷன் போயிருந்த என் நிலைமை அதோ கதிதான் மா” என்று அவர் மகனைத் திட்ட அவன் முகம் அஷ்ட கோணலாய் மாறியது கண்டு கீர்த்திக்கு லேசாய் சிரிப்பு வந்தாலும், அவர் வருத்தம் உணர்ந்து, 

     “வருத்தப்படாதீங்க ஆன்ட்டி. எல்லாம் சரியாகிடும்” என்றாள் ஆறுதலாய்.

     “எங்கம்மா?! என் தலைஎழுத்து என்னவோ? இது தலை எழுத்து என்னவோ?! சரிம்மா நீ உட்காரு நான் போயி மீதி இருக்க பாத்திரங்களை கழுவி வச்சுட்டு வரேன்.” என்று அவர் சொல்ல,

     “வா கீர்த்தி இங்க வந்து உட்காரு” என்றான் அவரின் மகன்.

     “ஹா இல்லை இல்லை ஆன்ட்டி அப்பா தேடுவார். எனக்கும் வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு. நான் போகணும்” என,

      “ஒ சரிம்மா” என்றார் அவர். அவர் சொன்னதும் அவள் சட்டென வெளியேற, அவர் உள்ளே செல்ல, அவரின் மகன் அவள் வாசலைக் கடந்ததுமே அவள் அருகே எழுந்து வந்து,

     “என்ன கீர்த்தி நீ இப்படிப் பண்ற? கொஞ்ச நேரம் என் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டுப் போலாம்ல” என, அவள் முறைப்புடன், ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் பாவனையில் சுட்டிவிட்டு நடந்து செல்ல, அவளின் விகாரம் உடைகளின் உபயத்தால் வெளியே தெரியாமல் அவளின் அதீத அழகே மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படுவது போல் அவனுக்கும் புலப்பட்டதால் அவள் அவன் அழகில் பித்து பிடித்து அவள் மேனியின் பின்னழகை ரசித்திருந்தான்.

     அவள் வாழ்வின் கனவுகள் நிராசையாகி விட்டாலும், அவளின் தேற்றிக் கொள்ளும் குணம் அதை எல்லாம் கடந்து வந்து சின்ன சின்ன சந்தோஷங்களில் நிறைவைத் தேடிக் கொடுத்தது. ஆனால் அதற்கும் இடையூறாய் ஒரு நாள் வந்தது.

     அன்று அவர்கள் குடியிருந்த அந்த ஒண்டுக் குடித்தன வீட்டில் குடியிருந்த மற்றொரு வீட்டில் குடி இருக்கும் பையனின் திருமண வரவேற்பு என்பதால் ஒட்டு மொத்த குடித்தனக்காரர்களும் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். கீர்த்திக்கு அன்று பார்த்து நல்ல ஜீரம் என்பதால், அவள் போகாது தந்தையை மட்டும் அனுப்பி வைத்திருந்தாள்.

     இரவு எட்டு மணியளவில், வீட்டுக் கதவு தட்டப்பட, “தனியா இருக்கேன்னு போனதும் ஓடி வந்துட்டார் போல அப்பா” என்றபடியே அவள் மெல்ல எழுந்து வந்து கதவைத் திறக்க, வாசலில் நின்றிருந்ததோ, ஹவுஸ் ஓனரின் மகன்.

     “நீ நீங்க கல்யாணத்துக்குப் போகலையா?!” என்றாள் அவள்.

     “ம்?!” என்றவன் கண்ணிமைக்கும் நொடியில் சட்டென கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்துவிட, அவள்,

     “ஏய்! வெளிய போ! வெளியே போ” என்றாள் மிரட்டலாய்.

     “என் வீட்ல இருந்துகிட்டு என்னையே வெளிய போக சொல்லுறியா?!” என்றவன் பேச்சில் மது வாடை வீச,

      “போ போ வெளிய!” என்றாள் கோபமாய்.

     “என்ன கீர்த்தி நீ?! எங்கம்மா உங்கப்பா கிட்ட வந்து உன்னைப் பொண்ணு  கேட்டா என்னமோ ரொம்பதான் பிகு பண்றாராம்!” என்று அவன் சொல்ல,

     “இ இது எப்போ நடந்தது?!” என்று அவள் குழம்பினாள்.

     “இப்போ நான் உன்னை ஏதாவது செஞ்சிட்டா அப்புறம் வேற வழியில்லாம அவர் உன்னைக் கட்டிக் கொடுத்துத்தானே ஆகணும்” என்றவன், அவள் அணிந்திருந்த நைட்டியின் சிப்பைப் பற்றி இழுக்க,

      “ஹேய்!” என்று அதனைப் பற்றிக் கொண்டவள்,

     “போடா! போடா வெளிய” என்று அவனைத் தன் பலம் கொண்டு தள்ளிவிட, அதில் இன்னும் ஆவேசம் ஆனவன், அவள் கழுத்துப் புற உடையைப் பற்றி ஆவேசமாய் இழுக்க, அது ஒரு பக்கம் கிழிந்து போய் அவளின் தீக்காயத்தை தெரியப்படுத்த,

     “ஹா அய்யோ?!” என்று அலறினான் அவன்.

     அவன் உடையைக் கிழித்த அச்சத்தில் இருந்தவள், அதை இறுகப் பற்றிக் கொண்டு கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவன்மேல் விட்டெரிய, அவன் அலறிய அலறலில் அவன் தீக்காயத்தைக் கண்டு விட்டான் என்று புரிந்து கொண்டாள்.

      “போ! வெளியப் போடா! போ!!” என்று அவள் ஆக்ரோஷம் வந்தவள் போல் பத்திரகாளியாய் கத்த, அவன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்.

     அவன் எழுந்து வெளியே ஓடிய பின் கதவை நன்கு இழுத்துச் சாத்தியவள், பயத்தில் உடல் நடுங்க அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தாள்.

     அவனிடமிருந்து தப்பித்த ஆசுவாசம் ஒரு புறம் ஏற்பட்டாலும், அதனால் ஏற்பட்ட நடுக்கம் இன்னமும் அவளுக்கு நிற்கவில்லை! அதோடு அவன் அவளது விகாரத்தை கண்டு அலறிய அலறல், அவள் மனதை வெகுவாய்க் கலங்கச் செய்தது.

     அதுநாள் வரை தனது காயத்தின் தழும்பைக் கண்ணாடியில் பார்க்கக் கூட முனையாதவள், மெல்ல எழுந்து சென்று தன் துணியை விலக்கிப் பார்க்க, ஒரு கணம் உறைந்து போய் மீண்டாள்.

     ‘அய்யோ! அன்னிக்கு மட்டும் நான் ரவியை இழுத்துத் தள்ளிவிடாம இருந்திருந்தா இ இந்த நிலைமை என் ரவிக்கு இல்லை ஏற்பட்டிருக்கும்?!’ என்று அப்போதும் அந்தப் பேதை மனம் அவனுக்காய் துடித்தது.

      அவன் ஆசை ஆசையாய் பேசிய வார்த்தைகள், அந்த சிறுவயதிலும் அவளுக்காய் அவன் கொண்ட அளவிலா நேசம் அனைத்தும் அவள் மனக்கண்ணில் தோன்ற,

     “ரவி!! ரவி!! ஏன்டா என்னைவிட்டுப் போன?!” என்று வாய்விட்டுக் கதறினாள்.

                                                                               

                                                                                *****

     “கீர்த்தி…!!” என்று அலறிக் கொண்டே உறக்கத்தில் இருந்து எழுந்தவன் நெஞ்சம் ரயில் தண்டவாளமாய் தடதடத்தது.

      “ஏன்டி ஏன்டி என்னை விட்டுப் போன?!” என்று கண்கள் கண்கலங்க, அவன் தன்  அறையில் இருந்த அவளது பெரிய புகைப்படத்தைப் பார்த்துக் கேட்க, அவள் புன்னகை மாறாது அவனை ரசித்திருந்தாள்.

     அவன் அலறல் சப்தம் கேட்டு சாரதா, நாதன் இருவருமே ஓடிவந்து அவன் அறைக் கதவைத் தட்ட,

      “ஒண்ணுமில்ல போங்க! போங்க!” என்று கத்தினான் உள்ளிருந்தபடியே.

     இருவரும் எப்போதும் போல் மௌனமாய் திரும்ப, சாரதா மட்டும் நாதனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தார்.

      “நீங்க எதுக்காக அந்தப் பாவத்தை செஞ்சீங்களோ, அந்தப் பாவமே என் புள்ளையோட வாழ்க்கையை அழிச்சிடும் போல இருக்கு! அவ செத்துட்டான்னு சொன்னா அவன் உடனே அவளை மறந்துட்டு இன்னொருத்தியை தேடித் போயிடுவான்னு நினைச்சுட்டீங்களா?! எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கங்க. சில விதி விலக்குகளும் இந்த உலகத்துல உண்டு. அதுல என் பிள்ளையும் இருப்பான்னு நான் நம்புறேன். அன்னிக்கு சொன்னீங்களே இந்த உலகத்தோட எந்த மூளைக்குப் போய் வேணாலும் என் பையனைக் காப்பாத்துவேன்னு. சொன்ன மாதிரியே காப்பத்திட்டீங்க தான். ஆனா அவன் உயிரைக் கொன்னுட்டு உடம்பை மட்டும் காப்பாத்தி இருக்கீங்க! ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோங்க! நீங்க என்ன சதி செஞ்சாலும், இந்த உலகத்தோட எந்த மூளைக்குப் போய் அவளை அவன் கண்ணுல இருந்து ஒளிச்சு வச்சாலும், அவனோட ஜீவன் ஒருநாள் அவன்கிட்ட வந்தே சேரும். அன்னிக்குத்தான் என் புள்ளை எனக்கு உயிரோட கிடைப்பான். அதுக்கு ஆண்டவன் நிச்சயம் வழிகாட்டுவான்.” என்று தன் மன ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு அவர் சென்றுவிட, நாதன் சோர்வுடன் அங்கிருந்த  சோபாவில் விழுந்தார். ஆனாலும் மனம் மட்டும் மகனிடம் உண்மையைச் சொல்ல இசையவில்லை!

                                                                                                                

                                                                                                               -தொடரும்…

 

 

    

 

    

 

     

Advertisement